(மாட்டுக்கறி அரசியலை ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தற்சமயம் மிக முக்கிய பிரச்சனையாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசு இறைச்சிக்காக மாடு வெட்டப்படுவதைத் தடை செய்யும் விதிகளை இயற்றி, அதற்கெதிரான போராட்டங்கள் நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டுரையானது தாத்ரி படுகொலை, ஜம்முவில் லாரி ஓட்டுநர்கள் கொலை ஆகியவை நடைபெற்ற காலக்கட்டத்தில் சிறையிலிருந்தபோது எழுதப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.சின் ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தை பற்றி இக்கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டிருக்காவிட்டாலும், இன்றைய சூழலில் இக்கட்டுரையை வெளியிடுவது பொருத்தப்பாடாக இருக்கும் என்று கருதி வெளியிடப்படுகிறது) 

---------------------------------------------------------------------------------------------------------------------

மாட்டுக் கறியை மூலதனமாக வைத்து கசாப்புக் கடை அரசியலை நடத்தி வருகின்றன ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள். தாத்ரி படுகொலை, ஜம்முவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர்கள் கொலை என முசுலீம்களுக்கெதிரான மதவெறித் தாக்குதல்களுக்கு “கோமாதாவை” பகடைக் காயாகப் பயன்படுத்துகின்றனர். “பசு வதை” இந்துக்களின் உணர்வைப் புண்படுத்துவதாகவும், “பாரதப்” பாரம்பரியத்துக்கு எதிரானதெனவும் முழங்கி, முஸ்லீம்களுக்கெதிராகவும், தலித்துகளுக்கெதிராகவும் பகைமை உணர்வைப் பரப்பி வருகின்றனர். நாடு முழுக்க பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டுமென பெருங்கூச்சல் போட்டு வருகின்றனர். உண்மையில் ஆர்.எஸ்.எஸ். தூக்கிப் பிடிக்கும் பிராமணிய சக்திகளால் எல்லாக் காலத்திலும் மாட்டுக்கறி மறுக்கப்பட்டதா? இவர்களின் “புனித” நூலான வேதம் மாட்டுக்கறியை தடை செய்கிறதா? இதற்குத் தெட்டத் தெளிவான பதில் “இல்லை” என்பதுதான். ஆம், வரலாறு காட்டும் உண்மை இதுதான்.

வேத வேள்வியும் மாட்டுக்கறியும்:

கால்நடை மேய்ப்பு இனக்குழுக்களாக இந்தியாவுக்குள் வந்த ஆரிய குலங்கள் (வேதத்தின் படைப்பாளர்கள்) மாடு உள்ளிட்ட புலால் உணவை விரும்பி உண்பவர்களாகவே இருந்தனர். வேதங்களில் பல பிராமண “ரிஷி”கள் மாட்டுக்கறியின் பெருமை பேசிய ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. வேத பார்ப்பனியம் வேள்விகளை (யாகங்களை) தனது அடிப்படையாகக் கொண்டது. பழங்குடி மக்களின் சடங்கான தீயில் விலங்குகளை இட்டு பகிர்ந்துண்ணுவது, பின்னர் வேள்வி என்ற பெயரில் பார்ப்பன பூசாரிகள் தமது பங்காக விலங்குகளையும், இதர உணவுப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளும் சடங்காக மாறியது. பழங்குடி மக்களின் உபரியைச் சுரண்டும் ஒரு வழிமுறையாகின வேள்விகள். இந்த வேள்விகளில் தேவர்களுக்கு பலியிடுவதாகச் சொல்லிக் கொண்டு, பார்ப்பனர்கள் மாடு, ஆடு, குதிரை போன்ற விலங்குகளைத் தீயிலிட்டு சுட்டுத் தின்றனர். வேதங்களில் மாட்டு இறைச்சியின் சுவையை சிலாகித்துப் பாடும் பல பாடல்கள் உள்ளன. இந்த வரலாற்று உண்மையை மறைத்துவிட்டுத்தான், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பனீய கும்பல்கள் கோமாதாவை வைத்து போலி அரசியலை நடத்துகின்றன. வேதங்களில் வெளிப்பட்டுள்ள இந்த உண்மையை வெளியிட்ட பல வட இந்திய வரலாற்று ஆய்வாளர்களையும் கூட இவர்கள் மிரட்டுகின்றனர்.

