நூல் அறிமுகம் - திராவிட இயக்கமும் கறுப்பர் இயக்கமும் (ஆய்வு நூல்)

ஆசிரியர்: முனைவர் க.பொன்முடி

1980-84 கால அளவில் முனைவர் பட்டத்திற்காக வழங்கப்பட்ட முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் ஆய்வேடு ஏறத்தாழ 15 ஆண்டுகள் கழித்து, 1998இல் ஆங்கில மொழியில் நூல் வடிவம் பெற்றுள்ளது. அதன் தமிழ் வடிவம் இன்னமும் வெளிவராத நிலையில், 2012இல் இந்நூலைப் பற்றி அறிமுகம் செய்வது என்பது 30 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வின் மீது, பல்வேறு சமூக, அரசியல், பண்பாட்டு, இயக்க வேறுபாடுகளின் கால இடைவெளியில் ஏற்பட்ட வளர்ச்சி அனுபவத்தை அளவீடாகக் கொண்டு மதிப்பிடுவதாகவே அமையும்.

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை அடியயாற்றி இந்நூலினை அறிமுகப்படுத்துவது தேவையான ஒன்றாகவும் பொருத்தமான ஒன்றாகவும் நினைக்கத் தோன்றுகிறது.

ponmudy_400இந்நூலின் ஆய்வு வரையறையாகத் திராவிட இயக்கத்திற்கு, 1916 முதல் 1949 வரையிலான காலகட்டமும், கறுப்பர் இயக்கத்திற்கு 1909 முதல் 1941 வரையிலான காலகட்டமும் குறிப்பிடப் பட்டுள்ளது. சென்னை ஐக்கிய முன்னணி (Madras United League) 1912 இல் தொடங்கிய போதே திராவிடர் இயக்கத்தின் தோற்றுவாய் தொடங்கி விட்டது என்பதையும் சுட்டியிருக்கிறார் ஆய்வாளர்.

இந்நூலின் துணைநூற்பட்டியலில் ஏறத்தாழ 120 நூல்கள் சுட்டப்பட்டுள்ளன. இவற்றுள் 10 நூல்கள் மட்டுமே திராவிட இயக்கம் தொடர் பானவை. இப்பத்தினுள் 5 நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளவை. 100க்கும் அதிகமானவை கறுப்பர் இயக்கம் தொடர் பானவை. நூற்றாண்டு விழா கொண்டாடும் இவ் வேளையில் திராவிட இயக்கம் பற்றிய நூல்கள் பல்வேறு கண்ணோட்டங்களில் வெளிவந்திருக்க வேண்டும். நம்பியாரூரன், ஈ.ச. விசுவநாதன், முரசொலிமாறன், மங்களம் முருகேசனுக்கு அடுத்து, க. பொன்முடியின் இந்நூல் ஆய்வு, வரிசை அடிப்படையில் வைத்தெண்ணத் தக்கது. ஆனால், கறுப்பர் இயக்கம் பற்றிய நூல்களோடு ஒப்பிடும்போது, 10 விழுக்காடு நூல்களே திராவிட இயக்கம் பற்றி வந்துள்ளன என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

1949இல் பேரறிஞர் அண்ணா அவர்களால் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப் பட்ட பின்பு, ஏற்பட்ட அரசியல், சமுதாய, பண்பாட்டு மாற்றங்களை உள்ளடக்கி வரலாற்ற டிப்படையில் செய்யப்பட்ட நூல்களும் அதிகம் வெளிவரவில்லை என்பது திராவிட உணர் வாளர்களின் அலட்சியப் போக்கா அல்லது திராவிட எதிர்ப்பாளர்களின் வெறுத்தொதுக்கும் போக்கா என்பதும் சிந்திக்கத் தக்கது. தந்தை பெரியாரின் முழுமையான பேச்சுகள், எழுத்துகள் அடங்கிய தொகுப்பு வே. ஆனைமுத்து அவர்களால் வெளியிடப்பட்டதைக் குறிப்பிடத்தக்க ஆக்கப்பணியாகக் கருதலாம். (1974இல் தொடங்கிய பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுப்புப் பணியினை 2009இல் அவர் முடித்துள்ளார்)

