அரசு என்ற பிரச்சினையை மார்க்ஸீயக் கண் ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்கு எங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம்’ என்ற நூலைப் படிக்க வேண்டும்.  அரசின் தோற்றத்தை, சமுதாய வளர்ச்சியின் வரலாற்றுப் போக்கில் எங்கெல்ஸ் விளக்குகிறார்.  அதன் பின்னர் வர்க்க சமுதாயங்கள் தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் அமைப்பையும், பாத்திரத் தையும் லெனின் தமது, ‘அரசு’, ‘அரசும் புரட்சியும்’ என்ற நூல்களில் விளக்குகிறார்.  இந்நூல்களின் கருத்தமைப்பை விளக்குவதே இப்பகுதியின் நோக்க மாகும்.

அரசு மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள்.  நமது புராணங்கள்கூட இக் கருத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை. இந்திய தர்ம சாஸ்திரங்களின் அரசும், அரசனது ஆட்சியும் எவ்வாறு ஏற்பட்டன என்பதை விளக்க சில கதைகளை கற்பித்திருக் கின்றன.  “மக்கள் வாழ்க்கையில் பெருங்குழப்பங் களும், கலகங்களும் தோன்றி மனித இனம் அழிந்து விடும் நிலையில் இருந்தபோது, சில பெரியவர்கள் அறிவாற்றலும், உடல் வலிமையும், ஆயுதப் பயிற்சியும் உள்ள ஒரு இளைஞனை அணுகி, ‘நீ ஒரு இளைஞர் கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு எங்களிடையே ஒழுங்கை ஏற்படுத்து. அந்நியர் களின் தாக்குதலில் இருந்து காப்பாற்று. எங்களுக்கு சமுதாயப் பணிகளைப் பகிர்ந்துகொடு. நாங்கள் உழைத்து, தானியங்களையும், கனிகளையும் விளை வித்து உனக்கு ஒரு பங்கு தருகிறோம்.  அழகான பெண்களை உனக்குக் கொடுக்கிறோம். உன் ஆணைப்படி நாங்கள் நடக்கிறோம்.  நீ எங்களைப் பாதுகாத்துக்கொள்’ என்று கூறினார்கள்.  அவனும் சம்மதித்தான்.  இதுபோலவே பல மக்கள் குழுக் களிலும் அரசன் ஆட்சி தோன்றியது.”

பல நீதி நூல்கள், (வசிஷ்ட நீதி, மனுநீதி, காமண்டக நீதி, யாக்ஞ்ய வல்கீயம்) முதலிய நூல்கள் ஏறக்குறைய இத்தகைய முறையிலேயே அரசின் தோற்றம் பற்றிக் கூறுகின்றன.

lenin 600அரசு ஒரு மனித சமுதாயத்தின் குழப்பமான காலத்தில் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்ற உண்மையையே இக்கதைகளில் இருந்து நாம் அறிகிறோம்.  புராணம் வரலாறல்ல. சில உண்மை களின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்குப் பின்னர் வாழ்ந்த மக்கன் பண்டைய நிகழ்ச்சிகளைப் பற்றிக் கொண்டிருந்த கற்பனை களே புராணங்கள்.

விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் அரசு தோன்றிய விதத்தை எங்கெல்ஸ் விளக்கினார்.  அவருடைய விளக்கத்தைச் சுருக்கமாக இங்கே தருவோம்.

“அரசு இல்லாதிருந்த காலம் ஒன்று மனித இனத்தின் வரலாற்றில் இருந்து, எங்கெங்கே எவ்வெப் பொழுது சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்று கிறதோ, அங்கங்கே, அவ்வப்பொழுது அரசும் தோன்றுகிறது” - (எங்கெல்ஸ்).

