மனிதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தினை எட்டிய காலம் தொட்டு மதம் என்ற நிறுவனமானது மானிட கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்து வந்துள்ளது என்பதனை வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. விடையறியா பல கேள்விகளுக்கான தற்காலிக விடையாய் மனிதர்க்கு அமைந்தது கடவுள் என்ற கற்பிதமும், மதம் என்ற நிறுவனமும் அதன் மூலம் நிலை நிறுத்தப்படும் நம்பிக்கைகளுமே ஆகும். நிறுவன மயமாக்கப்பட்ட மதங்கள் பொதுவாகவே சமூகத்தின் ஆதிக்க அதிகார வர்க்கத்தின் கொள்கைகளுக்கும், சிந்தனைகளுக்கும் எதார்த்த வடிவம் கொடுப்பதாகவே அமைந்துள்ளன. இந்த வகையினில் மானுட சமூக விடுதலையினைக் குறித்த விடயங்களை பகுத்தறிவுடன் அணுகிய சுயமரியாதைக்காரர்கள் மதம் என்ற நிறுவனத்தினை எவ்வாறு அணுகினர் என்று இக்கட்டுரை விவாதிக்க முற்படுகின்றது.

மதம் குறித்த சுயமரியாதை இயக்கத்தினரின் பார்வை

periyar 360மதங்களே பெரும்பாலான சமூகத் தீமைகளின் ஊற்றுக்கண் என்றும் (குடி அரசு. 04.09.1927; குடி அரசு. 28.06.1931.), சமூகத்தின் அனைத்துவித தீமைகளும் மதத்தின் பெயராலே இந்தியச் சமுதாயத்தில் நடைபெற்று வருகின்றன என்றும் சுயமரியாதை இயக்கத்தினர் கருதினர். (குடி அரசு. 04.09.1927.) அதேபோல், இந்தியாவிலுள்ள அனைத்துவித பரிதாபகரமான நிகழ்வுகளின் மூலம் என்பது மதம் என்ற நிறுவனத்திலேயே உள்ளது என்ற சுயமரியாதைக்காரர்கள் (குடி அரசு. 24.11.1929.), சமூகத்தினில் மதச் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தனர். (குடி அரசு. 04.09.1927.) தந்தை பெரியார் அவர்கள் மத அடிப்படைவாத உணர்வுகளே அனைத்துவித சமூகத் தீமைகளுக்கும் மூல காரணம் என்றதுடன், சமுதாய நலன்களைக் கருதி கடவுளைப் பற்றியும், மதங்களைப் பற்றியும் அவற்றிலுள்ள குற்றங்களைப் பற்றியும் மக்களிடம் விளக்க வேண்டும் என்றார். (விடுதலை. 24.10.1948.)

தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகையில் "அரசியலில் உள்ள சமூகத் தீமைகளை ஒழிக்க கடுமையாக உழைக்கின்றோம். ஆனால், சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க திட்டமிடுகையில், அது பயனற்றதாகவே உள்ளது. ஏனெனில் மதக் கோட்பாடுளே அத்தகைய கொடுமைகளுக்கு எல்லாம் ஆதாரமாக உள்ளன" என்றார். (குடி அரசு. 23.10.1927.) அரசியல் சம்பந்தமான கூட்டங்களில் அரசியலைப் பற்றி விவாதிக்கின்ற பொழுது, "சமுதாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில், சமுதாயத்தின் குற்றங்களைப் பற்றி விரிவாக விவாதித்து அவற்றினை சமூகத்தில் இருந்து நீக்கிட வழிவகைகளைச் செய்திட வேண்டும்" என்றார் தந்தை பெரியார் அவர்கள். (விடுதலை. 24.10.1948.)

