சென்ற இதழில் வெளிவந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது...

இஸ்லாமை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான வேறு சமூக நிகழ்வுகள் உண்டா?

இன்னொரு செய்தியையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய ஜாதிக் கலவரம் நடந்தது. இதில் தலித்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அங்குள்ள துரைராஜபுரம் என்ற கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிடுகிறார்கள். ‘எங்க ஊர்ல ஒட்டுமொத்தமாக நாங்க எல்லோரும் முஸ்லிமாக மாறப் போறோம்' என்று அதில் பிரகடனப்படுத்தி இருந்தார்கள். இந்தச் செய்தி, தமிழ்நாட்டின் பிரபலப் பத்திரிகைகளில் வெளி வந்தது. அப்போது நாங்கள் அம்மக்களுடன் இணைந்து களப்பணிகளைச் செய்து வந்தோம். இந்தச் செய்தி வந்ததும் நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்தோம். அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். பத்திரிகையாளர்கள் மதமாற்றம் பற்றி பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் ஒரு வயசான அம்மா பதில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்: "அய்யா எங்க காலத்தில நாங்க இந்த அழுக்குத் துணியை கட்டிக்கிட்டு எப்படியோ காலத்தைக் கழிச்சிட்டோம். ஆனால், எங்கள் பிள்ளைகள் காலேஜிக்குப் போகுதுங்க. பள்ளிக்கூடத்திற்குப் போகுதுங்க. அதுக எல்லாம் வெள்ள துணி கட்டணும், பேண்ட் போடணும், செருப்புப் போடணும்னு நினைக்கிறாங்க. ஆனால், இந்த ஊர்ல அதப் போடக்கூடாதுண்ணு சொல்றாங்க. இந்தத் துணிமணிகள நாங்க யாருக்கிட்டயும் போய் கேக்கல; வாங்கல. நாங்க உழைக்கிறோம்; உடுத்தணும்னு ஆசைப்படறோம். குழந்தைங்க நல்ல துணி உடுத்தணும்னு ஆசைப்படறாங்க. ஆனால், குழந்தைங்க இப்படி நல்ல துணி போடக் கூடாதுன்னு சொல்றாங்கய்யா!''

Kodikkal Shiek Abulla "சரி, இதெல்லாம் நீங்கள் முஸ்லிமாக மாறினால் கிடைச்சிருமா?''ன்னு பத்திரிகைகாரங்க அந்த அம்மாவ கேட்கிறாங்க. அப்போ அந்தம்மா சொன்னாங்க, ‘எங்க சொந்த பந்தங்கள் இதுக்கு முன்னால சில ஆண்டுகளுக்கு முன்னால முஸ்லிமுக்குப் போயிருக்காங்க' என்று தேனீ மாவட்டத்தில் சில ஊர்களைக் குறிப்பிட்டு, அந்தம்மா பதில் சொன்னாங்க. ‘அப்படி மாறினவங்க எல்லாம், முட்டிக்குக் கீழே வேட்டி கட்டுறது, செருப்புப் போடுறது என்றெல்லாம் மாறியிருந்தாங்க' என்று சொன்னாங்க. நாங்க எதெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அதெல்லாம் அங்கு கிடைக்கிறது என்று சொல்லிவிட்டு, ஒரு சுவையான செய்தியை அந்தம்மா சொன்னாங்க. ‘எங்க ஊர்ல ஒரு பெண்ணை கற்பழிச்சுக் கொன்ற பிறகுதான் அதையொட்டி கலவரம் நடந்திச்சு. முஸ்லிமா மாறினா இதெல்லாம் நடக்காதான்னு நீங்க கேட்கிறீங்க. நீங்க இந்த ஊருக்கு வந்து மொதல்ல என்ன செஞ்சீங்க? நாங்க எல்லாம் கவனிச்சிக்கிட்டுதான் இருந்தோம். முதல்ல எங்க போனீங்க?' ‘நாங்க அந்த டீக்கடையில் டீ குடிக்கப் போனோம்' என்றார்கள் நிருபர்கள். ‘அந்த டீக்கடை யார் டீக்கடை தெரியுமா?' ‘அது ஒரு முஸ்லிம் கடை' என்று சொன்னார்கள். ‘அவரு பேரு உங்களுக்குத் தெரியுமா?' ‘தெரியலையே' என்றார்கள் நிருபர்கள். அந்த டீக்கடை பாய்க்குப் பேரு அல்லா பிச்சை. அவர் மூன்று வருஷத்திற்கு முன்னால, எங்க சமூகத்தில, எங்க பக்கத்து வீட்ல இருந்த ஆளு. அவரும் அவருடைய குடும்பமும் இப்ப முஸ்லிமா மாறிட்டாங்க. அவரு கடையில எல்லாரும் டீ குடிப்பாங்க. அவருடைய கூட பிறந்த தம்பிதான் இன்னொரு கடை வைச்சிருக்காரு. அவர் பேரு துரைப்பாண்டி. அவர் கடையில் நாங்களும் எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்களும் டீ குடிக்கலாம். ஆனால், வேற யாரும் டீ குடிக்க மாட்டாக. ஒரே தாய் தகப்பனுக்குப் பிறந்த பிள்ளைகள்தான். ஆனால், எவ்வளவு பெரிய வேறுபாடு பார்த்தீங்களா... இத நீங்க பார்த்து, கேட்டு, தெரிஞ்சி உண்மைன்னு உங்களுக்குப் பட்டா நீங்க உங்க பேப்பர்ல எழுதலாம். எழுதுவீர்களா?' என்று அந்த அம்மா ரொம்பவும் இயல்பாகக் கேட்டார்கள்.

