இஸ்லாமிய எதிர்ப்பு மதவெறியை ஒரு யாக குண்டம் போல பல நூறாண்டுகளாக பார்ப்பன சங்கிக் கும்பலும், அதன் சூத்திர அடிவருடிகளும் வளர்த்து வருகின்றார்கள். அவர்களுக்கு தொடர்ச்சியாக அந்த குண்டம் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் வெளிச்சத்தில் அரசியல், பொருளாதார ஆதாயங்களை அறுவடை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அதற்காக அந்த யாக குண்டத்தில் அவர்கள் மனித உயிர்களை துள்ளத் துடிக்க இட்டு கொளுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். ஒரு காலத்தில் குதிரைகளையும், மாடுகளையும் இட்டு எரித்தவர்கள் இப்போது முஸ்லிம்களின் உயிர்களை மட்டுமல்லாமல், பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிக்கும் சூத்திர மற்றும் தலித் மக்களின் உயிர்களையும் சேர்த்தே எரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒரு நள்ளிரவில் இந்தியாவை இருண்ட காலத்திற்குள் தள்ள பாபர் மசூதிக்குள் ராமர் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்த சங்கிகள், தற்போது ஞானவாபி மசூதியில் விஸ்வேஷ்வரரின் கோவிலைக் கண்டுபிடித்து மனித வேட்டையாடலுக்கான அடுத்த அத்தியாயத்தை துவங்கி வைக்க கடப்பாரையோடு காத்திருக்கின்றார்கள்.gyanvapi mosqueஅவர்கள் நினைத்தால் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மனித வடிவில் வாழும் சாத்தான்கள் என்றும், அப்படி வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் சொல்லி, சட்டப்படியே இனப்படுகொலை செய்ய நீதிமன்றத்தில் இருந்து அனுமதி வாங்க முடியும்!. ஒவ்வொரு பள்ளிவாசாலின், தேவாலயத்தின் அடியில் இருந்தும் லிங்கத்தையும் சூலாயதத்தையும் எடுக்க முடியும்.

வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ.), அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாக அறிக்கை தாக்கல் செய்து இருக்கின்றார்கள்.

இந்திய தொல்லியல் துறை என்பது மண்ணை அகழாய்வு செய்து உண்மைகளைக் கண்டுபிடிக்கும் இடத்தில் இருந்து மசூதிகளுக்கு அடியில் லிங்கத்தையும் சூலாயிதத்தையும் வைக்கும் கிரிமினல் துறையாக மோடி ஆட்சியில் மாற்றப்பட்டிருக்கின்றது. புட்டபர்தி சாய்பாபா வாயில் இருந்து கூட லிங்கம் வராமல் போகலாம். ஆனால் இந்திய தொல்லியல் துறையினர் வாயில் இருந்து லிங்கம் மட்டுமல்ல ஒரு பழங்கால இந்து கோயிலையே எடுக்க முடியும்.

இந்திய தொல்லியல் துறை இந்த அதிபயங்கரமான ஆய்வை ஏறக்குறைய 4 மாதத்தில் முடித்து தனது பார்ப்பன விசுவாசத்தைக் காட்டி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய நான்கு மாத கால ஆய்வில், அறிவியல் ஆய்வு, கட்டடக்கலை எச்சங்கள், கலைப்பொருட்கள், கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தற்போதுள்ள மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு இந்து கோவில் ஒன்று இருந்ததாக முடிவு செய்திருக்கின்றது.

குறிப்பாக முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் (1676-77) ஆட்சியின்போது மசூதி கட்டப்பட்டது என்று எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மசூதியைக் கட்டினால் மசூதியைக் கட்டினான் என்றுதானே எழுதி வைப்பார்கள் என்று நீங்கள் அறிவாகக் கேட்கலாம். ஆனால் சங்கிகளின் மொழியில் மசூதியைக் கட்டினான் என்றால் அதற்கு முன்பு அங்கு இந்து கோயில் இருந்தது, அதை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டினான் என்று பொருள்.