மாற்றம் என்பதே காலத்தின் நிசர்சனம்

"முன்னோர்கள் கூறியது என்றோ, முன்னோர்கள் செய்தது என்றோ எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. உதாரணத்திற்கு, நெருப்பு என்பது என்னவென்று தெரியாத காலத்தில் சிக்கிமுக்கிக் கற்களால் நெருப்பை உண்டாக்கிய மனிதர்கள் ‘அந்தக் காலத்துக் கடவுளாகவும்’ ‘எடிசன்களாகவும்’ இருந்திருக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட அறிவியலைவிட மேலானதொரு தொழில் நுட்பமான தீப்பெட்டி வந்தபிறகு சிக்கிமுக்கிக் கற்களின் தேவைகள் என்பது அவசியமற்று போகின்றன. ஆனால் இன்றும் நெருப்பினை உருவாக்க அத்தகைய கற்களைத் தேடுபவர்கள் முட்டாள்கள் என்றே இந்த உலகம் கருதும். அறிவு என்பது காலத்திற்கு ஏற்றவாறாகத் தான் இருக்கும். அதுபோல், ஒரு காலத்தில் எது பெருமையாகக் கருதப்பட்டதோ, அதையே எக்காலங்களிலும் பெருமையாகப் பேச முடியாது" என்ற தந்தை பெரியார் அவர்கள், மாற்றங்களின் மீது தீராத பற்றினைக் கொண்டிருந்தார். (விடுதலை. 24.10.1948.)

"மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்து, மனிதர்களை மனிதர்களாக மதித்து நடத்துவதுதான் மதமாக இருக்க வேண்டும்" என்ற தந்தை பெரியார் அவர்கள் (குடி அரசு. 05.06.1948.), "மதமும் கடவுள் நம்பிக்கையும் மனித சமூகத்தின் வளர்ச்சியினைப் பெரிதும் தடுத்து நிறுத்துகின்றவைகள்" என்றார். (விடுதலை. 28.06.1973.) "அறிவுள்ள, நாகரிகமுள்ள மக்களுக்குண்டான அழகு என்பது எவ்வளவு விரைவாக மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடுகிறோம் என்பதேயாகும்". (விடுதலை. 24.10.1948.)

"ஒருவருக்கு ஒரு காரியம் சரியென்று பட்டால், அது சாத்திர சம்மதமா, விரோதமா என்று எதிர்பார்ப்பது அறியாமையும், அடிமைத்தனமும் ஆகும். எந்தக் காலத்திலோ, எங்கிருந்தோ, யாராலோ, எதற்காகவோ, யாருக்கோ எழுதிய ஒரு புத்தகத்தை, இந்தக் காலத்திற்கு, மக்களின் நன்மையில் கவலை கொண்டவர்களால் எழுதப்பட்டது என்றும், அதன்படி நடந்துதான் தீர வேண்டும் என்றும், கருதுகின்றவர்கள் மனிதர்கள் அல்லர் என்பதுதான் தனது மாற்றமுடியாத உறுதியான அபிப்பிராயம்" என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 27.10.1929.)

மனித இயற்கைக்கு எதிரானதே மதங்களாகும்

"மனித இயற்கைக்கு எதிரான மதங்களும் கண்மூடிக் கொள்கைகளும் மண்மூடிப் போக வேண்டும்" என்ற சுயமரியாதை இயக்கத்தினர் (குடி அரசு. 23.09.1928.), "இயற்கை உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும், முறைகளும் சரிவர நடைபெறாது" என்றும், "எங்காவது நடைபெற்றாலும் நிலைத்திருக்க முடியாது" என்றனர். (குடி அரசு. 28.09.1930.) "சமூக சீர்திருத்த விடயங்களில் பொது மக்களின் விருப்பத்தினை கண்டு யாரும் பயப்படக் கூடாது" என்ற தந்தை பெரியார் அவர்கள் (குடி அரசு. 28.09.1930.), "விவாகரத்து போன்ற முயற்சிகளுக்கு யார் எதிராக இருந்தபோதிலும் அதற்கு ஒரு சிறிதும் இலட்சியம் செய்யாமல், அதற்கு இடையூறான மதங்களையும், ஆதாரமான கடவுள்களையும் ஒழித்தாக வேண்டும்" என்றார். (குடி அரசு. 23.09.1928.)

