karl marx 379பொது உடமைக் கொள்கைகளைப் பற்றிய நூல்களில் எல்லாம் தலை சிறந்து விளங்குவதும் அது சம்பந்தமான எவ்வித சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் சமாதானம் காணக் கூடியதுமான ஒரு புத்தகம் எது என்றால் காரல் மார்க்ஸ் அவர்களால் சுமார் 60, 70 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட (CAPITAL) கேப்பிட்டல் என்கின்ற ஆங்கிலப் பெயருடைய புத்தகமே யாகும்.

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன் இதற்கு வேண்டிய விஷயங்களைத் தொகுக்கவும், மேல் ஆதாரங்களைக் கண்டு பிடிக்கவும் தோழர் காரல் மார்க்ஸ் அவர்கள் 1485 புஸ்தகங்களை வாசித்துப் பார்த்து விபரம் தெரிந்து கொண்ட பிறகு அந்நூலை எழுதி இருக்கிறார்.

ஜெர்மனியில் கென்சிங்டன் என்னுமிடத்திலுள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு அரையில் இருந்து கொண்டு இந்த புத்தகம் எழுதி இருக்கிறார்.

கொஞ்ச காலத்துக்கு முன் மாஸ்கோவில் காரல் மார்க்ஸ் இறந்த 51 வது வருடப் பூர்த்திவிழாக் கொண்டாடும்போது மேல்கண்ட கட்டிட அரை போல் மாஸ்கோவில் ஒரு அரை கட்டி அதில் மேற்குறிப்பிட்ட 1485 புத்தகங்களையும் வைத்து அதை ஒரு புத்தகசாலை மாதிரி செய்து யாவரும் வந்து படிப்பதற்கு அனுகூலமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கட்டிடத்துக்கு “காரல் மார்க்ஸ் மனை” (மார்க்ஸ் ஹவுஸ்) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இன்றும் யார் வேண்டுமானாலும் போய் பார்க்கலாம்.

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 23.07.1933)

Pin It