மேலும் அந்த அறிக்கையில் இந்துக் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப் பெற்றதாக உறுதியாக சொல்வதற்கான ஆதாரமாக குறிப்பிடும் சுவர்களில் அலங்கரிக்கப்பட்ட வார்ப்புகள், பெரிய அலங்கரிக்கப்பட்ட நுழைவுவாயில், முன் உருவம் கொண்ட சிறிய நுழைவுவாயில், பறவைகள் மற்றும் விலங்குகளின் செதுக்கல்கள், உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரம் போன்றவை ஒரு பைத்தியக்காரனின் உளறல்களாகவே தெரிகின்றது.

தெற்காசியாவின் மிகப் பழமையான மசூதியான கொடுங்கலூரில் உள்ள சேரமான் ஜும்ஆ மசூதியில் தொங்கும் எண்ணெய் விளக்குகள் இருக்கின்றன. அந்த மசூதி 1,000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகின்றது. அனைத்து மதத்தினரும் விளக்கிற்கு எண்ணெயை பிரசாதமாகக் கொண்டு வருகிறார்கள்.

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் அடிக்கல்லை நாட்ட முஸ்லீம் சூஃபி துறவியான மியான் ஹஸ்ரத் மிர் என்பவருக்கு சீக்கிய குரு அர்ஜன் தேவ் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

நிலைமை இப்படி இருக்க இஸ்லாமிய கட்டிடக்கலை பற்றிய எந்தவித அறிவும் இல்லாத இந்து வெறியில் மனம் பேதலித்துப் போன சங்கிகள் திட்டமிட்டே ஒரு போலியான ஆய்வை செய்துவிட்டு இப்படி அயோக்கியத்தனமான அறிக்கையை கொடுத்திருக்கின்றார்கள்.

உண்மையில் பல முகலாய மன்னர்கள் பல இந்து கோவில்களுக்கு மானியம் வழங்கியுள்ளார்கள். குறிப்பாக ஔரங்கசீப் அவர்களே இந்து கோவில்களுக்கு மானியங்கள் மற்றும் பரிசுகளை வழங்கியுள்ளார். உதாரணமாக, ஔரங்கசீப் தனது ஒன்பதாம் ஆண்டு ஆட்சியில், அஸ்ஸாமின் குவஹாத்தியில் உள்ள உமானந்தா கோயிலுக்கு நிலம் வழங்கினார்.

1691 ஆம் ஆண்டில், பாலாஜி கோயிலை ஆதரிப்பதற்காக சித்ரகூடைச் சேர்ந்த மஹந்த் பாலக் தாஸ் நிர்வானிக்கு எட்டு கிராமங்களையும், கணிசமான அளவு வரியில்லா நிலத்தையும் வழங்கினார்.

1698 ஆம் ஆண்டில், மத்திய இந்தியாவில் கிழக்கு கந்தேஷில் ரங் பட் என்ற பார்ப்பனருக்கு வாடகையில்லா நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

ஆனால் சங்கிகளின் வரலாற்றில் இவை எல்லாம் ஒரு போதும் கணக்கில் வராதவை.

யோகி பேசியதாக தி டெலிகிராஃப் பத்திரிகை 2019 பிப்ரவரி 15 இல் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது.

“ஒரு மசூதிக்குள் கவுரி, கணேஷ் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது உலகத்தில் வேறு எங்காவது நடக்குமா? ஓர் இந்து ஒவ்வொரு முறை காசி விஸ்வநாத் கோவிலுக்குள் நுழையும் போதும், அங்கிருக்கும் ஞான வாபி மசூதி நம்மை குத்திப் பேசுகிறது. வாய்ப்பு கிடைத்தால் நாட்டிலுள்ள அனைத்து மசூதிகளிலும் கவுரி, கணேஷ், நந்தி சிலைகளை நிறுவுவோம்".