"நடைமுறையில் இருந்து வரும் கடவுளும், மதமும், சாத்திரமும், சட்டமும் அவற்றின் வழிவந்த பழக்கவழக்கங்களும் சாதாரண மக்களை இழிவுபடுத்தவும், அடிமைப்படுத்தவும் ஆரியர்களால்/ பார்ப்பனிய கருத்துக்களால் உண்டாக்கப்பட்டவையாகும். மானமுள்ள ஒரு சிலராவது இம்மாதிரி மூடநம்பிக்கைகளை ஒழித்து சீர்திருத்தக் காரியங்களைச் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு பயனற்ற காரியங்களை விட்டொழித்துப் பயனுள்ள முற்போக்கான காரியங்களைச் செய்தல் என்பது சமூகத்தின் அவசியம்" என்ற தந்தை பெரியார் அவர்கள் (விடுதலை. 24.10.1948.), "திராவிட மக்களுக்கு ஒழுக்கம் வேண்டுமானால், மனிதத் தன்மை பெற வேண்டுமானால், சாத்திர புராண சம்பிரதாயங்களிலும், மதங்களிலும், உள்ள பற்றுதலையும், பக்தியையும் உடனே விட்டொழிக்க வேண்டும்" என்றார். (விடுதலை. 24.10.1948.)

"கடவுளர்கள் மக்களை பாதுகாக்க வேண்டுமா, அல்லது மக்கள் கடவுளரை பாதுகாக்க வேண்டுமா" என்ற தந்தை பெரியார் அவர்கள், "கடவுளர் என்பவர்கள் எல்லாம் மக்களை அன்பின்வயம் கொள்ளச் செய்யவே வேண்டும்" என்றும், "அதற்காகவே இந்த உலகத்தில் மதங்கள் தோன்றியிருக்க வேண்டும்" என்றும் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 18.09.1927.) "ஆனால், சனாதன ‘இந்து’ மதமோ இந்த வகைகளில் எல்லாம் மாறுபட்டு, மனிதர்களை அடிமைகளாக்கவே செய்கின்றது. இப்படி எல்லா வகையான அடக்குமுறைகளும் மதத்தின் பெயரால் ஏற்படுமாயின் அத்தகைய மதத்தினை நாம் அழிக்க வேண்டும்" என்று தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். (குடி அரசு. 15.04.1928.)

மதமும், ஒழுக்கமும்

"அதுமட்டுமல்லாமல், சனாதன ‘இந்து’மதக் கடவுளர்களின் தொன்மங்களானது விஷமம் நிறைந்ததாகவும், (mischievous activities) விபச்சாரத்தினை சமூகத்தினில் ஊக்கப்படுத்துவதாகவும் இருந்து வருகிறது." (குடி அரசு. 24.02.1929; விடுதலை. 24.10.1948.)

"பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன ‘இந்து’ மதத்தில் உள்ள தெய்வங்கள் எல்லாம் பொதுவாகவே தீய செயல்களுக்கான அடையாளங்களாகவே இருந்து வருகின்றன." (குடி அரசு. 04.09.1927.)

"சனாதன ‘இந்து’ மதக் கடவுளர்கள் சூதாட்டம், துரோகம், வஞ்சகம், திருட்டு, ஏமாற்று, விபச்சாரம், கொலை, கொள்ளை, மற்றும் சித்திரவதை போன்ற பல சமூகத் தீமைகளுக்கு வழிகாட்டும் காரணிகளாக பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ உள்ளன. அவ்வாறு இருப்பின் அக்கடவுளர்கள் எப்படி மக்களுக்கு ஒழுக்கமான வாழ்வினை போதிக்க முடியும்" என்ற வினாவினை தந்தை பெரியார் எழுப்பினார். (குடி அரசு. 04.09.1927.)

"மதச் சடங்குகளும் திருவிழாக்களும் சனாதன ‘இந்து’ மதக் கடவுளர்களின் எதிர்மறை (ஒழுக்கக்கேடான) குணங்களையே (notorious characteristics) பக்தர்களிடம் ஆழமாக விதைக்கின்றன." (குடி அரசு. 04.09.1927.)

