“கல்வியும் அதிகாரமும் மறுக்கப்பட்டமையே ஒடுக்கப் பட்ட வகுப்பினரின் அடிமை நிலைக்குக் காரணம்” என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார். அரசமைப்புச் சட்டத்தால் சனநாயகக் குடியரசு என்று அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர்-குறிப்பாக தீண்டத் தகாதவர்கள் என்று சாதி இந்துக்களால் கருதப்படும் தலித்துகள் தங்கள் அடிமை நிலையிலிருந்து எந்த அளவுக்கு விடுதலை பெற்றுள்ளனர் என்பது வினாக் குறியாகவே நிற்கிறது.
தீண்டாமையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அம்பேத்கர் - சாதி அமைப்பு குறித்த ஈடுஇணையற்ற ஆய்வாளர் என்ற முறையில் 1945இல் “காந்தியும் காங்கிரசும் தீண்டப் படாத வகுப்பு மக்களுக்குச் செய்தது என்ன?” என்ற நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார் :
“தீண்டாமை மறைந்து போய்க் கொண்டிருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். இந்த வாதம் ஒரு வாதமே அல்ல. ‘என்னைத் தொடாதே’ என்ற முறையிலான தீண்டாமைக்கும் சமூகப் பாகுபாட்டில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மனப்போக்கு என்ற முறையிலான தீண்டா மைக்கும் இடையில் இவர்கள் வேறுபடுத்திப் பார்ப்பதாகத் தெரியவில்லை. இரண்டும் அறவே வெவ்வேறானவை. ‘என்னைத் தொடாதே’ என்ற முறையிலான தீண்டாமை நகரங்களில் பையப்பைய மறைந்து கொண்டிருக்கலாம் என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா என்பது எனக்கு அய்யமே! ஆனால் தீண்டப்படாத மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்ட வேண்டும் என்ற அளவில் இந்துக்களிடம் ஒரு மனப்போக்காக இருக் கின்ற தீண்டாமையானது கற்பனைக்கு எட்டக்கூடிய காலத்திற்குள் நகரங்களிலோ கிராமங்களிலோ மறைந்து போகாது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.”அம்பேத்கர் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருப்பதுபோல், சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னும் - நரேந்திர மோடியின் சொற்களில் கூறுவதானால் ‘அமிர்த காலத்தில்’, தலித்துகளிடம் பாகுபாடு காட்டும் மனப்போக்கு சாதி இந்துக் களிடம் நீடித்து நிற்கிறது. இதனால்தான் நாள்தோறும் இந்தியா முழுவதும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.
பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை தலித் மாணவர்கள் ஆசிரியர்களாலும் உடன் பயிலும் மாணவர் களாலும் துன்புறுத்தல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர், அய்தராபாத்தில் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் வகுப்பைச் சார்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவரான ரோகித் வெமுலா ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத் மாணவர் களை எதிர்த்தார் என்பதற்காக பல்கலைக்கழக நிருவாகத்தால் பல தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டதால் 2016 சனவரியில் தற்கொலை செய்துகொண்டார். தீண்டாமை அடிப்படையில் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் தொடர்ந்து நடக்கின்றன.
இத்தன்மையில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரியில் கடந்த ஆகத்து 9ஆம் நாள் இரவு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சின்னதுரை என்கிற தலித் மாணவர் உடன் படிக்கும் தேவர் சாதியைச் சார்ந்த மூன்று மாணவர்களால் அரிவாளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். தடுக்க முயன்ற சின்னதுரையின் தங்கை செல்வியும் தாக்கப்பட்டார். செல்வி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.
