periyar maniammaiதலைவரவர்களே! நண்பர்களே! முஸ்லீம் சமூகத்திற்கே முக்கியமான இந்த நாளில் எனக்கும் ஒரு சந்தர்ப்பமளித்து இங்கு பேசும்படி செய்ததற்கு எனது நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இங்கு எனக்கு முன்பாக மௌல்வி சாயபு அவர்களும் ராவ்சாகிப் இராமச்சந்திரன் செட்டியார் அவர்களும் மிக்க அருமையான விஷயங்களை தக்க நூல் ஆதார ஆராய்ச்சியுடன் எடுத்துச் சொன்னார்கள். நானோ அந்தக் காரியத்தில் சூனியமானவன். அதாவது நூலராய்ச்சி என்பது எனக்கு கிடையாது. நான் அதில் அதிகக் கவலை செலுத்தியதுமில்லை. அது மாத்திரமல்லாமல் பெரியவர்கள், மதத் தலைவர்கள் என்பவர்களின் பெருமைகளும், அவர்களது உபதேசப் பெருமைகளுமே ஒரு சமூகத்தின் மேன்மைக்குப் போதுமானது என்று நான் கருதுகின்றவனுமல்ல. ஆதாரங்கள் எப்படிப் பட்டதாக இருந்தாலும், மதத்தலைவர்கள் ‘மத அவதார புருஷர்கள்’ என்பவர்கள் எவ்வளவு பெருமை பொருந்தியவர்களாக இருந்தாலும், இன்றைய நம்முடைய யோக்கியதை பிரத்தியட்சத்தில் எப்படி இருக்கின்றது? உலக மக்கள் வரிசையில் நமது நிலைமை என்ன? நமது பிரத்தியட்ச அனுபவ நடவடிக்கையும், மதிப்பும் எவ்வளவில் இருக்கின்றன? இதற்கு என்ன காரணம்? என்பவை போன்றவைகள் தான் எனது ஆராய்ச்சி யாகும். அவைகளை ஆதாரமாகக் கொண்டு தான் பேச வேண்டுமென்பது எனது அபிப்பிராயம்.

அன்றியும் மௌல்வி சாயபு அவர்கள் தங்களது மதப் பெரியார் அவர்கள் பெருமையையும் மத ஆதாரமாகிய குர்ஆன் பெருமையையும் எடுத்துச் சொன்னது போல் நான் சொல்ல வேண்டுமானால் எனது மதம் என்று சொல்லப்படும் இந்து மதத்திற்கு யார் மதப் பெரியார்? எது மத ஆதாராம்? என்பதைக் கண்டுபிடிப்பதே கஷ்டமான பிரச்சினையாக ஏற்பட்டு விடும். ஒரு சமயம் எனக்கு கஷ்டமாக இருப்பதற்கு காரணம் இருந்தாலும் இருக்கலாம். ஏனெனில் நான் நூலாராய்ச்சி அற்றவன். அது மாத்திரமல்லாமல் ‘மதங்களுக்கே விரோதி, அதிலும் இந்து மதத்திற்கே ஒரு பெரிய துவேஷியாகவும், துரோகியாகவும் இருக்கின்றவன்’ என்பதாகவெல்லாம் சொல்லப்படுகின்றவன். ஆதலால் என்னைத் தள்ளி விட்டாலும் மற்றபடி வேறு எந்த இந்து மதப் பக்தர்களோ, பரிபாலகர்களோ, அபிமானிகளோ, பண்டிதர்களோ, ஆராய்ச்சியாளர்களோ, மத குருமார்களோ யாராக இருந்தாலும் அவர்கள் இந்து மதத்திற்கு யார் தலைவர்? எது ஆதாரம்? என்பது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்வது என்பது சுலபமான காரியமாயில்லை.