"ஒழுக்கமான வாழ்க்கைக்கான வழிமுறைகளை மதத்தின் வழி கண்டறிய முடியாது" என்றும், "மதத்தின் வழி நம்மால் சடங்குகளை மட்டுமே செய்ய இயலும்" என்றும் தந்தை பெரியார் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 18.09.1927.)

சனாதன/‘இந்து’ மதப் புராணங்களின் அடிப்படையில் கடவுளர் சிலைகளுக்கு ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ பல மனைவிகள் உள்ளதாக குறிப்பிடுகின்றன. அது போதாதென்று, ஒவ்வொரு வருடமும் அந்த கடவுளர் சிலைகளுக்கு திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டு வருவதுடன், அந்தக் கடவுளர்களுக்கு எண்ணிலடங்கா காமக்கிழத்திகள் இருப்பதாக கற்பிக்கப்பட்டு சடங்குகள் செய்யப்படுகின்றன. இது போன்ற சடங்குகளைச் செய்ய வேண்டியதன் அவசியங்களைக் குறித்து சுயமரியாதை இயக்கத்தினர் கேள்விகளை எழுப்பினர். (குடி அரசு. 05.06.1948; விடுதலை. 24.10.1948.)

"சமூகத்தில் ஆண்கள் வணங்கும் ஆண்கடவுளர்களே ஆணாதிக்கத்தின் குறியீட்டு பிரதிநிதித்துவமாக விளங்கி வந்து இருக்கின்றனர்" என்று இராகவன் தனது “ஜீவகாருண்யச் சமயம் மகளிர் உரிமையை மறுக்குமா?” என்ற கட்டுரையினில் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 06.12.1931.)

"சனாதன ‘இந்து’ மதமானது பெண்கள் உரிய காவல் இல்லாமல் கற்புடனிருக்க முடியாது என்று வரையறை செய்கின்றது." (குடி அரசு. 23.09.1928.)

"மேலும், சனாதன ‘இந்து’ மதக் கடவுளர்கள் தங்களின் மனைவிமார்களை கைகளிலும், நாவுகளிலும், தோள்களிலும் இருப்பதாக காட்சிப்படுத்துவதன் மூலம் மக்கள் அத்தகைய கடவுளர்களிடமிருந்து நற்செயல்களை ஏதும் கற்க இயலாததுடன், அவர்களைச் சார்ந்த பெண்களைக் கூட சமமாகவோ, மதிப்புடனோ நடத்த முடியாதவர்களாக ஆக்கப்படுகின்றனர். மேலும், இத்தகைய கற்பிதங்கள் எல்லாம் சமூகத்தில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் கூட அடிமைத்தனத்திலேயே நிரந்தரமாக இருக்க வழிவகைச் செய்கின்றது" என்று தந்தை பெரியார் குறிப்பிடுகின்றார். (பெரியார். 2004: 9-79.)

"இந்த வகையான சமூகமயமாக்கல் செயல்முறைகளானது அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதுடன், பொதுமைப்படுத்தவும் செய்து, இந்த நாட்டில் உள்ள எளிய மக்களை அடிமைப்படுத்தவும் செய்கின்றது." (பெரியார். 2004: 9-79.)

"இத்தகைய அமைப்புகளானது கடவுளரின் பெயரால் நடைபெறுமெனில் அத்தகைய கடவுளர்களை அழிக்கவேண்டும்" என்று இராகவன் அவர்கள் குறிக்கின்றார். (குடி அரசு. 06.12.1931.)

இது போன்ற மிகப்பெரிய சுமைகளானது அப்பாவப்பட்ட ஏழைக் கடவுளர்களின் தலைமேல் திணிக்கப்படுவதாக தந்தை பெரியார் எள்ளல் தொனியுடன் கூறி, சனாதன/‘இந்து’ மதமானது பெண்களை பொதுவாகவே விபச்சாரத் தீட்டு உள்ளவர்களாக உருவகப்படுத்துவதுடன், அவர்களை எப்பொழுதும் கண்காணிப்பிலே வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, மத அடைப்படை வாதங்களானது பெண்களுக்கு ஒரு போதும் சுதந்திரமும் விடுதலையினையும் கொடுக்க இயலாது என்று எடுத்துரைக்கிறார். (பெரியார். 2004: 9-79.)

