டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “வர்க்கமும் ஜாதியும் ஒருங்கிணைந்தது, இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஜாதியால் அடக்கப்பட்டவர்கள்தான் வர்க்க சுரண்டலுக்கும் ஆளானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் பெரு முதலாளிகளில் உயர் ஜாதிக்காரர்களே இருக்கிறார்கள். பாம்பே டையிங் நுஸ்லி வாடியா, அசிம் பிரேம்ஜி என 2 இசுலாமியர்கள் மட்டும் தவறிப் போய் வந்து விட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் கூட சொல்லிக் கொள்ள ஆள் இல்லை. வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையிலான உறவு என்னவென்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.” என்று வர்க்கத்துக்கும் வருணத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீண்ட உரையாற்றினார்.billionaires in indiaஅந்த உரையின் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமான ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. “இந்தியாவில் வரி நீதி மற்றும் செல்வ மறுபகிர்வு: சமீபத்திய சமத்துவமின்மை மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்மொழிவுகள்” என்ற தலைப்பில் World Inequality Lab மே மாதத்தில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிதின் குமார் பாரதி, ஹார்வர்டு கென்னடி பள்ளியைச் சேர்ந்த லூகாஸ் சான்செல், பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸை சேர்ந்த தாமஸ் பிக்கெட்டி மற்றும் அன்மோல் சோமஞ்சி ஆகியோர் இணைந்து இதனை வெளியிட்டுள்ளனர். அதனைக் கருப்பொருளாகக் கொண்டு, ‘பிசினஸ் ஸ்டேண்டார்டு’ இதழில் அனொஷ்கா சாவ்னி ஜூன் 14ஆம் தேதி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தியாவில் ஜாதியும் வர்க்கமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தே இருக்கிறது. பில்லியனர்களில் (100 கோடி டாலருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள்) 85 விழுக்காட்டினர் உயர்ஜாதி இந்துக்களாக உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டவர்களில் 9 விழுக்காட்டினர் மட்டுமே பில்லியனர்களாக உள்ளனர். பட்டியல் சமூகத்தினரில் 2.6 விழுக்காட்டினர் மட்டுமே பில்லியனர்களாக உள்ளனர். பழங்குடி சமூகத்தில் ஒருவர் கூட பில்லியனர் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பில்லியனர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் கடுமையாகச் சரிந்திருக்கிறது. 2008ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது கண்ட சரிவை, இப்போதும் இந்திய பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பில்லியனர்கள் கண்டிருக்கிறார்கள்.

உயர் ஜாதி இந்துக்களே பில்லியனர்கள்!

அதேவேளையில் பார்ப்பன, பனியாக்கள் போன்ற உயர் ஜாதி இந்துக்கள் பில்லியனர்கள் கிளப்பில் இணைவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. “கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பில்லியனர்கள் கிளப்பில் இணைந்தவர்கள் உயர்ஜாதியினர் மட்டுமே. கல்வி, சுகாதாரம், சமூகத் தொடர்புகள் என அனைத்தையும் ஜாதிதான் வடிவமைக்கிறது. ஜாதியின் அடிப்படையில்தான் இவற்றுக்கான அணுகலும் அமைந்திருக்கிறது. தொழில் வாய்ப்புகளுக்கும், வளங்களைப் பெருக்குவதற்கும் இதேதான் காரணமாக இருக்கிறது. நாட்டின் பல இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலம் வாங்கவே உரிமை இல்லை. நிலச் சந்தையில் இருந்தே தாழ்த்தப்பட்டவர்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் பொருளாதாரப் பாதையை நசுக்குகிறது” என்று அன்மோல் சோமஞ்சி தனது ஆய்வில் மிக நுணுக்கமாகக் குறிப்பிடுகிறார்.asim premji university report on caste wise entrepreneursவேறு சில ஆய்வுகளுடன் இதனைப் பொருத்திப் பார்க்கும்போது கள எதார்த்தம் மேலும் துல்லியமாக வெளிப்படுகிறது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2023ஆம் ஆண்டில் ‘உழைக்கும் இந்தியாவின் நிலை’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. தொழிலாளர் தொகுப்பில் பெரும் எண்ணிக்கையில் இருக்கிற பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சொந்தமாக தொழில் நடத்துவது மிக மிக குறைவாகவே இருக்கிறது என்பதே அந்த ஆய்வின் முடிவு. வேலைவாய்ப்பில் 10.1 விழுக்காடு பங்களிக்கும் பழங்குடி மக்கள் 5.4 விழுக்காடு மட்டுமே தொழில் நிறுவனங்களை சொந்தமாக வைத்திருக்கின்றனர். வேலைவாய்ப்பில் 19.3 விழுக்காடு பங்களிப்பு செய்யும் பட்டியல் சமூகத்தினர் 11.4 விழுக்காடு மட்டுமே தொழில் நிறுவனங்களைக் கொண்டிருக்கின்றனர். வேலைவாய்ப்பில் 43.4 விழுக்காடு பங்களிப்பு செய்யும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், 41 விழுக்காடு தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ளனர். ஆனால் உயர்ஜாதியினர் வேலைவாய்ப்பில் 27.1 மட்டுமே பங்களிப்பு செய்யும் அதேவேளையில், 42.1 விழுக்காடு தொழில் நிறுவனங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டியது.

