இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில், பாபர் மசூதியை இடித்த நாள்  டிசம்பர் 6 1992. இந்நிகழ்வு பன்முகத் தன்மையின் கூறுகளை அடியோடு தகர்த்த நாள்; கறுப்பு நாள் அகும். இடித்த இடத்தில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது சங் பரிவாரங்களின் கோரிக் கையாக முன்வைக்கப்பட்டதே ஒரு பயங்கரவாத செயலை ஊக்குவிக்கும் செயலாகும். இந்த அநீதியான செயல் நடந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. பாபர் மசூதியை இடிக்கும் நிகழ்வில் பங்கு கொண்ட பாசக விலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்வானிக்கு 92 வயது ஆகிறது. இந்த வன்செயலை வெறும் மசூதி இடிப்பு-இராமர் கோயில் கட்டுவது என்று மட்டும் பார்த்துவிட முடியாது. காரணம் ஒரு மதவாதக் கூட்டம், தொடர்ந்து இராமரை முன்னிறுத்தி அரசியலாக்கி இன்றைக்கு ஒன்றிய அரசில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வந்த எதிர்மறையான அரசியல் பயணமாகப் பார்க்க வேண்டும். காங்கிரசுக் கட்சியாக இருந் தாலும், பாசகவாக இருந்தாலும் இராமனை ஒரு கடவுள் அவதாரமாக ஆக்கி வழிபடுவதற்கு வழி வகுத்தனர். இந்து தீவிரவாத அரசியலுக்கு அடித்தளம் அமைத்தனர்.

1947இல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இந்து-முசுலிம் பாகுபாடும் வேறுபாடும் ஓர் அரசியலாகவே வளர்ந்தது. வடநாட்டில் இந்த எதிர்மறை அரசியலைத் தேசியக் கட்சிகள் எனக் கூறப்படுகிற காங்கிரசும், மற்ற கட்சிகளும் கண்டு கொள்ளவே இல்லை. குறிப்பாக 1952ஆம் ஆண்டு அயோத்தித் தொகுதியில் ஆச்சாரியார் நநேந்திர தேவ் சோசலிஸ்ட் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரசுக் கட்சியினர் ஆச்சாரியார் நரேந்திர தேவ் ஒரு நாத்திகர் என்றும் அவர் வெற்றி பெற்றால் இராமர் கோயில் கட்ட அனுமதிக்க மாட்டார் என்றும் பரப்புரை செய்தனர்.

பகுத்தறிவாளரான பிரதமர் நேரு காலத்திலேயே, இதைத் தடுக்க முடிய வில்லை. காங்கிரசுக் கட்சியில் சனாதனவாதிகளின் ஆதிக்கம் பெருமளவில் செல்வாக்கோடு செயல்பட்டது. மதவாதக் கருத்துகளை இந்திய அரசமைப்புச் சட்ட அவையிலேயே எதிரொலித்தனர். இந்துச் சட்டத்தில் பல முற்போக்கான திருத்தங்களை அரசமைப்புச் சட்டத்தில் அறிஞர் அம்பேத்கர் முன்மொழிந்த போது, காங்கிரசுக் கட்சியின் சார்பாக இடம் பெற்ற அரசமைப்புச் சட்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்துச் சட்டத்தில் பெண்களுக்கு வாரிசு உரிமை உட்பட பல முற்போக்கான சமூகம் சார்ந்த சட்ட விதிகளை அம்பேத்கர் முன்மொழிந்த போது, அதற்கு ஆதரவு தர மறுத்தனர். புது தில்லியில் பூரி சங்கராச்சாரியார் உட்பட இந்து மத வெறியர்கள் அம்பேத்கரின் உருவப் பொம்மையை எரித்தனர்.

அடுக்குமுறைச் சாதியமைப்பில் சூத்திரனுக்குக் கீழ் நிலையில் உள்ள பஞ்சமர், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதா என்று வெளிப்படையாகச் சுட்டினர். மற்றொரு நிகழ்வும் அரசமைப்புச் சட்ட அவையில் நடந்தது. அரசமைப்புச் சட்ட அவையிலும் காங்கிரசுப் போர்வையில் பசுப்பாதுகாவலர்கள்  இருந்தனர். குறிப்பாகச் சேத் கோவிந்ததாஸ், தாக்கூர் தாஸ் பார்கவா போன்ற பிராமணர்களும், மார்வாடி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு பசுப் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் இணைக்க வேண்டும் என வாதிட்டனர். பார்ப்பன-பனியாக்கள் கூட்டம் இந்த அவை யில் பல பிற்போக்கான கருத்துகளை முன் மொழிந்தன. காங்கிரசுக் கட்சி விதைத்த நச்சு என்ற விதை பசுப் பாது காப்பு எனும் நச்சுக் காடாக பாசக ஆட்சியில் விரிந்தது.

