பரப்புரைப் பயணத்தில் கழக சார்பில் மக்களிடம் வழங்கப்படும் துண்டறிக்கை.
இப்படி ஒரு கருத்தை நமது மக்களிடம் சொல்றதுக்கு நாங்க ஊர் ஊரா வந்துகிட்டு இருக்கோம். ஏன்? நமது மக்கள் இன்னமும் சில நம்பிக்கைகளை நம்பிகிட்டு குழம்பி தப்பு தப்பான முடிவுகளுக்கு வந்துடாறங்களே... அப்படிங்குற கவலை தான்! இதைப் படியுங்க...
சாமியார்கள்
அந்த காலத்துல சாமியார்கள் வீடு வாசலை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுத்துனாங்க. இப்ப சாமியார்கள் சொகுசு கார்ல - கோடி கோடியா பணத்துல புரளுராங்க... மக்கள ஏமாத்திட்டு சிறையில கம்பி எண்ணுற சாமியார்கள் ஏராளம். இதுக்குப் பிறகு இவங்களை நம்பலாமா?
நமது சகோதரிகள்
நமது சகோதரிகள் இப்போ கல்லூரி களுக்குப் போய் நல்லா படிக்குறாங்க... வேலைக்குப் போய் சம்பளம் வாங்குறாங்க... ஸ்கூட்டர், கார் ஓட்டுறாங்க... ஆனால், நமது தாத்தா பாட்டி காலத்துல நமது சகோதரிகளை படிக்கக் கூடாது; வேலைக்குப் போகக் கூடாதுன்னு தடுத்து வச்சாங்க... இப்ப கருத்தை மாத்திகிட்டோம்ல... இது தான் அறிவியல்.
பேய்-பிசாசு பயம்
இன்னமும் நம்ம கிராமத்துல ‘பேய்’ அடிச்சிடுச்சுன்னு மந்திரவாதியை கூட்டி வந்து நமது சகோதரிகளை சாட்டையால அடிக்குறாங்க. இது கொடுமையிலும் கொடுமைங்க. ‘பேய்’ - மின்சாரம் இல்லாத காலத்துல இருட்டா இருந்தப்ப வந்த பயம்.
படிச்சவங்கள கலெக்டர்களை பேய் பிடிக்குதா? டாக்டர்களை பேய் பிடிக்குதா? இல்லையே...! ‘பேய்’ன்னு ஒன்னு இல்லை! மந்திரவாதிகளிடம் போகாதீங்க... மன பாதிப்புன்னா, மனநல மருத்துவரிடம் போங்க... இதுதான் அறிவியல்!
பில்லி சூன்யம்
சூன்யம் வச்சு ஒருத்தரை அழிச்சுட லாம்னு இன்னமும் நம்புறாங்க... அப்படின்னா... தமிழ்நாட்டில் எதிரும் புதிருமா இருக்கும் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பில்லி சூன்யம் வச்சு ஒழிச்சுடலாமே! எதுக்கு தேர்தல்? எதுக்கு போட்டி? நல்லா யோசியுங்க... ‘பில்லி’, ‘சூன்யம்’ எடுக்கும் சாமியார்கள் எல்லாம் மோசடிக்காரங்க... ஏமாத்தி உங்க நகைகளை பணத்தை பறிச்சுடுவாங்க; நம்பாதீங்க! இதுதான் அறிவியல்!
சோதிடம்
பல குடும்பங்களில் குழப்பத்தை உருவாக்குகிறதே, இந்த சோதிட நம்பிக்கை தாங்க. மருமகள் வந்த நேரம் சரியில் லென்னு - ஒரு சோதிடர் சொன்னா போச்சு; அவ்வளவுதான் நல்ல குடும்பத்துல புயல் அடிக்க ஆரம்பிச்சுடும். பத்திரிகையில போடுற ‘இராசி பலன்’ எல்லாம் உண்மைன்னு நம்புறீங்களா... அப்படின்னா... ஒரே இராசிக்கு ஒவ்வொரு பத்திரிகையிலும் வெவ்வேறு பலன்களை போடுறாங்களே.... ஒரே பலனைப் போட்டால்தானே நம்ப முடியும்?
சரி; சோதிடப் பொருத்தம் பார்த்துதானே திருமணத்தை நிச்சயிக்கிறோம். ஆனால், இப்படி பொருத்தம் பார்த்து நடந்த திருமணங்களில் கணவனோடு சேர்ந்து வாழ முடியாதவர்கள்; மனைவியோடு சேர்ந்து வாழ முடியாதவர்கள் கதை ஏராளமிருக்குதே!
குடும்ப நீதிமன்றங்களில் ஏராளமாக குவிந்து கிடக்கும் ‘விவாகரத்து வழக்குகள்’ சோதிடப் பொருத்தம் பார்த்து, திருமணம் செய்து கொண்டவங்க வழக்கு தானே! சோதிடத்தை நம்பாதீங்கன்னு புத்தர் சொன்னாரு; விவேகானந்தர் சொன்னாரு; விஞ்ஞானிகளும் அதைத்தான் சொல்றாங்க... இதுதான் அறிவியல்.
