நமக்கு இவ்வளவு தான் தெரியும்: டிசம்பர் 13, 2001 அன்று இந்திய பாராளுமன்றம் தனது குளிர்கால கூட்டத் தொடரில் இருந்தது (பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றொரு ஊழலில் சிக்கி கடும் விமர்சனங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது). காலை 11.30 மணிக்கு, வெள்ளை அம்பாசிடர் காரில் அதிநவீன ஆயுதங்களுடன் ஐவர் பாராளுமன்ற வளாகத்தின் வெளிக் கதவுகள் வழியாக தங்கள் வாகனத்தில் நுழைந்தனர். அவர்களை வழிமறித்த பொழுது, அவர்கள் காரிலிருந்து வெளியே குதித்து துப்பாக்கியால் சுடத்துவங்கினார்கள்.

Arunthathi Roy
அதை தொடர்ந்த துப்பாக்கிச் சூட்டில் கிளர்ச்சியாளர்கள் அனைவரும் கொள்ளப்பட்டார்கள். எட்டு பாதுகாப்பு படை வீரர்களும், தோட்டக்காரர் ஒருவரும் கொள்ளப்பட்டனர். இறந்த தீவிரவாதிகளிடம் பாராளுமன்ற கட்டிடத்தை தகர்க்கும் அளவுக்கு வெடிமருந்தும், முழு பட்டாலியன் சிப்பாய்களை எதிர்கொள்ளத்தக்க ஆயுதங்களும் இருந்தன என காவல் துறை கூறியது. பொதுவான தீவிரவாதிகள் போல் அல்லாமல் - இந்த ஐவரும் ஏராளமான அழுத்தமான தடையங்களை விட்டுச் சென்றனர் - ஆயுதங்கள், செல்போன்கள், தொலைபேசி எண்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்கள், உலர்பழப் பொட்டலங்கள், அத்துடன் ஒரு காதல் கடிதமும் கூட.

ஆச்சரிய படும்படியாக இல்லாமல், வாஜ்பாய் இந்தத் தாக்குதலை செப்டம்பர் 11ல் நிகழ்ந்த அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்புடன் ஒப்பிட்டு பேசினார். அமெரிக்க தாக்குதல் நிகழ்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தது. டிசம்பர் 14, 2001 - பாராளுமன்ற தாக்குதல் நிகழ்ந்த அடுத்த நாள், தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு இந்த தாக்குதல் தொடர்புடைய ஏராளமான நபர்களை இனம் கண்டு விட்டதாக அறிவித்தது. இன்னும் ஒரு நாள் கழித்து டிசம்பர் 15 அன்று தில்லி காவல்துறை இந்தச் சம்பவம் இரு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் கூட்டு செயல்பாடு.

லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜய்ஸ்-ஏ-மொகமத் தான் மொத்த தாக்குதல் திட்டத்தை நிகழ்த்தியதாகவும், அதை காவல்துறை கண்டுவிட்டதாக அறிவித்தது. இந்த சதி திட்டத்தில் ஈடுபட்ட பன்னிரண்டு நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. ஜய்ஸ்-அய் சேர்ந்த காஜி பாபா, (Usual Suspect I) மவுலானா மசூர் அசர் (இவரும் ஜய்ஸ் அய் சேர்ந்தவர்), தாரிக் அக்மத் (பாகிஸ்தானி) மரணமடைந்த ஐவர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் (இவர்கள் யார் என இதுவரை நமக்குத் தெரியாது). இத்துடன் காஷ்மீரை சேர்ந்த மூவர் எஸ்.ஏ.ஆர். கிலானி, சவுகத் ஹுசைன் குரு, முகமத் அப்சல், சவுகத்தின் மனைவி அப்சான் குரு. இவர்கள் நால்வர் தான் கைது செய்யப்பட்டவர்கள்.

இதனைத் தொடர்ந்தது பதட்டம் நிறைந்த நாட்கள். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 21 அன்று பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் திரும்ப பெறப்பட்டார். பஸ், ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. அவசர கதியில் ஐந்து லட்சம் துருப்புக்கள், மற்றும் போர் கருவிகள் பாகிஸ்தானின் எல்லை பகுதிகள் நோக்கி நகர்த்தப்பட்டது. தூதரக அலுவலக ஊழியர்கள் கூட வெளியேற்றப்பட்டனர். இதை மீறி பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை ஆலோசனைகள் வழங்கப்பட்டது. துணைக்கண்டம் அணு ஆயுதப் போர் நோக்கி விரைவதை, உலகம் பெருமூச்சுடன் கூர்ந்து கவனித்தது. (துருப்புகளின் இந்த துரித இடம் பெயர்வில் பல நூறு இந்தியப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தொடர் நிகழ்வுகளால் இந்திய அரசு தன் மக்களின் வரிப்பணத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்தது.)

ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் கழித்து, ஆகஸ்ட் 4, 2005 அன்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. பாராளுமன்ற தாக்குதலை நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகத்தான் கருத வேண்டும் என்கிற பார்வை கொண்ட தீர்ப்பு அது. எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுறுவி பாராளுமன்றத்தை தகர்ப்பதற்கான இந்த முயற்சி, நம் இந்திய அரசின் இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட சவாலாகும்........ கொல்லப்பட்ட அந்த தீவிரவாதிகள் தேச-எதிர்ப்பு கருத்தாக்கத்தில் நம்பிக்கை கொண்டு, உசுப்பேறியவர்களாக இருந்தார்கள். அவர்களின் வாகனத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களும், போலி உள்துறை அமைச்சக அனுமதி ஸ்டிக்கர்களும் (Ex.PW1/8) இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது. மேலும் தீர்ப்பின் படி, அதி தீவிர இஸ்லாமிய தீவிரவாதிகள் (ஃபிதாயீதீன்) இந்திய அரசாங்கத்தின் மீது ஒரு முழுமையான போரை நிகழ்த்தவிருந்தது. அவர்களின் திட்டம், செயல்முறைகளின் வழி நமக்கு விளக்குகிறது.

போலியான உள்துறை அமைச்சக ஸ்டிக்கரில் இருந்த வாசகம் இவ்வாறு தொடர்கிறது :

இந்தியா ஒரு மோசமான நாடு. நாங்கள் இந்தியாவை எதிர்க்கிறோம். அதனை அழிக்க வேண்டும். கடவுளின் கருணை எங்களுடன் இருக்கிறது. கடவுள் எங்களுடன் இருக்கிறார். நாங்கள் கூடியவரை முயல்வோம். வாஜ்பாய், அத்வானி ஆகிய முட்டாள்களை கொல்வோம். அவர்கள் பல அப்பாவி மக்களை கொன்றிருக்கிறார்கள். அவர்கள் மோசமான மனிதர்கள், அவர்களின் சகோதரர் புஷ்ஷிம் ஒரு மோசமான மனிதர். அவன் தான் எங்கள் அடுத்த இலக்கு. அவனும் பல அப்பாவி மக்களை கொன்று குவித்திருக்கிறான். அவன் சாக வேண்டும். நாங்கள் அதனை செய்து முடிப்போம்.

பூடகமான வார்த்தைகள் கொண்ட இந்த ஸ்டிக்கர் அறிக்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த காரின் முகப்பு கண்ணாடியில் ஓட்டப்பட்டிருந்தது. (இந்த பிரதியின் அளவைப் பார்த்தால், ஆச்சரியமாக உள்ளது. அந்த ஓட்டுநர் எப்படி வண்டியை செலுத்தினார். வண்டிக்கு முன் உள்ள எதையும் அவர் பார்த்திருக்க இயலாது. அதனால் தான் என்னவோ அவரது வாகனம் துணை ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பை மோதியது....)

பொடா வழக்குகளை நடத்துவதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட சிறப்பு துரித விசாரணை நீதிமன்றத்தில், தில்லி காவல்துறை தனது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. நீதிமன்றம் கிலானி, சவுகத் மற்றும் அப்சலுக்கு மரண தண்டனையை தீர்பளித்தது. அப்சான் குருவுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை. உயர்நீதிமன்றம் கிலானியையும் அப்சானையும் குற்றமற்றவர் என விடுதலை செய்தது. ஆனால் சவுகத் மற்றும் அப்சலின் தண்டனையை மறுஊர்ஜிதம் செய்தது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பிலும் இருவரை விடுதலை செய்து, சவுகத்தின் தண்டனையை குறைத்து பத்து ஆண்டுகள் கடுங்காவல் தீர்ப்பளித்தது. இருப்பினும் முகமத்அப்சலின் தண்டனையை இன்னும் மெருகேற்றியது. அவருக்கு ஆயுள் தண்டனையும், இருமுறை மரணத்தையும் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் ஆகஸ்ட் 4, 2005 தீர்ப்பு மிக தெளிவாக கூறுகிறது. முகமத் அப்சல் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் அல்லது வேறு நிறுவனங்களில் இருந்தவர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும், வழக்கமான சதி திட்டங்களை போல இந்த வழக்கிலும் கிரிமினல் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான, அல்லது தொடர்புபடுத்துவதற்கான நேரடி ஆதாரங்கள், தடையங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் சூழ்நிலையும், இந்த வழக்கின் முக்கியத்துவமும் இணைந்து குற்றவாளி அப்சல் நிச்சயம் பீதாயிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர் என சந்தேகமின்றி விளக்குகிறது.