வர்க்கப் பிரிவினை மனித வரலாற்றில் முதன் முதலில் தோன்றுவதற்கு முன்னர் தந்தை வழிக் குடும்பம் இருந்தது.  இதனை குலவழிக் குடும்பம் என்றும் கூறுவதுண்டு. இத்தகைய குலவழிக் குடும்பங்கள், இன்றும் பல இனக்குழு மக்களுடைய சமுதாயங்களில் காணப்படுகிறது.  பண்டைக் காலத்து குலவழிக் குடும்ப சமுதாயத்தில், உழைப் பவன், உழைக்காதவன், உடைமையாளன், உடைமை யற்றவன், ஆண்டான், அடிமையென்ற வர்க்க வேறு பாடுகள் இருந்ததில்லை.  அக்காலத்தில் அரசு என்ற அமைப்பும் இருந்ததில்லை.  முறையாக வன் முறையை பெரும் பகுதி மக்களின்மீது செலுத்தும் விசேஷக் கருவியான அரசு இருந்ததில்லை.

மக்கள் சிறு சிறு குலங்களாக வாழ்ந்தார்கள்.  அவர்களுடைய வாழ்க்கை காட்டுமிராண்டி வாழ்க்கை நிலையை ஒத்திருந்தது.

அக்காலத்தில் அரசு என்ற அமைப்பு தோன்றவில்லை. அக்குலக் குழு சமுதாயங்களில் வழக்கம், மரபு இவற்றைப் பின்பற்றி மக்கள் ஒழுக்கங்களை அமைத்துக் கொண்டார்கள்.  பண்டைய ஒழுக்கங்களையும் வழக்கங்களையும் அறிந்திருந்த குலத் தலைவர்கள் செல்வாக்கும், மதிப்பும், அதிகாரமும் பெற்றிருந் தார்கள்.  இந்த அதிகாரம் சில சமுதாயங்களில் பெண்களுக்கும், வேறு சில சமுதாயங்களில் ஆண் களுக்கும் இருந்தது.  மக்களின் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் அடக்கியாள்வதற்காக ஒரு வன்முறை யந்திரம் தோன்றவில்லை.  ஒரு பிரிவினரின் நோக்கங்களை பலவந்தமாக நிறைவேற்றிக் கொள் வதற்குரிய சாதனங்களான ஆயுதம் தாங்கிய படைப் பிரிவுகள், சிறைச்சாலைகள் முதலியவை அக்காலத்தில் இருந்ததில்லை. அரசு என்ற யந்திரத்தின் இன்றைய உருவம் இவைதாம் என் பதை நாம் அறிவோம்.

மக்களில் ஒரு சிறு பிரிவினர் பெரும் பிரி வினரை அடக்கி ஆண்டு தமது லாபத்திற்காக உழைப்பதற்கு கட்டாயப்படுத்தும் நிலை ஒரு சமுதாயத்தில் தோன்றும்பொழுதுதான் சிறைச் சாலைகள், படைகள் முதலிய பலவந்த ஆயுதங்கள் கொண்ட அரசு தோன்றுகிறது.  ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரின் உழைப்பை நிரந்தரமாக அபகரித்துக்கொள்ள முடிகிற நிலைமை ஒரு சமுதாயத்தில் தோன்றும்பொழுது அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் விசேஷ யந்திரமாகத் தோன்றியது.  இந்த நிலைமை முதன் முதலில் அடிமைச் சமுதாயம் தோன்றுகிற பொழுது உண்டாகிறது. உலகத்தின் எல்லாப் பகுதிகளில் உள்ள மக்களும் இந்தக் கட்டத்தை தமது வரலாற்றில் கடந்து வந்திருக்கின்றனர்.

ஆண்டைகளும், அடிமைகளும் சமுதாய வரலாற்றில் முதன் முதலில் தோன்றிய வர்க்கங்கள் ஆவர்.  ஆண்டைகள் என்னும் பிரிவினர் நிலத் தையும், கருவிகளையும், அடிமைகளான மக்களையும் கூட தம் உடைமையாக்கிக் கொண்டார்கள்.  ஆண்டை களின் லாபத்திற்காக உழைத்து உழைப்பை வழங்கி யவர்களே அடிமைகள் எனப்பட்டனர்.

பெரும்பாலான நாடுகளில் அடிமை முறை தன் வளர்ச்சிப் போக்கில் பண்ணை அடிமை முறையாக வளர்ந்தது.  இங்கே நிலப்பிரபுக்களும் பண்ணை அடிமைகளும் பிரதான வர்க்கங்களாக அமைந்தனர். மக்களுக் கிடையே நிலவிய உறவில் நிலைமை மாறியது.  அடிமைச் சமுதாயத்தில் அடிமைகள் சட்ட பூர்வமாக ஆண்டைகளின் உடைமையாகவே கருதப்பட்டனர். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் பண்ணைக் குடியானவர்கள் நிலப்பிரபுவின் உடைமையாகக் கருதப்படவில்லை.  