மத ஆதாரம் என்று சொன்னால் முஸ்லீம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் ஒருவராவது “நபி அவர்களையும் குர்ஆனையும் பற்றிக் கேட்டிராதவர்களும், அவைகளை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று மறுப்பவர்களும் இருக்கவே மாட்டார்கள். ஒப்புக் கொண்டே தீருவார்கள். ஆனால் இந்து என்று தங்களை சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு உறுதியான, எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியான, யாராலும் மறுக்க முடியாததான ஒரு மதத் தலைவரோ, ஒரு மத ஆதாரமோ இருப்பதாக இந்துக்கள் யாரும் சொல்ல முடியாது. அதுமாத்திரமல்ல ஒன்றை மற்றொன்று ஆட்சேபிக்கும்படியானதாகவும், ஒருவரை மற்றொருவர் குற்றம் சொல்லும்படியானதாகவும் தான் மதத் தலைவர்களும், மத ஆதாரங்களும் இருக்கின்றன.

நண்பர்களே!

உலகமெல்லாம் விழிப்படைந்து மதங்களின் மீது வெருப்படைந்து அவ்வளவோடு மாத்திரமல்லாமல் கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியிலேயும் இறங்கி சிலர் ‘கடவுளே இல்லை’ யென்றும், சிலர் ‘சந்தேகம்’ என்றும் சிலர் ‘இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நமக்கு அதைப் பற்றிய கவலையே வேண்டாம்’ என்றும், கடவுள் உணர்ச்சியே உலக முற்போக்குக்கும், அறிவு வளர்ச்சிக்கும், சமத்துவத்திற்கும், சமதர்மத்திற்கும் தடையானது என்றும், ‘கடவுள் உணர்ச்சி ஒழிந்தாலொழிய சமதர்மம் நிலவ முடியாது’ என்றும் சொல்லிக் கொண்டும், உலகில் தேசம், மதம், ஜாதி, நிறம், வகுப்பு என்பவைகளான வித்தியாசங்களே இல்லாமல் எல்லா மக்களும் சமத்துவமுள்ள சகோதரர்களே என்பதாகவும், ‘உன் தேசம், என் தேசம்?’என்று சொல்லுவதே குறுகின நோக்கமும், வகுப்பு துவேஷ உணர்ச்சியும் கொண்டதென்றும், தேசத்துக்கு தேசம் யுத்தம் என்பதே கூடாதென்பதாகவும், ஜாதி மதத் தேசப்பிரச்சினையே உலகத்தில் இருக்கக்கூடாதென்றும் பேசப்படுகின்ற, அவற்றிற்காக பெரிய பெரிய முயற்சிகளும் செய்யப்படுகின்ற இந்தக் காலத்தில் தனித் தனி மத நூல்கள் ஆராய்ச்சியில் இறங்கி அவற்றிலிருந்து உண்மைகளைக் கண்டுபிடித்து மக்கள் யோக்கிதையையும், போக்கையும் நிர்ணயிப்பது என்பது இனி ஒருநாளும் பயனளிக்கக் கூடிய தாகாதென்பதே எனது அபிப்பிராயம்.

மதப்பிடிவாத காரணமாகவும், பிரத்தியக்ஷ காரியங்களைக் கொண்டு தங்கள் தங்கள் நாட்டையும், சமூகத்தையும் மதிக்காமல் ஆதாரங்களைக் கொண்டு தங்களைப் பெருமையாய் நினைத்துக் கொண்டு, முற்போக்கில் கவலை இல்லாமல் இருந்ததாலுமே இந்த நாடு இன்று உலக மக்கள் முன்பு மிகக் கேவலமாகவும், இழிவாகவும் கருதப்பட்டு வருகின்றது என்பது எனதபிப்பிராயமாகும். மற்றும் இதனாலேயே பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்த நாடு அடிமை நாடாகவும், அடிமை சமூகமாகவும் இருந்து வருகின்றது என்பதும் எனது அபிப்பிராயமாகும். உலகத்தில் புத்தரை தங்கள் மத போதகராக சொல்லிக் கொண்டு ஒரு பெரும் சமூகம், சுதந்திரத்துடன் வெகு மேன்மையாய் வாழுகின்றது. கிறிஸ்துவை தங்கள் மதபோதகராகச் சொல்லிக்கொண்டு மற்றொரு பெரிய சமூகம் சுதந்திரத்துடன் மேன்மையாய் வாழுகின்றது. அது போலவே முகமது நபியை தங்கள் மதபோதகராகச் சொல்லிக் கொண்டு இனியும் ஒரு பெரிய சமூகம் மிக மேன்மையாகவும், சுதந்திரமாகவும் வாழுகின்றது.