2019ஆம் ஆண்டில்கூட பசுமாட்டை வைத்து, அரசியல் செய்யும் நிலையை ஊக்குவித்தது. சங் பரிவாரங்கள் பசு மாட்டு இறைச்சியை உண்ணும் இசுலாமியர்களையும், தலித்துகளையும், பசுப்பாது காவலர்கள் என்ற பெயரில் கொல்லும் அளவிற்கு மத வெறி ஓங்கி வளர்ந்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் வரையறைக் குழுவின் தலைவர் என்ற முறையில், மனிதர்களின் உரிமை களைத்தான் அடிப்படை உரிமைகளாக அறிவிக்க முடியும் என்று குறிப்பிட்டு இந்துமத வெறியர்களின் கோரிக் கையை அண்ணல் அம்பேத்கர் நிராகரித்தார். இருப்பினும் பசுப் பாதுகாப்பை அரசுமைப்புச் சட்டத்தின் வழி காட்டு நெறிகளின் 48ஆவது பிரிவில் (Directrive Principles of State Policy) இணைத்தனர். உலகில் எந்த நாட்டிலாவது பசுவைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட விதியில் குறிப்பிடப்பட்டுள்ளதா?  இந்த இணைப்பு, ஒரு மதவாத அரசமைப்புச் சட்டம் என்பதைத் தானே சுட்டுகிறது. இதற்கு அரசமைப்புச் சட்ட அவைக்கு வெளியே நின்று துணை நின்றவர்கள், அன்றைய இந்து மகாசபை உறுப்பினர்களும் சங்கராச்சாரியர்களும் என்பதை யார் மறுக்க முடியும்?

அண்மையில் 2018இல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங் களின்படி தென் மாநிலங்களான தமிழ்நாடு கேரளா ஆந்திரம் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகையில் 98 விழுக்காட்டு மக்கள் இறைச்சி உண்பவர் களாக உள்ளனர். மேற்கு வங்கத்திலும் 98 விழுக்காட்டினர் இறைச்சி உணவை உண்கின்றனர். இராஜஸ்தான் (26 விழுக்காடு) அரியானா (31 விழுக்காடு) பஞ்சாப் (33 விழுக்காடு) குஜராத் (39 விழுக்காடு) மத்தியப்பிரதேசம் (51 விழுக்காடு), உத்திரபிரதேசம் (55  விழுக்காடு) மக்கள் இறைச்சியை உண்கின்றனர். இதைத் தவிர இதர மாநிலங்களில் ஏறக்குறைய 50 விழுக்காட்டு மக்கள் இறைச்சியை உண்கின்றனர். இந்திய மக்கள்தொகையைக் கணக்கிட்டாலும் சராசரியாக 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் இறைச்சியை உண்கிறார்கள் எனச் சான்றுகள் பகர்கின்றனர். 