ஆயினும் அவர்கள் நில உடைமையாளர்களது ஒழுக்க முறைகளுக்கும், சட்டங்களுக்கும் உட்பட்டே இருந்தனர்.  நில உடைமை சமுதாயத்தில் வாணிபம் வளர்ச்சியுற்று, உலகச் சந்தை தோன்றியது.  வாணிப வளர்ச்சி யினால் ஒரு புது வர்க்கம் தோன்றியது.  இதுதான் முதலாளித்துவ வர்க்கம். பண்ட உற்பத்தி முறையிலிருந்து, பண்ட மாற்றத்திலிருந்து பணத்தின் அதிகாரம் தோன்றியது.  இதிலிருந்து மூலதனத்தின் ஆதிக்கம் வளர்ந்தது. இந்த வர்க்கம் தனது வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நிலப்பிரபுத்துவ முறையை எதிர்த்து புரட்சிகளை நடத்தியது.  

மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவ முறை அழிக்கப்பட்டது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. வர்க்கப் பிரிவினை முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற உருவத்திற்கு மாறியது.  எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் மூலதன உடைமை யாளர்கள் மக்களில் மிகச் சிறுபான்மையின ராகவே இருக்கிறார்கள்.  நில உடைமையாளர் களும் அவ்வாறே, மக்களுடைய உழைப்பு முழு வதும் இவர்கள் வசத்தில் இருக்கிறது.  உழைப் பாளி மக்களனைவரையும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.  இவர்கள் உழைக்கும் மக்களைச் சுரண்டுகிறார்கள். அவர்களை ஒடுக்கி வைக்க முயலுகிறார்கள்.

இந்த சமுதாய வளர்ச்சிப் போக்கின் பின்னணி யில் அரசின் தோற்றத்தைக் காணவேண்டும். முதல் வர்க்க சமுதாயத்தின் தோற்றத்தோடு அதுவும் தோன்றி விடுகிறது.  அது தோன்றிய காலத்தி லிருந்தே சமுதாயத்திலிருந்து தனித்துப் பிரிந்து ஒரு வன்முறைக் கருவியாக இருந்து வந்திருக்கிறது. இவ்வரசின் அங்கமாக இருக்கும் ஊழியர்கள் அடக்கி ஆளுகிற பணியைத்தான் செய்கிறார்கள். ஆள்பவர்கள், ஆளப்படுபவர்கள் என்ற பிரிவினை வர்க்கப் பிரிவினைக்கு ஏற்றபடி தோன்றுகிறது.  ஆளுபவர்கள், சமுதாயத்திற்கு மேற்பட்டவராகி அரசின் உறுப்புகளாக அமைகின்றனர்.

இந்த ஆளும் பிரிவினர் பலம் கொண்ட ஒரு கருவியை மக்களை ஒடுக்குவதற்காகப் படைத்துக் கொள் கின்றனர்.  ஒவ்வொரு சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்றபடி வேல் ஏந்திய படையாகவோ, வாள் அல்லது வில் ஏந்திய படையாகவோ, எந்திரத் துப்பாக்கியும் அல்லது விமானங்களும் கொண்ட படையாகவோ இருக்கும்.  இப் பொழுது சமுதாயத்தின் அரசின் பாத்திரம் பற்றி தெளிவாகத் தெரிந்துகொண்டோம்.

அரசு என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின் மீது தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக உள்ள ஒரு வன்முறைக் கருவி.