வேதம்-வேள்விகளை எதிர்த்த சமண-பவுத்த மதங்கள்:

அக்காலக்கட்டத்தில் வேத பார்ப்பனியத்தின் வேள்விகளையும், பிராமண, சத்ரிய, வைசிய இருபிறப்பாளர்கள் சூத்திரர்களை ஒடுக்கிய வர்ணாசிரம கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவை சமண-பவுத்த மதங்களே. வேள்விகளில் விவசாய உற்பத்திக்கு முக்கிய கருவிகளாயிருந்த விலங்குகள் அழிக்கப்படுவதை எதிர்த்ததன் மூலம், சமணமும் பவுத்தமும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவின. இவ்விரு மதங்களும், சில வேறுபாடுகளுடன் புலால் உணவை மறுத்து கொல்லாமை பேசின. கொல்லாமை, கள்ளுண்ணாமை, துறவு போன்றவை சமண-பவுத்த மத போதகர்களால் கடைபிடிக்கப்பட்டு, மக்களிடையே நற்குணங்களாக பெயர் பெற்றன.

வேத பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய பவுத்தமும், சமணமும் ஒரு சில நூற்றாண்டு காலத்திற்கு இந்தியாவின் பெரும்பகுதியில் ஆதிக்க மதங்களாக விளங்கின. மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றன. அதே சமயம், ஆள்வோரின் (அரசர்கள்) ஆதரவு பெற்ற மதங்களாகவும் விளங்கின. வேத மதமும், பார்ப்பனீயமும் இவற்றிற்கு கீழான நிலைக்குத் தள்ளப்பட்டன. அசோகனால் புகழ்பெற்ற மௌரிய பேரரசும், ஹர்ஷரின் பேரரசும் பவுத்த மதச் சார்பு அரசுகளாக இருந்தன. தெற்கிலோ சங்கம் மருவிய காலம் முதல் பக்தி இயக்க காலக்கட்டம் வரை சமணமே ஆதிக்க மதமாக விளங்கியது. மொத்தத்தில் வேத பார்ப்பனீயம் இக்காலத்தில் இரண்டாம் நிலையிலேயே இருந்து வந்தது.

சாதிய நிலவுடைமை சமூகத்துடன் அரியணை ஏறிய புதிய பார்ப்பனியம்:

வேத மதத்தின் தொடர்ச்சியெனக் கூறிக் கொண்ட புதிய பார்ப்பனியம் சாதி அடிப்படையிலான நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சியுடன்தான் ஆதிக்கத்திற்கு வந்தது. ஆனால், இச்சமயத்தில் அது பழைய வேள்வி அடிப்படையிலான வேத மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு புதிய வடிவை எடுத்திருந்தது. பார்ப்பனர்களை முதலாகவும், தீண்டத்தகாதவர்கள் என்று கூறி ஒடுக்கப்பட்ட மக்களை அடியாகவும், பெரும் எண்ணிக்கையிலான சூத்திர சாதிகளை இடைநிலையாகவும் கொண்ட சாதியமைப்பை நியாயப்படுத்தும் புதிய வருணாசிரம தத்துவத்தையும், தீட்டு-தூய்மை கோட்பாட்டையும் இந்த புதிய பார்ப்பனீயம் தனது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. வடக்கில் பார்ப்பனர்களுடன் இதர இரு பிறப்பாளர்களான சத்திரிய, வைசிய சாதிகள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தன. தெற்கிலோ விரல்விட்டு எண்ணக்கூடிய பார்ப்பனரல்லாத சாதிகளே இருபிறப்பாளர்களாகக் கருதப்பட்டனர். தமிழகம் போன்ற பகுதிகளில் பார்ப்பனர், தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தவிர்த்த அனைவருமே சூத்திரர்களாகவே கருதப்பட்டனர். கிராம அளவில் தொழில் அடிப்படையில் சாதிகளை ஒழுங்குபடுத்திய பார்ப்பனிய சாதியம் இந்தியாவில் நிலவுடைமை அமைப்பின் அடிப்படையாக இருந்தது.