இஸ்லாத்திற்குச் சென்றவர்களுக்கு சம அங்கீகாரம், சம உரிமை கிடைக்கிறதா?

இரண்டு செய்தியை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மதம் மாறிட்டார் என்றால், அவர் முஸ்லிம் குடும்பத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். மற்ற மதத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். இங்கு இஸ்லாத்திற்குள் எந்தப் பாகுபாடும் இல்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். சரத்த ராவுத்தர் என்பவர் மதம் மாறியவர்தான். உத்தமபாளையத்தில் இருக்கிறார். தலித்தாக இருந்தவர்தான். அவர் இன்றைக்கு அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கெல்லாம் அதிபதியாக இருக்கிறார். இவையெல்லாம் இந்த அய்ம்பது ஆண்டுகளுக்குள் நடந்த சம்பவங்கள்தான்.

தமிழ்நாட்டில் முதல் முதலாக மதம் மாறிய கிராமம் ஒரு 63 ஆண்டுகளுக்கு முன்னால சீலயம்பட்டி கிராமம்தான். இந்தக் கிராமத்திற்கு அய்யா பெரியார் போகிறார். மதமாற்றம் நடந்தது பற்றி கேள்விப்பட்டு, அந்த மக்களை எல்லாம் கூட்டிவைத்துப் பெரியார் பேசுகிறார். ரொம்ப உணர்வுப்பூர்வமாகப் பெரியார் பேசுகிறார்: "நீங்கள் காட்டுமிராண்டி மாதிரி மயிர் வளர்த்து வைத்திருந்ததை எல்லாம் இன்றிலிருந்து மழுக்கிவிட்டு மனிதனாகி இருக்கிறீர்கள். நான் இதுவரை எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் பெட்ரோலுக்கு காசு வாங்கிட்டுத்தான் பேசுவதற்குப் போவேன். ஆனால், இப்போது என்னுடைய சொந்தச் செலவில் நான் உங்களை வந்து பார்த்துப் பாராட்டிவிட்டுப் போக இங்கு வந்திருக்கிறேன்' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்கள். பெரியார், மனந்திறந்து பேசக்கூடிய மிகச் சிறந்த மனிதாபிமானி அல்லவா! சமூக விடுதலை பெற்ற அந்த மக்களைப் பார்ப்பதற்காகத் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஒரு மாமனிதன் தன்னுடைய சொந்த செலவிலேயே அந்தக் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்றால், ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், மனிதப் பண்புக்கு எடுத்துக்காட்டாகப் பெரியாரைத்தான் சொல்ல முடியும்.