சமுதாயத்தில் வர்க்கங்களே இல்லாதபோது இந்த அமைப்பிற்குத் தேவையே இல்லை.  அடிமை முறை தோன்றியபோது சமுதாயத்தில் தேவைக்கு எஞ்சிய உபரிப் பொருள் தோன்றவில்லை.  அதன் வளர்ச்சிக் காலத்தில் தேவைக்குமேல் ஓரளவு உபரிப் பொருளை அடிமை வர்க்கம் உற்பத்தி செய்தது.  அது ஆண்டைகளின் கையில் சேர்ந்தது. ஆண்டை வர்க்கத்தின் நிலை ஸ்திரமான போது தான் அதை மேலும் உறுதியாக்கிக் கொள்வதற்காக அரசு தோன்றவேண்டிய அவசியம் ஏற்பட்டது.  அடிமை உடைமையாளர்களின் அரசு, அடி மைகள் தொடர்ந்து அடிமைகளாக இருக்குமாறு கட்டாயப்படுத்தியது.  இந்த யந்திரமில்லாமல் மக்களின் ஒரு பகுதியை, பிறருக்காக உழைக்கும்படி செய்வது முடியாத காரியம்.  எனவே இந்தக் கருவி அவர்களுக்கு இன்றியமையாததாய் இருந்தது.

அரசின் வடிவங்கள் பல்வேறு வகைப்பட்ட வையாக வரலாற்றில் இருந்திருக்கின்றன.  அடிமை உடைமையாளர் அரசுகள்கூட கிரேக்க, ரோம நாடுகளில் வெவ்வேறு வடிவமுடையனவாக இருந் திருக்கின்றன.  முடியரசு, குடியரசு, உயர்குடியாட்சி என பல்வேறு வடிவங்களில் ஆண்டை வர்க்க ஆட்சி இருந்திருக்கிறது.  முடியரசோ அல்லது குடியரசோ, அடிமைச் சமுதாயத்தால் ஏற்பட்ட ஆட்சிகள் ஆண்டைகளின் அதிகாரத்தை அடி மைகள் மீதும், மக்களின் மீதும் பிரயோகிக்கும் வன்முறைக் கருவி என்ற அளவில் வேறுபட வில்லை.  அடிமைச் சமுதாய குடியரசில் ஆண்டை களுக்கு மட்டும்தான் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையிருந்தது.  இவ்வகை அரசுகளில், அடிமை மக்களுக்குப் பங்கில்லை.  அவர்களை ஒடுக்கி வைப்பதே இவ்வரசின் நோக்கம்.

அடிமை முறை மாறி நிலப்பிரபுத்துவ முறை தோன்றியபொழுது, அடிமைமுறை அரசும், நிலப் பிரபுத்துவ அரசாக மாறியது.  அடிமைச் சமு தாயத்தில் அடிமைக்கும் உழவுக் கருவிக்கும் வேறு பாடு இல்லை. அடிமையை அரிஸ்டாட்டில், “பேசும் கருவி” என்று அழைத்தார். மண் வெட்டிக்கு என்ன உரிமையிருந்ததோ, அதுதான் அடிமைக்கும் இருந்தது.  ஆனால் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் பண்ணையடிமை அல்லது குடியானவன் நிலத் தோடு பிணைக்கப்பட்டான்.  தனக்கு நிலவுடைமை யாளரால் தரப்பட்ட ஒரு நிலப்பகுதியில் அவன் சிலசில நாட்கள் உழைத்து தனக்கென பயிர் செய்துகொள்ளலாம்.  மற்ற நாட்களில் அவன் நிலப்பிரபுவின் நிலத்தில், நிலப்பிரபுவின் லாபத் திற்காக உழைத்தான்.  

நிலப்பிரபுத்துவ சமுதாயம் வர்க்க சமுதாயமே.  ஆனால் வர்க்கங்களின் தன்மை வேறாயிருந்தது. நிலப்பிரபுத்துவம் உற்பத்தி சக்தி களின் வளர்ச்சியில் நெருக்கடிக்கு உள்ளாகி வலுக் குன்றியபோது முதலாளித்துவ உற்பத்தி முறை நிலப்பிரபுத்துவ அமைப்பினுள் வளரத் தொடங் கியது.  நிலப்பிரபுத்துவ அரசு முடியரசு, குடியரசு என்ற இரண்டு வடிவங்களில் இருந்தது.  இரண் டிலும் நிலப் பிரபுக்களே ஆளுவோர். பண்ணை யடிமைகள் எவ்வித அரசியல் உரிமையுமின்றி ஒடுக்கப்பட்டிருந்தனர்.

