கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இன்றைக்குச் சிலர் அம்பேத்கரை ஒரு சாதித் தலைவர் போலச் சித்தரிக்கிறார்கள். வேறு சிலரோ அவரைச் சூத்திரர்களின் எதிரி போலவே காட்டுகிறார்கள். உண்மையில் அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் உரிமைக் குரலாக இருந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் அவர் வாதாடியதும், போராடியதும் தமிழர்களுக்குச் சரியாகச் சொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அவர் போர்க்குரல் கொடுத்ததைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

1946 இல் அம்பேத்கர் எழுதிய “சூத்திரர்கள் யார்?” எனும் நூல் முக்கியமானது. இதை எழுதுவதற்கு வரலாற்று நோக்கம் தவிர வேறு எதுவும் தனக்கு இல்லை என்று அவர் அதன் முன்னுரையில் கூறிக்கொண்டாலும், பார்ப்பனிய எதிர்ப்பு எனும் தனது பொது லட்சியத்திற்குச் சூத்திரர்களைச் சித்தாந்த ரீதியாகத் தயாரிக்கும் முயற்சி அதில் தெளிவாக உள்ளது. குறிப்பாக, “சூத்திரர்களின் நிலை பற்றிய பார்ப்பனியக் கொள்கை”, “சூத்திரர்களுக்கு எதிராக ஆரியர்கள்”, “சூத்திரர்கள் தாழ்நிலைக்குத் தள்ளப்படுதல்” எனும் அத்தியாயங்களில் இதைக் துல்லியமாகக் காணலாம்.

தர்மசாஸ்திரங்களில் சூத்திரர்கள் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவைகளை, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை எல்லாம் அப்படியே தொகுத்துத் தந்திருக்கிறார் அம்பேத்கர். மறுபுறம், பார்ப்பன‌ர்கள் தங்களை சகலரினும் மேலாக இருத்திக் கொள்ளச் சொல்லிக் கொண்ட சூத்திரங்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த இரு தரப்பாருக்கும் இடையிலான முரண் வெறும் கற்பிதமல்ல, யாதார்த்தமானது என்பதற்குப் புராண, இதிகாச சித்தரிப்புகளின் உள்ளடக்கத்தை விண்டுரைத்துக் காட்டியிருக்கிறார். இது வி­யங்களில் அவரின் அபாரமான ஞானம் வெளிப்படுகிறது. தெற்கே பெரியார் ஆற்றிய பணியை வடக்கே அம்பேத்கர் இது வகையில் ஆற்றியிருப்பது நம்மைப் பரவசப்படுத்துகிறது. இதைப் படிக்கிற சூத்திரர் எவருக்கும் தனது கடந்த காலம் நெஞ்சில் இறங்காமல் போகாது, நிகழ்காலம் பற்றிய பரிசீலனை நெஞ்சில் எழாமல் போகாது.

பார்ப்பனியம் எனும் சமூகக் கட்டமைப்புக்கு எதிராக இப்படிச் சூத்திரர்களைச் சித்தாந்த ரீதியாகத் தயார்ப்படுத்தியது மட்டுமல்ல, அவர்களின் உரிமைகளுக்காக, கோரிக்கைகளுக்காக நடைமுறையில் குரல் கொடுக்கவும் செய்தார் அம்பேத்கர். இதைவிட முக்கியம் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒரே அரசியல் அணியில் நிற்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் 1948 இல் தாழ்த்தப்பட்ட மக்களின் மாகாண மாநாடு நடைபெற்றது. அப்போது அம்பேத்கர் மத்திய அரசில் சட்ட அமைச்சர். மாநாட்டில் அவர் பேசியதைக் கேளுங்கள், “தனிமையில் இருப்பதால்தான் பின்தங்கிய வகுப்பினர் இன்னலுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் ஒரு ஐக்கிய முன்னணி அமைத்து உயர் வகுப்பினரிடமிருந்து அரசியல் அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க வேண்டும். வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருப்பதால் வெகுஜனங்களுக்கு அரசியல் அதிகாரம் வந்துள்ளது. ஒன்றரைக்கோடி அரிஜனங்களும், ஒரு கோடி பின்தங்கிய வகுப்பினரும் பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தால், தமது மக்களைச் சட்டசபையில் பாதி உறுப்பினர்களாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்று நான் கருதுகிறேன்”.

இந்தியாவின் பெரிய மாநிலமாகிய உத்திரப்பிரதேசத்திற்கு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் இந்த ஆலோசனையைத் தனது பேச்சின் பின்பகுதியில் நீட்டித்தார் அம்பேத்கர். பஞ்சமர் - சூத்திரர் ஒற்றுமையே அவரது கனவாக, இலக்காக இருந்தது. ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் மூலம் பார்ப்பனியமானது இப்போதும் ஒரு பெரும் அரசியல் சக்தியாக - பா.ஜ.க. எனும் வடிவத்தில் எழுந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் அம்பேத்கர் கண்ட கனவு இன்னும் நனவாகாததே. உயர் வகுப்பாரில் முற்போக்கு எண்ணம் கொண்டோரையும் இந்த அணியில் சேர்த்துக் கொள்ளும்போது இந்த வியூகம் முழுமை பெறும், இந்த உத்தி வெற்றி பெறும். வாழ்க்கை என்னவோ அதை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது.

