"Jangal ke javedar" என்ற கற்பனை நாவலை அடிப்படையாக வைத்து “பிர்சா முண்டா” படத்தை ஹிந்தியில் எடுக்கவிருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். நமஹ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. இவர் விடுதலைப் போராட்ட வீரர் எனவும், பழங்குடியினருக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் என்றும் நம்பப் படுகிறது. இது உண்மைதானா? பா.ஜ.க.வினரும், ‘தேசியவாதிகள்’ என்போரும் சொல்வதைப்போல இவர் அவ்வளவு பெரிய போராளியா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.

rajnath singh worships birsa mundaமெய் வரலாற்றை அறிந்துகொள்ள நாவல் தேவையில்லை. வரலாற்று ஆய்வுநூல்களும் அறிக்கைகளுமே தேவை. அந்த வகையில் Hoffman பாதிரியாருக்கும் வெள்ளைக்கார அரசுக்கும் இடையே அனுப்பப்பட்ட கடிதங்களில் இருந்து பல தகவல்கள் கிடைத்தன. London School of Sconomics கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் அல்பா ஷா, மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் தங்கி, பலஆய்வுகளை மேற்கொண்டவர். “Religion and the Secular Left: Subaltern Studies, Birsa Munda and Maoists” என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கையை “Anthropology of this Century Press” என்ற ஆய்விதழின் 9 ஆவது வெளியீட்டில் ஜனவரி 2014-ஆம் ஆண்டு எழுதியுள்ளார். இந்த ஆய்வறிக்கை, பிர்சா முண்டாவின் மறுபக்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதிலிருந்து சில தகவல்களை இங்கே காண்போம்.

1966ஆம் ஆண்டு குமார் சுரேஷ் சிங் ‘பிர்சாவை’ பற்றி எழுதிய நூலில் மக்களின் போராட்டங்களை விளக்க பிர்சாவை ஒரு உருவகமாக மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இந்த உருவகத்தை உண்மையென்று நம்பி பிர்சாவை ஒரு போராளி நிலைக்கு உயர்த்தி பல பாடல்களும், இலக்கியங்களும், கவிதைகளும் புனையப்பட்டன. பழங்குடி மக்கள் பிர்சாவை கடவுளாகவே பார்த்தனர்; பார்க்கின்றனர்.

மக்களின் இத்தகைய மூடநம்பிக்கைக்குத் தன்னுடைய புத்தகமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்த குமார் சுரேஷ் சிங் தான் இறப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன் 2002-இல் மீண்டும் அதே புத்தகத்தை மாறுபட்ட முன்னுரையோடு வெளியிட்டார். அந்த முன்னுரையில், “பிர்சா ஆயுத போராட்டத்தில் பங்கெடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளனவா?”, “பிர்சா ஒருமுறையாவது அம்பை எய்தி இருக்கிறானா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். 1984-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் மானுடவியல் ஆய்வுத்துறை இயக்குநராக இருந்தவர் இவர்.

முண்டா பழங்குடியினரின் பெரும்பாலான தாக்குதல்கள் நேரடியாக வெள்ளையர் அரசுக்கு எதிராக நடந்தவையல்ல. பெரும்பாலான தாக்குதல்கள் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே ஆகும். 24 தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்நாள் இரவு நடந்தவையே ஆகும். கிறிஸ்தவப் பாதிரியார்கள் பழங்குடியினருக்குக் கல்வியை வழங்கியவர்கள். மக்களின் நிலவுரிமைக்காக நீதிமன்றங்களில் வழிகாட்டியவர்கள். அதே வேளையில் வெள்ளையர்களின் அடக்கு முறைகளும் இருந்தன. இதை மக்கள் எதிர்க்க ஆரம்பித்தனர்.

பிர்சா வின் சமஸ்கிருதமயமாக்கல்

சிறு வயதிலேயே கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிர்சா ஆனந்த் பானே என்ற வைஷ்ணவத் துறவியுடன் ஏற்பட்ட தொடர்பால் மனம் மாறியவன். துளசிச் செடியை வணங்கி, பூணூல் அணிந்து வைஷ்ணவ குருவின் சீடனாக மாறிய பிர்சா புலால் உணவையும் தவிர்த்தான். தன்னை “கடவுளின் அவதாரம்” என்று சொல்லி மக்களை மூடநம்பிக்கைகளில் வைத்திருந்தான். இராமாயண, மஹாபாரதக் குப்பைகளைப் பழங்குடியினரிடம் பரப்பினான். கிறிஸ்தவ ஆதிவாசிகளைத் தாய் மதத்துக்கு திரும்பச் செய்தான்.

ஆக, பிர்சா முண்டாவின் இலக்கு மதமாற்றத்தைத் தடுப்பதே! இதில் நிலவுரிமைக்கான நோக்கமும் இருக்க வாய்ப்புண்டு. மக்களும் பிர்சாவைத் தங்களுக்கு மோட்சம் அளிக்க வந்த கடவுளாகவே பார்த்தனர். வைஷ்ணவ சாமியார் சொல்படி அசைவம் சாப்பிடக்கூடாது என்று போதித்த பிர்சா வியாதிகளைக் குணப்படுத்துவது மாயாஜாலம் என்ற பெயரில் மக்களை ஏமாற்று வதில் வல்லவனாகத் திகழ்ந்தான். அசைவ உணவு களை மக்கள் தவிர்த்ததோடல்லாமல், வெள்ளைப் பன்றிகளையும், வெள்ளைக் கோழிகளையும் அழித்தனர். ஆடு, கோழிகள் பலியிடுவது தடுக்கப்பட்டது.