மக்களின் விருப்பத்திற்கு எதிராக எப்படி ஓர் அரசமைப்புச் சட்டத்தில் பசுவதையைச் தடை செய்ய வேண்டும் என்று சட்டப் பிரிவை இணைக்க முடியும் என்ற வினா எழுகிறது. எனவேதான் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் அறிஞர் அண்ணா ஆகிய தலைவர்கள் மதவாதத்தை எதிர்த்தார்கள். இராமன் படத்தைத் திராவிடர் இயக்கம் எரித்தது. அண்ணல் அம்பேத்கர் புராணங்களை சாத்திரங்களை எண்ணி லடங்கா வகையில் உற்பத்தி செய்து பார்ப்பான் அதைப் புதையலாக்கி கடுமையான வகையில் படிப்பறிவில்லாத மூடநம்பிக்கையில் மூழ்கிய இந்துக்களையும் பெரும் பான்மையான மக்களையும் வஞ்சகத்தால் முட்டாள் களாக்கி மோசடி செய்தான் பிராமணன் என்று குறிப் பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் இராமன் படத்தை எரித்தார். அரசமைப்புச் சட்டத்தையும் எரித்தார் என்பதை இன்று கடும் விமர்சனம் செய்பவர்கள், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒரு மதச்சார்பு நிலையை ஏன் கண்டிக்க முன் வருவதில்லை? 1961இல் அறிஞர் அண்ணா ஹோம் லேண்ட் ஏட்டில் வடநாட்டில் இருந்து வரும் காரவன் ஏட்டில் வெளியிடப்பட்ட பகுத்தறிவுக் கருத்தைச் சுட்டிக் காட்டி “இராம லீலா கொண்டாடலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதிகாசப் புராணங்களில் இருக்கும் கருத்துகளைத் தங்களின் வாதத்திற்கு ஆதாரங்களாகக் காட்டி மதத்தின் பெயரால் செய்த அறிவற்ற அட்டுழி யங்கள் பல உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமலீலா வட நாட்டினர் கொண்டாடும் போது, திராவிட இயக்கத்தினர் இராவண லீலா கொண்டாடினால் இந்தியத் தண்டனைச் சட்டம் 295வது பிரிவைப் பயன் படுத்தி வழக்குப் போடுவது என்ன நியாயம்? என்றும் கேட்டுள்ளார். இந்தியத் தண்டனைச் சட்டத்தில், இராம னுக்கு ஒரு நீதி இராவணனுக்கு ஒரு நீதியா? என்ற வினாவையும் எழுப்பியுள்ளார். இதுபோன்று எண்ணற்ற அறிவு சார்ந்த கேள்விகள் தென் இந்தியாவில் மட்டும்தான் கேட்கப்பட்டுள்ளன. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பல காரணங்களைப் பல ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டார்ட் கார்பிரிட்ஜ், ஜான் ஹாரிஸ் என்ற இரு ஆய்வாளர்கள் மீண்டும் இந்தியா (Reinventing India) என்ற நூலில் (பக்கம் 190)-1987 சனவரி தொடங்கி ஆகஸ்ட் 1989 வரை ஒன்றிய அரசின் ஊடகமான தூர்தர்ஷனில் இந்து தேசியம் ஊட்டி வளர்க்கப்பட்டது. வாரா வாரம் இராமயண நிகழ்ச்சிகள் அரசுத் தொலைக் காட்சியில் காண்பிக்கப்பட்டன. அயோத்தி இயக்கத்தை மக்கள் கண் முன்னே நிறுத்தினர். இதை ஒரு மதச் சார்பற்ற அரசே செய்தது பெரும் வியப்பாகும் என்று குறிப் பிட்டுள்ளனர். எனவே வடமாநில நீதிபதிகள் உட்பட, இந்த இராமயணக் காட்சியைக் கண்டார்கள். பலர் தொலைக் காட்சிப் படம் நின்றவுடன், இராம பஜனை செய்தார்கள். இதெல்லாம் நடந்தது காங்கிரசு ஆட்சியில் என்பதை மறந்துவிட முடியாது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை இந்து மதவாதம் இந்து தேசியமாகச் சித்தரிக்கப்பட்டது என்பதைப் பல ஆய் வாளர்கள் சுட்டியுள்ளனர்.

இச்சூழலில்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய் தலைமையில் அமைந்த 5 நீதியரசர்கள் அமர்வு, பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என ஒரு மனதாக அளித்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

அரசமைப்புச் சட்ட அறிஞரான ஏ.ஜி.நுரானி, டிசம்பர் 6, 2019, பிரன்ட்லைன் ஏட்டில்  உச்ச நீதிமன்றம் நீதியை மறுக்கிறது (Supreme Court Denies Justice) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், பல சட்டத் தரவுகளை அளித்துள்ளார். பொதுவாக உச்ச நீதிமன்றம் ஒருமனதாக அளித்தத் தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ்., பாஜக, விசுவ இந்து பரிஷத் ஆகிய இந்து அமைப்புகளின் எதிரொலியாகவே அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஹிரேன் முகர்ஜிக்கு, வாஜ்பாய் ஜூன் 5 1989 அன்று எழுதிய மடலை மேற்கோள் காட்டியுள்ளார். அம்மடலில் இராமன் எங்கே பிறந்தான் என்று குறிப்பிட்டுக் காட்ட முடியாது என்று வாஜ்பாய் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த தேவராஸ், நீதிமன்றம் தன் தீர்ப்பின் வழியாக இப்பிரச்சினையைத் தீர்க்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் உத்திரபிரதேச மாநிலத்தின் பசிதாபாத்தின் வருவாய்த் துறை துணை ஆணையர் இந்த வழக்கில் உள்ள பாபர் மசூதி இடம், நீண்ட காலமாகத் தொழுகைக்காகப் பயன்படுத்தப்பட்டது. இராமனை வழிபடும் இடமாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஏராளமான சட்டபூர்வமான தரவுகள் இருந்தும், இந்த அமர்வின் ஒருமனதான தீர்ப்பு பெரும்பான்மையான இந்து மக்களின் உணர்வுகளை மதித்து மட்டுமே அளிக்கப் பட்டுள்ளது என்று நுரானி குறிப்பிட்டுள்ளார்.