மதமும், பெண்ணடிமைத்தனமும்

"கருணையற்ற கடவுளின் பெயராலும், சாரமற்ற சட்டங்களின் பெயராலும் கொடுமை நிறைந்த சாத்திரங்களின் பெயராலும், சுயநல சூழ்ச்சிக்காரர்கள் பெண் மக்களை வதை செய்து வருவது ஈண்டெழுதி முடியாது" என்றார் சுயமரியாதை இயக்க ஆளுமைகளுள் ஒருவரான நீலாவதி அம்மையார் அவர்கள். (குடி அரசு. 22.05.1932.)

"மதச் சம்பிரதாயமோ, புராண சம்பிரதாயமோ எது பெண்கள் விடுதலைக்கு விரோதமாக இருந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டியது தான்" என்றார் தந்தை பெரியார். (விடுதலை. 11.10.1948.)

"பகுத்தறிவினை வளர்க்க இயலாத, ஆணாதிக்கக் கருத்துக்களையே அடிநாதமாகக் கொண்ட மதக் கோட்பாடுகளே பெண்ணடிமைத் தனத்தின் மூலகாரணங்கள்" என இலட்சுமி அம்மாள் அவர்கள் இரண்டாம் சுயமரியாதைக்கான பெண்கள் மாநாட்டில் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 04.05.1930.)

"பெண்கள் எதையும் பகுத்தறிந்து பார்க்கவேண்டும். கல்லே கடவுள் என்று நம்புவதையும், பார்ப்பனர்களை கடவுள் அவதாரம் என்று நம்பி அவர்களுக்கு தானம் செய்வதையும் விட்டொழிக்க வேண்டும். சாணி, மூத்திரத்தைக் கலக்கி குடிப்பது என்பது மதம் அல்ல" என்றார் தந்தை பெரியார். (குடி அரசு. 05.06.1948.)

அதேபோல், "இந்தியப் பெண்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்கு அடிமையாகவும், அவர்களுடைய அனுபவப் பொருளாகவும், ஆண்களையே தெய்வமாகக் கருதி வணங்கித் தொண்டு செய்து கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்" என்ற தந்தை பெரியார் (குடி அரசு. 05.02.1933.), "பெண்களுக்கு மட்டுமே சில விதிகள் சனாதன ‘இந்து’ மதத்தில் விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதற்கு ஆதாரமாக உள்ள மனுதர்மத்தினைத் தழைகீழாக மாற்றியமைத்தால் ஒழிய, (திராவிடப்) பெண்களுக்கு விடுதலை சாத்தியம் என்பது இல்லை" என்று வாதிட்டார். (விடுதலை. 04.09.1946.)