பிர்சாமுண்டா செய்த இந்தச் செயல்களுக்குச் சரியான பெயர் ‘சமஸ்கிருத மயமாக்கல்’ (sanskritisation). ஜாதி அடுக்கில் தன்னை விட மேலே இருப்பவனின் பழக்கவழக்கங்களையும் ஆச்சார அனுஷ்டானங்களையும் பின்பற்றுவதே சமஸ்கிருதமயமாக்கல். இதற்கு இரையான ஒடுக்கப்பட்டவர்கள் பிற்காலத்தில் ‘பஜ்ரங் தள்’, ‘அனுமன் சேனா’ போன்ற வன்முறையில் இறங்கும் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களாகத்தான் மாறுவார்கள். பிர்சா முண்டாவும் அத்தகையவனே.

1895-ஆம் ஆண்டில் ஒருநாள், ‘உலகம் அந்த நாளில் முடிவுக்கு வந்துவிடும்’ என்று கூறிய பிர்சா மலைப்பகுதி மட்டுமே உயிர்பிழைக்கும் என்று நம்பவைத்து 6,000 மக்களை சால்காடு குன்றில் கூட வைத்தான். பிர்சா முதல்முறை கைது செய்யப் பட்டதும் அப்போதுதான். வெள்ளைக்காரர் களிடம் தன்னிலை விளக்கமாக, “இது மத ஒன்றுகூடுகையே தவிர, அரசுக்கு எதிரான செயல் அல்ல” என்றான் பிர்சா. பின்பு விடுவிக்கப்பட்டான்.

பிர்சாவின் இந்த மதமாற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், பிர்சாவாதிகளின் தாக்குதல் களாலும் அச்சம் அடைந்த பாதிரியார் ஹாஃப்மேன், ஆங்கிலேய அரசுக்கு எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு ஆபத்தான பிர்சாவை நாட்டுக்கு ஆபத்தானவராகச் சித்தரிக்கிறார். “பிர்சாவுக்குத் தக்க பாடம் கற்பிக்கு மாறும், பிர்சா என்ற நபரே இல்லாமல் ஆக்குமாறும்” வேண்டுகோள் விடுக்கிறார். அதன்படியே பிர்சா கைது செய்யப்படுகிறான்.

கமிஷனர் ஃபொர்ப்ஸ் பிர்சாவைப்பற்றிச் சொல்லும்போது, “காலனிய நாட்டின் ஆயுதப் படைகள் பிர்சாவையும், அவரைப் பின்பற்றுபவர் களையும் நசுக்கியதற்குப் பிர்சாவின் மதம் காரண மில்லை. சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரவே தாக்குதல் நடத்தப்பட்டது” என்றார். கைது செய்யப்பட்ட பிர்சா இரண்டு மாதங்களில் கொல்லப்படுகிறான்.

கிறிஸ்தவ எதிர்ப்பாளர் பிர்சா

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்ன வென்றால், பிர்சாவின் போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக எடுத்துக்கொள்ளாமல், அதை முதலில் ஒரு மதச்சண்டையாகப் பார்க்க வேண்டி உள்ளது. “வெளியில் இருந்து வந்த தேவாலய அழிவுச் சக்திகள், பழங்குடியினர் மத்தியில் உருவாக்கிய கோளாறுகளைச் சரிசெய்யும் நோக்கோடு, ஒரு வைஷ்ணவ இந்துத்துவவாதியால் மனம் மாற்றப்பட்ட பிர்சா என்ற இளைஞன், ஒரு புது மதத்தை உருவாக்கி கிறிஸ்துவ மிஷினரிகளை எதிர்த்துச் சண்டையிட்டதே பிர்சாவின் வரலாறு” என்கிறார் ஆய்வாளர் அல்பா ஷா.

கிறிஸ்தவ எதிர்ப்பே பிர்சாவின் முதன்மை எதிர்ப்பாக இருந்திருக்கிறது. நிலவுரிமைக்காக வெள்ளைக்காரர்களை எதிர்த்ததைவிட, கிறிஸ்தவ மிஷனரிகளைப் பிர்சாவின் ஆட்கள் தாக்கியதே மிக அதிகம். தன்னைக் கடவுள் என்று சொல்லிப்பல ஆண்டுகள் மக்களை ஏமாற்றி வந்த பிர்சா முண்டா என்ற இளைஞன் இறக்கும் போது வயது 25.

படேலுக்கு 182 அடி சிலை வைத்த பாஜக, பிர்சா முண்டாவுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில், 100 அடி சிலை வைத்து விசுவாசத்தை காட்டவிருக்கிறது. காரணமில்லாமல் யாருக்கும் 100 அடியில் பா.ஜ.க. சிலை வைக்காது. பிர்சாவின் கடவுள்தன்மையை மடத்தனமாக நம்பும் பழங்குடியினர் மனதில் இன்னும் அதிகமாக மூடநம்பிக்கைகளை ஊறச் செய்து, அதைத் தேர்தலில் ஓட்டாக்குவதே பா.ஜ.க. வின் திட்டம்.

இரண்டு ஆண்டுகளாகப் பிர்சா முண்டா வைப்பற்றிய தரவுகளைச் சேகரித்து வருவதாகக் கூறும் இயக்குநர் கோபி நயினாருக்குப் பிர்சா ஒரு இந்துத்துவ சக்தி என்பது தெரியாமல் போனது ஆச்சரியத்தை அளிக்கிறது! நாவலை மட்டும் நம்பி ஹிந்தியில் பிர்சா முண்டாவைப்பற்றி படமெடுக்கப் போகும் இயக்குநர் இரஞ்சித்தாவது இதை ஆய்வு செய்திருக்க வேண்டாமா?

Pin It