செல்வப் பகிர்வில் ஜாதி ஆதிக்கம்!

பில்லியனர்கள் பட்டியலை மட்டும் ஜாதி வடிவமைக்கவில்லை. அதற்கு வெளியேயும் செல்வப் பகிர்வு என்பது முழுக்க முழுக்க ஜாதியின் அடிப்படையில் மட்டுமே இருக்கிறது. பட்டியல் சமூகத்தினரில் 12.3 விழுக்காடு மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது தேசிய குடும்பநல சுகாதார ஆய்வு. அதுவே பழங்குடியினர் 5.4 விழுக்காடு மட்டுமே செல்வந்தர்களாக உள்ளனர். பட்டியல் சமூகத்தினரில் 25 விழுக்காட்டினர் செல்வமற்ற நிலையிலேயே உள்ளனர். பழங்குடியினரில் 46.3 விழுக்காட்டினர் செல்வமற்ற நிலையில் உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 16.3 விழுக்காட்டினர் செல்வமற்றவர்களாக உள்ளனர். 19.2 விழுக்காட்டினர் மட்டுமே அதிக செல்வம் உடையவர்களாக உள்ளனர். ஆக, ஜாதியும் வர்க்கமும் வேறு வேறு அல்ல என்பதை செல்வப் பகிர்வின் மூலம் உறுதி செய்கிறது இந்த ஆய்வு.caste and wealth distribution in indiaஇத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மோடியின் பத்தாண்டு கால ஆட்சி அதிகரிக்கச் செய்திருக்கிறது என்பதும் World Inequality Lab-இன் மார்ச் மாத ஆய்வறிக்கை கூறியது. இதே ஆய்வாளர்களால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, “இந்தியாவின் 40.1 விழுக்காடு செல்வம் வெறும் ஒரு விழுக்காட்டினரிடம் இருக்கிறது. இது அமெரிக்கா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை விட மோசமான சமத்துவமின்மை. இந்தியாவில் 1980ஆம் ஆண்டில் இருந்தே ஏழை- பணக்காரர் இடையிலான சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. இது 2014-15 முதல் 2022-23 இடைப்பட்ட காலத்தில் மிக மோசமாக அதிகரித்திருக்கிறது” என்று கூறியது.

வருவாய் மற்றும் நிகர சொத்துக்களுக்காக வரி முறையை சீரமைப்பது, சுகாதாரம் - கல்வி- ஊட்டச்சத்து சார்ந்தவற்றில் அரசு முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் இந்த சமத்துவமின்மை சீர்செய்ய இயலும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஒரு விழுக்காடு பில்லியனர்களுக்கு (167 பேர்) 2 விழுக்காடு ‘சூப்பர் வரி’ விதித்தாலே தேசிய வருவாயில் 0.5 விழுக்காடு அதிகரிக்கும். அது பல பயனுள்ள முதலீடுகளுக்கு உதவும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் மோடி தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகள் இதற்கு நேரெதிராகவே உள்ளன. அதனால்தான் சமத்துவமின்மை பெருகியிருக்கிறது. எனவே ஜாதிய பாகுபட்டையும், வர்க்க பாகுபாட்டையும் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. எனவே ஜாதியால் யார் உயர்ந்திருக்கிறார்களோ அவர்கள்தான் செல்வங்களை குவித்து வைத்திருக்கிறார்கள். உயர் ஜாதி இந்துக்கள் தான் இன்றைக்கு பெரும் கார்ப்பரேட்டுகளாக உருவெடுத்திருக்கிறார்கள். ஜாதியத்தை தொடாமல், கார்ப்பரேட் எதிர்ப்பை மட்டும் பேசுவதோ, அதற்கெதிரான செயல்பாடுகளோ தனித்து பயனளிக்கப் போவதில்லை. ஜாதிய எதிர்ப்பில் இருந்து கார்ப்பரேட் சுரண்டலையும் எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையே இப்புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

ர.பிரகாசு

Pin It