அண்மைக் காலமாக தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிப் பேசுவோரும் எழுதுவோரும் ஒரு கருத்தை வலியுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதுதான் மிக விரைவில் பழம்பெரும் மொழிகள் பல அழியவிருக்கின்றன. அம்மொழிகளில் தமிழும் ஒன்று என்று யுனெஸ்கோ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதாகும்.
இவ்வாறு எழுதுவோரும் பேசுவோரும் அரைகுறையாகப் புரிந்து கொண்டதன் விளைவே அது. யுனெஸ்கோவின் ஆய்வில் தமிழுக்குப் பாதிப்பு எதிர்காலத்தில் உண்டு என்ற எச்சரிக்கை தொனி உண்டெனினும் அழிந்தே தீரும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்தச் செய்தியும் யுனெஸ்கோ கூரியர் திங்களிதழிலேதான் முதலில் வெளிவந்தது. இக்கருத்து வெளிப்பட நானும் ஒரு மறைமுகக் காரணமாவேன் என்பது பலருக்கும் தெரியாத தகவலாகும்.
1999 ஆம் ஆண்டு இறுதியில் யுனெஸ்கோ பாரீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற யுனெஸ்கோ கூரியர் திங்களிதழின் 30 மொழி ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் யுனெஸ்கோ கூரியர் தமிழ் இதழின் பதிப்பாசிரியர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன். அது வழக்கமான ஆலோசனைக் கூட்டம் தான். அடுத்த ஈராண்டுகட்கு என்னென்ன வடிவங்களைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய ஆலோசனைக் கூட்டம்.
பலகாலமாக என்னுள் கனன்று கொண்டிருந்த ஒரு விசயத்துக்கு விடிவு காணும் வகையில் சில கருத்துக்களை சக ஆசிரியர்களின் ஆலோசனைக்காக வெளிப்படுத்தினேன். அது இது தான்.
காலனி ஆதிக்க நாடுகளிலிருந்து ஏகாதிபத்திய நாடுகள் வெளியேறிய போது தங்கள் ஆட்சி அதிகாரங்களைத் திரும்ப எடுத்துச் சென்றார்களே தவிர, தங்கள் ஆதிக்க மொழியை காலனி நாடுகளில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள். இதனால், காலனி நாடுகள் அந்நிய ஆட்சி அதிகாரத்திலிருந்து விடுதலை பெற்ற போதிலும் காலனியாதிக்க நாட்டின் மொழி ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறா நிலையே தொடர்கிறது.
இதனால் அம்மண்ணுக்கே சொந்தமான மொழி, கலை, இலக்கிய, பண்பாடுகள் தங்கள் தனித்துவத்தை மீண்டும் நிலை நிறுத்த இயலா நிலையே எங்கும் நிலவுகிறது.
எனவே, தொடரும் அந்நிய மொழி ஆதிக்கத்தின் சாதக பாதக நிலைமைகளை உலகளாவிய அளவில் ஆராய்ந்து யுனெஸ்கோ கூரியர் திங்களிதழின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என ஆலோசனை வடிவில் வேண்டுகோள் விடுத்தேன்.
அவ்வாலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முப்பது உலக மொழி ஆசிரியர்களில் பணி ஓய்வு ஆசிரியர் என்பதால் என் கருத்தைப் பலரும், ஏற்றுக் கொண்டதால் அது தொடர்பான பாராட்டத்தக்க ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட சிறப்பிதழாக அடுத்த ஆறு மாதங்களில் வெளியிட முடிவு செய்தோம்.
இதற்காக உலகெங்குமுள்ள யுனெஸ்கோ மொழியியல் வல்லுநர்கள் இப்பொருள் குறித்து உலகளாவிய முறையில் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு மொழிகள் பிணக்கமா, இணக்கமா? என்ற தலைப்பில் தனிச் சிறப்பிதழை 2000 ஆம் ஆண்டு ஜுனில் வெளியிட்டனர். அதில் வெளிப்படுத்தப்பட்ட ஆய்வுச் செய்தியே கட்டுரை தொடக்கத்தில் உள்ளே தமிழ் அழிவைப் பற்றிய செய்தி.
உலகில் சுமார் 6,000 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றுள் சுமார் 3,000 மொழிகட்கு மட்டுமே எழுத்துரு இலக்கிய, இலக்கணங்கள் உள்ளவை. மற்றவை வெறும் பேச்சு வழக்கு மொழிகளாகவே உள்ளன. இவற்றுள் மூன்று விழுக்காட்டு மொழிகள் மட்டுமே ஐரோப்பாவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆறாயிரம் மொழிகளில் பாதிக்கு மேற்பட்டவை ஆகிய - பசிபிக் மண்டலத்தில் பேசப்படுகின்றன.
