தமிழகத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் சாதி நிலவுடைமை தகர்ந்து ஒரு புதிய சமூக மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றின. ஆனால் தமிழகத்தில் நுழைந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவற்றை அழித்தது. சாதி - நிலவுடைமையை அழிக்காமல் தனக்கு தேவையானபடி சாதி அரை நிலவுடைமையாக மாற்றிக்கொண்டது.
இதனால் கிராமச் சமூகத்தில் இரட்டைத்தன்மை உருவானது. பழைய சாதி நிலவுடைமை தொடரும் அதே வேளையில், சந்தைக்காக கச்சாப் பொருட்களை உற்பத்திச் செய்யும் முதலாளித்துவமும் தொடங்கியது.
நகரங்களில் புதிய அரசு நிர்வாகமும் தொழிற்சாலைகளும் உருவாகின. இதற்கான உழைப்புச் சக்திகளைத் தயார் செய்ய பிரிட்டிஷ் அரசால் கல்வி சமூகமயமாக்கப்பட்டது. இதனால் கல்வி மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாயின. இந்த வாய்ப்புகள் அனைத்தையும் பிராமணர்கள் கைப்பற்றினர். இதனால் பிராமணரல்லாதோர் இயக்கம் தொடங்கப்பட்டது.
உழைப்புப் பிரிவினை என்ற அடிப்படையில் கிராமத்தில் உள்ளடங்கி இருந்த சாதி, சுயதேவைப் பொருளாதாரத்தில் உள்ளடங்கி இருந்த சாதியானது சாதிச்சங்கம் என்ற நவீன முதலாளிய வடிவத்தை எடுத்தது.
கல்வி, வேலை, அதிகாரம் என்ற சனநாயக முழக்கங்களுடன் சாதிகளின் மேல்தட்டு, குட்டி முதலாளிய பிரிவினரின் தேவைக்காக அனைத்து மக்களும் அணி திரட்டப்பட்டனர். இப்போக்கில் 1920களில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பிராமணர்களைத் தொடர்ந்து வெள்ளாளர்களும் நகரங்களை நோக்கி நகர்ந்தனர். இதனால் கிராமப்புறங்களில் இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கம் நிலைப்பெற்றது. 1947 சுதந்திரத்திற்குப்பின் அதிகாரம் பெற்ற இந்தியப் பிராந்திய பெருமுதலாளி வர்க்கம் சாதி - அரை நிலவுடைமையை ஒழிக்கவில்லை.
மாறாக மூலதன - சாதிநிலக்கிழார்களுடன் சமரசம் செய்துகொண்டனர். இதனால் இடைநிலை ஆதிக்கச்சாதிகளின் ஆதிக்கம் இன்றுவரை கிராமத்தில் தொடர்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியே தனிப் பெரும்பான்மை பெற்றது. இதில் வன்னிய சாதியைச் சேர்ந்த மாணிக்கவேல் நாயக்கரும் இராமசாமி படையாச்சியும் அடக்கம்.
சட்டசபை உறுப்பினர்களை கணிசமாகப் பெற்ற இவர்கள் பின்னர் அணி தாவி இராஜாஜியுடன் சேர்ந்து அமைச்சர்களாயினர். இந்தியாவில் முதன் முதலில் அணி தாவுதலை தொடங்கி வைத்தவர்கள் இவர்கள்தான். பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கரைந்து மறைந்து போயினர்.
முத்துராமலிங்கத் தேவரின் பார்வர்டு பிளாக் கட்சி முக்குலத்தோர் சாதியினரை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இவர்கள் மற்ற பெரிய கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொண்டு தங்களை தக்கவைத்துக் கொண்டனர்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் பின்னர், அதிகாரப்பங்கீட்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. இது சில முன்னேற்றங்களை கண்டது. இதனால் முதலியார், இடையர், உடையார், கொங்கு வேளாளர் என்று பல சாதிக்கட்சிகள் உருவாயின.
இவற்றில் பெரும்பாலானவை 2001இல் தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு தோல்வி அடைந்தன. அதே போல் 2014இல் பி.ஜே.பியுடன் கூட்டுச் சேர்ந்து நாடாளுமன்றத்தில் போட்டி யிட்டு படுதோல்வி அடைந்தன. இருப்பினும் சாதியக்கட்சிகள் நீடிக்கவும் புதியதாக உருவாகவும் செய்கின்றன. இதற்கான சமூக அடித்தளம் நீடிக்கவே செய்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி மைய அரசில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து 11ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இதில் அடித்த கொள்ளைகளில் பொருளாதார ரீதியாக தன்னை பலப்படுத்திக்கொண்டது. பின்னர், பதவி கிடைக்க அரும்பாடுபட்டது. இராமதாஸ் அனைவரையும் கெஞ்சிக் கூத்தாடினார்.