இந்த பார்ப்பனீய சாதி முறையை ஏற்றுக்கொண்ட மற்றும் வேத-உபநிசத்துக்களை ஏற்றுக் கொண்டதாகக் கூறிய சைவ-வைணவ மதங்கள் வன்முறை மூலமாக, சமண-பவுத்த மதங்களை வீழ்த்தின. தமிழகத்தில் கழுவேற்றல்களும், அனல்-புனல் வாதங்களும் சமண-பவுத்தத்தின் சுவடுகள் கூட தெரியாத அளவுக்கு அவற்றைத் துடைத்தெறிந்தன. பக்தி இயக்கம் இந்த மாற்றங்களை நிறைவேற்றும் கருவியாக செயல்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் பார்ப்பனீயம் மாட்டை தெய்வமாக்கியது. இது நிலவுடைமையின் விவசாய முறையுடன் பொருந்தியது. முன்னர் அவர்களின் வேள்வி நெருப்பில் சுட்டுத் தின்னப்பட்ட மாடுகளுக்கு இப்போது அவர்கள் தெய்வ அந்தஸ்தை வழங்கினர். மறுபுறம், சமண-பவுத்த துறவிகளின் புலால் மறுப்பை தந்திரமாகத் திருடி, பார்ப்பனர்கள் தம்மையும் புனிதர்களாக்கிக் கொண்டனர். மக்களால் உயர் பண்பாக கருதப்பட்ட சமண-பவுத்தத்தின் புலால் உண்ணாமை கொள்கையைப் பயன்படுத்தி, பிறப்பில் உயர்ந்தவர்கள் பார்ப்பனர் என்ற கற்பிதத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். தமது புனித விலங்கான மாட்டை உண்பவர்களை சமூகத்தின் கீழான நிலையினராகக் காட்டினர். இதர விலங்குகளின் இறைச்சியை உண்பவர்கள் இடைநிலை சாதிகளில் இருந்தனர். இவர்களும் கூட பார்ப்பனிய நிலவுடைமை கருத்தாக்கத்தின்படி மாட்டுக் கறி உண்பதை தீட்டாகவே கருதினர். பார்ப்பனிய சாதியமைப்புக்கு ஏற்ப உணவின் அடிப்படையில் புலால் உண்ணாதவர், புலால் உண்பவர் மற்றும் மாட்டுக்கறி தின்பவர் என்ற ஒரு கருத்தியல்ரீதியான படிநிலை உருவாக்கப்பட்டது. சமண மதத்தில் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்கக் கூடாதென்ற ஒரு உயர் ஒழுக்கமாகக் கருதப்பட்ட கொல்லாமை, புதிய பார்ப்பனியத்தால் மனிதர்களைப் பிறப்படிப்படையில் பிரிக்கும் மனித நேயமற்ற சாதிய முறையின் தீட்டுக்களில் ஒன்றாக சிறுமைப்படுத்தப்பட்டது.

மாட்டைக் (பசுவை) கொல்வது ஒரு மிகப் பெரிய குற்றமாக பார்ப்பனீய சட்டத்தால் கருதப்பட்டது. பெரும்பான்மை மக்களான சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோரையும் சமூகத்தில் பாதியான பெண்களையும் கொல்வதை ஒரு சாதாரண விசயமாகக் கருதிய ஒரு சம்பிரதாயம், மாட்டைக் கொல்வதை கொடுங்குற்றமாகக் கருதியது. இது அதன் கோட்பாட்டு மோசடியை வெளிப்படுத்துகிறது. அனைத்து உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது என்ற சமணக் கோட்பாட்டை வெளிப்படுத்துகிறது. அனைத்து உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்ற சமணக் கோட்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பார்ப்பனீய அஹிம்சையின் (பசுவதைத் தடை) மோசடிப் பண்பு தெளிவாக புலப்படும். உண்மையில் பார்ப்பனீயத்தின் புலாலுண்ணாமையும், பசுவதைத் தடையும் சாதிய ஒழுங்கைப் பராமரிக்கும் தீட்டு என்பதற்கு மேல் வேறு ஒன்றுமில்லை. அதில் மனிதநேயமோ? அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் அறமோ துளியும் இல்லை. நிலவுடைமைச் சமூகமும் பார்ப்பனிய சாதிய முறையும் நீண்ட காலமாக நீ்டித்து வருவதன் விளைவாக, சூத்திரர்கள் மற்றும் இருபிறப்பாளர்கள் மத்தியில் மாட்டுக்கறி உண்பது இழிவானது என்ற கருத்து ஆழமாக நீடித்து வருகிறது. மறுபுறம், சாதி முறையில் கீழே தள்ளப்பட்ட மக்களில் பெரும்பான்மையினரும், பல பழங்குடிகளும் மாட்டுக்கறியை தமது உணவாக கொள்வது தொடர்ந்து வருகிறது. முஸ்லீம்களும், கிறித்துவர்களும் தமது உணவாக உட்கொள்கின்றனர். இன்றைய சூழலில், நகர்ப்புறங்களின் பெரும்பான்மை அடித்தட்டு மக்களின் உணவாக மாட்டுக்கறி உள்ளது.