பிற்படுத்தப்பட்ட மக்கள்பால் இத்தகைய பாந்தமான, பாசமானபொது நோக்கை வெளிப்படுத்தியதோடு, அவர்களுக்கான ஒரு திட்டவட்டமான கோரிக்கை முன்வந்தபோது சட்ட அமைச்சர் என்ற முறையில் அதற்கு ஆதரவாக வலுவாக வாதாடினார் அம்பேத்கர். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் 1950 இல் அமலுக்கு வந்ததை அறிவோம். இதில் சாதி பற்றி நல்ல நோக்கோடு சேர்க்கப்பட்டிருந்த சில சரத்துக்களைப் பயன்படுத்தி, சென்னை மாகாணத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் வந்தது.

இப்படித் திருத்தம் கோரி சென்னை மாகாணத்தில் மாபெரும்இயக்கம் நடத்தினார் பெரியார். இது வி­யத்தில் அவருக்கு தி.மு.க., பொதுவுடைமைக் கட்சி ஆகியவை தோள்கொடுக்க முன்வந்தன. மாகாணத்திலிருந்த காங்கிரஸ் அரசு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. மத்தியிலிருந்த நேரு அரசும் இறங்கி வந்தது. சட்ட அமைச்சர் என்ற முறையில் அம்பேத்கர் சட்டென்று அத்தகைய திருத்த மசோதாவைத் தயாரித்து, அன்றைய அரசியல் நிர்ணய சபையில் ( அதுவே மத்திய சட்டமன்றமும் கூட ) தாக்கல் செய்தார். அச்சமயம் அழுத்தமானதொரு உரையையும் நிகழ்த்தினார்.

1951 மே 19 ஆம் தேதியிட்ட “விடுதலை” ஏடு அவரது உரையை தலைப்புச் செய்தியாக இப்படி வெளியிட்டது : “கம்யூனல் ஜி.ஓ. பற்றிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு திருப்தியற்றது - பிற்பட்ட மக்களின் முன்னேற் றத்திற்கு உதவி புரிவதே அரசாங்கத்தின் கடமை - பாராளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரின் முழக்கம்”. இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் ஆற்றிய பணி இந்த மக்களுக்குச் சரியாகச் சொல்லப்படாத ஒரு சோகம் உள்ளது. அவரைத் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு நிகழ்வையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். இந்தத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து, நிறைவேற்றித் தந்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்துத் தந்த சில மாதங்களில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர். அந்த ராஜினாமாவுக்கு மிக முக்கிய காரணம் இந்து மாதர்களுக்குச் சில உருப்படியான உரிமைகளைப் பெற்றுத் தரும் இந்துச் சட்டத்தொகுப்பு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் நேருவே அப்போது தயங்கி நின்றது. இதனால்தான் மெய்யாலும் வெறும் துண்டாக நினைத்து மந்திரி பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர். 

தனது பதவி விலகலுக்கான காரணங்களை விவரித்து அவர் ஓர் அறிக்கையும் வெளியிட்டார். அதில் இந்தப் பிரதான காரணத்தைச் சொன்னதோடு வேறுசில காரணங்களையும் குறிப்பிட்டார். அதில் ஒன்று - “பின்தங்கிய வகுப்பினருக்காக எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசியல் சாசனம் முன்வைக்கவில்லை என்பது கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசு நிர்வாகம் அதைச் செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை நாம் அங்கீகரித்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அரசாங்கமோ ஓர் ஆணையம் அமைப்பது குறித்துச் சிந்தித்துப் பார்க்கக்கூட இல்லை”.

அரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கரின் தனி விருப்பத்துக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்ட ஒன்று அல்ல. அரசியல் நிர்ணயசபையில் நிறைய பார்ப்பனியவாதிகள் இருந்தார்கள். அவர்களை எதிர்த்து அவர் முடிந்த மட்டும் போராடினார். ஒரு சில உரிமைகளை தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பெற்றுத் தந்தார். மற்றபடி அந்தச் சபையின் பெரும்பான்மை முடிவுக்கு ஏற்பவே அரசியலமைப்புச் சட்டம் உருவானது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டு உரிமையை மூலச் சட்டம் கொண்டி ருக்கவில்லை. அதனால்தான் சென்னை மாகாண இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது. அது ஒரு வழியாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த மக்களின் சமூக வாழ்நிலை பற்றி ஆராய ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் அமுலாக் கப்பட வேண்டும் என்று மூல அரசியலமைப்புச் சட்டம் கூறியது ஆனால், அதைக்கூடச் செய்யத் தயங்கி நின்றது மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு. அதைத்தான் கடுமையாகச் சாடினார் அம்பேத்கர்.

காகா காலேகர் குழு, மண்டல் குழு என்றெல்லாம் பிற்காலத்தில் வந்து, பிற்படுத்தப் பட்டோருக்கு மத்தியில் இடஒதுக்கீடு என்பது வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான் வந்தது என்பதை நாமறிவோம். அவ்வளவு காலத்திற்கு அதை வெற்றிகரமாக இழுத்தடித்தது பார்ப்பனியம். ஆனால், 1951 இலேயே பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த மாமனிதர், சமூக நீதிக் காவலர் அம்பேத்கர்.

இவரை அந்த மக்களின் எதிரி போலச் சிலர் சித்தரிப்பது காலக் கொடுமையாகும். பஞ்சமருக்கும் சூத்திரருக்கும் இடையே நிரந்தரப் பிளவு இருக்க வேண்டும் என நினைக்கும் சில வஞ்சகர்களின் அநியாய ஆசை இது என்பதை இரு பகுதி மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அம்பேத்கரின் வாழ்வையும், அவரது சிந்தனை களையும் நன்கு கற்பதும், அவரது மெய்ப் பொருளை சகல பகுதி மக்களுக்குச் சொல்வதும் காலமிட்டுள்ள கட்டளையாகும்.

ஆதாரங்கள் :- பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு - தொகுதிகள் 13, 32,37