கீற்றில் தேட...

 

நான் இதற்குமுன் இந்த ஊருக்கு (வீரகலூர்) வந்ததில்லை. இந்த ஊர் மக்கள் நான் வர வேண்டும் என்று வெகு ஆவலாய் இருப்பதாகவும், ஆகவே ஒருமுறை வரவேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டதால், என்னுடைய திருச்சி மாவட்ட சுற்றுப்பயணத்தில் இந்த ஊரையும் சேர்த்துக் கொண்டேன். நான் இந்த ஊருக்கு முதன் முறையாக வந்தபோதும் உங்கள் அன்பும், ஆதரவும், உற்சாகமும் எனக்குப் பெருமகிழ்ச்சியினை அளிக்கின்றன.

எங்களுடைய கொள்கைகள் பட்டணத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் இதுபோன்ற கிராமங்களிலெல்லாம் பரவியிருக்குமா என்று சந்தேகப்பட்டுக் கொண்டே புறப்பட்டேன். ஆனால் வழியெல்லாம் சிறுசிறு கிராமத்தில் கூட இயக்கத் தோழர்கள் 100, 500-என்று கூடி எங்களுக்கு வரவேற்பு அளித்து தங்கள் அன்பைக் காட்டினார்கள். இதையெல்லாம் கண்டு நான் பெருமமிழ்வு எய்துகிறேன்.

ஏனென்றால் எங்கள் கொள்கைகளுக்கு எங்கள் இயக்கத்திற்கு விரோதிகள் வெகு பேர் உண்டு. எங்களது கொள்கைகள் நாஸ்திகக் கொள்கைகள் என்றும், "கடவுள் இல்லை" என்று கூறும் "கயமைக்குணம் படைத்தவர்கள்" என்றும், வகுப்புவாதம் பேசுவதே எங்கள் தொழில் என்றும், பலர் எங்கள் மீது பொதுமக்களிடத்தில் விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அப்படி அவர்கள் பிரசாரம் புரிந்தாலும், நானறிந்தவரையில் அவர்களின் விஷமப் பிரச்சாரத்தை நம்பி எங்களை வெறுப்பவர்கள் இல்லை என்பதுதான். அதற்கு மாறாக எங்களைப் போற்றிப் பாராட்டி, நாங்கள் காரியங்களை நடத்த எங்களுக்கு ஊக்கத்தையும் கொடுத்து வருகிறார்கள்.

உலகத்தில் கடவுளே இருக்கக் கூடாது, ontentpane">மதமே இருக்கக்கூடாது என்று பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அன்றியும் எங்களுக்கென்று ஒரு தனிமதத்தை வைத்துக்கொண்டு, எங்களுக்கென்று ஒரு தனி கடவுளை வைத்துக் கொண்டு, அதைப்பற்றி உயர்வாக உங்களிடத்தில் கூறி, அப்படிப்பட்ட இயக்கத்தில் வந்து சேருங்கள் என்றும் அழைக்கவில்லை. எங்கள் நோக்கமெல்லாம், நம்முடைய மக்கள் கடவுள், மதம், அரசியல் விஷயங்களில் உள்ள மூடநம்பிக்கையை ஒழித்து அறிவு பெற வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மதத்துக்காரரும் தங்கள் தங்கள் மதந்தான் உயர்ந்தது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்வர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதெல்லாம் அவரவர்களுடைய அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து எது சரி, எது தவறு என்று பார்த்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான்.

"ஏன் ஒரு குறிப்பிட்ட மதம், கடவுள், அரசாங்கம் இவைகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது" என்று உங்களிலே பலர் கேட்கலாம். இந்தப்படியான மதம், கடவுள், அரசாங்கம் முதலியவைகள் அவரவர்கள் கட்சிக்குப் பயன்படுகிறதே தவிர மக்களை ஒழுங்குப்படுத்தி அவர்களை அறிவுள்ளவர்களாக்கி, மக்களுக்குள்ளே இருக்கும் உயர்வு தாழ்வுகளை ஒழித்து, எந்தவிதமான சமத்துவத்தையோ, ஒழுங்கையோ, ஒழுக்கத்தையோ நிலை நாட்டவில்லை என்பதால்தான்.