நாங்குனேரியில் அரசு மேனிலைப் பள்ளி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியில் 1500 மாணவர்கள் படித்தனர். சாதிப் பகையாலும் பிற காரணங்களாலும் தற்போது 114 மாணவர்களே பயில்கின்றனர். இவர்களில் 94 பேர் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர்; 3 பேர் தலித்துகள். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் நாங்குனேரியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் சேர்ந்தனர். சின்னதுரையின் தாய் கணவனால் கைவிடப்பட்டவர். அங்கன்வாடியில் அன்றாடக் கூலிக்கு வேலை செய்கிறார். நான்கு ஆண்டுகளுக்குமுன் தன் மகனையும் மகளையும் நான்குனேரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள வள்ளியூரில் அரசு உதவி பெறும் மேனிலைப் பள்ளியில் சேர்த்தார். சின்னதுரையைத் தாக்கிய மாணவர்களும் இதே பள்ளியில் படிக்கின்றனர். நாங்கு னேரியிலிருந்து பேருந்தில் ஒன்றாகவே பயணம் செய்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னதுரையை, தேவர் சாதியைச் சார்ந்த இம்மூன்று மாணவர்கள் பேருந்திலும், பள்ளியிலும் இழிவாக நடத்தி வந்துள்ளனர். சின்னதுரையை சிகரெட், தின்பண்டங்கள் முதலானவற்றைக் கடையில் வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். மறுத்த போது அச்சுறுத்தி அடித்துள்ளனர். இதனால் பெரும் மனஉளைச் சலுக்கு உள்ளான சின்னதுரை பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிட்டான்.
சின்னதுரை நல்லொழுக்கமும் படிப்பில் ஆர்வமும் உடையவன். அதனால் தலைமை ஆசிரியர் சின்னதுரை பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று அவன் தாய்க்குத் தகவல் அனுப்பினார். சின்னதுரையை அழைத்துக் கொண்டு அவன் தாய் தலைமை ஆசிரியரிடம் சென்றார். மேல்சாதி மாணவர் மூவரின் துன்புறுத்தலே பள்ளிக்கு வர அஞ்சுவதற்குக் காரணம் என்று தலைமை ஆசிரியரிடம் சின்னதுரை கூறினான். தலைமை ஆசிரியர் அம்மூன்று மாணவர்களைக் கண்டித்தார். அன்று மாலை பள்ளி முடிந்ததும் அம்மூன்று மாணவர்கள் சின்னதுரையிடம் தங்களைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் கூறியதற்கான விளைவைச் சந்திப்பாய் என்ற மிரட்டினர்.
அன்றிரவு அம்மூன்று மாணவர்கள் தங்கள் அகவை ஒத்த மூன்று பேருடன் (இந்த 6 பேரும் 18 அகவைக்குக் கீழானவர்கள்) இருசக்கர வாகனத்தில் தலித்துகள் குடியிருக்கும் தெருவுக்குச் சென்றனர். சின்னதுரையின் வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் தாக்கினர். தன் கழுத்துக்கு வைக்கப்பட்ட குறியை சின்னதுரை கைகளால் தடுத்ததால் உயிர் பிழைத்தான். தாய் வீட்டில் இல்லாத நிலையில் தங்கை தடுக்க வந்ததால் அவளையும் அரிவாளால் தாக்கினர். அண்ணன் தங்கையின் அலறல் ஓசை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அம்மூன்று மாணவர்கள் வாகனத்தில் தெருவில் காத்துக் கொண்டிருந்த தன் கூட்டாளிகளுடன் தப்பி ஓடினர். சின்னதுரையும் செல்வியும் குருதி வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சின்னதுரையின் உள்ளங்கை கடுமையாகக் கிழிக்கப்பட்டுள்ளது.
சாதி வெறியால் நிகழ்த்தப்பட்ட இக்கொடிய செயல் ஊடகங்களில் முதன்மை செய்தியானது. அமைச்சர்கள் மருத்துவமனையில் சின்னதுரையையும் செல்வியையும் சந்தித்து ஆறுதல் கூறினர். முதலமைச்சர் சின்னதுரையின் தாயிடம் தொலைபேசியில் பேசினார். உரிய மருத்துவமும் பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று உறுதி கூறினார். தாக்கிய மாணவர்கள் மூவரும் அவர்களுக்குத் துணை செய்த மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஆறு பேரும் நாங்குனேரியிலிருந்து தப்பிச் செல்ல உதவி செய்த இருபது அகவை இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பள்ளிகளில் சாதிப் பகைமையும், மோதலும் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர் நிகழ்வாக இருக்கின்றன, நாங்குனேரி கொடுஞ் செயலையொட்டி, தமிழ்நாட்டு அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்துள்ளது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி உணர்வு வளர் வதையும், மோதல்கள் நிகழ்வதையும் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கூறுமாறு நீதிபதி சந்துரு குழுவிடம் தமிழ்நாட்டு அரசு கேட்டுள்ளது.