சுயமரியாதை இயக்கத்தினர் ஒரு குறிப்பிட்ட சாதி, மதம், பண்பாடு என்ற எல்லைக் கூறுகளைக் கடந்தே மானுட விடுதலையினைப் பற்றி சிந்தித்து செயலாற்றினர். அந்த அடிப்படையினிலேயே, இஸ்லாமிய பெண் மக்கள் பெருமளவு பயன்படுத்தும் பர்தா/ கோஷா/ திரை அணியும் முறையினை ஒழிக்க வேண்டுமென்று இஸ்லாமியப் பெண்களின் உரிமை முழக்கமாய் 1928-ம் ஆண்டில் இலாயிலாபானோ பீகம் என்ற அம்மையார் அவர்கள் குடி அரசு இதழினில் ஒரு கட்டுரை எழுதுகின்றார். அவர் குறிப்பிடுவதாவது, "பர்தா/ கோஷா/ திரை அணியும் முறையானது முகம்மது நபி அவர்களின் காலத்திலோ அல்லது அவருக்கு பின் வந்த சிலரது காலத்திலும் கூட இருந்தது இல்லை" என்று குறிப்பிட்டு, "துருக்கியில் பர்தா/ கோஷா/ திரை அணியும் முறையானது நிறுத்தப்பட்டது போன்ற சீர்திருத்தங்கள் இந்தியாவிலும் நடைமுறைப் பெற வேண்டும்" என்ற தனது எதிர்பார்ப்பினைப் பதிவு செய்ததுடன், "இஸ்லாமிய மக்கள் கல்வி, செல்வம், கைத்தொழில் முதலியவற்றில் பிற்பட்ட நிலைகளில் உள்ளதுடன், வறுமையினாலும், அறியாமையினாலும் துன்புறுகின்றனர். இந்த பர்தா/ கோஷா/ திரை அணியும் வழக்கத்தினால் இஸ்லாமியப் பெண்கள் மற்ற சமூகங்களில் உள்ள மற்ற பெண்களினைப் போல உழைத்து சம்பாதிக்க வழியில்லாமல் போகின்றனது. இந்தியாவிலுள்ள மற்ற சமூகத்தினரைப் போல் இஸ்லாமியப் பெண்களும் முன்னேற வேண்டுமாயின் முதலில் இக்கொடிய வழக்கத்தை ஒழிக்கவேண்டும்" என்றும், "அதற்காக சங்கங்களை ஏற்படுத்தியும், பத்திரிகைகளின் மூலமாயும், இதர பலவழிகள் மூலமாயும் இஸ்லாமிய சகோதரிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்" என்றும் குறிப்பிடுகின்றார். (குடி அரசு. 14.10.1928.)

சுயமரியாதை இயக்க பெண் ஆளுமையான நானாவதி அவர்களும் பெண்கள் முக்காடு இட்டுக் கொள்ளும் பழகத்தை நீக்க வேண்டும் என்பதனை “சுயநல ஆண்கள் ஆதிக்கம் வேண்டாம் கோஷாமுறை ஒழிக” என்ற தலைப்பினில் வலியுறுத்துகின்றார். (குடி அரசு. 30.10.1932.)

சுயமரியாதை இயக்கத்தின் மதம் குறித்த பார்வை என்பது வெறும் வரட்டுவாதமாக மட்டும் ஒருபோதும் இருந்தது இல்லை. அதேபோல், சுயமரியாதை இயக்கத்தினர் கண்மூடித்தனமாக ஒரு குறிப்பிட்ட மத நிறுவனத்தினை மாத்திரமோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின் நம்பிக்கைகளை மாத்திரமோ எதிர்த்தது இல்லை. மானுட சமூக விடுதலை என்பது மட்டுமே சுயமரியாதைக்காரர்கள் வைத்த அனைத்துவித வாதப்பிரதிவாதங்களின் அடிப்படைக் கூறாக அமைந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

குறிப்புதவி நூல்கள்

• ஆனைமுத்து, வே. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1-6. சென்னை: பெரியார் ஈ.வெ. இராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, 2009.

• உண்மை

• குடி அரசு

• திராவிடன்

• பகுத்தறிவு

• புரட்சி

• பெரியார், தந்தை. பெண் ஏன் அடிமையானாள்?. சென்னை: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, 2004.

• ..., அழியட்டும் ‘ஆண்மை’. சென்னை: பெரியார் திராவிடர் கழகம், 2010.

• ராஜதுரை, எஸ்.வி. மற்றும் வ. கீதா. பெரியார்: சுயமரியாதை சமதர்மம். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம், 1999.

• விடுதலை

• வீரமணி, கி. தொகுப்பு. பெரியார் களஞ்சியம். சென்னை: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, 2010.

• Geetha, V and S.V. Rajadurai. Towards a Non-Brahmin Millennim: From Iyothee Thass to Periyar. Calcutta: Samya, 1998.

• …..., Revolt: A Radical Weekly from Colonial Madras. Chennai: Periyar Dravidar Kazhagam, (n.d.).

• Jeevanandam, S and Rekha Pande. Devadasis in South India: A Journey from Sacred to Profane Spaces. Delhi: Kalpaz

- முனைவர். ச.ஜீவானந்தம்

Pin It