ஆனால் இந்திய சமூகம் யார் பேரைச் சொல்லிக் கொண்டாவது எப்போதாவது மேன்மையாக வாழ்ந்ததாகவோ, சுதந்திரமாய் இருந்ததாகவோ கதையாவது இருக்கின்றதா? காரியத்திலாவது இருக்கின்றதா? என்று பாருங்கள். ஏன் இல்லை? புத்தர் கிறிஸ்து முகமது நபியாகியவர்கள் சீர்திருத்தக்காரர்களாய் தோன்றினார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அப் பெரியார்களது சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்கள். நடவடிக்கையில் அவர்கள் வேறு எந்த எந்த விஷங்களில் தவறுதலாய் நடந்தவர்கள் என்று சொல்வதானாலும் தங்கள் தங்கள் சமூகத்தைப் பெருக்கி, எல்லோரையும் இழுத்துப் பிடித்து ஒன்றாக்கி, ஒற்றுமை உணர்ச்சியும், சமத்துவ உணர்ச்சியும், சகோதர உணர்ச்சியும் கொண்டு நடந்து கொள்ளுவதில் ஒருவரும் தவறவேயில்லை. அந்த ஒரு காரியமே அந்தந்த சமூகத்தை மேன்மையாய் மானத்துடன் வாழச் செய்கின்றது.

நம் நாடு, நம் சமூகம் என்னும் இந்து சமூகம் இந்தக் காரியத்தில் சுத்த சூன்யதிசை அடைந்து, தனது சமூகத்தை மற்ற எல்லா சமூகத்தாருக்கும் வினியோகித்துக் கொண்டு க்ஷீணதிசை அடைந்து வருகின்றது. இன்றைய தினம் இந்தியாவில் 8- கோடி முஸ்லீம் மக்கள் வாழுகின்றார்கள். இனியும் வருஷ வருஷம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றார்கள். இந்த நாட்டில் இவர்கள் எப்படிப் பெருகினார்கள்? இதற்குக் காரணம் அவர்களுடைய சமத்துவ உணர்ச்சியும், சகோதர உணர்ச்சியும் அல்லாமல் வேறு எதைச் சொல்ல முடியும்? என்று கேட்கின்றேன்.

“முஸ்லீம்கள் பலாத்காரத்தை உபயோகித்து தங்கள் சமூகத்தைப் பெருக்கினார்கள்” என்று சுலபமாய் சொல்லி விடலாம். அவர்கள் அதை மறுத்தும்கூட நாம் வாஸ்த வம் என்றே வைத்துக் கொண்டாலும் அதுபோலவே இந்துக்களையும் பலாத்காரத்தை உபயோகிக்க வேண்டாம் என்று யார் தடுத்தார்கள்? எந்த மதக் கொள்கை தடுத்தது? இந்துக்களும் பலாத்காரத்தை உபயோகிக்கவில்லை என்று யாராவது சொல்லிவிட முடியுமா? புராணங்களில் சொல்லப்படும் தேவர்கள் - அசுரர்கள் சண்டையெல்லாம் சாத்வீகமா? இராமாயண, பாரத சம்பவங்கள் என்பதெல்லாம் அஹிம்சாத் தத்துவமா? சமணர், சைவர் கொலைபாதக சரித்திரமெல்லாம் அன்புமயமா? சமணரைக் கழுவேற்றிய உற்சவங்கள் பலாத்காரமற்ற தன்மையைக் காட்டுகின்றனவா? பௌத்தர் கோயில்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து, உறுக்கி சீரங்கம் கோவில் கட்டிய வைணவ சமய உண்மைகள் என்பவை எல்லாம் சமரச நோக்கமா? என்பனவற்றை யோசித்துப் பாருங்கள். இப்படியெல்லாம் இருந்தும் ஏன் இந்து சமூகம் பெருகவில்லை - மேன்மையாக வாழவில்லை - மானத்தோடு பிழைக்க முடியவில்லை? இந்திய நாடு மாத்திரம் அடிமை நாடாக வெகு காலமாகவே இருந்து வரக் காரணம் என்ன? என்பவைகளை யோசித்தால் உண்மை விளங்காமல் போகாது.

