தனி ஊராட்சித் தொகுதிகளில், தலித்துகளுக்கென உறுதி செய்யப்பட்ட அரசமைப்புச் சட்ட உரிமைகள், தமிழ் நாட்டில் உள்ள பல கிராமங்களில் வெளிப்படையாகவே அவமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னையிலோ, புதுதில்லியிலோ உள்ள அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து எவ்வித அக்கறையும் இருப்பதில்லை.
மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி என்ற கிராமத்தில், தலைவர் பதவி சட்டப்படி தலித்துகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் முறையை சுயநல கும்பல் தொடர்ந்து சீர்கெடுத்து வருகின்றது.
1996 முதல் 2004 வரை, இவ்வூராட்சி மன்றத்திற்கான தலைவரைத் தேர்ந்தெடுக்க 19 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மூன்று முறை மட்டுமே இங்கு வேட்புமனு தாக்கல் செய்ய முடிந்தது. அந்த மூன்று முறையும்கூட, அக்கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினர் ஆதரித்த வேட்பாளர்கள்தான் வெற்றிபெற முடிந்தது. அவர்களும் வெற்றி பெற்ற சில நிமிடங்களிலேயே பதவி விலகி விட்டனர்.
இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் 73 வது பிரிவை, பாப்பாபட்டி மட்டும் மீறவில்லை. மதுரை மாவட்டத்தின் கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் கொட்டகாச்சியேந்தல் தலித் மக்களும் இதே போன்றதொரு ஒதுக்கு முறையை அனுபவித்து வருகின்றனர்.
இந்தியா - உள்ளாட்சிப் பாரம்பரியத்திற்கு மிகுந்த மதிப்பளித்த ஒரு நாடு. நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை வடித்தவர்கள், ஊராட்சி மன்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் 73 வது சட்டத்திருத்தம், கிராமக் குழுக்களின் பங்கை மீண்டும் முன்னிலைப்படுத்தி உள்ளது. மேலும், 73 வது திருத்தத்தின்படி, ஒரு வார்டு உறுப்பினர் அல்லது தலித் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு அளித்திட சிறப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
நலிந்த பிரிவினர் குறிப்பாக தலித், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சிறப்புப் பிரிவுகளை வலியுறுத்தவும் ஒதுக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்கவுமே இத்தகைய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வரலாறு நெடுக பாகுபாட்டுக்கு ஆட்பட்டுவரும் சமூகங்கள், இத்தகைய பாகுபாடுகளிலிருந்தும் ஒதுக்கப்படுவதிலிருந்தும் விடுவிக்கவே, அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகின்றன.
இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி : 73 வது சட்டத்திருத்தத்தின்படி, வார்டு உறுப்பினர் அல்லது பஞ்சாயத்து தலைவருக்கு இடஒதுக்கீட்டின்படி அளிக்கப்படும் பதவி, முழு அய்ந்து ஆண்டுகளுக்கும் ஆனது. எடுத்துக்காட்டாக, பஞ்சாயத்து தலைவருக்கான பதவி ஒரு முழு காலம் ஒதுக்கப்பட்டது எனில், அது பெண்களுக்காக ஒதுக்கப்படும் அல்லது அடுத்து வரும் காலகட்டத்திற்கும் இடஒதுக்கீடு நீடிக்கும். குறிப்பாக, வார்டு உறுப்பினர் அல்லது பஞ்சாயத்துத் தலைவர் பதவி - தலித், பழங்குடியினர் அல்லது பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டால், இந்த சமூகங்களின் விகிதாச்சாரம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. நாட்டை ஆள்வதில் நலிந்த பிரிவினரின் பங்கையும் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காகவே இத்தகைய சிறப்பு விதிமுறை சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்ட விதிமுறைகளை தொடர்ந்து சீர்குலைத்து வரும் ஆதிக்க சாதியினர் முன்வைக்கும் வாதங்களைப் பரிசீலிக்கலாம். இப்பகுதிகளில், தேவர் மற்றும் பிரமலைக் கள்ளர்கள்தான் ஆதிக்க சாதியினராக இருக்கின்றனர். இப்பஞ்சாயத்தில் உள்ள 1,142 வாக்காளர்களில் தலித் வாக்காளர்கள் 364 பேர். அதாவது, 31.87 சதவிகித வாக்காளர்கள்.