இது நிலப்பிரபுக்களின் ஆட்சியை நிலை நிறுத்த அவர்கள் படைத்துக் கொண்ட கருவி. சில வேளைகளில் அடிமை உடைமை அரசையே நிலப்பிரபுக்கள் கைப்பற்றி தங்கள் வர்க்க நலன்களைப் பாதுகாக்கும் அரசாக மாற்றியமைத்துக் கொண்டனர்.  முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ச்சியில் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் பொருளாதார வலிமை குறைந்தது.

புதிய வர்க்கம் எல்லாக் குடிமக்களும் சமம் என்று பிரகடனம் செய்தது. சட்டத்தின்படி மக்களனை வரும் சரிநிகராக மதிக்கப்பட்டனர்.  உடைமை வேறுபாடு இருக்கும் வரை அரசும் சட்டமும் உடைமையாளர்களின் சொத்துக்களைத்தான் பாதுகாக்கிறது. நிலப்பிரபுத்துவ அரசினிடத்தில் முதலாளித்துவ அரசு நிலை பெற்றதும் எல்லா மக்களுக்கும் விடுதலை என்பது தன்னுடைய கோஷம் என்று கூறுகிறது. ஒரு வர்க்கச் சார்பான அரசு என்பதை மறுக்கிறது. அண்மையில் நில உடைமை முறை ஒழிக்கப்பட்டதால், முதலாளித்துவ வர்க்கத்திற்குத்தான் விடுதலை கிடைத்தது.  

நிலப் பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதால் குடியானவர்கள் நிலத்தை விலை கொடுத்து மீட்டோ, பகுதி பகுதி யாக தவணை முறைகளிலோ பணத்தைக் கட்டி, நிலத்தை மீட்டுக்கொள்ள வாய்ப்புக் கொடுத்தது.  முதலாளித்துவ அரசு, சொத்து எவ்வழியாக வந்தாலும் அதனைப் பாதுகாத்தது.  நாகரீக நாடுகள் அனைத்திலும், விவசாயிகள் தனி உடைமை யாளராகி விட்டனர்.  தனி உடைமையை முழுமை யாக பாதுகாப்பதாக முதலாளித்துவ அரசு பறை சாற்றியது.  வணிகன், தொழில் முதலாளி, ஆலை உடைமையாளன், நில உடைமையாளன், கடைக் காரன் ஆகிய எல்லோருடைய தனிச் சொத்துரி மையை அது ஆதரித்தது.  சொத்துடைமை உரியவர்கள் ஜனத்தொகையில் மிகச் சிறிய பகுதி யினரே. உழைப்பை விற்றுப் பிழைக்கும் உழைப்பாளி மக்களே மிகப் பெரும்பான்மையினர்.  எனவே உழைக்கும் வர்க்கங்களை அடக்கி உபரி உழைப்பைப் பெறுவதில் இவ்வரசு அக்கறை கொண்டிருந்தது.

முதலாளி வர்க்கம் உழைக்கும் வர்க்கங்களை ஒடுக்குவதற்கான ஒரு வன்முறை யந்திரமாக அது இருந்தது.  ஆனால் வெளித் தோற்றத்தில் ‘சுதந்திரமானதாக’ தன்னைக் காட்டிக் கொண்டது.  அனைத்து மக்கள் வாக்குரிமையை தான் அளித்த மாபெரும் நன்கொடையாக, தனது ஆதரவாளர் மூலம் பிரகடனப்படுத்தி தன்னை ஒரு மக்கள் அரசு என்று அறிவித்துக்கொண்டது.  ஆயினும் தற்காலத்தில் மக்கள் போராட்டங்களின் எழுச்சி யால், முதலாளித்துவ அரசுகள் எந்த வர்க்கத்திற்காகப் பணிபுரிகின்றன என்பது, அதன் அடக்குமுறைச் சட்டங்களாலும், வன்முறைக் கொடுமைகளாலும் தெளிவாக வெளியாகிவிட்டது.

பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் பாட்டாளிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப் பற்றும்போது அப்பொழுது இருக்கும் அரசாங்கயந்திரத்தை என்ன செய்ய வேண்டும்? இவ்வினா விற்குரிய விடையை லெனின் தமது “அரசும் புரட்சியும்” என்ற நூலில் தெளிவாகவே விளக்கியுள்ளார்.

Pin It