தன் மகளை எப்படியாவது இராஜ்ய சபா எம்பியாக்கி மந்திரியாக்க துடித்தார். தனது கனவு நிறைவேறவில்லை என்ற விரக்தியின் உச்சத்திற்கே சென்றார். அதன் விளைவு தனது பலத்தை காட்டுகிறேன் என்று சாதிவெறியை கிளப்பி தருமபுரியில் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் மூன்று தலித் கிராமங்களை தீக்கிரையாக்கினர்.
இந்நிகழ்வுக்குப் பிறகு சாதிவெறியன் இராமதாசு தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து தலித்தல்லாதோர் இயக்கத்தைக் கட்ட முயற்சித்தார். இதன் விளைவு “புதிய தாராளமயத்தால்” சிதைந்து கொண்டிருக்கிற “சாதியக் குடும்ப முறைகளை” காப்பாற்றுவதற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.
சாதிக்கலப்பின் வேகத்தைப் பார்த்து திணறிக் கொண்டிருந்த ஆதிக்கச் சாதிகளின் ஆதிக்கச் சக்திகளுக்கு இராமதாசின் செயலால் புத்துயிர் பெற்றன.
மேலும், இன்றைய நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிசச் கும்பலின் வளர்ச்சி பிற்போக்கு சாதிய உணர்வையும் சாதிய சக்திகளையும் வலுப்பெறச் செய்கின்றன.
இதன் விளைவு இன்று தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாதிய ஆணவக் கொலைகளாகும். சாதிய ஆணவக் கொலைகள் மட்டுமல்ல கள்ளக்குறிச்சியில் தேர் செல்லும்பொழுது தாக்குதல், உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் பொதுப் பாதையில் கொண்டு செல்ல நாகையில் தடை என்று தமிழகமெங்கும் பல்வேறு வடிவங்களில் சாதிய பயங்கரவாதம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதில் தமிழக அரசு ஒன்று மௌனம் காக்கிறது அல்லது துணைநிற்கிறது.
இந்த இடைநிலை ஆதிக்க சாதிகளில் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு இந்த சாதி எந்த விதத்திலும் உதவவில்லை என்றாலும் ஆதிக்கச் சாதிகளால் ஊட்டப்படும் சாதி ஆதிக்க உணர்வுக்கு பலியாகின்றனர். ஆதிக்கச் சக்திகளின் நலனுக்கு துணைபோகின்றனர்.
இந்த அசாதாரண சூழ்நிலையில் ஆதிக்கச் சக்திகளின் பிடியிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிப்பதும் தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஒன்றிணைந்து சாதிய பயங்கரவாதத்தை எதிர்க்கவும் அணிதிரட்ட வேண்டும்.
இதற்காக சனநாயகச் சக்திகளும் முற்போக்காளர்களும் புரட்சிகர சக்திகளும் தன்முனைப்புடன் உறுதியாக களம் இறங்கவேண்டும்.
சாதிக்கலப்புத் திருமணங்களை முனைப்புடன் ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய திருமணங்களை நடத்துவது மட்டுமல்லாமல் இச்சக்திகளை பாதுகாக்கவேண்டும். சாதி ஆதிக்கச் சக்திகளுக்கெதிராக மக்களைத் திரட்டி பதில் நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தவேண்டும்.
இச்செயல்பாடுகள் அனைத்தும் உழைக்கும் மக்களின் வர்க்க அணிச்சேர்க்கையில் மையமிட வேண்டும். இதுவே மிக முக்கியமானது. ஆதிக்கச் சாதி உழைக்கும் மக்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றிணையும் இயல்பான புள்ளி என்பது வர்க்க அணித் திரட்டல்தான். நமது கடந்தகால வெற்றிகளும் படிப்பினைகளும் இதைத்தான் உணர்த்துகின்றன. எனவே, தொடக்கத்திலிருந்தே நாம் இதில் கவனம் செலுத்துவோம்.
- துரை.சிங்கவேல்