பேரவைத் தோழர்கள் வெற்றிச்செல்வன் மற்றும் உதயகுமார் ஆகியோரின் சிந்தனையில் வெளிவந்துள்ள இந்த நூல், பெரியாரின் பார்வையில் மதம் பற்றிய கருத்துகளை அலசுகிறது.
தலைப்பே அதன் உள்ளடக்கத்தைத் தெளிவாக விளக்குகின்றது. பெரியார் மதங்களின் விரோதியா என்று கேட்கப்படவில்லை. மாறாக ஏன் பெரியார் மதங்களின் விரோதி என வடிவமைத்து உள்ளனர் இந்நூலை.
அதாவது பெரியார் மதங்களின் விரோதி என்பதை விளக்கவே, இவ்வாறாகத் தலைப்புக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பழங்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதங்களின் விதிமுறைகள் மக்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தவே என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இக்கால நடைமுறைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாட்டுக்கும் சட்டங்களாக இருக்கின்றன.
ஆகவே மதங்கள் தேவை இல்லை என்ற பெரியாரின் சிந்தைனையுடன் பளிச் என்ற தொடக்கம் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. பெண்ணியக் கண்ணோட்டத்தில் மதங்களின் தேவை என்பது மேலும் கருத்தாழம் உடைய பகுதியாக அமைந்துள்ளது.
ஆண்களால், ஆண்களுக்காகச் செய்யப்பட்ட மதக் கோட்பாடுகளில் பெண்களுக்கான நிலை, இரண்டாம் நிலையே . இதற்கு மதங்களில் கூறப்பட்டுள்ளவை, குறிப்பாக மனுநீதியில் சொல்லப்பட்டவை, அதற்கு அடுத்தே ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலில் கூறப்பட்டவை பொருத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆண்களிடம் பெண்கள் பற்றிய தீய கருத்து உருவாக்கம் செய்யும் மனுநீதியின் பகுதியையும் கூடுதலாக இணைத்து இருக்கலாம் எனத் தோன்றுகின்றது.
அதே போல தாழ்த்தப்பட்டோர் கண்ணோட்டத்தில் இருந்து மதங்களை அணுகும் பொழுது, தங்களின் கொடுமைகள் தீர மதம் மாறினால் அதில் யாதொரு சிக்கலும் இல்லை என்று தெளிவுப்படுத்தி இருக்கிறார் பெரியார்.
அதே நேரத்தில் அந்த அந்த மதத்தில் இருக்கும் பிற்போக்குச் செய்திகளைச் சாடத் தயங்கவில்லை அவர்.
அம்பேத்கரின் மதமாற்றத்தை ஆதரித்த பெரியாருக்கு, புத்த மதம் குறித்த சிந்தனை எவ்வாறு இருந்தது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இங்கு இயல்பாகப் பிறக்கும்.
புத்தரின் கொள்கைகள், அறிவுக்கு முதன்மை கொடுக்கும் வகையிலும், பார்ப்பனியத்திற்கு எதிர் சிந்தனை உடையவையாகவும் இருக்கின்றன.
ஆனால் மதம் சடங்கு என்று வரும் பொழுது, அது பெரும்பாலும் இந்து மதத்தில் இருந்து வேறுபடுவதில்லை. மாறாகப் புத்தத்தை மதமாக ஏற்காமல் கொள்கையாக ஏற்பது பொருத்தமாக இருக்கும்.
ஆனால் தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து விலக அதனினும் சிறந்த வழியாக இஸ்லாத்தையே கருதி இருக்கிறார் பெரியார். மதமாற்றத்திற்கு எதிராக பெரியார் என்றும் நின்றதில்லை. அது அவரவர் சூழல் தொடர்புடையதாகும்.
அப்படியானால் பெரியார் சொல்லும் வழிதான் என்ன என்ற கேள்வி இங்கு வருகிறது. பெரியாரின் சிந்தனைப்படி மதம் என்ற ஒன்று தேவையே இல்லை. யார் ஒருவரும் தனக்கான வேறு சில காரணங்களுக்காக மதம் மாறித் தங்கள் இன்னல்களை தீர்த்துக் கொள்ள முடியுமானால் சரி. ஆனால் மதம் இல்லாத சமூகமே இலக்கு என்பதே பெரியாரின் கொள்கையாக இருக்கிறது.
இதைப் பெரியாரின் சொற்களிலேயே சொல்வதானால், இந்து மதத்தை நீக்கிவிட்டு வேறு எந்த மதத்தைப் பின்பற்றுவது என்று கேட்பவர்களுக்கு, வீட்டில் நாற்றம் அடிக்கிறது எடுத்து அதை வெளியே எறி என்று சொல்கிறேன்.
அப்படியானால் அங்கு என்ன வைப்பது என்று சிலர் கேட்கிறார்கள், அங்கு எதையும் வைக்க வேண்டியதில்லை என்பதுதான்.
இந்தத் தலைப்புக்கு ஏற்ற நிறைய தரவுகளைத் தொகுத்து இந்நூலின் ஆசிரியர்கள் தங்கள் தர்க்கத்தைச் சிறப்பாக நிறுவியுள்ளனர்.
- மதிவாணன்