மத்திய அரசு கல்வி வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது. இது யாருக்காக?
ஏழைகளுக்காக.
எந்த சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்காக? இந்தியாவில் BBL என்று சொல்லக்கூடிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்காகவா?
அப்படி இல்லை. இது இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கான இட ஒதுக்கீடு அல்ல. இந்தியாவில் உள்ள இந்து சமயத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்து சமயத்தைச் சேர்ந்த அனைத்து சாதிகளுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்துமா?
இல்லை. இந்து மதத்தில் உயர் சாதி என்று சொல்லக்கூடிய சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
உயர் சாதி என்றால் ஆண்ட பரம்பரையை சேர்ந்த மக்களுக்கா?
இல்லை. இது அப்படியில்லை. பார்ப்பனர்கள், ஆங்கிலோ இந்தியன் போன்ற உயர் சாதி இந்துக்களுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அப்படியா? அவர்களுக்குள்ளும் ஏழைகள் இருக்கத்தானே செய்கிறார்கள் கொடுப்பது நியாயம்தானே?
நியாயம்தான். உண்மையில் அவர்களுக்குள் ஏழையாக உள்ளவர்களுக்கு கொடுத்தால் நியாயம்.
அப்படித்தானே சொல்கிறார்கள்?
அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் உயர் சாதியில் ஏழைகளாக இருக்க வேண்டுமானால் ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டும்.
8 லட்சமா?
ஆமாம். ஆண்ட பரம்பரை வகுப்பைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் ஏழையாக இருக்க வேண்டுமானால் ஆண்டுக்கு 72 ஆயிரத்துக்கும் குறைவான வருமானத்தை பெற வேண்டும். உயர் சாதியில் ஏழையாக இருந்தால் அவர்கள் 8 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பாதித்துக் கொள்ளலாம்.
ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதித்தால் அவர்கள் ஏழையாக இருக்க முடியாது தானே?
அப்படி கிடையாது உயர் சாதியில் உள்ளவர்கள் ஓரளவுக்கு நல்ல வருமானத்தில் இருப்பார்கள் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த உச்சவரம்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 8 லட்சம் வருமானம் இருந்தாலே உயர் சாதியில் ஏழைதான்.
நம்ம ஊர்ல கோயில் குருக்களாக இருந்து கொண்டு மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்குத் தானே இந்த இட ஒதுக்கீடு? இதனால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் காலம் காலமாக கோயில் பூசாரி வேலையே பார்க்காமல் அரசாங்கத்தில் உயர் பதவிக்கு வரலாம் தானே?
நம்ம ஊரு ஏழை குருக்கள் பிள்ளைகள் எல்லாம் நம்ம ஊர்ல உள்ள ஏதாவது அரசுப் பள்ளிக்கூடத்தில் அல்லது தனியார் பள்ளிக்கூடத்தில் படிப்பாங்க. ஆனா, தற்போது பன்னாட்டு நிறுவனங்களில், தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், ஆளுநர் அலுவலகங்களில் பணிபுரியும் உயர்சாதி ஏழைகள் நகரத்துல எல்லா வசதியும் உள்ள பள்ளிக்கூடத்துல தங்களது பிள்ளைகள படிக்க வைப்பாங்க. அந்தப் புள்ளைங்க நம்ம ஊரு குருக்கள் பிள்ளைகளை விட அதிகமா மார்க் வாங்குவாங்க. அதனால குருக்கள் பிள்ளைங்க உயர் பதவிகளுக்கு போக முடியாது.
அந்த மாதிரி இடத்தில் வேலை செய்யறவங்க எல்லாம் ஏழைகளா?
ஆமா அவங்க ஏழைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஏழைகளுக்கான அதிகபட்ச வருமான வரம்பு 8 லட்சம் என்று சொல்லியுள்ளார்கள். மாதம் 60,000 ரூபா சம்பளம் வாங்கினாலும் அவங்க ஏழை தான்.
இது என்ன கொடுமையா இருக்கு?
இது என்ன கொடுமை. இதை விட பெரிய கொடுமை எல்லாம் நடக்குது. தமிழ்நாட்டுல சுமார் 70 விழுக்காட்டுக்கு மேல உள்ள ஆண்ட சாதி பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்திருக்கு. ஆனா மூன்றிலிருந்து நான்கு விழுக்காட்டுக்கும் குறைவா இருக்கக்கூடிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள்.
ஐயோ இது என்ன அநியாயமா இருக்கு?
உனக்கு தெரியுது ஆனா மத்திய அரசுக்கு இதுதான் நியாயமா தெரியுது.
இது ஏழை இந்துக்களுக்கான இட ஒதுக்கீடாகவும் தெரியல! ஏழையாக இருக்க கூடிய உயர் சாதி இந்துக்களுக்கான இட ஒதுக்கீடாகவும் தெரியல!
நம்ம ஊரு கோயில் அய்யர்மார்கள் வீட்டு பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீடாகவும் தெரியல! இதை என்னதான் சொல்றது...?
சமூக நீதியும் இல்ல
சமநீதியும் இல்ல
தமிழ் நாட்டு இந்து மக்களுக்கான சமாதி!
- மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்