ஓர் இயக்கம் தோன்றுவதற்குரிய சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழல்கள், இயக்கம் உருப்பெறுவதற்கான உந்து சக்திகள். இயக்கத்தின் கருத்தியல் நிலை, இயக்கத்தின் அமைப்புக் கூறுகள் போன்றவற்றைச் சமூகவியலாளரின் கோட்பாடுகளைக் கொண்டு விளக்கி, திராவிட கழகத்திற்கும் கறுப்பு முஸ்லீம் இயக்கத்திற்கும் (Black Muslim) உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்வாளர் சுட்டிச் செல்கின்றார்.

அமெரிக்காவில் உள்ள கறுப்பர்கள் கிறித்துவ மடாலயங்களால் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப் பட்டார்கள். அதனாலேயே கறுப்பர்களில் பலர் இசுலாம் சமயத்தைத் தழுவினார்கள். தமிழகத்தில் வைதீக சமயத்தால் சாதி ரீதியாக ஒதுக்கப்பட்ட வர்கள் கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள் என்பது முரண் நகையாக உள்ளது. இதற்கு இணையாக அம்பேத்கரும் அவருக்குப் பின் வந்த தலித்துகளும் பெளத்த மதத்தைத் தழுவியதை இவ்விடத்தில் ஒப்பிட்டுக் காணலாம். கறுப்பர் இயக்கத்தில் இல்லாத கடவுள் மறுப்புக் கொள்கை திராவிடர் இயக்கத்தில் வெளிப்பட்டதையும் ஆய்வாளர் சுட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கட்சியினர் தொடக்கத்தில் சாதி/சமய வேறுபாடுகளைக் களைய முற்படவில்லை என்பதும் இவ்வாய்வில் நடுநிலையோடு கூறப்பட்டுள்ளது. பெரியாரின் சுயமரியாதை இயக்கமே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தீண்டாமைக்கு எதிராகப் போராடிய ஒன்றாக வெளிப்படுகின்றது.

தொடக்க கால திராவிட இயக்கச் செயற்பாடுகள் என்பது, அரசியல் ரீதியாக ஆங்கிலேயரிடமிருந்தும், சமூக ரீதியாக பிராமணர்களிடமிருந்தும், பொருளாதார ரீதியாக வட இந்திய பனியாக்களிடமிருந்தும் விடுதலை பெற வேண்டும் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

சாதிகளை ஒழிக்க வேண்டும், சாதி வேற்றுமை கூடாது என்ற கொள்கையுடைய திராவிட இயக்கம், தொடக்கத்தில் சாதியச் சங்கங்கள் மூலமாகவே சாதி வேற்றுமைகளைக் களைய முற்பட்டது என்பது வரலாற்றுண்மை. நீதிக்கட்சித் தலைவர்களும், பெரியாரும் பல்வேறு சாதிச் சங்கக் கூட்டங்களில் வருணாசிரமம் உருவாக்கிய சாதி வேற்றுமை களையும் தீண்டாமையையும் சுட்டிக் காட்டிப் பேசியமை குறிப்பிடத்தக்கது. எந்தக் கிறித்தவ மடாலயங்கள் கறுப்பர்களை அடிமைப் படுத்தியதோ அக்கிறித்துவ மடாலயங்களே பிற்காலத்தில் அவர்களின் எழுச்சிக்கும் உரிமைக்கும் உதவின.