வேதியர்கள் (வேதத்தைப் பின்பற்றும் பார்ப்பனர்கள்) மாட்டுக்கறி தின்றதற்கான சில இலக்கிய ஆதாரங்கள்:

நாம்  பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்டதை நிரூபிக்க வேதங்ளைப் புரட்ட வேண்டிய அவசியமில்லை. பண்டை தமிழ் இலக்கியங்களே அதற்கு சாட்சியாயுள்ளன. அதில் சில காட்சிகளை மட்டும் காண்போம்.

சமண சிறு காப்பியமான நீலகேசி வேதப் பார்ப்பனர்களைப் பார்த்து இப்படிக் கேட்கிறது,

“வசுக்கள் உருத்திரர் பிதிரரொடு

இவர் முதலாப் பலர்க்கும்

பசுக்களோட எருமைகள் குதிரைகள்

புலியொடு நாய் முதலா

இசு கழிந்தன பல கொலைகளும்

இரங்கலிர் கொன்று அவரை

அசிப்பவர் போன்ற நீர் ஆயினும்

அருவினையா நுமக்கே”

இதன் பொருள் “வசுக்கள், உருத்திரர், பிதிரர் ஆகியோருக்காக என்று சொல்லிக் கொண்டு, வேள்வியில் சிறுதும் இரக்கமின்றி பசு, எருமை, குதிரை, புலி மற்றும் நாய் போன்ற விலங்குகளைக் கொலை செய்கிறீர்கள். அந்த தேவர்களுக்கு ஊட்டுவது போல நடித்து, நீங்களே புசிப்பீர்கள். எனவே இந்த தீவினை உங்களையே சாரும்.” இது வடநாட்டில் மட்டுமல்ல, அன்றைய தமிழகத்திலும் வேதப் பார்ப்பனர்கள் வேள்வி என்ற பெயரில் மாடு உள்ளிட்ட பல விலங்குகளைக் கொன்று தின்றதையே காட்டுகிறது.

அதே நீலகேசி அந்த வேள்விமுறையையே கீழ்வருமாறு கேள்விக்குள்ளாக்குகிறது

“நண்பரை நுதலியும் பகைவரை

நுதலியும் அமிர்தோடு நஞ்சு

உண்பார்க்கு அல்லது அவர்களுக்கு

ஆம் என உரைக்குநர் யார்

பண்பிலி தேவரை நுதலிய

கொலையினில் பல் வினைதான்

உண்பல வகையினின் அடைந்தலை

விளையுங்கள் உன் நுமக்கு என்றாள்”

தன் நண்பன் நீடு வாழ வேண்டும் என்று ஒருவன் அமிர்தம் உண்டான். இன்னொருவனோ தனது எதிரி அழிந்து போகட்டும் என நஞ்சு அருந்தினான். இந்த இரண்டின் பலனும் உண்டவர்களுக்குத் தானே போகும். அந்த நண்பர்களுக்கு போகும் என்று யார் சொல்வார்கள். அவ்வாறே தேவர்களுக்காக செய்யப்பட்ட கொலைகள் என்று சொன்னாலும், அதன் தீவினைப்பயன் கொன்ற உங்களுக்கே சேரும் என வேதவாதியைப் பார்த்து நீலகேசி சொல்கிறாள்.

இதில் வேள்விகள் ஏமாற்று வேலை என்பதையும், அவை வேத பார்ப்பனர்களின் மாமிச இச்சைக்கான பெரிய அடுப்புகளாகவே விளங்கின என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது நீலகேசி.

இன்னொரு இடத்தில் நீலகேசி வேதத்தைத் தாக்கித் தகர்க்கையில்,

“………….

கொலை மண்ணும் மருவுதலின்

ஐயம் இல் தீக்கதி செலுத்துவது”

என்று வேதத்தை சாடுகிறாள்.

இங்கு வேள்விக் கொலைகளையே தனது சாரமாகக் கொண்டிருந்த வேதப் பார்ப்பனீயத்தை நீலகேசி சரியாகவே தோலுரித்துக் காட்டியுள்ளது.