அதனால் : நேரடி - ஆதாரம் இல்லை, ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரம் இருக்கிறது. தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பத்தி இப்படிச் செல்கிறது. ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கிய இந்த சம்பவம், கனத்த சேதத்தை விளைவித்துள்ளது. அதனால் நம் சமூகத்தின் மொத்த மனசாட்சியும் மரண தண்டனையை குற்றவாளிக்கு வழங்கினால் ஒழிய சமாதானம் கொள்ளாது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் சவால்விடக் கூடிய இந்த தீவிரவாத செயல்களுக்கும், சதிகாரர்களுக்கும் அதிகபட்ச தண்டனையை வழங்குவது மட்டுமே சரியான எதிர்வினையாக இருக்கும். இந்த மிரட்டல் விடக் கூடிய செயலை திட்டமிட்டவர் என நிரூபிக்கப்பட்டவருக்கு நிச்சயம் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். (அழுத்தம் என்னுடையது).

சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் முழுமையான ஆதரவுடனும், உதவியுடனும் தகுதியுடைய சடங்குப் பூர்வமான மரணத்தை நிகழ்த்த, அதாவது மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அவர்கள் சட்டவிரோதமான நீதிமன்ற விதிமுறையை வீரம் மிக்கதாக மாற்றுகிறார்கள். முடிவுக்குரியதையே ஆதார மெய்மையாகக் கொள்கிறார்கள். இதனை, கொள்ளையடிக்கிற அரசியல்வாதிகளோ, உணர்வு கிளர்ச்சியை விரும்புகிற இதழியலாளர்களோ திணிக்கவில்லை. மாறாக நம் மண்ணின் மிக உயர்ந்த நீதிமன்றம், அதிகாரத்தைக் கொண்டு அறிவிக்கிற செய்தியாக நம் மீது செலுத்தும் பொழுது ரத்தம் உறைந்து போகிறது.

அப்சலின் மரண தண்டனைக்கான காரணங்களை தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது. கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் இவர் ஒரு சரணடைந்த தீவிரவாதி. அவர் பலமுறை அரசெதிர்ப்பு குற்றங்களை (இராஜ துரோகம்) செய்து கொண்டிருப்பவர். சமூகத்தை அச்சுறுத்துபவர். அதனால் அவர் வாழ்வு முற்றுபெற வேண்டும். தணிந்து போக வேண்டும்.

இன்று காஷ்மீரில் சரணடைந்த தீவிரவாதி என்பதன் அர்த்தம் குறித்த முழுமையான அறியாமையும், பழுதான தர்க்கம் உடையதாகவும் இருக்கிறது தீர்ப்பின் இந்த பகுதி.

அதனால் முகமத் அப்சலின் வாழ்க்கை முற்றுபெற வேண்டுமா?

மிகச் சிறிய எண்ணிக்கையிலான, ஆனால் செல்வாக்கு செலுத்தக்கூடிய அறிவு ஜீவிகள், போராளிகள், பத்திரிகை ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொதுமதிப்புடைய மனிதர்கள் இந்த மரண தண்டனையைத் தங்கள் நீதிக்குரிய கோட்பாட்டின் அடிப்படையில் எதிர்த்து வருகிறார்கள். அவர்கள் மேலும் வாதிடுகிறார்கள். இந்த வழக்குப்படி அனுபவத்தால் அறியப்படுகிற ஆதாரங்கள் ஏதும் இல்லை, எந்த ஆதாரமும் தூக்கு தண்டனையளித்து அதன் மூலம் தீவிரவாதிகளை அச்சமூட்டலாம் என பரிந்துரைக்கவில்லை. (இது தற்கொலைப்படைகள், பீதாயிதீன்களுக்கான காலம். இங்கே மரணம் தான் முக்கியத்துவம் பெற்று ஈரமுள்ளதாகத் திகழ்கிறது).