வேறு மதத்தவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. எந்த மதம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், அந்த மதம் மனித சமுதாயத்தைப் பிரித்து வைத்திருக்கிறது. நம்முடைய மதம் இன்னது என்று கூறிக்கொள்ளத்ததான் முடிகிறதேயொழிய, வேறென்ன இவைகளால் லாபம்.

இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் இன்னும் மோசம். 4-அல்ல 400-அல்ல 4000-க்கும் மேற்பட்ட வகையாக மக்களைச் சாதி பேர் சொல்லி இந்து மதம் மக்களை ஒன்று சேரவொட்டாமல் பிரித்து வைத்திருக்கிறது. ஒரு மதத்திலேயே 1000-கணக்கான சாதிகள் - அதிலே ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்ற நிலையென்றால் இது எப்படி நியாயம் ஆகும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவனுக்குப் பெயர் பிராமணன், மற்றவனுக்குச் சூத்திரன், கடைசியானவனுக்குப் பஞ்சமன் என்ற பட்டம் இவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது, தொடக்கூடாது, பார்த்தால், தொட்டால் தீட்டு என்று எழுதி வைத்துக் கொண்டு இந்த 1950-ஆம் ஆண்டிலேயும் அதையே நடைமுறையில் செய்கிறார்கள்.

அதுபோலவே கிருஸ்துவ மதத்தை எடுத்துக் கொண்டாலும், நம் நாட்டைப் பொறுத்தவரையில் அது மோசமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தை விட கிருஸ்துவ மதம் பல மடங்கு மேல் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நம்நாட்டைப் பொறுத்தவரையில் இந்து மதத்தைப் போலவே பாப்பாரக் கிருஸ்துவன் என்பது போன்று பல சாதிப்பிரிவுகள் இருந்து கொண்டு, அவைகளின் பெயரால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டும் வருகின்றது. எவனாவது ஒருவன் இந்து மதத்தை விட்டு கிருஸ்துவ மதத்திற்குப் போவானென்றால் இந்து மதத்திலே தனக்கிருக்கும் இழிநிலை, அவைகளிலே போதிக்கப்படும் மூடக் கருத்துக்கள் இவைகள் பிடிக்காமல், அறிவு, நாகரிகம், சமத்துவம் பெறவேண்டுமென்றுதானே கிருஸ்துவ மதத்திற்குப் போயிருப்பான். வேண்டுமானால் சில பார்ப்பனர்கள் இல்லை என்று கூறலாம். பணம் கொடுத்து பாவையரைக் காட்டி நம்மவரை மயக்கினார்கள் என்று கூறுவார்கள். அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் அந்தப்படி பணத்தைக்காட்டி அவர்களை மதம் மாறும்படி செய்திருந்தால் இப்போதுள்ள கிருஸ்துவர்கள் பணக்காரர்களாய் இருக்க வேண்டும். அப்படி யாரும் பணக்காரர்களாய் இருப்பதாகவும் தெரியவில்லை. அல்லது பெண்களைக் காட்டி ஏமாற்றினார்களென்றால் கிருஸ்தவத் தாய்மார்கள் வெள்ளைக்காரப் பெண்மணிகளாக இருக்க வேண்டும். அதுவும் இல்லை. பின் ஏன் கிருஸ்துவ மதத்திற்கு மாறினார்கள் என்று கேட்டால், இந்து மதத்திலே நமக்கு இருக்கும் இழிவு ஒழியும், அறிவு நாகரிகம் வளரும் என்பதால் தான். இன்னமும் நான் கூறுவேன், இந்த நாட்டிற்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் கிறிஸ்துவர்கள் தான் என்று. கிருஸ்துவ ஆங்கிலேயன் இங்கு வராதிருந்தால் நம் மக்கள் இன்றும் நாய்கள், பன்றிகள் நிலையிலேயேதான் காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள். அவனால் ஏதோ நமக்கு அறிவு சிறிது வளர்ந்து, இன்று ஓரளவு நாகரிகம் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்தக் கருத்தை எந்தப் பார்ப்பனரிடமும் வாதாடி அவைகளை ஒத்துக் கொள்ளம்படி செய்ய என்னால் முடியும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதத்தில் தங்கள் நலன் கருதி இந்துக்கள் சேர்ந்தாலும், அதிலேயும் சாதிப்பிரிவு இருக்கிறது. ஆகவேதான் அதிலேயும் சீர்திருத்தம் வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

