“உதைத்துக் கொன்றதற்கு ரூபாய் 200 அபராதம்”

அஸாம் தேயிலைத்தோட்டத்தில், வேலை செய்த ஓர் இந்தியக் கூலியை உதைத்துக்கொன்ற ஓர் ஐரோப்பியருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததைக் கேட்க இந்தியர்கள் மனம் பதறுமென்பதில் ஆக்ஷபனை யில்லை. ஆனபோதிலும், இதுமுதல் தடவையல்ல. இதற்கு முன் பல தடவைகளில் இதைவிடக் கொடுமையான சம்பவங்கள் பலவற்றைப் பார்த்திருக் கிறோம்.

இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பாக, செயில்காட் என்கிற இடத்தில் ஓர் இந்திய ஸ்திரீயை நிர்வாணமாய் இழுத்துக்கொண்டுபோய் இரத்தம் வரும் படியாகப் புணர்ந்த ஓர் ஐரோப்பிய சோல்ஜருக்கு, 25 ரூபாய் அபராதம் விதித்த மாஜிஸ்திரேட் தீர்ப்பு எழுதுகையில், “ஓர் இந்திய ஸ்திரீயை, ஓர் ஐரோப்பியர் புணர்ந்ததை ஓர் பெரிய தப்பென்பதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் இரத்தம் வரும்படி புணர்ந்ததற்காக அபராதம் விதிக்கும்படியிருக்கிறது. ஆதலால் அதற்காக 25 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தது நேயர்கள் ஞாபகத்திலிருக்கும். வெள்ளைக்காரருடையவும், அரசாங்கத்தாருடையவும், இதுபோன்ற செய்கைகள், மதிக்கத்தகுந்ததும், இந்து தர்மத்திற்கே ஆதாரமானதுமான மநுதர்ம சாஸ்திரத்தை நமக்கு ஞாபகமூட்டுகிறது.

ஏறக்குறைய வெள்ளைக்காரருடையவும், அரசாங்கத்தாருடையவும், செய்கையும், மநுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்துத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்கிற விஷயத்தில், நமக்கு அதிகமான சந்தேகம் தோன்றுவதே கிடையாது. ஏனெனில், மநு 8-வது அத்தியாயம் 380-வது சுலோகத்தில் “பிராமணன் எப்பேர்ப்பட்ட பாவமான செய்கை செய்தாலும், அவனைக் கொல்லக்கூடாது, காயமும் செய்யக்கூடாது, வேண்டுமானால் அவன்பொருளை அவனுக்குக் கொடுத்து வேற்றூருக்கு அநுப்பிவிடலாம்” என்றும், 381-வது சுலோகத்தில் “எவ்வளவு பெரிய குற்றமானாலும், பிராமணனைக் கொல்லவேண்டுமென்று அரசன் மனதிலும் நினைக்கக்கூடாது” என்றும், 379 - வது சுலோகத்தில், “பிராமணனுடைய தலையை மொட்டையடிப்பது, கொலை தண்டனையாகும்” என்றும், ஸ்திரீ விஷயங்களில் சூத்திரன் காவலில்லாத பிராமண ஸ்திரீயைப் புணர்ந்தால் ஆண்குறியை அறுத்து அவன் தேக முழுவதையும் துண்டு துண்டாக வெட்டி அவனுடைய எல்லாப் பொருள்களையும் பிடுங்கிக் கொள்ளவேண்டும் என்றும், “ஒரு பிராமணன் கற்புடைய ஒரு ஸ்திரீயை துராக்ரதமாகப் புணர்ந்தாலுங்கூட ஆயிரம் பணத்திற்குள் அபராதம் விதிக்க வேண்டும்” என்னும் கொள்கையுள்ள இந்து தர்ம சாஸ்திரங்களைப் பிரிட்டிஷார் பின்பற்றுவதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஆனால், இவற்றை அநுமதித்துக் கொண்டு ஓர் பெரிய சமூகம் உயிர் வாழ்கிறதேயென்பதைப்பற்றித்தான் நாம் கவலை கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.12.1925 )

Pin It