ஒரு மதம் அந்த மத மக்களை மோட்ச லோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களைக் கடவுளிடத்தில் உட்கார வைக்கின்றதா? என்பதல்ல எனது மத சம்பந்தமானக் கவலை. மற்றென்னவென்றால் ஒரு மதம், அந்த மத மக்களை மானத்தோடு, சுதந்திரத்தோடு, சாந்தியோடு வாழச் செய்கின்றதா? என்பதுதான் எனது கவலை.

இந்த நாடு விடுதலை பெறாததற்கு இந்நாட்டு மதமும், சமூகமுமே முக்கிய காரணங்கள் என்று தான் சொல்லியாக வேண்டும். மக்கள் யாவரும் ஒரு சமூகமாய், ஒரு மதமாய், ஒரே சகோதரத்துவம் உள்ளவர்களாயில்லாத நாடு ஒரு நாளும் உண்மையான விடுதலையைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்திய நாடு ஏன் ஒரு சமூகமான, சகோதரத்தன்மையான நாடாக யிருக்கவில்லை? என்பதை யோசித்துப் பாருங்கள். முக்கியமாய் மதங்களின் முட்டுக்கட்டைகளே அல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லக்கூடும்?

சகோதரத்தன்மையும், சமத்துவமுமுள்ள கொள்கையை ஏன் எல்லோரும் தழுவக் கூடாது? இதற்குப்பெயர் இந்து மதம் என்பதாய் இருந்தாலென்ன? இஸ்லாம் மார்க்கம் என்பதாய் இருந்தாலென்ன? வேறு என்னவாய் இருந்தாலென்ன? சகோதர மார்க்கம், சமத்துவ மார்க்கம், ஒற்றுமை மார்க்கம் என்பதாக உள்ள எதையும் அறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இந்த முக்கியத் தத்துவங்களை விட்டு விட்டு மார்க்கம் என்றால் கடவுளை அடைவதென்றும், வெறும் வேஷம் என்றும் மாத்திரம் நினைத்துக்கொண்டு மக்கள் ஒருவருக்கொருவர் விருப்பு, வெருப்பைக் காட்டுகின்றது அறிவீனமேயாகும். இந்தக் காரணங்களால்தான் நல்ல பயனளிக்கும் மார்க்கங்கள் கூட பெருக்கமடையாமல் போகின்றன. ஒரு மனிதனைப் பார்த்து வேஷ மாத்திரத்தினால் இன்ன மதக்காரன் என்று சொல்லிவிடக் கூடியதாய் இருந்தால் - தன்னை இன்ன மதக்காரன் என்று காட்டிக் கொள்வதற்கு இந்த வேஷமே போதும் என்று நினைப்பதாயிருந்தால் அது ஒரு நாளும் நல்ல பயனளிக்ககூடிய மார்க்கம் என்று சொல்லிவிட முடியாது.

இஸ்லாம் மார்க்கம் மேன்மையான மார்க்கம் என்றால் அது இந்தியாவின் மனித சமூகம் முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவைகளை ஒழிக்க முயற்சிக்க வேண்டும். மத சம்பந்தமான பழக்க வழக்கங்கள், வேஷங்கள் என்பவைகள் எல்லாம் ஒழிய வேண்டும். பகுத்தறிவுக்கு ஏற்ற எந்தக் காரியத்தையும் செய்ய சுதந்திரமிருக்க வேண்டும்.