அதுபோலவே முஸ்லீம் மதமும் இந்த நாட்டு மக்களை எவ்வளவோ சீர்திருத்தியிருக்கிறது. நம்முடைய நாட்டு மக்கள் அத்தனை பேரும் சமுதாயத்தில் ஒன்று என்று இல்லாவிட்டாலும் கூட முஸ்லீம்களைப் பொருத்த மட்டிலுமாவது, தங்களுக்குள் சாதி பேதம், உயர்வு, தாழ்வு என்பது இல்லாமல் செய்துவிட்டார்கள். முஸ்லீம் என்று சொன்னால் அவர்கள் காரியத்திற்கு ஒன்றுபட்டு, கட்டுப் பாடாக இருந்து செயலாற்றும் பண்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே கிருஸ்துவ, முகமதிய மதத்தை விட இந்து மதம் மட்டம் என்பதோடு மட்டுமல்ல, அவைகளில் இல்லாத பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள் இந்து மதத்திலே இருக்கின்றன. ஏனென்றால் இதில்தான் பித்தலாட்டத்தையே போதிக்கும் வேத புராண, இதிகாசங்கள் நிறைந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஆயிரங்கடவுள்கள் அதன் பேரால் ஆபாசமான கற்பனைகள் நிறைந்திருக்கின்றன.

அந்தக் கடவுள்கள் உருவ பேதம், குண பேதம் கொண்டு நம்மைவிட மோசமான நிலையிலிருக்கின்றன. பல பொண்டாட்டிகள் உடைய கடவுள், தேவடியாள் வீட்டுக்குச் செல்லும் கடவுள், ஆண்டுதோறும் திருமணம் செய்து கொள்ளும் கடவுள் - ஆக இந்தப் பலரகக் கடவுள்கள் இந்து மதத்தில்தானே இருக்கின்றன.

கிருஸ்தவ மதத்திலும் சில குறைபாடுகள் இருக்கின்றன. முஸ்லீம் மதத்திலும் ஜாதி பேதம், உருவக் கடவுள், ஆபாசக் கடவுள்கள் இல்லை என்றாலும் சில குறைபாடுகள் உண்டு. இல்லை என்று எந்த முஸ்லீமாவது மறுத்துக் கூற முடியுமா? நல்ல கடவுள்கள் என்றால் பணக்காரன் என்று ஒருவனும், பிச்சையெடுத்து வாழவேண்டும். என்று மற்றொருவனும் என்று ஏழை பணக்காரனைக் கொண்ட எந்த மதமும்; கடவுளும் உண்மையான மதம் ஆகாது. ஒருவனுக்குப் பூமி இருக்க வேண்டுமானால் காடுவெட்டி கழனியாக்கிச் செய்திருந்தால் தான் முடியும். அப்படி ஏற்பட்ட சொத்துக்கள் தானே எல்லாவகையான அத்தனையும். அவை ஏன் ஒரு தனி மனிதனிடத்தில் 100-ஏக்கரா 50-ஏக்கரா என்று இருக்க வேண்டும். மற்றவன் வயிற்றுக்கு இல்லையே என்று வாடி இருக்க வேண்டும். ஒருவனிடத்தில் ஏன் 2-அடுக்கு, 3-அடுக்கு மாடி வீடுகள் பல இருக்க மற்றொருவன் குந்தக் குடிலற்று கதறி அழும் நிலையில் இருப்பது. நாணயமான, யோக்கியமான கடவுள் என்றால் மக்களுக்கு இத்துறையில் இதுவரை செய்ததென்ன? இந்த நாட்டில் எத்தனை பேர் படிப்பற்றவர்கள்? படிக்க வசதியில்லாதவர்கள். இவர்களுக்கு இந்தக் கடவுள் சாதித்ததென்ன?

