periyar 433சேலம் ஜில்லா போர்டு தலைமைப் பதவிக்கு திருவாளர் எல்லப்ப செட்டியார் அவர்கள் வரக்கூடாதென்பதாக சேலத்திலுள்ள சில பார்ப்பனர்களும், அவர்களது தயவில் முன்னுக்கு வரலாமென்று கருதி அவர்களது வாலைப் பிடித்துக் கொண்டு திரியும் சில பார்ப்பனரல்லாதார்களும் ஒன்று கூடி சுயமரியாதைக்கு பங்கமுண்டு பண்ணும் கூட்டத்திற்கு அனுதாபம் காட்டி வருகிற மந்திரியைப் பிடித்துக் கசக்கி என்னென்னமோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து பார்த்தும் வேண்டும் என்றே மனச்சாட்சிக்கு விரோதமான எத்தனையோ அக்கிரமமான உத்திரவுகளைப் போடச் செய்தும் கடைசியாக கனம் மந்திரி சுப்பராயனுடைய அக்கிரமங்களையும் ஜெயித்து திருவாளர் எல்லப்ப செட்டியாருடைய (தலைவர்) தேர்தல் சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. பார்ப்பனர்களால் செய்யப்பட்ட இவ்வளவு சூழ்ச்சிகளாலும் கனம் சுப்பராயனின் மந்திரி தன்மை, மானங்கெட்டு நாடு சிரிக்க ஏற்பட்டதுதானே தவிர பார்ப்பனர்களுக்காவது திரு எல்லப்ப செட்டியாருக்காவது ஒரு வித நஷ்டமும் ஏற்பட்டுவிடவில்லை.

நமது நாட்டு சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொட்டு நாளது வரையில் யாராவது ஒரு பார்ப்பனரல்லாதார் எந்தப் பார்ப்பனருடைய பேச்சையாவது கேட்டு யோக்கியமடைந்ததாகவாவது முன்னுக்கு வந்ததாகவாவது, எந்த ஆதாரத்தைக் கொண்டாவது ருஜுப்பிக்க முடியுமா? பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்காக பார்ப்பனர்களுக்குக் கை ஆயுதமாக இருந்த பார்ப்பனரல்லாதார்களில் யாராவது ஒருவர் பார்ப்பனர்களால் சபிக்கப்படாமலும், தூஷிக்கப்படாமலும் தப்பித்துக் கொண்டவர்கள் ஒருவராவது இருக்கிறார்களா? இன்றைய தினம் பார்ப்பனர்களாலும் அவர்கள் பத்திரிகைகளாலும் வசை கேட்டுக் கொண்டு இருக்கும் தேசீய வீரர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பனர்களின் கை ஆயுதங்களாக இருந்து கொண்டு “தேசபக்தர்கள்”, “தேசாபிமானிகள்,” “தலைவர்கள்,” பிரமரிஷி”, “ராஜரிஷி” என்கிற பெருமையை அடைந்து கொண்டு இருந்தவர்கள்தான். ஆயினும் பார்ப்பனர்கள் தங்கள் வேலை முடிந்த உடனே திடீரென்று கீழே தூக்கிப் போட்டு மிதித்து விடுகிறார்கள்.

உதாரணமாக இப்பொழுது நமது நாட்டிலுள்ள பார்ப்பனர்களெல்லாம் ஒரே அடியாய் ஸ்ரீமான்கள் ஷண்முகம் செட்டியார், வரதராஜுலு நாயுடு, எஸ்.முத்தையா முதலியார் ஆகியவர்களை வைத வண்ணமாக இருக்கிறார்கள். இவர்களை இதே பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் தூக்கி வைத்து கவி பாடிக் கொண்டு பின்னால் திரிந்தார்கள் என்பது ஜனங்கட்குத் தெரியும். பார்ப்பனர்கள் தனியாக எங்கேயாவது போனால் பொது ஜனங்களால் கல்லடி, சாணி உருண்டை முதலிய மரியாதைகள் கிடைக்கும் என்று தோன்றுகிற இடங்களுக்கெல்லாம் கனவான்களைக் கூட்டிக் கொண்டு போவதும், அவர்களை வண்டியில் வைத்து இழுப்பதும், ஜே! போடுவதும், அவர்கள் படங்களைப் பள்ளி அறையில் வைத்து பூஜித்துவிட்டும் கொஞ்சம் ஏதாவது இவர்களது அக்கிரமங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விட்டால் உடனே அவர்கள் மேல் கத்தி தீட்டுவதுமான செய்கைகளை நாம் பார்த்துக்கொண்டே வருகிறோம். அல்லாமலும் சுயமரியாதையுள்ள எந்தப் பார்ப்பனரல்லாதாரையாவது தங்களுடன் சேர்த்துக் கொண்டோ அல்லது வையாமலாவது இருக்கிறார்களா என்பதைப் பார்த்தால் இது அனுபவத்தில் தெரியவரும். இவற்றை எதற்காகச் சொல்லுகிறோமென்றால் இதே ஸ்ரீமான் சுப்பராயன் அவர்களுக்கும் சேலத்தில் உள்ள அவரது கோஷ்டிக்கும் கொஞ்சம் சுயமரியாதை உதயமான உடனே இவர்கள் பேரிலும் இதே பார்ப்பனர்கள் கத்தி தீட்டுவார்களென்பதை அறிவுறுத்துவதற்காகவேயன்றி வேறல்ல.

திரு. எல்லப்ப செட்டியாரின் வெற்றியானது பார்ப்பன சூழ்ச்சியின் தன்மையை வெளிப்படுத்தவும், பார்ப்பன சூழ்ச்சியினின்று தப்புவதானால் எவ்வளவு பிரயாசை இருக்கிறதென்பதை வெளிக்காட்டவும் ஒரு அறிகுறியாகக் கொள்ளலாமேயல்லாமல் மற்றபடி பிரமாதமாய் பாராட்டத் தகுந்த விஷயம் அதில் ஒன்றுமில்லை என்பதே எமது அபிப்ராயம்.

(குடி அரசு - கட்டுரை - 19.06.1927)

Pin It