எனவே, தலித்துகள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களுக்கு "பஞ்சாயத்து தலைவராவதற்கு உரிமையில்லை'' என்று இவர்கள் வாதிடுகின்றனர். மற்றொரு ஆதிக்க சாதியினரின் வாதம் இப்படி இருக்கிறது: "நாங்கள் தலித்துகளின் நலன்களில் பல்லாண்டுகளாகவே கவனம் செலுத்தி வருகிறோம்; பஞ்சாயத்துராஜ் அமைப்பிலும், நாங்கள் அவர்களுடைய நலன்களைப் பாதுகாத்து வருகிறோம். எனவே, எந்த தலித்தும் தலைவராக வேண்டிய தேவை இல்லை.''
இந்த ஆதிக்க சாதியினர், சட்டத்திற்கு எதிராக பழங்கால சாதிப்பாகுபாட்டு முறையை மட்டும் கடைப்பிடித்து வரவில்லை; ஒரு தலித் தலைவராக முடியாதபடி ஒட்டுமொத்த வழிமுறைகளையே மாற்றி அமைத்து வருகின்றனர். தொடர்ச்சியாகப் பலமுறை வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை என்றாலோ, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து கட்டாயமாகப் பதவி விலக்கம் செய்யப்பட்டாலோ அய்ந்து ஆண்டுகள் கழிந்த பிறகு இந்தப் பதவிக்கு இடஒதுக்கீடு பொருந்தாது என்ற கருத்தை இடையறாது முன்வைத்து வருகின்றனர். ஒட்டுமொத்த முறையைக் கவனமாக ஆராய்ந்தால், பாப்பாபட்டி பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளைப் போல, இந்தியாவின் பிற பஞ்சாயத்துகளிலும் தீண்டாமையும் சாதி அமைப்பு முறையும் புதுப்புது வடிவங்களில் நடைமுறையில் உள்ளன என்பது தெளிவாகிறது.
முதலில், சாதி அமைப்பு முறையை அரசு ‘ஒழித்து விட்டதாக' சொன்னாலும், சாதிப் பாகுபாடு ஒழிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. டர்பனில் 2001 இல் நடைபெற்ற இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில், இந்திய அரசு சாதி அமைப்பை ஒழித்துவிட்டதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. சாதியை முறியடிக்க அரசு போதுமான வழிமுறைகளைக் கொண்டிருப்பதாகவும் கூறியது. ஆனால், உண்மை நிலை என்னவெனில், மாறிவரும் சூழ்நிலைமைகளுக்கேற்ப, சாதிப்பாகுபாடு வெவ்வேறு வடிவங்களைக் கையாள்கிறது. இரண்டாவது, அரசு நிர்வாகம் - அரசியல்வாதிகள் - ஆதிக்க சாதியினருக்கிடையில் உள்ள வலுவான உறவையே இத்தகைய நிகழ்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.
இதற்கு ஆதாரம் என்ன?
1. ஆதிக்க சாதியினரின் விருப்பத்திற்கு எதிராகப் போட்டியிட்ட நரசிங்கம் என்ற தலித் வேட்பாளர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இதுகுறித்து விசாரிக்க, இம்மாவட்ட ஆட்சியாளர் பாப்பாபட்டிக்கு வந்தார். அவர் தமது விசாரணையை ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதிகளில்தான் நடத்தினார்.
