தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (NEET) கிராமப்புற மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பைப் பெரிதும் பாதிக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பொது நுழைவுத் தேர்வு இல்லாதிருந்த போது அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் எந்த அளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப் பட்ட உண்மை நிலை அதிர்ச்சியளிப்பதாக இருக் கிறது. 2009 முதல் 2016 வரையிலான எட்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசுக்கு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றில் அரசு நடத்திய ஒற்றைச் சாளர முறை யின்கீழ் அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்புப் படித்த மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். சராசரியில் ஆண்டிற்கு 32 மாணவர்கள் மட்டுமே சேருகிறார்கள். 2016ஆம் ஆண்டில் 48 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

ஓராண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கும் இடங்கள் சேர்த்து 3650 இடங்கள் இருக்கின்றன. இதில் ஒரு விழுக்காடு அளவுக்கே அரசுப் பள்ளி மாணவர்கள் இடம்பெறுகின்றனர். 2009-2016 காலத்தில் அரசின் பொறுப்பில் நிரப்பப்பட்ட 29,225 இடங்களில் 278 பேர் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள். 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் 50 விழுக்காட்டினர் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளின் தரமற்ற அவல நிலையைப் பற்றித் தமிழ்நாட்டு அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. ஏனெனில் இது ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அரசு; தனியார் மயமே தகுதியை வளர்க்கும் என்று கல்வியில் வணிகக் கொள்ளை ஊக்குவிக்கும் தரங் கெட்ட அரசு.

Pin It