முகவுரை

தோழர்களே! தோழர் பி. சிதம்பரம் அவர்கள் எம்.எல்.ஏ. ஸ்தானம் பெற்றதற்காக ஏற்பட்ட பாராட்டு விழவிற்குத் தலைமை வகிப்பது என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாவேயிருக்கின்றது. இதற்காகவே குற்றாலத்தி லிருந்து தேக அசௌக்கியத்தை கவனிக்காமல் வந்திருக்கின்றேன்.

தோழர் சிதம்பரம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு தூண் போன்றவர் அவரது எழுத்துக்களும், அபிப்பிராயங்களும் எனக்கு தீவிரமாய் செல்ல படிகள் போல் உதவின. நமது நாட்டில் உள்ள ஆராய்ச்சி அறிஞர் களில் தோழர் சிதம்பரம் முக்கியமான ஒருவராவர். அவர் இந்த 6, 7 வருஷ காலமாய் இயக்கத்துக்கு செய்துவந்திருக்கும் தொண்டு மிகவும் போற்றக் குரியதாகும். இயக்கத்தின் பேரால் அவர் யாதொரு பயனையும் அடைந்த தில்லை என்பதையும், இயக்கத்தால் அவருக்கு பல கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டதும் எனக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட ஒருவரை சுயமரியாதைச் சங்கம் பாராட்ட வேண்டியது கடமையாகும். ஆதலால் தான் நான் இத் தலைமைப் பதவியை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்க வந்தேன்.

ஆனால் இந்த சமயத்தில் எனது பழய நண்பர் தோழர் சிவதாணுப்பிள்ளை M.L.A அவர்கள் என்னை இத்தலைமைப் பதவிக்கு பிரரேபிக்கும் சடங்கை நடத்து கையில் சடங்குகளில் சொல்லப்படுவது போலவே என்னைப்பற்றி என்னென்னமோ புகழ்ந்து கூறினார். அவைகள் பெரிதும் எனக்கு பொருத்த மற்ற தாததால் எனக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை என்று சொல்லுவதை தோழர் சிவதாணுப்பிள்ளை அவர்கள் மன்னிப்பார்களாக. ஏதோ என் புத்திக்கு சரியென்று பட்டவகையில் நான் சிறிது தொண்டு செய்து வருகிறேன். அது எனது கடமை என்று கருதிச் செய்கிறேன். அதற்கு எவ்வளவு புகழ்ச்சி வேண்டியது அவசியமில்லை.

bharathidasan periyarஅன்று நான் கொண்ட அனேக அபிப்பிராயங்களுக்கு இன்று நான் மாறுபட்ட அபிப்பிராயமுடையவனாய் இருக்கிறேன். இனி நாளை எவ்வித அபிப்பிராயம் ஏற்படும் என்று எனக்கே தெரியாது. உலகம் மாறிக் கொண்டிருப்பது. மனிதனின் அறிவு சதா நேரமும் படிப்பிலேயே இருக்கிறது. அப் படிப்புக்குத் தக்க அபிப்பிராயங்கள் ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கும். இந்நிலையில் தோழர் சிவதாணுப் பிள்ளை அவர்களுடைய ஒரு அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டிருப்பதற்கும் அவர் மன்னிப்பாராக. அதாவது எனது தீவிரமான சில அபிப்பிராயங்கள் அபிப்பிராய பேதத்துக்கு இடமானதென்றும் அதைப் பற்றி பேச எவருக்கும் உரிமை இல்லை என்றும் சொன்னார். அதை நான் தாழ்மையுடன் பலமாய் மறுக்கிறேன்.

ஏனெனில் அது எனது கொள்கைக்கு விறோதமானதாகும். ஒருவன் எப்படிப்பட்ட மனிதனாயினும் மனிதத் தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுபவனாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதாகும் என்பதே எனதபிப்பிராயமாகும். யாருடைய அபிப்பிராயத்தையும், எந்த விதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமையுண்டு என்பதும் எனது அபிப்பிராயம். ஆதலால் எனது அபிப்பிராயங்களைப் பற்றி குறை கூறவோ, தர்க்கிக்கவோ, யாரும் தகுதி உடையவர்கள் அல்ல என்று தோழர் சிவதாணுப்பிள்ளை அவர்கள் சொன்னதை நான் ஏற்க முடியாமல் இருக்கிறது.