மக்களிடத்தில் அன்பு வைத்து சகோதரத் தன்மை காட்டி அன்பு உண்மை என்பவைகளிடத்தில் நம்பிக்கை வைத்து மனிதர்கள் எல்லோரையும் சமம் என்று கருதிக் கொண்டு மனித சமூகத்திற்கு சேவை செய்வதே தன் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள் எல்லாம் இஸ்லாம் மார்க்கக்காரர்கள் என்று சொல்வதானால் என்னையும் மற்றும் என் நண்பர்கள் பலரையும் இஸ்லாம் கொள்கைக்காரர்கள் என்று தான் முஸ்லீம்கள் எண்ண வேண்டுமேயொழிய தாடியையும், தலையையும், உடையையும் பார்த்து இஸ்லாம் என்றும், இஸ்லாம் அல்லாதவன் என்றும் பிரிப்பதாய் இருக்கக் கூடாது. துருக்கியில் வேஷ மாத்திரத்தால் மதம் இல்லை. அதுபோலவே இந்தியாவிலும் வேறுபாட்டை பார்வையிலாவது மறையும் படி மக்கள் எல்லோரும் முதலில் ஒரே மாதிரியான நடை, உடை, பாவனையாக வேண்டும். பிறகு எண்ணங்களைப் பரிமாரிக் கொள்ள வேண்டும். பகுத்தறிவுக்குப் பொறுத்தமான கொள்கைகளையே மனித வாழ்க்கைக்கும் மார்க்கங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரீட்சைக்கு விட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லீம்கள் இன்று தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள். அந்தப்படி சொல்ல மற்ற மார்க்கக்காரர்களுக்கு ஏன் தையரிமில்லை? ஏனெனில், திரு. முகமது நபி சமீபகாலத்தில் தோன்றி சமீபகாலத்தில் ஏற்படுத்திய கொள்கைகள் ஆனதினாலும் அநேக விஷயங்களில் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கியதை யுடையதாய் இருக்கின்றது.

ஆகவே முஸ்லீம்கள் பகுத்தறிவுக்கு விரோதமாய் ஏதாவது இருந்தால் அது தங்களது மார்க்கக் கட்டளை அல்ல என்று தள்ளிவிடவும் அவற்றை நீக்கி விடவும் பகுத்தறிவுக்காரரையெல்லாம் தங்கள் சகோதரர்கள் என்றும், இஸ்லாம் என்றும் சொல்லவும் தயாராயிருக்க வேண்டும். அது மாத்திரமல்லாமல் அவர்கள் தங்கள் சமூகம் என்றும், அன்னிய சமூகம் என்றும் வித்தியாசம் பாராட்டக்கூடாது. எல்லோரையும் பகுத்தறிவு மார்க்கமாக ஆக்க முயற்சிக்க வேண்டும். உலகமெல்லாம் ஒரே மார்க்கமாவதற்கு - பகுத்தறிவு மார்க்கமாவதற்கு முஸ்லீம்கள் பாடுபட வேண்டும். அவர்களுக்கே அதிக சௌகரியமிருக்கின்றது. ஆதலால் அதுவே உலகமத போதகர் என்று சொல்லப்படும் திரு. முகமது நபி அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். இதுவே அவரது பிறந்தநாளாகிய இந்த முக்கியமான நாளில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

“மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும்?” என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது “உலக சமாதானம் ஏற்பட்டு விட்டது” “சாந்தி ஏற்பட்டு விட்டது” என்று சொல்லப் படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தானிருக்கக் கூடும் என்று கருதுகின்றேன். ஏனெனில் அது சமூக ஒற்றுமை, சமூக சமத்துவம் ஆகிய காரியங்களில் உலகில் மற்றெல்லோரைக் காட்டிலும் அதிகமான கவலை எடுத்து வருகின்றது.

துருக்கியையும், ஆப்கானிஸ்தானத்தையும் பார்க்கும்போது அவை எவ்வித சீர்திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளத் துணிந்து தயாராயிருக்கின்றதாகவே காணப்படுகின்றது.

ஆகவே இந்திய முஸ்லீம்களும் அதைப் பின்பற்றினால் இஸ்லாம் கொள்கைகள் உலகக் கொள்கைகளாவதில் எவ்வித கஷ்டமும் இருக்காதென்றே கருதுகிறேன்.

(குறிப்பு : கோவை அதார்ஜமாத் மஜீத் கமிட்டியார் நடத்திய முகமது நபி பிறந்த நாள் கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 23.08.1931)

Pin It