கருத்துக் கணிப்புகள், வாசகர் கடிதங்கள். நேயர்களின் நேரடி கருத்துக்கள், தொலைக்காட்சி ஸ்டுடியோக்களில் அமர்ந்திருப்பவர்கள் என இந்த கருத்து நிலையை வைத்து தேசத்தின் மனசாட்சியை நாம் கணக்கிட்டால், அந்த சட்டவிரோத கும்பல் அசுரவேகத்தில் பெருகி வருகிறது.

மிகப் பெரும்பான்மையான இந்திய பிரஜைகள் முகமத் அப்சல் தினந்தோறும் தூக்கிலிடப்பட வேண்டும் என்றே விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். தினந்தோறும் என்றால் வாரத்தின் இறுதி நாட்கள் உள்பட, அதுவும் அடுத்த சில வருடங்களுக்கு. ஒரு கனப் பொழுது கூட தாமதம் இல்லாமல் உடனடியாக அப்சல் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதில் பெரும் பதட்டமும் அவசரமும் காட்டுகிறார் எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி.

அதே சமயம், காஷ்மீரில் பொதுக் கருத்து இது போலவே ஏகமனதாக உள்ளது. ஏராளமான எண்ணிக்கையில் ஆத்திரம் கொண்ட எதிர்ப்பாளர்கள், அப்சல் தூக்கிலிடப்பட்டால் அரசியல் ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கர்ஜிக்கிறார்கள். நீதியின் தவறான போக்கு என தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் பொழுதே அவர்கள் இந்திய நீதிமன்றங்களிடம் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்க இயலாது என நம்புகிறார்கள். அவர்களது வாழ்வில் ஏராளமான வன்கொடுமைகளை சந்தித்து விட்டார்கள். இனி அவர்களிடம் நீதிமன்றத்தை, நீதியை, மகஜர்களை நம்பும் தெம்பு இல்லை. சிலர் அப்சல் தூக்கு மரத்தை நோக்கி வீருநடை போட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். காஷ்மீரின் விடுதலைக்காக உயிர் நீத்த மக்பூல் பட் ஐப் போல. பொதுவாக காஷ்மீர் மக்கள் அப்சலை ஏறக்குறைய போர் கைதி போலவே கருதுகிறார்கள். ஆக்கிரமித்த நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது போல் உள்ளது. (சந்தேகத்துக்கு இடமின்றி அப்படித்தான் உள்ளது). இந்தியாவிலும் காஷ்மீரிலும் காற்று மரணம் நோக்கித் தான் தோதாக வீசுகிறது.

இந்த தீவிர ஆத்திரம் கொண்ட சூழலின் மத்தியில், அப்சல் உரிமை பறிபோன நிலையில் இருக்கிறார். ஒரு தனிமனிதர் என்கிற உரிமை கூட பரிமுதலான அவலம். தேசியவாதிகள், பிரிவினைவாதிகள், மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் என எல்லோரின் கனவுகளுக்கான ஆசைகளுக்கான ஊர்தியாக அப்சல் மாறிப்போனார். இந்தியாவின் மாபெரும் வில்லனாகவும், காஷ்மீரின் நாயகனாகவும் திகழ்கிறார் அவர். நம் பண்டிதர்கள், கொள்கை உருவாக்குபவர்கள், அமைதி விரும்பிகள் கடந்த பல வருடங்களாக ஆருடம் கூறுவது போல், காஷ்மீர் போர் எந்த வழியிலும் ஒழிந்தபாடில்லை.

காஷ்மீரில் எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானது, உண்மை. நீங்கள் ஆழத் தோண்டினால் அது அவ்வளவு அவலமாக இருக்கிறது. அந்த பள்ளத்தின் தூரில் எஸ்.டி.எப்பும் பாதுகாப்பு படைகளும் இருப்பது பற்றி அப்சல் பேசுகிறார். இந்திய ராணுவத்தின் ஒழுக்கமற்ற, அச்சந்தருகிற, இரக்கமற்ற கருவிகள் காஷ்மீரில் இருக்கிறது. மற்ற விதிமுறைக்குட்பட்ட படைகளைப்போல் அல்லாமல் அரைகுறை அறிவுடன் மங்கலான ஒளியில் காவல்துறை, தீவிரவாதிகள், கட்சிமாறிகள், பொதுவான கிரிமினல்கள் தங்கள் வியாபாரத்தை செய்கிறார்கள். அவர்கள் கிராமப்புற காஷ்மீர் மக்களின் வாழ்வை வேட்டையாடுகிறார்கள். 90களின் துவக்கத்தில் எழுந்த எழுச்சியில் பங்கு கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தான் இவர்களின் ஆரம்ப களப்பலி. அவர்கள் சரணடைந்து சாமான்ய வாழ்வை வாழ விரும்புகிறார்கள்.