ஒரு விஷயத்தை வேண்டுமானால் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதாவது எந்த மனிதனுக்கும் அவனது அபிப்பிராயம் என்னும் பேரால் எதையும் சொல்ல உரிமையுண்டு. அதை தடுப்பது என்பது யோக்கியமற்ற காரியமாகும். யார் எதைச் சொன்னாலும் சொல்ல அவகாசமளித்த பிறகுதான் அதை மறுத்துப் பேச வேண்டும் என்று பேசிவிட்டு சுயமரியாதைக்காரர் சட்டசபையில் செய்யக்கூடிய வேலை என்பது பற்றி பேசியதாவது:-

சு.ம. வும் சட்டசபையும்

சுயமரியாதைக்காரர்கள் சட்ட சபைக்கு போக வேண்டுமென்பது சுயமரியாதை சமதர்மக் கட்சித் திட்டமாகும்.

சட்டசபையில் கட்சித் திட்டத்தை நிறைவேற்றி வைக்க முடியுமா? என்று சிலர் கேட்கக்கூடும். எல்லாம் செய்யாவிட்டாலும் பெரும்பான்மையான விஷயங்களை சட்டசபை மூலம் செய்விக்கலாம் என்கின்ற நம்பிக்கை உண்டு. அன்றியும் சு.ம.காரர்கள் சட்டசபையைக் கைப்பற்ற வேண்டும் என்று சு.ம. சமதர்மத் திட்டம் வகுத்திருக்கிறது. இவை யெப்படியிருந்தாலும், சு.ம. இயக்கத்தைப் பொருத்தவரையில் அதன் கொள்கைகளைப் பிரசாரம் செய்ய சட்டசபை முதலிய ஸ்தாபனங்களை உபயோகித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் சட்டசபையில் செய்ய வேண்டிய காரியம் இன்னது என்று இப்போதைய சட்டசபை மெம்பர்களுக்கே தெரியாது என்றும், ஓட்டர்களுக்கும் தெரியாதென்றும் நான் கூறுவேன். அன்றியும் அதை வெளியில் பிரசாரம் செய்யவும் கூட சில கூட்டத்தார் இடம் கொடுக்காமல் காலித்தனம் செய்து தடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட காலிக்கூட்டங்களுடன் போராடிக் கொண்டு பிரசாரம் செய்து கொண்டிருப்பதைவிட சட்டசபையில் பிரசாரம் செய்வது மிகவும் பலனளிக்கக் கூடியதாய் இருக்கும்.

சட்டசபை நடவடிக்கைகளில் ஒரு மனிதன் தனது அபிப்பிராயத்தைத் தாராளமாய் வெளியிட இடமுண்டு. பொருமையுடன் கேட்டாக வேண்டும். பத்திரிக்கைக்காரர்கள் அதை யோக்கியமான முறையில் (திரித்துக் கூறாமல்) தான் வெளியிட்டாக வேண்டும். சட்டசபை நடவடிக்கை ரிகார்டுகளில் நாணையமாய் எழுதி வைக்கப்படும். இந்த நிலையுள்ள வரையில் சட்டசபைகள், பிரசாரத்துக்கு ஏற்ற இடமாகும். ஆதலால் அவைகளில் சு.ம.காரர் அமர வேண்டியது அவசியமான காரியம் என்று நான் கருதுகிறேன்.

தவிர சட்டசபையில் பேசவேண்டிய அநேக விஷயங்கள் சு.ம கொள்கைகாரர்களுக்குத் தான் தெரியும். அவர்கள் தான் தைரியமாய்ச் சொல்ல முடியும் என்று முன் சொன்னேன். உதாரணமாக இன்றைய வியாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வியாபாரம் என்றால் ஒருவகை திருட்டு என்றும் பலர் செல்வத்தையும், உழைப்பையும் சிலர் அனுபவிப்பது என்பது தான் சு-ம.காரருடைய அருத்தமாகும்.

விவசாயிகளுக்கும், பொது ஜனங்களுக்கும் இடையில் ஒரு தரகர் இருக்கக் கூடாது. அதுபோலவே தொழிலாளிகளுக்கும், பொதுஜனங்களுக் கும் இடையில் தரகர் இருக்கக் கூடாது என்பது சு.ம. காரர்களின் வியாபார சம்மந்தமான கொள்கையாகும். இதைவேறு எந்த மெம்பராவது தைரியமாய் சொல்ல முடியுமா? சு.ம. மெம்பர்கள் தான் சொல்லுவார்கள்.

அதுபோலவே வரி விஷயங்களில் செல்வவான்களை விட்டு விட்டு இப்போது ஏழை மக்களையே துன்புறுத்துகிறோம்.