அறிவியல் வளர்ச்சிக்கு, குறிப்பாக கணினி போன்ற சாதனங்களுக்கு ஈடு கொடுக்கும் மொழிகள் மட்டுமே நீண்ட வாழ்வைப் பெற முடியும். கணினிக்குள் புக முடியாத மொழிகளின் வாழ்வுக்கு உத்திரவாதமில்லை.
இவ்வகையில் இன்னும் நூறாண்டுகளுக்குள் உலக மொழிகளில் 95% மொழிகள் மாண்டுவிடும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தற்போதைய கணக்குப் படி ஆண்டுக்குப் பத்து மொழிகள் மாள்கின்றன.
இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, செய்தித் தொடர்புத் தேவைகளை நிறைவு செய்ய, கணினிப் பயன்பாட்டுக்கேற்றதாக அமைய ஒரு மொழியால் இயலவில்லையெனில் அது மறைவைத் தழுவுவதிலிருந்து தப்புவது கடினம். அத்தகைய மொழிகளின் பட்டியலில் இறுதியாக இடம் பெறுவது தமிழாகும். காலப்போக்கில் கணினி போன்ற அறிவியல் சாதனங்களுக்கேற்ற மொழியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டால் அவை இப்பட்டியலிலிருந்து விடுபடுவது எளிது. இப்பட்டியலும் கூட ஒரு அனுமானமே தவிர, ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உண்மை அன்று.
சரி கணினி போன்ற செய்தித் தொடர்புச் சாதனங்களின் பயன்பாட்டைப் பொறுத்தவரை தமிழின் நிலைதான் என்ன?
இத்தகையதொரு இக்கட்டான நிலை விரைவுபெற்று வரும் அறிவியல் வளர்ச்சியின் விளைவாகத் தமிழுக்கு ஏற்படலாம் என அரை நூற்றாண்டுக்கு முன்பே அனுமானித்தவன் நான். அவ்வுணர்வின் முதிர்வால் விளைந்ததே அறிவியல் கலைச் சொல்லாக்க முயற்சி, அதன் விளைவு இன்று தமிழ் ஓர் ஆற்றல்மிகு அறிவியல் மொழி என்பதை வெறும் சொல்லால் இல்லாமல் எட்டு கலைச் சொல் பேரகராதிகளின் மூலம் என்னால் செயல் வடிவில் நிரூபிக்க முடிந்திருக்கிறது. அது மட்டுமா? கணினி வாயிலாக இணையம் தோற்றம் பெற்று பயன்பாட்டுக்கு வந்தபோது தமிழ் இணையம், சிங்கப்பூர் வாழ் தமிழர் திரு. கோவிந்தசாமி அவர்களால், உடனடியாக உருவாக்கி இணைக்கப்பட்டது. கணினி இணையத்தில் இடம் பெற்ற இரண்டாவது ஆசிய மொழி தமிழ் என்பது வரலாற்றுப் பதிவாகும். இன்று உலகளாவிய முறையில் மிக அதிக இணைய தளங்களைப் பெற்றுள்ள உலக மொழிகளில் தமிழும் ஒன்று. இதற்குக் காரணம் உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழர்களாவர்.
ஆகவே, காலத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஈடுகொடுக்கவியலா நிலையில் தமிழ் அழியலாம் என்ற அனுமானம் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட தற்போதைய தமிழக அரசு தமிழை அறிவியல் தமிழாகக் கட்டுக் கோப்புடன் வளர்த்தெடுக்க, அரசுத் துறையாக அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பையே தமிழ் வளர்ச்சித் துறையின் அங்கமாக உருவாக்கியுள்ளது. மைய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவித்துள்ளதன் விளைவாக மனிதவள மேம்பாட்டுத்துறை தமிழ் வளர்ச்சிக்கான மேம்பாட்டு வாரியம் ஒன்றை உருவாக்கி தமிழ் வளர்ச்சியில், குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
எத்தகு ஆற்றல்மிகு மொழியாக இருந்தாலும் அது பாடமொழியாக இல்லையென்றால் அதன் வளர்ச்சி குன்றி, அம்மொழி இறப்பைத் தழுவுவதைத் தடுக்கவியலாது என்பதை உணர்ந்து தெளிந்த தமிழக முதல்வர் அவர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழ்ப் பாடம் கட்டாயம் எனச் சட்டமியற்றியுள்ளார். இத்தகைய செயல்பாடுகளெல்லாம் தமிழை என்றென்றுமாக வாழவைக்கும் உயிர்ப்பு சக்திகளாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.