எனக்கும் எனது குடும்பத்திற்கும் என்று சொந்தமாக நிலபுலன் இல்லை. ஆனால், ஒரு கோடீஸ்வரன் எப்படி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறானோ, அதற்கு எந்தக் குறையும் இல்லாமல் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாம் வந்த இடத்தில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நமக்கு மதிப்பும் மரியாதையும். இரண்டாவது, மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அப்படி எதிர்பார்த்தாலே நமது லட்சியம் தோற்றுப் போய்விட்டது என்று அர்த்தம். நானாக உருவாக்க வேண்டும், நானாக உழைக்க வேண்டும், நானாக முன்வந்து எல்லா காரியத்தையும் செய்ய வேண்டும். அதுக்குள்ள ‘லைசென்ச' மதமாற்றம் வழங்கியது. ஒரு தலித் டீ கடை போட வேண்டும் என்றால், பலமுறை யோசிப்பார். ஏனெனில், அவருக்குப் பழக்கமும் பயிற்சியும் இல்லை. ஆனால், இஸ்லாம் சுய முயற்சிக்கான தன்னம்பிக்கையை, அந்த தைரியத்தைக் கொடுக்கிறது. இடஒதுக்கீட்டை வைத்துதான் இந்த தலித் சமூகம் ஓரளவுக்கு முன்னுக்கு வந்தது. இப்பொழுது, அதுவும் இல்லை என்று ஆனபிறகு, அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நிலமும் நம்ம கையைவிட்டுப் போயிடுச்சி. அப்ப நிலமும் இல்லாமல் நீங்கள் எப்படி வாழ முடியும்?

ஆனால், முஸ்லிம் சமூகத்தைப் பார்த்தீர்கள் என்றால், நடைபாதையில் கடை வைத்திருப்பார்கள். சோப்பு, சீப்பு, கண்ணாடி, பிளாஸ்டிக் விற்பனை செய்வதற்கு ஒரு கடை வைத்திருப்பார். அதற்குப் பெரிய மூலதனம் வேண்டியதில்லை. ஒரு அய்ந்நூறு ரூபாய் இருந்தால் போதும். பெரிய நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் இந்த வியாபாரத்திற்குத் தேவையில்லை. ஆனால், துணிச்சலாக ஒரு கடையை பிளாட்பாரத்தில் போட்டுத் தன்னுடைய வாழ்க்கையை நடத்திவிட்டுப் போகிறான். இதில் நான் இங்கு குறிப்பிட விரும்புவது, இஸ்லாம் அந்தத் தன்னம்பிக்கையை அவனுக்கு அளிக்கிறது. அது ரொம்பவும் முக்கியமானது என்று சொல்ல வருகிறேன். நாடார் சமூகம்கூட இதைவிட மோசமான ஒரு நிலையில் இருந்த ஒரு சமூகம்தான். ஆனால், இன்றைக்குப் பொருளாதாரத்தில், அந்தஸ்தில், அரசியலில் அந்தச் சமூகம் முன்னேறி இருக்கிறது. திட்டமிட்ட ஒரு சமுதாய முன்னேற்றம்தான் அது.

நாடார் சமூகம் மதம் மாறாமலேயே இந்தளவுக்கு முன்னேறியிருக்கிறதே?

அதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அது ஒரு அடிமைச் சமுதாயம் அல்ல. பல ‘மேல் சாதி' ஆதிக்கத்தினால் அவர்கள் பல கொடுமைக்கு ஆளானார்கள். ஆனால், நிலம் அவர்களிடம் இருந்தது. பல அரசுகள் குறிப்பாக காமராசர் ஆட்சி அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. அரசின் பல நல்ல திட்டங்களை அந்தச் சமூகம் உள்வாங்கி, முன்னேறி இருக்கிறது. ஆனால், தலித் சமூகம் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து தலித்துகள் விடுபட வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இன்னும் பெரிய குற்றச்சாட்டு ஒன்றை நான் சொல்வேன். எந்த ஒரு அரசியல் கட்சியும் வளர்வதற்கு கொடி தூக்குவதும், அவர்களுக்குத் தொண்டூழியம் செய்யும் போக்கும் இன்னும் தலித்துகளிடம் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகப் புரட்சியை உண்டுபண்ணுவதற்கு நீங்கள் எழுதணும், பேசணும், சிந்திக்கணும், சேரியில் போய் வேலை செய்யணும். இப்படியெல்லாம் செய்வதற்கு ஒரு பெரிய திட்டத்தைச் செய்வதற்கு ஒருத்தர் இருவராவது துணிவுடன் முன்வந்தால்தான் ஏதாவது செய்ய முடியும். அரசாங்கம் இந்த மக்களைக் காப்பாற்றும் என்று நீங்கள் ஒருபோதும் நம்பாதீர்கள். இந்த மக்கள் இப்படியே காலங்காலமாக இருக்க வேண்டும்; நம்மிடம் கையேந்த வேண்டும் என்று நினைக்கிறவர்கள்தான் ஆட்சியிலே இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அரசாங்கம் இதையெல்லாம் செய்யும் என்று நம்புவது எப்படிச் சரியாகும்?