உதாரணமாக விவசாயத் துறையில் இன்று உள்ள வரித்திட்டமானது அக்கிரமான முறையில் போடப்பட்டு வருகிறது. அதாவது ஒரு ஏக்ரா காரனுக்கு என்ன விகிதம் வரிபோடுகின்றோமோ அதே திட்டம் தான் 1000 ஏக்கர்காரனுக்கும் வரிபோடப்படுகின்றது. இதை மாற்றியாக வேண்டும். இன்கம்டாக்ஸ் (வருமான வரியைபோல்) இவ்வளவு ஏக்கர் பூமிக்கு மேல் பட்டவர்களுக்குத் தான் வரி என்றும், அதுவும் இத்தனை இத்தனை ஏக்கர் பூமிக்கு மேல் உள்ளவனுக்கு இன்ன இன்ன வீதம் வரி என்றும் திட்டம் செய்யவேண்டும். அப்படிக்கில்லாததால்தான் சிறு விவசாயக்காரர்கள் நாளுக்கு நாள் நசிந்து பெரும் பெரும் நிலச்சுவான்தாரர்கள், ஜமீன்தாரர்கள் பெருகி வருகிறார்கள். இந்த ஞானம் மற்ற மெம்பர்களிடம் இல்லை, இருந் தாலும் எடுத்துச் சொல்ல தைரியம் இல்லை.

அதுபோலவே கல்வி விஷயத்திலும் பள்ளிக்கூடம் அதிகம் வைக்க வேண்டும் என்பது தான் மற்ற மெம்பர்களுடைய கருத்தேயொழிய எப்படிப் பட்ட படிப்பு யாரைக் கொண்டு படிப்பிப்பது என்பது பற்றிய ஞானமும் மற்ற மெம்பர்களுக்குப் போதாது. முதலாளித் தன்மை ஒழியும் படியான மார்க்கப் படிப்பும், மூடநம்பிக்கை ஒழியும் படியான படிப்பும் படிப்பிக்கச் செய்யப் படும் என்கின்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவே தெரியாது. இவை சு.ம. மெம்பர்களால் தான் முடியும். அவர்களுக்குத்தான் தெரியும். ஆகையால் இதுபோன்ற அனேக விஷயங்களை உத்தேசித்தே சு.ம. காரர்கள் சட்ட சபைக்குப்போக சமதர்மத்திட்டம் வகுத்திருக்கிறார்கள். அந்தப்படி இங்கு, முதல் முதலாக தோழர் சிதம்பரம் அவர்கள் தெரிந்தெடுத்து அதுவும் போட்டியின்றி தெரிந்தெடுக்கப்பட்டது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

முடிவுரை

தோழர்களே! இன்றைய கொண்டாட்டம் இனிது முடிந்தது. ஆனால் தலைவர் முடிவுரை என்ற விஷயம் நிகழ்ச்சிக் குறிப்பில் பாக்கியிருக்கிறது. முடிவுரையாக இரண்டொரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். அது உபன்யாசகர்கள் பேசியதைப்பற்றியே பெரிதும் பேசுகிறேன்.