பவுத்த காப்பியமான மணிமேகலையோ ஆபுத்திரனின் கதை மூலம், வேதப் பார்ப்பனர்களின் மாட்டுக்கறி வெறியை அம்பலப்படுத்துகிறது. அக்கதை இதோ…

வாரணாசியில் அபஞ்சிகன் என்ற “மறை (வேதம்) ஓம்பாளன்” இருந்தான். அவனுடைய மனையாளியின் பெயர் “பார்ப்பினி சாலி” அவள் ஒழுக்கம் தவறி நடந்து விட்ட காரணத்தால், அந்தப் பாவம் போக்கு “குமரி ஆடிய வருவாள்” வரும் வழியில் குழந்தை பிறந்து விடுகிறது. எனினும் “ஈன்ற குழந்தைக்கு இரங்காளாகி” மறைவானதொரு இடத்தில் அதை விட்டுவிட்டு சென்று விடுகிறாள்.

பசியால் குழந்தை அலற, அது கேட்டு “ஓர் ஆ (பசு) வந்து அணைந்து” ஆதரவு தந்தது. நாக்கால் நக்கி கொடுத்து, பாலும் கொடுத்தது. இப்படி அந்தக் குழந்தை ஆபுத்திரன் ஆனது. அப்போது அவ்வழியே வந்த இளம்பூதி என்கிற “மறை ஓம்பாலனும்” அவனது மனையாளும் குழந்தையைக் கண்டு அதை எடுத்து கொள்கிறார்கள். ஆ மகன் அல்லன் என் மகன் என்றே” கொஞ்சுகிறான் அவன்.

இளம்பூதியின் இல்லத்தில் குழந்தை வளர்கிறான். உபநயனத்திற்கு முன்னரே அவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறான். சிறுவன் ஒருநாள் அந்த ஊரிலுள்ள இன்னொரு அந்தணர் வீட்டிற்கு செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சியை மணிமேகலை விளக்குகிறது,

“ஆங்கு புலைசூழ் வேள்வியில்

குரூரத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி

வெரூஉப் பகை அஞ்சிவெய் துயிர்த்து புலம்பிக்

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி

வலையிடைப் பட்ட மானே போன்று அங்கு

அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு

நெஞ்சு நடுக்குற்று நெடுங்கண் நீர் உடுத்து”

இதற்கு பொ. வே. சோமசுந்தரனார் கொடுத்துள்ள விளக்கவுரையை அப்படியே தருவோம் –

     “அவ்விடத்தே அப்பார்ப்பனர்கள் தாம் மறுநாள் ஊன் தின்பதற்கு ஏதுவாக வேள்வி செய்வதாக ஒரு சூழ்ச்சி செய்து, நிகழ்த்தும் வேள்விக் களத்திலே கொன்று தின்பதற்காக நிறமிக்க மலர் மாலை கொம்பின்கண் சுற்றப்பட்டுத் தன்னைக் கொல்பவரும், தான் பெரிதும் அஞ்சுதற்குக் காரணமாகியவரும் கொடியவருமாகிய அப்பார்ப்பனர்க்குப் பெரிதும் அஞ்சி, உய்தி காணாமல் வெய்தாக மூச்செறிந்து வருந்தி, கொலைத் தொழிலை மிகுதியாக செய்கின்ற வேடர் வில்லிற்கு அஞ்சி ஓடிப்போய் அவர் விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்ட மான் போல அஞ்சி, அவரால் கட்டப்பட்ட வேள்வித்தூண் மருங்கே நின்று அம்மா! அம்மா! என இடையறாது கதறி அழைக்கின்ற ஓர் ஆவினது துன்ப நிலையைக் கண்டு. தனது நெஞ்சம் நடுங்கி, நெடிய தன் கண்ணால் துன்பக் கண்ணீர் சொரிந்து”

அந்தக் காலத்தில் தமிழகத்தின் வேதியர்களும் வேள்வியில் பசுவைக் கொன்றார்கள். பசு மாமிசத்தை உண்பதற்காகவே பசுவைக் கொன்றார்கள் என்பது தெளிவாகிறது. பவுத்த சமயமே இது கண்டு கொந்தளித்தது. தனது எதிர்ப்பை அந்த சிறுவனின் செய்கை மூலம் இலக்கியமாக்குகிறார் சாத்தனார். அன்று இரவு அந்தப் பசுவை அவிழ்த்துக் கொண்டு, ஆபுத்திரன் ஊரை விட்டுக் கிளம்பி விடுகிறான். அந்தணர்கள் விசயம் அறிந்து, அவனையும் பசுவையும் வளைத்துக் கொள்கிறார்கள். “புலைச் சிறுமகனே போக்கப்படுதி என அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப” என்பது நடக்கிறது. அதாவது மரணத்திலிருந்து பசுவைக் காப்பாற்றியவனை “புலைச் சிறுமகனே” என்று திட்டியிருக்கிறார்கள்! கோல் கொண்டு அடித்திருக்கிறார்கள்!