யோகியின் இந்தப் பேச்சுக்கும் இந்திய தொல்லியல் துறை அறிக்கைக்கும் சம்மந்தம் இல்லை என்று இப்போதும் நீங்கள் நினைக்கின்றீர்களா?

இந்த ஆய்வு 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். இந்த சட்டம் எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதை தடை செய்கிறது. மேலும் எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை, நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்தவாறே பராமரிக்க வேண்டும் என்கிறது.

ஆனால் சட்டத்தை எப்போது சங்கிகள் மதித்து இருக்கின்றார்கள்?. ஏற்கெனவே பாபர் மசூதியை இந்த சட்டத்தை மீறித்தான் தகர்த்து எறிந்தார்கள்.

கடந்த 2022-ம் ஆண்டு பாஜக எம்பி கிருஷ்ணபால் யாதவ், 1991-ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவைக் கொண்டு வந்துபோது "இந்த சட்டம் கடந்த கால ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான இந்துக்களின் குரலை நசுக்குகிறது" என்று கூறினார்.

அதே போல கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே சங்கிகளின் அடாவடித்தனத்தை ஏற்று வழக்கம் போல முஸ்லிம் தரப்பின் மனுவை நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அடிப்படையில் இந்து தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்ய முடியாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஞானவாபி மசூதி, கோவிலின் மீது கட்டப்பட்டது என்றும், அதைப் புதுப்பிப்பதற்கும், கோவிலைக் கட்டுவதற்கும், வழிபடுவதற்கும் இந்துக்களுக்கு உரிமை வழங்குவதாகக் கூறுவதை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தடை செய்யவில்லை என வழக்கு விசாரணையின்போது அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியது.

பிரச்சினை ஞானவாபி மசூதியோடு முடியவில்லை. உ.பி.யின் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியையும் இடிக்க வேண்டும் என சங்கிக் கும்பல் நீண்ட நாட்களாக திட்டமிட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த மசூதியும் இதற்கு முன் அங்கிருந்த பழமையான கோவிலை இடித்துவிட்டு ஒளரங்கசீப், 17ம் நூற்றாண்டில் கட்டினார் என்று மதவெறி பரப்புரையை சங்கிகள் செய்து வருகின்றார்கள்.

வட இந்தியா முழுவதும் சங்கிகள் ஒரு வெறித்தனத்தை தூண்டி விட்டிருக்கின்றார்கள். அது மசூதிகளை எல்லாம் இடித்துவிட்டு கோவில் கட்டவேண்டும் என்ற வெறி.

இதைத் தடுக்க வேண்டிய இந்தியா நீதிமன்றங்களோ மதத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தும் மதவெறியர்கள் கோவில் கட்டிக் கொள்வதற்கு  உதவிக் கொண்டு இருக்கின்றன.

முகலாயர்களால் இந்துக் கோவில்களுக்கு அளிக்கப்பட்ட நில மானியத்தை மீண்டும் திரும்பத் தரக் கோரி முஸ்லிம்கள் வழக்கு தொடுத்தால் அதை இந்திய நீதி மன்றங்கள் ஏற்றுக் கொள்ளுமா?

ஞானவாபி மசூதி பற்றிய இந்திய தொல்லியல் துறையின் அறிக்கை நிச்சயம் வரும் பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பிஜேபி ஆடும் பாசிச மதவெறி ஆட்டம் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவின் மக்கள் தொகையில் 14.5 சதவிகிதம் அதாவது சுமார் 20 கோடி முஸ்லிம்களை இந்துக்களுக்கு எதிராக நிறுத்தி தேர்தலில் வெற்றி பெற பிஜேபி முயற்சிக்கின்றது.

அனைத்து அரசு அமைப்புகளையும் காவி கரையான் அரித்து தின்று கொண்டிருக்கும் காலத்தில் நீதி பற்றிய எதிர்ப்பார்ப்பு என்பது கானல் நீராக மறைந்து நெஞ்சம் கனக்கின்றது.

- செ.கார்கி