நெல்லை மாவட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த காதல் தம்பதிக்கு பாதுகாப்பு அளித்ததற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்’ என்ற ஜாதி வெறி அமைப்பு அடித்து நொறுக்கியுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த பந்தல் சிவா என்பவரின் தலைமையில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. இதனை பெண் வீட்டாரின் வழக்கமான எதிர்ப்பு மனநிலை என்று கருதிவிட முடியாது. பந்தல் சிவா என்பவர் ஜாதியின் பெயரால் ரவுடித்தனமும், கட்டப் பஞ்சாயத்தும் செய்து கொண்டிருக்கும் நபர். “தனது சொந்த செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டும், ஜாதித் திமிரை வெளிக்காட்ட வேண்டும்” என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டே இத்தாக்குதலை நடத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணியிலும், அகில இந்திய அளவில் பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியிலும் முக்கிய அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இத்தகைய தாக்குதலை துணிச்சலாக நடத்தியிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. ஜாதிவெறி அமைப்புகளின் சட்டவிரோத துணிச்சல் போக்கை தொடக்க நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரில் 10 பேரை காவல் துறை உடனடியாக கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதை ஆகிவிடாமல் இருக்க தொலைநோக்கு சிந்தனையோடு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

ஏற்கெனவே 2020ஆம் ஆண்டில் ஈரோட்டைச் சேர்ந்த இளமதி- செல்வன் காதல் இணையர்களுக்கு, சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ஈசுவரன், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்து பாதுகாப்பு அளித்தார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜாதிவெறிக் கும்பல் மூவரையும் கடத்திச் சென்று, காதல் தம்பதியை பிரித்து வைத்தது. கழகத் தலைவர் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி தம்பதியை மீண்டும் இணைத்து வைத்தார். திராவிடர் விடுதலைக் கழகமோ, திராவிட இயக்கங்களோ அல்லது மற்ற முற்போக்கு சக்திகளோ ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைக்கின்றன. அவர்களை பாதுகாத்து வைப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற சூழல் ஏற்படுவது என்பது ஜாதி வெறி சக்திகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையே உணர்த்துகிறது.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் வளர்ந்திருக்கிற மதவாத, ஜாதியவாதம் கொடுக்கிற துணிச்சலே இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நடைபெறக் காரணமாக இருக்கிறது. ஆனால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அரை நூற்றாண்டுக்கு முன்பே கொடுத்து, ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருகிட வழிவகை செய்த தமிழ்நாட்டில், இத்தகைய போக்கு தொடர்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்றுவதும், ஜாதி மறுப்புத் திருமணம் புரியும் தம்பதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டமியற்றக் கோரி பல ஆண்டுகளாக எழுந்து வரும் கோரிக்கையை அரசு இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது.

எனினும் அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டுமே இத்தகைய தாக்குதல் சம்பவங்களை தடுத்துவிடும் என்பதோ, ஜாதி மறுப்பு இணையர்களின் பாதுகாப்பை முற்றுமுழுதாக உறுதி செய்திவிடும் என்றோ கருதிவிட முடியாது. ஜாதி ஒழிப்புப் பரப்புரைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். ஜாதிய வாழ்வியல் முறையில் இருந்து மக்களை விடுவிக்கும் முயற்சிகள் இடைவிடாது மேற்கொள்ளப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இப்பணியில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்வதே ஜாதி வெறி சக்திகளுக்கு திருப்பிக் கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும். வர்க்கம் பெரிதா, வர்ணம் பெரிதா என்ற நட்புமுரண் விவாதங்களை ஒதுக்கிவிட்டு, வருணமும் வர்க்கமும் வேறு வேறல்ல என்பதை உணர்ந்து ஜாதி ஒழிப்புப் பரப்புரையை முற்போக்கு சக்திகள் முதன்மைப்படுத்த வேண்டும். அதன்மூலமே ஜாதிய சங்கங்கள், அமைப்புகளை மக்களிடம் இருந்து விலக்கி வைக்க முடியும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, 2014ஆம் ஆண்டில் ஈரோட்டில் ‘ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு’ இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கியது. “ஜாதி, மத மறுப்பு இணையருக்கு சட்ட ரீதியானப் பாதுகாப்பு வழங்குவது, ஜாதி, மத மறுப்புத் திருமண இணையரின் திருமணத்தைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களைய உதவுவது, ஜாதி, மத மறுப்புத் திருமண இணையருக்கு வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வழிகாட்டுவது, ஜாதி, மத மறுப்பு இணையரின் வாரிசுகளுக்கு ஜாதியற்றோர் என்ற பிரிவில் தனி இடஒதுக்கீடு வழங்கக் கேட்டு அரசை வலியுறுத்துவது, மத மறுப்புத் திருமணங்களைப் பதிவு செய்யும்போது சட்டத்தில் இருக்கும் இடர்பாடுகளை களைய அரசை வலியுறுத்துவது” உள்ளிட்ட நோக்கங்களோடு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அதுபோன்ற இயக்கங்கள் மாவட்டம்தோறும் மீண்டும் தொடங்க வேண்டியதன் அவசியத்தையே நெல்லை தாக்குதல் சம்பவம் உணர்த்துகிறது. முற்போக்கு சக்திகள் இத்தகைய முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதுவே சரியான தீர்வாக அமையும்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It