சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி அருகில் சட்டவிரோதமாக சிலர் பிள்ளையார் கோவில் வைப்பதற்கான ஏற்பாடாக மண் திட்டு ஒன்றை ஏற்படுத்தி, அதில் பிள்ளையார் புகைப்படம் ஒன்றை வைத்தனர்.
 
இங்கு பிள்ளையார் கோவில் அமைத்தால் போக்குவரத்துக்கும், பள்ளிக்கும் மிகப் பெரிய இடையூறாக இருக்கும் என்பதால் உடனடியாக நமது பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அன்பு, கிருஷ்ணன், சங்கர், குமார், ராசேந்திரன் மற்றும் நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் மணிகண்டன், அருண் ஆகியோர் நங்கவள்ளி காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட உதவி ஆட்சியர், தமிழக முதல்வர், வட்டாட்சியர் என அனைவருக்கும் புகார் மனுவை அனுப்பினர்.
 
நமது தோழர்கள் பிள்ளையார் கோவில் அமைப்பதற்கு எதிராக களமிறங்கியதை அடுத்து, பிள்ளையாரின் சீடர்கள், தோழர் கிருஷ்ணனின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று மிரட்டல் விடுத்தனர். எந்த மிரட்டலுக்கும் அடி பணியாத தோழர்கள், பிள்ளையார் கோவிலுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 
கழகத் தோழர்களின் எதிர்நடவடிக்கையால் பிள்ளையார் கோவில் கட்ட முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்துக் கொண்ட அந்த கும்பல், கோவையிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை வரவழைத்து, நேருக்கு நேர் மோதி ‘கோவில் கட்டியே தீருவோம்!’ என்று வாய் சவடாலை அவ்வப்போது விட்டுக் கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு நேரத்தில் திடீரென்று பிள்ளையார்சிலையை மண் திட்டில் வைத்தனர். உடனடியாக கழகத் தோழர்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு இதை தெரி வித்தனர். அரசு அதிகாரிகளும் உடனடியாக அன்றே பிள்ளையார் கோவிலை இடித்து தரைமட்டமாக்கி பிள்ளையார் சிலையை அப்புறப்படுத்தினார்கள். கழகத் தோழர்களின் இந்த சட்டரீதியான முயற்சிக்கு பல்வேறு முற்போக்கு அமைப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர். இந்த பிள்ளையார் கோவில் அகற்றும் நடவடிக்கையில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த திருமாறனும் நமது கழகத் தோழர்களுடன் இணைத்து செயல் பட்டார்.
 
செய்தி : பவளத்தானூர் ஆ. மாரியப்பன்

Pin It