ரோமிலா தாப்பர், இர்பான் ஹபீப் உள்ளிட்ட 61 வரலாற்று அறிஞர்கள் அறிக்கை

அண்மையில் அயோத்தியா சிக்கல் தொடர்பாக வெளியாகியுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து, சஃப்தர் ஆஸ்மி அறக்கட்டளை சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றுப் பேராசிரியர்களும், சமூக அறிஞர்களும் அந்த அறிக்கையில் கையயாப்பமிட்டுள்ளனர். ரோமிலா தாப்பர், கே.என்.பணிக்கர், இர்பான் ஹபீப், கே.எம்.ஸ்ரீமாலி, பிரபாத் பட்நாயக் உள்ளிட்ட 61 பேர் கையயாப்பமிட்டுள்ள அவ்வறிக்கையின் முக்கியமான பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:

“வரலாற்றுப் போக்கில், சமயச் சார்பின்மை குறித்த விழுமியங்கள் கையாளப் பட்டிருப்பதால், 2010 செப்டம்பர் 30 அன்று, ராமஜென்மபூமி - பாபர் மசூதிச் சிக்கல் தொடர்பான, அலகாபாத் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு, மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லாவற்றைக்காட்டிலும் முதன்மையாக, இந்துக் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்னும் பார்வை, இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் அகழ்வாய்வுகள் வெளிப் படுத்தியுள்ள உண்மைகளுக்கு மாறாகவும், அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளா ததாகவும் உள்ளது. அகழாய்வில் பரவலாகக் கிடைத்துள்ள விலங்குகளின் எலும்புகளும், இஸ்லாமியர்களுக்குத் தொடர்பான ‘சுர்க்கி’ மற்றும் எலுமிச்சை, சிமெண்ட் கலவையும், அங்கு (மசூதிக்கு அடியில்) இந்துக் கோயில் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பை முற்றாக மறுக்கின்றன.

நம்பிக்கையின் அடிப்படையில் பழங்கால நிகழ்வுகளை (இராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தை) ஏற்றுத் தீர்ப்பு அளித்திருப்பது தவறு என்பதோடு மட்டுமின்றி, இதுபோன்ற ஒப்புதல்கள், இனிமேல் சொத்துப் பிரச்சினைகளுக்கும் பொருத்தி விவாதிக்கப்படும் என்பது மிகுந்த கவலை தருவதாக உள்ளது. வன்முறைக்கும், ஆள் பலத்திற்கும் சட்ட ஒப்புதல் வழங்கியுள்ளமை கடும் மறுப்புக்கு உரிய தீர்ப்பின் ஒரு பகுதியாகும். மாபெரும் வியப்பிற்கு உரியதாக, 1992 இல் மசூதி இடிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வது போல, மசூதியில் இடிக்கப்பட்ட முக்கியமான பகுதிகளை, அவ்விடத்தில் கோயில் கட்டவேண்டும் என்று உரத்துக் கூச்சலிட்டவர்களுக்கே மாற்றிக் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய காரணங்களால், வெளிவந்துள்ள தீர்ப்பை, நம் நாட்டின் மதச்சார்பின்மைக் கட்டிடத்தின் மீதும், நீதித்துறையின் பெருமையின் மீதும் விழுந்துள்ள மற்றுமொரு பலத்த அடியாகவே பார்க்க முடிகிறது.

அடுத்ததாக, இவ்வழக்கில் என்னவெல்லாம் நேர்ந்தாலும், கெட்ட வாய்ப்பாக, நாடு இழந்தனவற்றை இனிச் சரி செய்ய முடியாது”.

தமிழில்: இனியன்

Pin It