வாஸ்து
அய்யய்யோ... இந்த ‘வாஸ்து’ படுத்துற பாடு இருக்கே... அப்பப்பா... வீட்டுல - ஏதாவது சோகம் நடந்துட்டா, வாஸ்து கோளாறுன்னு மாத்தி மாத்தி இடிச்சுக் கட்டுறாங்க... வீண் செலவுதானே? சரி; அப்படி மாத்தி கட்டியதற்குப் பிறகு பிரச்சினை தீர்ந்து விட்டதா? சொல்லுங்க பார்ப்போம்!
உங்களுக்குத் தெரியுமா? வீட்டுல கழிப்பறை கட்டுவதே வாஸ்துக்கு எதிரானது தாங்க... ஆனால், கழிப்பறை இல்லாம வீடே கட்டக் கூடாதுன்னு சட்டம் வந்துடுச்சு. வாஸ்து பார்த்து கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஏங்க சரிஞ்சு விழுது?
குடும்பத்துல நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு பிரச்சினைகள் வராம - விட்டுக் கொடுத்து கடன் சுமை இல்லாம மகிழ்ச்சியாக வாழ பழகிக்கனுங்க... வாசலையும் கதவையும் ஜன்னலையும் மாத்தினா பிரச்சினை தீராது...
உலகத்துல எந்த நாட்டுலேயும் இந்த வாஸ்து நம்பிக்கை எல்லாம் கிடையாது. அங்கே எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க... இது தாங்க அறிவியல்.
பரிகாரம்
வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளுக்கு எல்லாம் ‘சடங்குகள்’ செஞ்சா போதும்; ‘பரிகாரம்’ செஞ்சா போதும்னு சொல்லி புரோகிதர்களும், சாமியார்களும் நமது பணத்தை பிடுங்குறாங்க... இதை நம்பிக் கிட்டே வாழ்நாள் முழுதும் செஞ்சுகிட்டே இருக்கோம்; நிம்மதியே தொலைஞ்சுப் போவுது. ஆனால், பிரச்சினை மட்டும் தீர மாட்டேங்குது; உண்மை தானே?
சோதிடப்படி தான் எல்லாமுமே நடக்கும்னு சோதிடர்கள் சொல்றாங்க...
‘பரிகாரம் - சடங்குகள் - செஞ்சா’ எதையும் மாத்திடலாம்னு புரோகிதர்கள் - சாமியார்கள் சொல்றாங்க.
இன்னொரு பக்கம் - தலைவிதிப்படி தான் எல்லாம் நடக்கும்னு நடக்கும்னு புரோகிதர்கள் சொல்றாங்க. அப்படித்தான் எல்லாம் நடக்குதுன்னு உண்மையாகவே நம்பினா, எதுக்குங்க சோதிடம்? எதுக்குங்க வாஸ்து நம்பிக்கை? எதுக்குங்க பரிகாரம்?
சமுதாயம் வேகம் வேகமாக மாறிக் கொண்டே இருக்குது! செவ்வாய் கிரகத்துக்கு இராக்கெட் போவுது. ஈமெயில் இன்டர்நெட் வந்துடுச்சு. விபத்துல சிக்கி மூளைச் சாவு ஏற்பட்டு இறந்து போனவங்க உடல்உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு டாக்டர்கள் பொருத்துறாங்க... இங்கே ஜாதி போயிடுச்சு; ஜோதிடம் போயிடுச்சு; எல்லாமே போயிடுச்சு! இதுதான் அறிவியல்!
‘கொலைகாரனை’யும்’, ‘திருடனை’யும் அவன் ‘தலைவிதி’ சோதிடப்படித்தான் கொலை செய்யுறான்னு விட்டு விடு வோமா? தண்டிக்கப்பட்டேயாகனும்ன்னு சொல்றோம்ல! இங்கே சோதிடத்தை - தலைவிதியை மறுக்கிறோம்ல...!
இப்படி - சிந்திப்பது தாங்க அறிவியல்!
அதனால்தான் கூறுகிறோம்:
நம்புங்க அறிவியலை;
நம்பாதீங்க சாமியார்களை!
அறிவியல்தான் நமக்கு சரியான பாதை காட்டும்.
இதை நமது சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தாங்க சொல்றோம். ஊர் ஊரா போய் சொல்றோம்.
பெரியார் தொண்டர்களாகிய நாங்கள், அவர் தந்த அறிவியல் சிந்தனைகளை ஏற்று - அதனால பயன் பெற்றவர்கள் சொல்றோம்!
வாங்க... புதிய சமூகத்தைப் படைப் போம்; அறிவியலை வளர்ப்போம்!