ஆனால், தலித்துகளின் கருத்துகளைக் கேட்டறிய அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அவர் செல்லவில்லை. நிர்வாகத்தின் இத்தகைய அணுமுறையே, சாதிப்பாகுபாட்டுக் கொள்கைகளுக்கும் அதன் செயல் முறைகளுக்கும் புத்துயிர் அளிப்பதாக இருக்கின்றன. இந்த நிகழ்வை விசாரிக்க, ஓர் உயர்மட்டக் குழு தமிழக முதலமைச்சரால் நியமிக்கப்பட்டது. இதை விசாரிக்க வேண்டிய குழுவினர், ஆதிக்க சாதியினரை மட்டுமே சந்தித்தனர்; தலித் பகுதிகளுக்குச் செல்லவில்லை.
2. பாப்பாபட்டியில் உள்ள தலித்துகள், தாங்கள் வாழும் பகுதியில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும் என்று இடையறாது வேண்டுகோள் விடுத்ததாகவும் அறியப்படுகிறது. ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதிகளில் சென்று வாக்களித்தால், தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், 19 முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும், தலித் பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்படவில்லை.
3. மூன்றாவதாக, இத்தகைய பாகுபாட்டு நடைமுறையைக் கையாளுபவர்கள், தாங்கள் சட்டப்படி சரியாகவே நடந்து கொள்வதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் முற்றிலும் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, அரசு இச்சூழலை சீர்செய்ய முன்வந்து, தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமையை நிகழ்த்துகின்றவர்களை தண்டிக்க வேண்டும். தலித்துகளின் உரிமைகள் மீறப்படுகின்றன என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டு இது. இத்தகைய குற்றவாளிகள், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.
4. மய்ய அரசில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளைக் கண்காணிக்கும் அமைச்சரகத்தின் அமைச்சர் தமிழ் நாட்டுக்காரர். அதிகாரப் பங்கீட்டுக்கு ஆதரவாக அவர் வெளிப்படையாகவே குரல் எழுப்பி வருகிறார். உள்ளாட்சி அதிகாரத்தின் முக்கியத்துவம் குறித்தும் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறார். ‘அய்க்கிய முற்போக்குக் கூட்டணி' எதிர்காலத்தில் ‘அய்க்கிய பஞ்சாயத்து கூட்டணி'யாக வெளிப்பட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், அவரோ அவரது அமைச்சரகமோ, 73 வது சட்டத் திருத்தத்தை நலிந்த பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுத்த முன்வரவில்லை.
இதை வைத்துப் பார்க்கும்போது, உள்ளாட்சி, அதிகாரப் பங்கீடு என்பவையெல்லாம் அரசியல்வாதிகளின் வெற்று தேர்தல் முழக்கங்களே என்பது நிரூபணமாகிறது. அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்புகளையும் மீறி, தலித்துகள் பாகுபாட்டுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர் என்பது, இவர்களுடைய கவனத்தை ஈர்க்கவில்லை. ஆதிக்க சாதியினர் பல்லாண்டுகளாக மூர்க்கத்தனமாக கடைப்பிடிக்கும் சாதி முறைகளையும் இவர்களால் எதிர்க்க முடியவில்லை.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, தன்னுடைய குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில், 73 வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதாக உறுதிமொழி அளித்துள்ளது. மேலும், ஒரு படி மேலே சென்று, தனியார் துறைகளில் இடஒதுக்கீடு அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. ஒரு புறம், தலித் உரிமைகளின் பாதுகாவலனாகவும் கூறிக் கொண்டு, மறுபுறம் சாதிப் பாகுபாட்டைத் தடுக்கவும் திராணியற்று, அதன் மூலம் சட்டத்தை அவமதிக்கும் செயலை அனுமதிப்பதற்காக "அய்க்கிய முற்போக்குக் கூட்டணி' வெட்கப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள், இத்தகைய மனிதத் தன்மையற்ற சூழலை கவனத்தில் கொண்டு விரைவில் தீர்வுகாண முன்வருவார்களா?
நன்றி : ‘தி இந்து' ; தமிழில் : புலேந்திரன்