நிறவெறி, இனவெறி போன்றவை வெள்ளை யர்களிடமிருந்து கறுப்பர்களை வேறுபடுத்தி, அடிமைப்படுத்தியது. தீண்டாமை எனும் போக்கே பிராமணர்களிடமிருந்து பிற சாதி யினரைக் குறிப்பாகத் தலித்துகளை ஒதுக்கியது. இன்றைக்குத் தீவிரமாகப் பேசப்படும் தலித்தியம் தொடர்பான சிந்தனைகளுக்குத் திராவிட இயக்கம் வித்திட்டது எனலாம். எனினும் அயோத்திதாசர் போன்றவர்கள் பிராமணர் அல்லாதார் இயக்கம் உருவாவதற்கு முன்னரே வைதீகம் தொடர்பான கருத்துகளை மறுத்து, பெளத்த மதச் சார்புகொண்டு பேசியமை மற்றும் எழுதியமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அயோத்திதாசரின் எழுத்துகள் 1990களில்தான் வெளிப்படத் தொடங்கியது. 1980களின் தொடக்கத்தில் இவ்வாய்வு மேற்கொள்ளப் பட்டதால் அயோத்திதாசரின் எழுத்துகள் ஆய்வாளரின் பார்வைக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை எனலாம்.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரே நிலப்பகுதியில் வாழ்ந்துவந்த மக்களைச் சமயத்தின் பேரால் ஒதுக்கியும் பண்பாட்டு ரீதியால் தீண்டாமைக்கு உட்படுத்தியும் உள்ள இந்தியாவின் நிலை வேறு. நானூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய நிலையில், வெள்ளையர்களால் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட கறுப்பர்களின் நிலை என்பது குறுகிய கால வரலாற்றுப் பின்னணி கொண்டதாகும். எனினும், கறுப்பர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை அவர்களின் இயக்கம் சார்பாக முன்வைக்கப்பட்டது. அவ்வாறே, தமிழகத்திலும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் திராவிடர் கழகத்தால் முன்வைக்கப் பட்டது.

‘அந்நியமாதல்’ என்கிற சமூக உளவியல் பாங்கை தன் ஆய்வில் விளக்கி, கறுப்பர்களும் திராவிடர்களும் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக எங்ஙனம் அந்நியமானார்கள் அல்லது அந்நியமாதல் மனநிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதைச் சான்றுகளுடன் விவாதித்து ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.

திராவிட இயக்கத்தில் பொதுவுடைமைச் சிந்தனை வெளிப்பட்டுள்ளதை ஆய்வாளர் சுட்டிச் சென்றுள்ளார். சிங்காரவேலர், ப. ஜீவானந்தம் போன்றோரின் தொடர்பு திராவிட இயக்கத்தைச் சமதர்ம இயக்கமாக உருமாற்றிய பின்னணிகளை ஆய்வாளர் சற்று விரிவாக விளக்கியிருக்கலாம். எதிர்கால ஆய்வுத் திட்டத்தில் இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட திராவிட இயக்க வளர்ச்சியையும் 1941க்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட கறுப்பர் இயக்கம் குறித்தும் விளக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்மாதிரியாகக் கொண்டு, கறுப்பர் இயக்கத்தையும் தலித் இயக்கத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். திராவிட இயக்கத்தின் வளர்ச்சிப்போக்காகப் பெண்ணியத்தையும் இணைத்து ஆய்வு செய்ய வேண்டியது இன்றைய திராவிட இயக்கப் பற்றாளர்களின் உடனடித் தேவையாகும்.

ஆங்கிலத்தில் செய்யப்பட்டு, நூல்வடிவமும் ஆங்கிலத்தில் வெளிவந்ததால், இந்த ஆய்வு பரந்த வாசகர் வட்டத்தைச் சென்றடையவில்லை. 1980களின் தொடக்கத்தில் க. பொன்முடி நிகழ்த்திய இவ்வாய்வு கல்வியாளர்களிடையே மட்டுமில்லாமல், சாதாரண வாசகர்கட்கும் சென்று சேரும் வண்ணம் தமிழில் வெளியிடப்பட வேண்டும்.

- முனைவர் ம.மதியழகன், புதுவைப் பல்கலைக்கழகம்

Pin It