தலித் மாணவர் சின்னதுரையைத் தாக்கிய அம் மூன்று மாணவர்களின் சாதிவெறி மனப்போக்கிற்கு அவர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியுமா? அம் மாணவர்களின் பெற்றோர், உறவினர், பிறந்த சாதி ஒட்டுமொத்த சாதியக் கட்டமைப்பும் இக்கொடுஞ் செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டுமல்லவா!
சாதி என்பது தன்னளவில் ஒரு மூடிய சமூகமாகவே இருக்கிறது (A caste is an enclosed class) என்றும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வைக் கற்பித்து அதையே அலகாகக் கொண்டு ஏணிப்படிகள் போல் மேல்-கீழ் என்கிற வரிசையில் (graded inequality) சாதிகள் அடுக்கமைக் கப்பட்டுள்ளன என்றும் மேதை அம்பேத்கர் கூறியிருப்பதை எந்தவொரு சாதிச் சிக்கலையும் ஆராய்வதற்கு அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.
1920 முதல் 1937 வரை நீடித்த நீதிக்கட்சி ஆட்சியில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பு, அரசு வேலையில் இடஒதுக்கீடு -அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார் சாதி அமைப்புக்கும், பார்ப்பன ஆதிக்கத்திற்கும் சாத்திர, இதிகாச, புராணங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரம், நடத்திய போராட்டங்கள் -தி.மு.க. 1967 வரை பரந்துபட்ட வெகுமக்களிடையே பரப்பிய பகுத்தறிவுக் கருத்துகள் முதலானவற்றால் தமிழ்நாட்டில் அரசியலில் பார்ப்பனர் ஆதிக்கம் அடியோடு வீழ்ந்தது; தம் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தைச் சேர்க்கும் வழக்கம் ஒழிந்தது; கல்லூரிகளில் உடன் பயிலும் மாணவர்களின் சாதி என்னவென்றே தெரியாமல் பழகி, பட்டம் பெறும் சமத்துவ நிலை ஏற்பட்டது.
ஆனால் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் வெளிப்படையாக சாதி பாராட்டாத -சமத்துவத்தை நோக்கிய வளர்ச்சிப் போக்கில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு சமூக, அரசியல், பொருளியல் காரணிகள் உள்ளன.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. 1980இல் எம்.ஜி.ஆர். இதை 50 விழுக்காடாக உயர்த்தினார். 1967 தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சாதியினர் பெருமளவில் அரசியல் அதிகாரத்திற்கு வந்தனர். இத்தகைய சமூக-அரசியல் பின்னணியில் தத்தம் சாதிக்கு அதிக இடஒதுக்கீடு பெறுவது என்கிற கோரிக்கையை முன்வைத்து புதிய புதிய சாதிச் சங்கங்கள் தோன்றின. அதற்கு முன்னிருந்த சாதிச் சங்கங்கள் மேலும் தம்மை வலிமைப்படுத்திக் கொண்டன. சாதிச் சங்கங்கள் மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடுகள் நடத்தின. தம் சாதியினரிடம் நிதி திரட்டன; சாதி மாநாடுகளுக்குத் தம் சாதியினரை அணி திரட்டினர். இதனால் தன் சாதி -தன்னுடைய சாதிக்காரன் என்கிற உணர்வும் பற்றும் மேலோங்கியது. சில சாதிச் சங்கங்கள் தமக்கென தனியாக அரசியல் கட்சியைத் தொடங்கின. இதனால் சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் குலைந்தது; வெறுப்பும் பகையும் வளர்ந்தது.