முதலாவது உபன்யாசகர் தோழர் ராமையா அவர்கள் எலக்ஷன்களில் கைக்கூலி (லஞ்சம்) நடைபெறுவதாகச் சொன்னார். லஞ்சம் என்பது தருமம் என்பது போன்ற சாதாரண பழக்கச் சொல்லாய் வழங்குகிறது. தருமத் தொகைகளைவிட லஞ்சத் தொகைகளே அதிகமாக இருந்து வருகிறது. லஞ்சம் கொடுக்கல் வாங்கல்களைப் பற்றி பேசுகிறவர்களும், வருத்தப்படுகின்ற வர்களும் இன்று அநேகமாய் லஞ்சம் கொடுத்து பயன் பெறாமல் ஏமாந்த வர்களும் லஞ்சம் கிடைக்காமல் போனவர்களுமாய்த் தான் இருந்து வருகிறார்கள். நாட்டில் லஞ்சத்துக்கு இழிவு யில்லாமல் போய் விட்டது. காரியசித்திக்கு அதையே முக்கிய சாதனமாய் பெரும்பான்மை மக்கள் கருதியும் பயன்படுத்தியும் வருகிறார்கள். லஞ்சம் கேவலமானது, இழிவானது, பாவமானது என்றெல்லாம் சொல்லி வந்தும், சட்டம், சாஸ்திரம், வேதம் ஆகியவைகளிலும் கண்டிருந்தும், ஏன் இன்று வெகு தாராளமாய் நடைபெற்று வருகின்றது என்கின்ற காரணம் சு.ம. காரனுக்குத் தான் தெரியும். மற்றவனுக்குத் தெரியாது. மற்றவனைக் கேட்டால் “காலம் கெட்டுப் போய் விட்டது, தருமம் அழிந்து விட்டது சர்க்கார் லாய்க்கில்லை” என்று பிதற்றுவார்கள். எந்தக் காலத்தில் லஞ்சம் இல்லாததை நாம் பார்த்தோம். எந்த தர்மத்தில் லஞ்சம் இல்லை? எந்த அரசாங்கத்தில் லஞ்சம் இல்லாமல் போய் விடும்? என்று நான் அவர்களையே கேட்கின்றேன். இன்றைய அரசாங்கம் ஒழிந்து ஜனங்கள் கோருகிற “பூரண சுயராஜ்யம்” ஏற்பட்டாலாவது லஞ்சம் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றேன். லஞ்சம் என்பது முதலாளி ஆதிக்கத்தின் (இயற்கை) தர்மமாகும். பணம் உள்ளவன் பணமில்லாதவனுக்கும், பணத்தாசை பிடித்தவனுக்கும் கொடுப்பது என்பது தான் லஞ்சமாக இருந்து வருகிறது.

எலக்ஷன்களில் ஓட்டு வேண்டியவர்கள் ஓட்டு உடையவர்களிடத் திலிருந்து வாங்குவதற்குக் கொடுக்கும் விலையை லஞ்சம் என்கின்றோம், இது இன்று இங்கு மாத்திரம் தானா நடைபெறுகின்றது? இந்தியாவெங்கும் நடைபெறுகின்றது. லஞ்சத்தின் மீதே தான் எல்லாத் தேர்தல்களும், தேர்தல் பிரசாரங்களும், மற்ற பிரசாரங்களும் நடந்து வருகின்றது. பணம் இருக்கிற வன் பணம் இல்லாதவனுக்கு எந்தத் காரணத்தைக் கொண்டு கொடுத்தால் தான் என்ன? பணம் இல்லாதவன் பணம் இருக்கிறவனிடம் எந்தக் காரணத்தைக்கொண்டு கேட்டால்தான் என்ன? பணம் உள்ளவனும் பணம் இல்லாதவனும் உலகத்தில் இருக்கும்வரை லஞ்சம் பிச்சை முதலானவைகள் ஒழியவே ஒழியாது. இதுதான் அதன் இயற்கை தர்மமாகும். இயற்கையை உணர்ந்தவர்கள் இன்றைய நிலையில் லஞ்சத்தைக் குறை கூறமாட்டார்கள். நமக்குக் கொடுக்கவும் வாங்கவும் சக்தியும் யோக்கியதை இல்லையே என்று கருதுபவர்கள் தான் லஞ்சத்தைக் குற்றம் சொல்லுவார்கள். உலகில் லஞ்சம் ஒழியவேண்டுமானால் தனி உடமைத் தர்மம் அழிந்து ஒழிந்து பொது உடமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது மனுதர்மம் பேசுவதேயாகும்.

சட்டசபைக்கு நிற்கும் எவரும் போட்டியேற்பட்டால் லஞ்சம் கொடுக்காமல் 100க்கு 99 தேர்தல்களில் முடியவேமுடியாது. புரட்டு, பித்த லாட்டம், அயோக்கியத்தனம் செய்யாமல் முடியவே முடியாது. சிலர் சொல்லுவார்கள் எல்லோருக்கும் ஓட்டு இருந்தால்தான் முடியுமா யென்று கேட்பார்கள். அப்போதும், லஞ்சம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். கொஞ்சம் ஓட்டு இருக்கும்போது சொந்தமுதலில் லஞ்சம்கொடுத்தால் நிரம்ப ஓட்டு இருக்கும் போது சர்க்கார் முதலில் லஞ்சம் கொடுக்கவேண்டும்.