“பிரன்ட் லைன்” சிறப்பிதழில் பல சட்ட அறிஞர்கள்-சிந்தனையாளர்களின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. எல்லோரும் இந்தத் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்ட தீர்ப்பு என்று கூறியுள்ளனர். நம்பிக்கைதான் தீர்ப்பின் அடிப்படை என்றால் அரசமைப்புச் சட்ட விதிகள் எல்லாம் செத்துவிட்டனவா என்ற வினா எழுகிறது. வைத்தால் முடி எடுத்தால் மொட்டை என்பதுபோல் நாங்கள் சொல்வதுதான் நீதி என்று சொல்ல முடியுமா? மொகலாய மன்னர்கள் காலத்தில்கூட பன்முகத் தன்மைகள் வடமாநிலங்களில் போற்றி வளர்க்கப்பட்டன என்பதை வரலாறு சுட்டுகிறது.

மொகலாய மன்னர்களின் மகன்கள் பலர் சமஸ் கிருதம் உருது, அரபி மொழிகளைப் பயின்றவர்கள். அக்பர் சுதந்திரமான கருத்துகளைத் திறந்த மனதுடனும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியவர். சமண பௌத்த, பார்சி உட்பட அனைத்துச் சமய சிந்தனையாளர்களையும் அழைத்து சமூக மத நல்லிணக்கத்திற்கு வழி காண முற்பட்டார். குறிப்பாக நாத்திகர்களையும் இந்த உரையாடல்களில் கலந்து கொள்ள அழைத்தார். `ஜகானின் மகனான தாராசு சிறந்த இலக்கியவாதி. எல்லோரும் சமம் என்கிற கொள்கையுடைய சுபி இயக்கத்தின் கொள்கை களில் பிடிப்புக் கொண்டு பல நூல்களைப் படைத்தவர். 50 உபநிடதங்களைச் சமஸ்கிருதத்தில் இருந்து பெர்சியன் மொழிக்கு மொழி பெயர்த்தார். பாபா லால் என்கிற பார்ப்பன குருவிடம் பல முறை விவாதித்து மத நல்லி ணக்கத்தை வலியுறுத்தினார். பல சாஸ்திர மத நூல் களை மொழி பெயர்த்துள்ளார்.

இது போன்ற  எண்ணற்ற  சான்றுகள் வரலாற்றின் பல பக்கங்களில் இடம் பெற்று இருக்கும் போது, ஐந்து நீதியரசர்கள் அமர்வு ஒரு மதத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியிருப்பது பெரும் தீமையாகவும் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று பல சட்ட அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அமர்வுக்குத்  தலைமை வகித்த நீதியரசர் ரஞ்சன் கோகாய் மீது ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நீதியரசர் கோகாய் இந்த அமர்விலும் இடம் பெற்று புகாரளித்த பெண்ணை அழைத்து, விசாரணை என்ற பெயரில் ஒரு மனதான தீர்ப்பை வழங்கியபோதே பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தின. ஓய்வு பெற்ற பிறகு தனக்குப் பல கசப்பான சம்பவங்கள் இருந்தன என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். எவை எவை கசப்பானவை? எவை எவை இனிப்பானவை? என்பதை கோகாய் குறிப்பிடுவாரா? மக்களாட்சியின் மாண்பையும் நீதிமன்றத்தின் சிறப்பையும் காப்பது நீதித்துறையின் பொறுப்பும் கடமையும் என்பதை மறுக்க முடியுமா?

பணி ஓய்விற்குப் பிறகு திருப்பதிக்கு வந்து மலையப் பனை வழிபட்டது மதச்சார்பா? மதச்சார் பின்மையா? இசுலாமிய மதத்தைச் சேர்ந்த ஒரு நீதியரசர் அம்மதத் திற்குச் சார்பான ஒரு திர்ப்பினை வழங்கிவிட்டு மசூதிக்குச் சென்று தொழுகை நடத்தினால் சங் பரிவாரங்கள் எற்றுக் கொள்ளுமா?

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு இந்து தர்மச் சட்டமாக உள்ளது என்று, அன்றே எதிர்ப்புத் தெரிவித்தனர். சட்ட அமைச்சர் பதவியில் இருந்து அம்பேத்கர் விலகி, புத்த மதத்தைத் தழுவினார். பெரியார் இறுதி வரை இந்த அரசமைப்புச் சட்டம் சனாதான சட்டம் என்றே வாதிட்டார். சட்டம் தோற்றுவிட்டது. நம்பிக்கை வென்றுவிட்டது. இது நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? என்ற வினா ஒவ்வொருவர் எண்ணத்திலும் தற்போது எழத் தொடங்கியுள்ளது.

Pin It