ஆகவேதான் நாங்கள் கூறுகிறோம் "எங்கள் கடவுள், எங்கள் மதம், எங்கள் சாஸ்திரம்" என்று ஒவ்வொருவரும் கூறுவதும் அடிப்படையில் ஒன்றுதான். கலரில் தான் வித்தியாசம் இருக்கிறதென்று. ஏன் என்றால் அவைகள் அந்தக் காலத்திலே சரியாக இருக்கலாம். அந்தக்காலத்து மக்கள் அறிவுக்கேற்ற முறையில் அறிவுத்தெளிவு ஏற்படாத அந்தக் காலத்தில் இந்த மாதிரியான காரியங்கள் செய்தார்கள்.

கடவுள்கள் அத்தனையும் நம்முடைய கற்பனைகளே. இந்துக் குழந்தைக்கு இந்துக் கடவுளரைப் பற்றியும், மகமதியக் குழந்தைக்கு கடவுளைப்பற்றியும், கிருஸ்துவக் குழந்தைக்குக் கிருஸ்துவக் கடவுளைப் பற்றியும் அந்தந்த மதத்தவர்கள் சொல்லிக் கொடுத்துத்தான் தெரிகிறதே தவிர, இயற்கையிலேயே கடவுள் உணர்ச்சி அக்குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை.

சாதாரண மனிதர்களிலிருந்து சற்று உயர்ந்த மனிதர்கள் அக்கால மக்களுக்குத் தங்களின் அக்கால அறிவுக்கு ஏற்ற முறையிலே சில பல சட்டம் செய்தார்கள். கிருஸ்துவ மதத்துக்கு யேசுவும், முகமதிய மதத்துக்கு நபியும் தந்தை என்று என்று சொல்லவது இப்படித்தான். ஆனால் இந்து மதத்துக்கு அப்படிக் குறிப்பிட்ட ஓர் ஆளைச் சொல்ல முடியவில்லை. மனுவிலிருந்து ஆரம்பித்து யக்ஞவல்லர், பிரகஸ்பதி, சுக்கிராச்சாரி, பீஷ்மர் என்று போகிறான். காரணம் என்னவென்றால் இந்து மதம் காட்டுமிராண்டி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆகவேதான் அவனுக்கென்று ஒரு தனியாளைக் காட்ட முடியாத வகையில் அது குழம்பிப்போய் கிடக்கிறது. கிறிஸ்துவ மதம் அப்படியில்லை. அது மக்கள் சற்று நாகரிகம் அடைந்த காலத்தில் செய்யப்பட்டது. ஆகவே அதிலே சில அபிவிருத்திகள் காணப்படுகின்றன. முஸ்லீம் மதம் இன்னும் சற்று பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதமாதலால் அதிலே பெரும் அளவுக்கு நல்லவைகள் இருக்கின்றன.