ஒரு கிராமத்துக்கு கோவில் கட்ட பொருள் கொடுக்கவேண்டும். ஒரு கிராமத்துக்கு சாவடி கட்ட பொருள் கொடுக்க வேண்டும். இப்படிப் பலவிதமாய் லஞ்சம் கேட்பார்கள். கொடுத்துத்தானாய் வேண்டி வரும். எங்கள் ஜில்லாவில் ஒரு எலக்ஷன் வீரர் உண்டு. அவர் விவசாயிகளிடம் சென்று வரிகுறைப்பதாய் சத்தியம் செய்வார். உபாத்தியாயர் மணியக்காரர் கணக்குப் பிள்ளை முதலிய உத்தியோகஸ்தர்களிடம் சென்று சம்பளம் உயர்த்திக் கொடுப்பதாய் கற்பூரத்தை அணைத்து சத்தியம்செய்வார். இது ஒன்றிற் கொன்று முரணானதா இல்லையா? பாருங்கள். சம்பளம் குறைத்தால்தான் வரியைக் குறைக்க முடியும். வரியை உயர்த்தினால் தான் சம்பளம் உயர்த்த முடியும். ஆதலால் புரட்டுப் பித்தலாட்டம் பேசி இரண்டு குற்றம் செய்வதை விட லஞ்சம் கொடுப்பதின் மூலம் ஒரு குற்றம் செய்வது மேலானதாகும். எனவே லஞ்சம் ஒழியவேண்டுமானால் இன்றைய பொருளாதார நிலைமை அடியோடு மாற்றியாகவேண்டும். இது மற்ற எந்த மெம்பர்களுக்கும் தெரியாது. சு.ம. காரருக்குத்தான் தெரியும்.

சட்டசபை மெம்பர்கள் அரசாங்கம் என்பதை ஜன சமூக நன்மைக்கு ஏற்ற ஒரு ஸ்தாபனமாகவும், அதுவும் ஜனசமூக உண்மை பிரதிநிதித்துவம் கொண்ட பஞ்சாயத்தார்களாகத்தான் கருத வேண்டுமே ஒழிய அதை ஒரு அதிகார ஸ்தாபனமாகவோ, யோக்கிய பதவி வகிக்கும் ஸ்தாபனமாகவோ கருதக் கூடாது. நம் நாட்டு அரசாங்கங்களின் நிலைமை என்ன என்று பார்ப்போமானால் அரசனுக்காகவும், அதிகாரிகளுக்காகவும்தான் பிரஜை களும், பிரஜைகளின் உழைப்புகளும், செல்வங்களும் இருப்பதாய் இருக்கின்றதே ஒழிய ஜனங்களின் சௌக்கியத்துக்கும், கவலையற்ற தன்மைக்கும், திருப்திக்கும் அரசாங்கமும், அதிகாரிகளும் இருப்பதாய் சொல்லவே முடியாது. அரசர்களுடையவும், அதிகாரிகளுடையவும் சம்பளங்களை ஒரு மனிதனுடைய சராசரி வரும்படிக்கு சமமாய் கொண்டு வரப்படாத அரச னும், அதிகாரமும் ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கும்; கொள்ளைக் கூட்டத்திற்குமே ஒப்பிடப்படுவார்கள்.

“ஒரு மனிதனுக்கு மாதம் 4000, 5000, 10000 ரூபாய் வீதம் சம்பளம் கொடுக்காவிட்டால் அந்த உத்தியோகத்தை அவன் சரியாய் பார்க்க மாட்டான் லஞ்சம் வாங்காமல் இருக்க மாட்டான் பாரபட்சமில்லாமல் இருக்க மாட்டான்” என்று சொல்லப்படுகிறது. இதனால் அந்த உத்தியோகங்கள் பார்ப்பவர்கள் பரம அயோக்கியர்களென்றும், அவர்களை யோக்கியர்களாக இருக்கச் செய்வதற்கு இந்தப்படி லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்றுதானே பொருளாகின்றது. ஆகவே அந்த அயோக்கியர்களின் அயோக்கியத்தனம் 5000, 10000 தான் பெரும் என்றும் அதற்குமேல் பெறாதென்றும் நாம் எப்படி நிர்ணயிக்க முடியும். ஏன், மேலும் 5000, 10000 பெறாது அவர்கள் ஏன் ஆசைப்பட மாட்டார்கள். அதற்கு என்ன அளவு கருவி இருக்கின்றது? என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே யோக்கியமான ஆட்சியினால் ஜனங்களின் ஆட்சியினால் சம்பளங்களின் கொள்ளையையும் லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும். இவைகளையெல்லாம்தான் சு.ம. காரர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

(குறிப்பு: 13.08.1933 இல் நாகர்கோவில் மினாம்பிக நாடக மண்டபத்தில் சுயமரியாதை இயக்கத் தலைவரான தோழர் பி.சிதம்பரம் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமையேற்று ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 20.08.1933)

Pin It