‘வடக்கிருந்து உயிர் நீத்தல்’ என்று ஒரு வழக்கம் உண்டு. உணவு உறக்கமின்றி அப்படியே ‘உயிர் விடுதல்’; வேதாந்திகளைக் கேட்டால் இது ‘ஆன்மீகம்’ என்பார்கள். இப்படி உயிர் விடுவோர் மீது தற்கொலைக்கு முயற்சித்தார்கள் என்று வழக்குகள் தொடர்ந்ததாகத் தெரியவில்லை.

இப்போதெல்லாம் ‘ஒரு நாள் உண்ணா விரதம்’, ‘அடையாள உண்ணாவிரதம்’ எல்லாம் வந்து விட்டன. ‘சாகும் வரை உண்ணாவிரதம்’கூட அவ்வப்போது நடக்கிறது. அதாவது இரண்டு நாள் கழித்து காவல்துறை கைது செய்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

முன்பெல்லாம் வியாழக்கிழமை, செவ்வாய் கிழமை, சனிக்கிழமை என்று வாரத்துக்கு ஒரு நாள் விரதம் இருப்பது உண்டு. இது பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் விரதம். இப்போது அந்த ‘விரதம்’ புதிய உருமாற்றம் பெற்று விட்டது. அதாவது அந்த நாள்களில் ‘அசைவம்’ சாப்பிடுதல் கூடாது; மற்றபடி சைவ சாப் பாட்டை மூச்சுமுட்ட ஒரு பிடி பிடிக்கலாம்.

இப்படி சாப்பிடாமல் இருப்பது அகிம்சை போராட்டம் என்கிறார்கள். சொன்னால் கோபிக்கக் கூடாது. உண்மையில் உடல் உறுப்புகளை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் ‘ஹிம்சை’ என்பதுதான் நமது கருத்து. இப்படி, ‘சோறு-தண்ணி’ இல்லாமல் உண்ணாவிரதம் இருந்து ‘ஆத்ம சுத்தி’ பெறும் வாய்ப்பு மனிதர்களுக்கு மட்டும் தானா, என்றுகூட கேட்கலாம்.

அப்படியெல்லாம் இல்லை. மிருகங்கள், பிராணிகளுக்குக்கூட - தாராளமாக இப்படி பட்டினி கிடந்து ‘ஆத்ம சுத்தி’ பெற உரிமை உண்டு. பிரச்சினை என்னவென்றால், அப்படி ஒரு ‘சோதனைக்கு’ உட்படுத்திக் கொள்ள அவைகள் தயாராக இல்லை; ஆறறிவு உள்ள மனிதர்களைப்போல!

விலங்குகளையும் ஏன், ‘ஆத்ம சத்தி’க்கு தயார்படுத்தக் கூடாது என்ற முயற்சிகள் இப்போது தொடங்கியிருக்கின்றன. இராஜஸ்தான் மாநிலத்தில் அம்மாநில அரசு ‘கோமாதாக்களை’ அதாவது பசு மாடுகளை பாதுகாப்பதற்காக ஒரு மய்யம் நடத்துகிறது. அங்கே 500 ‘கோ மாதாக்கள்’ இப்படி ‘அகிம்சை’ வழியில் பட்டினி கிடக்கும் ஏற்பாடுகளை அங்கே வேலை செய்த ஊழியர்கள் செய்துள்ளனர். வேலை நிறுத்தம் செய்து ‘கோமாதா’க்களுக்கு தீவனம் போடாமல் இருந்திருக்கிறார்கள்.

500 ‘கோ மாதாக்கள்’ ‘மோட்சம்’ போய் விட்டதா? அல்லது பட்டினி தாளாமல் துடிதுடித்து இறந்து  போனதா? என்பது நமக்குத் தெரியாது. ஆக, 500 பசுக்கள் செத்து விட்டன என்பது மட்டும் உண்மை! இதில் ஒன்றும் ‘பாவம்’ இல்லை; புண்ணியம் தான். ஆனால், செத்துப் போன பிறகு அந்த பசு மாட்டின் தோலை உரித்து தலித் தோழர்கள் வணிகம் செய்தால் அதுதான் ‘பாவம்’; அவர்களை சும்மா விடக் கூடாது; ஒன்று அடித்துக் கொல்ல வேண்டும்; இல்லையேல் அடித்து உதைத்து கைகளை கட்டி வீதிகளில் அரை நிர்வாணமாக ஊர்வலம் விட வேண்டும்.

கோமாதாவை பட்டினிப் போட்டு சங்பரிவார் ஆட்சி சாகடித்தால் அதற்குப் பெயர் ‘ஆன்ம விடுதலை’. ஆன்மிக இந்து தர்ம கண்காட்சி நடத்தும் ஆடிட்டர் குருமூர்த்தியைக் கேட்டுப் பாருங்கள் - இதற்குப் பெயர்தான் ‘கோ வந்தனம்’ என்றுகூட விளக்கம் தருவார். அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் சூத்திரர்களுக்குப் புரியாது! என்று பதிலடியும் தருவார்!

‘அவாள்’ தருவதே அருள் வாக்கு!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It