உலகமே தனது சுண்டுவிரல் அசைவில்தான் இயங்குவதாக மமதையில் இருந்தார் ஓர் ராஜா. திசை எட்டும் படை நடத்தி காணும் இடம் எல்லாம் கண்ணீரும், செந்நீரும், இரத்தமும், நெருப்புமாக ஆக்கினார். சாக குரல்கள் அவருக்கு ஆசிர்வாதமாகத் தோன்றின. என்னுடன் நிற்காத அனைவரும் எதிரிகளே என்று முழங்கினார்; முரசு கொட்டினார்.
தங்கள் நாட்டைத் தவிர உலகில் எங்குமே சனநாயகமே இல்லை என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கை. அங்குள்ள மாளிகை ஒன்றை சிலர் தீயிட்டது அதற்கு பலம் சேர்த்தது. அவருக்கு பின்னால் முழு உலகமே நிற்பதுபோல தோன்றியது.
காட்சி மாறியது. உலகம் முழுவதும் சுடுகாட்டு அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான், ஈராக் என அவரது பயணம் தொடர்ந்தது. ஈராக் அவருக்கு ஒரு புதைகுழி என்று அதிபர் சொன்னதை இவர் புரிந்து கொள்ளவில்லை. மாளிகையை எரிக்க மண்ணெண்ணெய் வழங்கியதாக குற்றச்சாட்டு வேறு.
ஆனால், அங்கே மண் மட்டும் தான் இருந்தது. எது எப்படிப் போனால் என்ன? உலகத்துக்கே ராசாவைப் பார்த்து யாராவது குரைக்க முடியுமா?, மன்னரின் அரண்மனையில் மரண ஓலையானது தண்டனை என்ற பெயரில் பாக்தாத்தில் படிக்கப்பட்டது.
உலகம் உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக அறியத் தொடங்கியது. ஈராக் இந்த ராசாவுக்க ஒரு புதைகுழியாக மாறத் தொடங்கியது. இப்போது புரிந்திருக்குமே ராஜா யாரென்று.
அமெரிக்க மக்கள் பிரதிநிதித்துவ சபை, மேல் சபை என இரண்டுக்கும் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் புஷ்ஷின் குடியரசுக் கட்சி படுதோல்வியடைய, எதிர்க்கட்சியான சனநாயக கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டது.
அமெரிக்க மக்கள் தான் விலையுயர்ந்த ஆடை அணிந்திருப்பதாக உளறித் திரிந்த அம்மணமாய்த் திரிந்த தேசத்து மக்களைப் போல இல்லாமல் ஏ ராசாவே! நீ அம்மணமாக நிற்கிறாய் என்று உரத்த குரலில் கூறி, புஷ்ஷின் முகத்தில் சாணியடித்திருக்கின்றனர் அமெரிக்க மக்கள்.
பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்டு போல சில பலியாடுகளை தயார் செய்து, காணிக்கை செலுத்திவிட்டு தான் தப்பித்து விடலாம் என அவர் மனப்பால் குடிப்பது நடக்காது போகட்டும்.
அமெரிக்க மக்கள் தமது நாடு, குடிமக்களின் அரசே - குடியரசே என்று தெரிவித்த அமெரிக்க குடியரசின் மக்களே உலகை அச்சுறுத்தி வரும் ஏகாதிபத்திய பிசாசின் பிடியிலிருந்து உங்கள் நாடு விடுதலை அடையட்டும்.
வாழ்த்துக்கள்!