ராவுத்தர், மரைக்காயர் என்று முஸ்லிம்களிடையேயும் பாகுபாடுகள் நிலவுகின்றதே?

தேனீ மாவட்டத்தில் தேவதானப்பட்டிக்குப் பக்கத்தில் துலுக்கன்பட்டி என்றொரு இடம் இருக்கிறது. இங்கு 700, 800 பேருக்கு மேல் மக்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் தலித் குடும்பமும் அங்கு இருந்தார்கள். அதில் ஒரு குடும்பம் அப்துல் காதர். அவரும் அவருடைய பிள்ளைகளும் இஸ்லாத்திற்கு வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நாங்கள் எல்லாரும் போயிருந்தோம். அப்போது முஸ்லிம்களில் ஒருவர் சொன்னார், ‘அய்யா பெயர் வைக்கிறதும் வைக்கிறீங்க... அப்துல் காதர், ராவுத்தர் என்று வைங்கோ' என்றார். அவர் இன்றைக்கும் அப்துல் காதர் ராவுத்தர்தான். அவருடைய பிள்ளைகள் ‘இமாமு'க்குப் படித்து, இப்பொழுது பல இடங்களில் ‘இமாமாக' இருக்கிறார்கள். திருநெல்வேலியில இருக்கக்கூடிய பெரிய ஜமாத்தில் அவர் பையன் ‘இமாமாக' இப்பொழுது இருக்கிறார். நீங்கள் யார் கள ஆய்வுக்குச் சென்றாலும், இந்தக் குறிப்பை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, இந்த மனிதர்களை எல்லாம் அவசியம் சந்திக்க வேண்டும்.

ராவுத்தர், மரைக்காயர் என்பது எதைக் குறிக்கிறது?

ராவுத்தர் என்றால் குதிரை வியாபாரம் செய்தவர்கள்; குதிரையை வைத்திருந்தவர்கள் என்று பொருள். மரைக்காயர் என்றால், கடற்கரையோரம் மரக்கலங்களை தொழில் ரீதியாக வைத்து முன்னுக்கு வந்தவர்கள் என்று பொருள். ஆனால், கொடுத்தல் வாங்கலோ, பெண் கொடுத்து, பெண் எடுப்பதிலோ இவர்களுக்குள் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே, மதம் மாறிய யார் வேண்டுமானாலும் ராவுத்தர், மரைக்காயர் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், குற்றாலம் பிள்ளை என்றோ, சுப்பிரமணிய அய்யர் என்றோ, அய்யங்கார் என்றோ, நாடார் என்றோ பெயர் வைக்க முடியுமா?

ஒரு இஸ்லாமியர் இறந்து கிடந்தால், அவர் அனாதையாக இருந்தால்கூட, அதை வாரி அணைத்துக் கொள்ளும் சமூகம், அதேவேளை முஸ்லிம் அல்லாத ஒருவர் எவ்வளவு துயரத்தில் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாத போக்கு இந்தச் சமூகத்திடம் காணப்படுகிறதே?

Kodikkal Shiek Abulla அப்படி இருந்தால், அது முற்றிலும் தவறு. இந்தச் சமூகத்தில் இத்தகைய மனோபாவம் இருக்கிறது என்பதையும் நான் மறைக்கவில்லை. இதற்குக் காரணம், அவர்களின் அறிவின்மைதான்! குரான் இப்படியான மனோபாவம் தவறு என்றுதான் சொல்கிறது. நபிகள் நாயகம் ஒரு யூதரின் பிணம் போவதைப் பார்க்கிறார். அவர் உடனே எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்தினார். சாதாரண மக்கள், ‘நீங்கள் ஏன் இந்தப் பிணத்திற்கு மரியாதை செலுத்துகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, ‘இது அல்லாவின் படைப்பு' என்று நபிகள் நாயகம் பதில் சொல்கிறார். இதை எல்லாம் தெரிந்த பிறகும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் இஸ்லாத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். அறைக்குள்ளேயும், மதராசாவுக்குள்ளேயும், பள்ளிவாசல்களிலும் உட்கார்ந்து கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தது போக, இப்பொழுது அடுத்த தலைமுறை மக்கள் சமூகத்தோடு, அவர்கள் துன்ப துயரங்களில் பங்கெடுக்கக்கூடிய நிலை வந்திருக்கிறது. இப்பொழுதுதான் எழுத, பேச, களத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலை விரைவாக மாற வேண்டும்.