1989ல் எல்லை தாண்டி, தீவிரவாதியாக பயிற்சி எடுக்க அப்சல் சென்ற பொழுது அவருக்கு 20 வயது. மிகுந்த குழப்பத்துடன், எந்த பயிற்சியும் எடுத்துக் கொள்ளாமல் அவர் திரும்பி விட்டார். துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு, தில்லி பல்கலையில் மாணவராக இணைந்தார். எந்த தீவிரவாத பயிற்சியையும் மேற்கொள்ளாது இவர் 1993ல் எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார். தர்க்கமற்ற இந்த தருணம் தான் கொடுங்கனவுகள் துவங்கிய கணம். அவரது சரணடைதல் பெரும் குற்றமாக கருதப்பட்டு அவரது வாழ்வு நரகமாக மாறியது. அப்சலின் கதையிலிருந்து காஷ்மீர் இளைஞர்கள் ஒரு வேலை இப்படியொரு பாடம் கற்றுக் கொண்டால் அவர்களை நாம் குறைகூற இயலாது. ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது முட்டாள்தனமானது மட்டும் அல்ல அது தன்னிலை மறந்து செய்யும் காரியம் - அப்படி சரணடைந்தால் இந்திய அரசாங்கத்தின் எண்ணற்ற கொடுமைகளுக்கு நாம் ஆளாக நேரிடும்.

முகமத் அப்சலின் கதை காஷ்மீர் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. ஏனென்றால் இது அவர்களின் கதையும் கூட. அவருக்கு நடந்துள்ளது, பிறருக்கும் நடக்கலாம். ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அது நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே வித்தியாசம் அவர்களது கதைகள் கூட்டு விசாரன மையங்கள், ராணுவ முகாம்கள், காவல் நிலையங்களால் ஆன அழுக்கடைந்த பெருங்கிண்ணங்களில் நிகழ்ந்துள்ளது. அவர்கள் அங்கே எரிக்கப்பட்டு, மின்சாரம் பாய்ச்சப்பட்டு, உதைக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, கொன்று அந்த சடலங்களை லாரிகளின் பின்புறங்களிலிருந்து வழிப்போக்கர்கள் கண்ணில்படும் படியாக வீசியெறிகிறார்கள். ஆனால் அப்சலின் கதை மத்திய காலத்து வரலாற்று நாடகத்தின் பகுதி போல் தேசிய மேடையில் அரங்கேற்றப்படுகிறது. பட்டப் பகலில், நேர்மையான வழக்கு என்கிற சட்ட அனுமதியுடன், வெத்து சலுகைகள் அனுபவிக்கும் சுதந்திரமான ஊடகங்கள் என எல்லாம் சேர்ந்து ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறதன் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள்.

ஒருவேலை அப்சல் தூக்கிலிடப்பட்டால், உண்மையான கேள்விக்கான விடை கிடைக்காமல் போகலாம் : இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தது யார்? அது லக்சர்-ஏ-தொய்பா வா? ஐய்ஷ்-ஏ-முகமத்? இந்த தேசத்தில் நாம் வாழ்கிறோம், நேசிக்கிறோம், வெறுக்கிறோம் அவரவருக்கான அழகான, மறை புதிரான, கூர்மையான வழிகளில். ஆனால் இந்த தேசத்தின் ஏதோ ஒரு உள்ளத்தின் அடி ஆழத்தில் அந்த உண்மை பொதிந்து கிடக்கிறது?

ஒரு வேளை பாராளுமன்ற தாக்குதல் நடந்தது குறித்து, பாராளுமன்ற விசாரனை நடக்கலாம். அப்படி விசாரனை நடக்கும் பட்சத்தில், சோபோரில் வசிக்கும் அப்சலின் குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் இந்த புதுமை கதையின் எளிதாக தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இலக்குகள். உண்மையை அறிந்து கொள்ளாமல் அப்சலை தூக்கிலிடுவது மிகத் தவறானதாகிவிடும். அது எளிதில் மறக்கப் படாது. மன்னிக்கப் படாது. அது நடக்கக் கூடாது.

எப்படியிருந்தாலும் 10% வளர்ச்சி விகிதம் இருக்கிறது.
தமிழில் : அ.முத்துக்கிருஷ்ணன்
Pin It