1980 முதல் ஆர்.எஸ்.எஸ்.இன் சங் பரிவாரங்களும் பா.ச.க.வும் அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடத்தில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு வழிகளில் இந்துமத வெறியை எரிதழலாய் மூட்டின. இசுலாமியர்களை இந்நாட்டின் பகை வர்களாகக் காட்டின. மதச்சார்பற்ற மனப்போக்கு மங்கி, இந்துமத சனாதனப் பழைமை வாதம் மேலோங்கியது. இதனால் பொது இடங்களில் பிள்ளையார் சிலைகளை வைத்து, ஆரவாரமாக ஊர்வலம் நடத்துவது, கோயில் திருவிழாக்களை ஆடம்பரமாக நடத்துவது போன்ற செயல்பாடுகள் மிகுந்தன. இந்து மதப் பழமை வாதம் சாதிகளிடையிலான முரண்பாடுகளை மேலும் கூர்மைப் படுத்தியது. மூடநம்பிக்கைகள் முட்புதராய் வளர்ந்தன.
மதநம்பிக்கையைக் குறிக்கும் தன்மையில் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்டும் பழக்கம் 1990க்குப்பின் தமிழ் நாட்டில் பரவியது. அ.தி.மு.க.வின் தலைவர்கள் பா.ச.க. தலைவர்களைவிட நெற்றியில் பலவகையான பொட்டு களுடனும் கைகளில் வண்ணவண்ணக் கயிறுகளுடனும் உலாவந்து கொண்டிருக்கின்றனர். தென் மாவட்டங்களில் சமயக் கயிறு சாதியின் அடையாளக் கயிறாக மாறியது. அகவையில் மூத்தோரிடம் இருந்த சாதிப் பற்றும், சாதிப் பெருமிதமும் இப்போது இளைஞர்களிடையே குடியேறி யுள்ளது. தன் சொந்த சாதியில் செல்வாக்கு பெற்றால்தான் குறுகிய காலத்தில் நல்ல வருவாய் வழங்கும் தொழிலாக உருவெடுத்துள்ள அரசியலில் ஊராட்சி மன்ற உறுப்பினர் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரையிலான பதவிகளை அடைய முடியும். அடியாட்கள் படையும் ஊழல் செய்து குவித்த பெருஞ் செல்வமும் இல்லாமல் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது. அதனால் சாதி வன்முறையும் அரசியல் வன் முறையும் பின்னிப்பிணைந்து நிற்கின்றன.
“சாதி அமைப்பை அழிக்காமல் தீண்டாமையை ஒழித்துவிடலாம் என்று நம்புவது வீணானது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருதுவது முற்றிலும் தவறானது. ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிரிக்க முடியாது. சாதி அமைப்பின் நீட்சியே தீண்டாமை. சாதியும் தீண்டாமையும் பிரிந்து நிற்காது. இரண்டும் இணைந்தே நிற்கும்; இணைந்தே வீழும்” என்று அம்பேத்கர் சாதிக்கும் தீண்டாமைக்குமான பிணைப்பைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாங்குனேரியில் தலித் மாணவர் சின்னதுரை கொடு மையாகத் தாக்கப்பட்டமை, வேங்கைவயலில் தலித்துகளுக் கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தமை போன்ற தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழும் போது மட்டும் பலரும் கண்டிக்கின்றனர். இக்கொடுஞ் செயல்களுக்கு ஆதாரமாக விளங்கும் சாதியக் கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் இயக்கத்தினர் தவிர மற்றவர்கள் பேசுவதில்லை. இடதுசாரிகள்கூட தீண்டாமை ஒழிப்பில் காட்டும் முனைப்பைச் சாதி ஒழிப்பில் காட்டுவதில்லை. தலித் இளைஞர்கள் இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் போன்ற வர்கள் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட போது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிட அரசியல் கட்சிகள் இக்கொலை களை வெறும் குற்றச் செயல்களாக மட்டுமே பார்த்தன. சாதி ஒழிப்பு குறித்து எதுவும் பேசவில்லை.
தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் இளைஞர் யுவராஜ் தன் சாதி இளைஞர்களை ஆணோ, பெண்ணோ வேறு சாதியினரைக் காதலிக்கவோ, திருமணம் செய்து கொள்ளவோ கூடாது என்று தீவிரமாக பரப்புரை செய்து கொண்டு இருந்தார். இந்த யுவராஜ் தன் சாதி இளைஞர் களுடன் சேர்ந்து 2005இல் கோகுல்ராஜ் என்கிற தலித் இளைஞரை ஆணவப் படுகொலை செய்தார். காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த நிலையிலும் ஒரு இளவரசன் போல் தன் சாதியினரின் பாதுகாப்பில் உலா வந்து கொண்டு, வலையொளிகளில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தார். முற்போக்குச் சிந்தனை கொண்ட வழக்கு ரைஞர்கள், நீதிபதிகள் காட்டிய தனி அக்கறை காரணமாக நீண்ட சட்டப் போராட்டத்திற்குப்பின் யுவராசுக்கு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டது.
தீரன் சின்னமலை போன்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரச்சாவு அடைந்தவர்களை அவர்கள் பிறந்த சாதிச் சிமிழுக்குள் அடைக்க முயலும் போக்கு வளர்ந்து வருகிறது. வ.உ.சி., திரு.வி.க., பாரதிதாசன் போன்றவர்களும் சாதித் தலைவர்களாகக் கொண்டாடப்படுகின்றனர். இப்போக்கு சாதிகளுக்கு இடையிலான பிளவை மேலும் விரிவுபடுத்து கிறது. அமைச்சர்கள் சாதிச் சங்க மாநாடுகளில் கலந்து கொள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தீண்டாமையைக் கடைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. ஆயினும் தலித்துகள் மீதான கொடுமைகள் இந்தியா முழுவதும் நடந்து கொண்டே இருக்கின்றன. அம்பேத்கர் குறிப்பிடுவது போல தீண்டாமைக் காரணமாகப் பாகுபாடு காட்டும் சாதி இந்துக்களின் மனநிலையில் -எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
வாக்கு அரசியலைக் கடந்து முற்போக்கு இயக்கங் கள் மக்களிடையே தீவிரமாகப் பரப்புரையும், செயல் பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். அகமண முறை நீடிக்கின்ற வரையில் சாதி அமைப்பும் தீண்டா மையும் இருக்கும். ஆண், பெண் அனைவருக்கும் நல்ல கல்வியும், வேலை வாய்ப்பும், வாழ்வாதார உறுதிப்பாடும் ஏற்படும் போது சாதி மறுப்பு திருமணங்கள் இயல்பான முறையில் அதிகமாகும். பள்ளி, கல்லூரி களில் சாதி குறித்த வரலாற்று வழிப்பட்ட அறிவியல் பார்வையை மாணவர்கள் பெறும் வகையில் பாடங்கள் இருக்க வேண்டும் என்பது முதன்மையாகும். கிட்டத் தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் சாதி அமைப்பைத் தகர்க்காமல் இந்தியாவில் உண் மையான சனநாயகமோ, சமத்துவமோ, சகோதரத்துவமோ, சமஉரிமையோ ஏற்படாது.
“எந்தப் பக்கம் திரும்பினாலும் உங்கள் பாதையின் குறுக்கே சாதி எனும் பூதம் வழி மறித்துக் குறுக்கே நிற்கும். நீங்கள் அதைக் கொல்லாத வரையில் அரசியல் சீர்திருத் தத்தையோ, பொருளியல் சீர்திருத்தத்தையோ அடைய முடியாது.” -டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
“தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல் லாதாருக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதாரின் முன்னேற்றமாகும். தீண்டாதாரின் துன்பந்தான் பிராமண ரல்லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த் தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும்” (1925 நவம்பரில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரசு மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா.)
- க.முகிலன்