பெரியார் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்றொரு சர்ச்சை கிளப்பப்பட்டது குறித்து தங்கள் கருத்து என்ன?

இஸ்லாமியர்கள் பெரியாரை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள். இஸ்லாமின் பல கருத்துகளைப் பெரியார் பிரச்சாரம் செய்திருக்கிறார். திருமண உறவு, ஒப்பந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் கருத்தைப் பெரியார் வலியுறுத்தினார். திராவிட இயக்கம் பலப்படுவதற்கு இஸ்லாமியர்கள் பொருளாதார உதவி முதல் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்; தலித்துகள் அந்த இயக்கத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். பெரியார் மீது குற்றம் சுமத்துவதற்கு எந்தவித நியாயமும் இல்லை. இது, என்னுடைய அழுத்தமான கருத்து. அவர் உள்ளும் புறமும் தெளிவாக இருந்தார். பெரியார் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று கம்யூனிஸ்டுகள்கூட, அவர் மீது ஒரு காலத்தில் குற்றம் சுமத்தினர். ஆனால், இது அவர்களின் அனுமானம்தானே தவிர, அப்படி எந்த நிலப்பிரபுவுக்கும் அவர் ஆதரவாக இருந்தார் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பெரியார் கொள்கைகளை கம்யூனிஸ்டுகள்தான் பெருமளவில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதன் அவசியத்தை உணர்ந்து, அவர்கள் இன்று காலங்கடந்தாவது எடுத்திருக்கிறார்கள்.

தலித் இஸ்லாமியர் ஒற்றுமையை நீங்கள் வலியுறுத்துகின்றீர்களா?

தலித்துகளிடம் நெருங்கி வருவதன் மூலம் மற்றவர்களின் கோபதாபங்களுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று முஸ்லிம்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. தொழில் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் முஸ்லிம்கள் மற்ற சமூகத்தினரிடம்தான் அதிகளவு தொடர்பு வைத்திருக்கிறார்கள். களத்தில் அவர்கள் தலித்துகளிடம் இணையாததற்கு இது ஒரு காரணம். ஆனால், இந்த உறவு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. தலித் - முஸ்லிம் கூட்டணியை எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தனியொரு சாதியோ, மதமோ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட எல்லாரும் இணைந்துதான் அதைக் கைப்பற்ற முடியும். எனவே, இதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு சில புதிய செயல்திட்டங்களை வகுக்கவில்லை எனில், நெருக்கடி நேரங்களில் அவர்கள் தவிக்க வேண்டிவரும்.

இஸ்லாத்திற்குச் சென்ற பிறகு தங்களின் தாய்ச் சமூகமான ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு ஏதேனும் பணியாற்றி இருக்கிறீர்களா?

1989 செப்டம்பர் மாதத்தில், தேனீ மாவட்டக் கிராமங்களில் நடைபெற்ற கலவரத்தில், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டு நேரில் சென்று களப்பணியாற்றினேன். கண்டமனூர் கிராமத்தில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்கள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்தோம். வழக்குப் பதிவு செய்ய மறுத்த காவல் துறையை வழக்குப் பதிவு செய்ய வைத்தோம். அம்மாபட்டி கிராமத்தில், அருந்ததிய சமூகத் தோழர்கள் 3 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அங்கெல்லாம் மக்களைச் சந்தித்து தேவையான உதவிகளை செய்திருக்கிறேன். கொடியங்குளம் கலவரத்தில் யாருமே ஊருக்குள் செல்ல முடியாதபோது நான் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன். 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதவெறி சக்திகளை வீழ்த்த முஸ்லிம் - தலித் ஒற்றுமையை வலியுறுத்தி, எஸ். நடராசன், ஏபி. வள்ளிநாயகம் ஆகியோருடன் இணைந்து சமூக விழிப்புணர்வு முகாம்களை நடத்தினோம். சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்காகவும், தலித்துகளுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.

நேர்காணல் : பாண்டியன், யாக்கன்
Pin It