1984, 1992, 2002ஆம் ஆண்டு நிகழ்வுகள் சிறுபான்மை மதத்தினருக்கும் இனத்தினருக்கும் மிக வலுவாக அறிவித்த செய்தி, இந்தியாவில் ஒரே ஒரு தேசியம், இந்து தேசியம் மட்டுமே இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பதுதான். பன்முகப் பண்பாட்டுடன், அனைத்து மதத்தினரையும் அனைத்து தேசிய இன மக்களையும் சமமாகி, நீதியுடன் நடத்துகின்ற ஒரு தேசத்தையும் தேசியத்தையும் காண விரும்புகிறவர்கள் வெறுக்கின்ற செய்தியே இது.

- எஸ். வி. ராஜதுரை (இந்து, இந்தி, இந்தியா)

karuppum kaaviyum‘கருப்பும் காவியும்' என்ற நூலின் தலைப்பே நூலின் உட்பொருளை எளிதில் உணர்த்துகிறது. கருப்பிற்கும் காவிக்குமான வேறுபாட்டினைத் தெளிவுபடுத்தும் இந்நூல் இணையத்தில் தொடராக வெளிவந்தது. தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.

இந்நூல் தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியலை நுழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வரலாற்றுச் சான்றுகளோடு முன்வைக்கிறது. மண்டைக்காடு கலவரம் தொடங்கி திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசுவது வரை நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பின்னேயுள்ள நுண்ணரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்து மதத்தின் வருணாசிரம தர்மத்திற்கும், ஆரிய மேலாதிக்கத்திற்குமான சான்றுகளை டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களின் "இந்துமதத் தத்துவம்" என்னும் நூலிலிருந்தே மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது சிறப்பு. ஆண்டாண்டு காலமாக டாக்டர். இராதாகிருஷ்ணன் மீது கட்டமைக்கப்பட்டுள்ள புனித பிம்பத்தை இந்நூல் உடைத்துத் தூளாக்கியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அதுமட்டுமன்று. விவேகானந்தர் தொடங்கி காஞ்சி சங்கரன் வரை, இந்துத்துவ ஆளுமைகளாகக் கருதப்படுபவர்களைக் கொண்டே இந்து மதம் குறித்த கற்பிதங்கள் மறுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, கருப்பு நிறம் எவ்வாறு காவிக்கு மாற்றாய், சமத்துவத்துக்கு ஆதரவாய் இந்த மண்ணில் இயங்கியது என்பதைக் காட்டி இந்நூல் முடிவடைகிறது.

நூலின் பல இடங்களில் வரலாற்று நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அந்நிகழ்வுகளுக்குச் சான்றாய் அந்நாளில் வெளிவந்த நாளிதழ்கள் படங்களோடு நூலில் சேர்க்கப்பட்டிருப்பின் அது நூலை மேலும் செம்மையாக்கும். அடுத்த பதிப்பில் இன்னும் பல தகவல்களோடும், சான்றாதாரங்களோடும் நூல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் பன்மைத் தத்துவத்திற்கு ஊறு விளைவிக்கும் போக்குகள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள நிலையில், இந்து தேசியத்தின் முகத்திரையைக் கிழிக்கும் இவை போன்ற நூல்கள் வெளிவருவது காலத்தின் கட்டாயம்.

- வெற்றிச்செல்வன்

Pin It