கிருஸ்துமதம், முகமதிய மதத்திற்கு முன் இந்து மதந்தான் இருந்திருக்க வேண்டும். ஆரியர்களில் இந்தியாவுக்குள் வந்த ஒரு பகுதியினர் தங்கள் நாட்டில் தாங்கள் அனுசரித்து வந்த பழக்கங்களை வைத்து, இந்த நாட்டுக்கு ஏற்றவாறு தங்கள் கொள்கையை வைத்துக் கொண்டார்கள். அதுபோலவே அய்ரோப்பாவுக்குச் சென்ற ஆரியர்கள் அங்கே தங்கள் நாட்டுக் கொள்கைகளை நடத்தி வந்திருக்க வேண்டும். இன்னும் பார்த்தால் கிருஸ்தவ மத பழைய ஏற்பாடு, முகமதிய மதத்திற்கு முந்திய பழைய ஏற்பாடு இவைகளில் இந்துமத ஆபாசங்கள் போல நிறைந்திருக்கின்றன. ஏசுநாதர் கோவில்களை கள்ளர் குகை என்று கூறினார். ஆகவே அவர் காலத்திலும் அவருக்கு முன் காலத்திலும் கோயில்கள் இருந்திருக்க வேண்டும். யேசுநாதர் உருவ வணக்கத்தையும் ஏற்கவில்லை. ஆகவே அதுவும் அவருக்கு முன் இருந்திருக்க வேண்டும். அவ்வாறேதான் இஸ்லாமியர்கள். ஆரியர்கள் மதத்தில் ஆண் உயர்ந்தவன், பெண்- தாழ்ந்தவள் என்றும், கடவுளுக்கு இன்ன உருவம் என்றும் இருந்து வருகிறது. இதைக் கண்டு ஆணும் - பெண்ணும் சமம் என்ற நீதியினையும், உருவக் கடவுள் வெறுப்பையும் போதித்தார்கள், முகமதியர்கள். ஆகவே இந்து மதத்தில் இருந்த சில குறைகள் களைந்து ஏற்படுத்திய மதங்கள்தான் கிறிஸ்துவ, முகமதிய மதங்கள். குறைகளை நீக்காமல், குறை களைய முற்படுவோரை ஆதரிக்காமல், அவர்களை நாஸ்திகர்கள் என்று தூற்றி பழைய ஏற்பாட்டையே ஒரு குறிப்பிட்டக் கூட்டம், தங்கள் வயிற்றை வளர்க்க வைத்துக் கொண்டு, இன்றும் மாற்றாமல் இருப்பதுதான் இந்து மதம்.

இந்து மதத்தில் இருக்கும் புரோகிதர், அர்ச்சகர் போல் கிறிஸ்துவ, முகமதிய மதத்தில் பிறவியில் கிடையாது. இந்து மதத்திலே "பறையனாய்" இருக்கும் ஒருவன் கிறிஸ்துவனாக ஆனால் பாதிரிப் படிப்புப் படித்து பாதிரியாகலாம். அதுபோல் ஒரு "சக்கிலி" முஸ்லீமானால் மௌல்வி ஆகலாம். ஆனால் இந்து மதத்திலே அந்தத் தொழிலைச் செய்ய ஒரு கூட்டந்தான் அருகதையுடையது. அவர்கள்தான் செய்ய வேண்டும் என்று சாத்திரத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது.

ஆகவே அந்தக் காலத்தில் அவையெல்லாம் சரியாய் இருந்திருக்கலாம். அப்போது மைக் இல்லை; மின்சாரம் விளக்கு இல்லை, ஆகாயக் கப்பல் கிடையாது. ரயில் இல்லை, மோட்டார் இருந்தது கிடையாது. ஆனால் இன்று நாம் விஞ்ஞான காலத்திலே, அறிவு உயர்ந்த நிலையிலே இருக்கிறோம். இந்தக் கால நிலைக்கேற்ற மாற்றங்களை எல்லாத் துறையிலும் அவைகளில் காண வேண்டாமா?

நான் கூறுகிறேன், இன்று ஓர் ஏசு, முகமது நபி தோன்றினால் நிச்சயமாய் தங்கள் பழைய ஏற்பாடுகளை அழித்து விட்டு, இக்கால முறைக்கேற்றவாறு புதிய ஏற்பாடு செய்வார்கள். ஏசுவுக்கும், முகமதுவுக்கும் பின்னர் அந்த இரண்டு மதங்களிலும், இந்து மதத்திலும் "தெய்வீக மனிதர்கள்" தோன்றவில்லை ஏன்? மக்களுக்குக் கஷ்டங்கள் இல்லையா? படிப்பு இல்லை, சாப்பாடு இல்லை, கட்டத் துணியில்லை, இருக்க வீடு இல்லை என்ற நிலைமைதானே இன்றும் இருக்கிறது.