அடிபட்டாலும் பசுவைக் காப்பாற்றிய மன நிறைவோடு, “நோவன செய்யமின்” என சிறுவன் அந்தணர்களுக்குப் புத்தி சொல்கிறான். அவர்களுக்குக் கோபம் வருகிறது. தங்களின் வேள்வியை இகழ்ந்ததன் மூலம் தங்களின் புனித வேதத்தையே இகழ்ந்துவிட்டதாகக் குமுறுகிறார்கள். “அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை” என்கிறார்கள். இதிலிருந்து மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லும் வேள்வி முறையையே தங்களது வேத உட்பொருளாக வேதியர்கள் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.

சுருக்கமாகச் சொல்வதெனில், வேதியர்கள் வேள்வி என்ற பெயரில் மாடு உள்ளிட்ட விலங்குகளைக் கொன்று தின்றுள்ளனர். இந்த வேள்விகளே வேதத்தின் உட்பொருள் என்று கருதியுள்ளனர். இதைப் பண்டைத் தமிழ் இலக்கியங்களின் சில காட்சிகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளன.

உண்மை நிலை இப்படி இருக்கையில், வேதக் காப்பாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கும்பல் மாட்டுக் கறியை வைத்து நடத்தும் வெறுப்பு அரசியலின் நோக்கம் என்ன? பார்ப்பனீய சாதியம் இருபிறப்பாளர் மற்றும் சூத்திர சாதிகளிடையே ஊட்டி வைத்துள்ள மாட்டின் புனித மதிப்பீடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, சிறுபான்மை முஸ்லீம்களுக்கெதிரான மதவெறியைத் தூண்டுவதுதான் இவர்களின் நோக்கம். இதன் மூலம் தமது இந்துத்துவ பாசிச கருத்தியலை பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் வேரூன்ற வைக்க முயற்சிக்கின்றனர். உலக பொருளியல் நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் தலை மேல் சுமத்த விரும்பும் ஆளும் வர்க்கங்கள், ஒரு அப்பட்டமான பாசிச (சர்வாதிகார) ஆட்சியை நிறுவ விரும்பி, அதற்கான மக்கள் அடித்தளத்தைக் கட்டியமைக்கவே இந்து பாசிச கருத்தியல்கள் பரப்பப்படுகின்றன என்பதை நாம் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும். மறுபுறம், இதே விசயத்தை வைத்து தாழ்த்தப்பட்ட மக்களையும், பழங்குடிகளையும் கீழானவர்களாகச் சித்தரிக்கும் பார்ப்பனீய கருத்தியலை மேலும் பலப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் நீட்சியாக புலால் உண்ணும் சூத்திர சாதி மக்களையும் மட்டம் தட்டும் பார்ப்பனீய மேலாதிக்க வெறியுடன், தாம் ஆளும் மாநிலங்களில் புனித நாட்களில் அனைத்து இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கின்றனர். இந்துத்துவ பாசிசமும், பார்ப்பனீயமும் பிரிக்க முடியாதவை என்பதுடன், மாட்டுக்கறியில் தொடங்கி இறைச்சிக்கு நீளும் அவர்களின் தீட்டு அரசியல் பெரும்பான்மை மக்களை கருத்தியல் ரீதியாக கீழ்ப்படுத்தும் ஒரு பாசிச முயற்சியே. இதில் “புனிதம்”, “பாரதப் பண்பாடு”, “கோமாதா” போன்ற முழக்கங்களெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கான மோசடிகளேயன்றி வேறல்ல.

-    விவேக்

குறிப்பு: இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள தமிழ் இலக்கிய சான்றுகள், அருணனின் “தமிழரின் தத்துவ மரபு” (முதல்பகுதி) என்ற நூலிலிருந்து ஏறக்குறைய அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன.

Pin It