தமிழ் நாட்டில் பொது உடைமைப் பிரச்சாரக்காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொது உடைமை என்றாலும், இந்து மதம் என்றாலும், வேறு எந்தப் பொது நலப் பேரை வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம், ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதல்லாமல், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

லண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது, “உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு, மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டு பாடுபடாமல் ராஜபோகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப்பனர்கள் - இந்த நாட்டுப் பொது உடைமைக்காரர்களுடன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தம்என்ன?” என்று கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்!

அதுபோல் பார்ப்பனர்கள் பாடுபடாமலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டு, மற்ற மக்களுக்கு மேலானவர்களாக நடந்துகொண்டும் பொது உடைமைப் பிரச்சாரத்தில் காங்கிரசையும், பார்ப்பனியத்தையும் கண்டிக்காமல் - அவற்றைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும், மரியாதைக் கட்சியையும் குறை கூறுகிறார்கள் என்றால், இந்த இரண்டு கட்சிகளும் வர்ணாசிரமக் காங்கிரசுக்கும் பர்ப்பனியத்திற்கும் விரோதமாக இருப்பதால் தானே ஒழிய வேறில்லை.

பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும், என்னவென்றால் வர்ணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்திவிட்டு, எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வர்ணாசிரமப் பார்ப்பனனிடம் தானாகவே வந்துவிடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமை திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் – அவர்கள் வாழ்க்கை முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.

ஆதலால் பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதால், அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது உடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக்காரணமாகும். நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் பார்த்து மயங்கி விடுகிறார்கள். பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

உதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் காங்கிரஸ்காரர். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் லட்சாதிபதி. இருவரும் பெரும் பொதுவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக்கார பார்ப்பõனுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச்சைக்கார பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனுடைய, போக போக்கியம் குறைவுபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து – ஜில்லா கலெக்டர், ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும், சங்கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.

இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயானால், தனி உடைமை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்நாட்டில் பொதுவுடைமை கூட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத் தான் பலர் மேன்மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார்கள். இருக்கவும் முடிகிறது. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாக, ஏழைகளாக இருக்கிறார்கள். இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச சாட்சியாகும்.

ஆங்கிலத்தில் ‘கேஸ்ட்’, ‘கிளாஸ்’ என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்லுவதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது ; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்தந்த ஜாதியில் பிறந்தவனுக்குத் தான் உண்டு; பிறக்காதவனுக்கு கிடைக்கவே கிடைக்காது. மேல்நாட்டில் ஜாதி இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்பு சண்டை தொடங்க வேண்டியதாயிற்று. இங்கு ஜாதி இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை தொடங்க வேண்டியதாகும்... பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம் தான் போய் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொது உடைமைத் தத்துவத்திற்கு பாலபாடம்.

('குடி அரசு’ - 25.3.1944)

Pin It