சிலர் கூறுவார்கள் இவை கடவுள் செயல் என்று. ஆனால் அது உண்மையாய் இருந்தால் நீ ஏன் பார்ப்பான், நான் ஏன் பறையன் என்ற எண்ணம் நமக்குத் தோன்றக் கூடாதல்லவா? ஏழை ஏன் பணக்காரனோடு போட்டியிடுகிறான்? "கடவுள் அப்படிச் செய்தார் என்றால், இந்தமாதிரி போட்டி எண்ணங்கள் தோன்றக் கூடாதே!"

அதேமாதிரி கடவுளே பல சாதிகளைப் படைத்தார் என்றால், இன்று ஏன் நாம் சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறோம்; துக்கப்படுகிறோம்? அதை குறித்து அந்தக்காலத்தில் அவர்கள் தெய்வீக மனிதர்களாய் கொண்டாடப்பட்டார்கள். அறிவு பெற்ற இந்தக் காலத்தில் மக்களுக்கு மனக்குறை இருக்கிறது. சாதி இழிவு நீங்கவேண்டும். நீ படிக்க வேண்டும், உத்தியோகம் வேண்டும், பூமி வீடு வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விட்டது. அன்றைய தின மக்கள் அறிவுக்கு அவர்கள் ஒத்துக் கொண்டார்கள், தெய்வீக புருஷர்கள் என்று. இன்று யாரும் எவரையும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

"உழைப்பது நான்; உல்லாசமாய் உட்கார்ந்து உழைக்காமல் உண்ணுபவன் அவனா?" என்று கேட்பவரிடத்தில் யாராவது, போன ஜென்மத்தில் நீ செய்த பாவத்திற்கு இது தண்டனை, கடவுள் ஆணை என்று கூறினால் ஒத்துக்கொள்வானா? மனிதனிடத்தில் இம்மாதிரி போட்டி எண்ணம் ஏற்பட்டவுடனேயே அவன் கண்களுக்குக் குறைபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. அந்தக் குறைபாட்டுக்குக் கடவுள் பொறுப்பாளியல்ல, நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்கள் - ஆனால் சிலர் தங்கள் மனத்திருப்திக்காக கடவுள் செயல் இது என்று கூறிக்கொள்ளுவார்கள்.

எனவே நம்முடைய கஷ்டங்களுக்குக் காரணம் கடவுள் அல்ல. சமுதாயச் சூழ்நிலை, அரசாங்கத் தன்மை, பித்தலாட்டமான மத சம்பிரதாயங்கள் ஆகிய இவைகள்தான் காரணம். இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒழிந்தால் தான் நாம் முன்னேற முடியும். மனிதனுடைய எண்ணங்கள் மாறினால்தான் நடப்புகள் மாறும். இதைத்தான் நாங்கள் கூறுகிறோம்.

உதாரணமாக ஒரு வீடு இருட்டாயும், மற்றொரு வீடு வெளிச்சமுள்ளதாயும் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். சன்னல் இருப்பதால் அந்த வீட்டில் வெளிச்சம் இருக்கிறது. சன்னல் இல்லாததால் இந்த வீடு இருட்டாய் இருக்கிறது என்று தெரிந்தால், இருட்டாய் இருக்கும் வீட்டுக்குச் சன்னல் வைத்துத்தானே ஆகவேண்டும். அந்தப்படி சன்னல் வைக்கும் போது இது ஆண்டவனுக்கு விரோதமென்று கூறினால் நியாயமா? அந்தப்படி கூறுவதை ஒப்புக் கொள்வோமா?

அதுபோல் தான் இருண்டிருக்கும் இந்தச் சமுதாயத்தை ஈடேற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாங்கள் கூறுகிறோம், எப்படி சன்னல் வைப்பதிலே ஆண்டவனைப் பற்றி அக்கறை கொள்ளமாட்டீர்களோ அது போல நீங்கள் உயர வேண்டிய இந்தக் காரியத்தைச் செய்வதற்கும் உங்களுக்குத் துணிவு வரவேண்டும்.

- 01.04.1950 அன்று வீரகலூர் (திருச்சி) பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. ('விடுதலை' 04.04.1950)

அனுப்பி உதவியவர்: மகிழ்நன்