சாதி ஒழிப்பிற்கான போராட்டக் களத்தில் இடதுசாரி கண்ணோட்டத்தில் தலித் இயக்கங் களை கட்டியமைக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். இத்தேவையை பெரும்பாலான இடதுசாரி இயக்கங்கள் புறக்கணிக்கவே செய்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் இடதுசாரி இயக்கங்கள், இடதுசாரி அறிவுஜீவி களிடம் சாதியம் குறித்த சிக்கலில் உள்ள புரிதலின்மையே ஆகும்.
இதனாலேயே மண்ணுக்கேற்ற மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என்ற கருத்துக் கள் முன்னுக்கு வருகின்றன.
“மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற சொல் லாடலை கேட்டாலே எனக்கு நகைப்புதான் வரும். மார்க்சியத்தில் மண்ணுக்கேற்ற மார்க் சியம், மண்ணாங்கட்டி மார்க்சியம் எல்லாம் இல்லை. மார்க்சியம் என்பதே “சமூகமாக இருக்கட்டும், இயற்கை மற்றும் எதுவாக இருக்கட்டும்... புறத்தை மிகச் சரியாக உள்வாங்கிக் கொள்வது என்பதும் அப்புறத்தின் மீது மிகச் சரியாக வினையாற்றி, புறம் எதுவாக மாறக் கூடியதோ அதுவாகப் பார்வையை முன்வைத்துள்ளதே மார்க்சியம் ஆகும். அதுதான் இயங்கியல் பொருள் முதலியல், வரலாற்றுப் பொருள் முதலியல், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம்” என்ற மார்க்சிய கோட்பாடுகள் ஆகும். இக்கோட்பாடு களை மார்க்ஸ் உருவாக்கினார். லெனினும் மாவோவும் மேலும் வளர்த்தெடுத்துள்ளனர்.
இந்திய துணைக்கண்டத்தில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மார்க்சிஸ்டுகள் இங்குள்ள புறத்தை மார்க்சிய அறிவியல் அடிப்படையில் ஆராயாமல் அகநிலை அடிப்படையிலும் சீனா மற்றும் ரஷ்யாவை வரட்டுத்தனமாக இங்கு பொருத்துவதன் அடிப்படையிலும் சாதியம் மற்றும் தமிழ் சமூகம், இந்திய துணைக்கண்டம் குறித்த கருத்துக்களை முன்வைக்கின்றார்கள் என்றால் அது மார்க்சியத்தின்பால் உள்ள சிக்கல் இல்லை. மாறாக மார்க்சிஸ்டுகள் என்று கூறிக் கொள்பவர்களிடமும் கட்சிகளிடமும் உள்ள சிக்கலே ஆகும்.
மார்க்ஸ் புராதன பொதுவுடமைச் சமூகம், ஆண்டான்-அடிமைச் சமூகம், நிலவுடமைச் சமூகம், முதலாளிய சமூகம், சோசலிச சமூகம்- என்று வரலாற்றுப் பொருள் முதலியல் கண்ணோட்டத்தில் வரையறுத்துள்ளதை அப்படியே இங்கு வாந்தியெடுக்கின்றனர்.
பெரும்பாலான இடதுசாரி இயக்கங்களிடம் சாதியம் பற்றிய ஆய்வில் “வர்க்க சுருக்கல் வாதமே” உள்ளது. அதாவது வர்க்கப் பிரச்ச னையை தீர்த்தால் சாதிய சிக்கல் தீர்ந்துவிடும் என்று பார்க்கின்றனர். சாதியம் இங்கு அதற்கே யுரிய தனித்த பண்புடன் இயங்கிக் கொண்டிருப் பதைக் காணத் தவறுகின்றனர். இதனால் மாவோ சுட்டிக்காட்டியது போல முரண்பாட்டினுடைய குறித்த தன்மையைப் பார்க்க மறுக்கின்றனர். இதனாலேயே சாதியத்தின் குறித்த தன்மையை பார்க்கத் தவறுகின்றனர்.
சி.பி.ஐ, அதன் பின்வந்த சி.பி.ஐ. (எம்), பின்பு வந்த சி.பி.ஐ. (மா-லெ) இவற்றில் எந்த இடது சாரி இயக்கமும் இந்தியத் துணைக்கண்டம் குறித்து பருண்மையான சமூகப் பகுப்பாய்வு செய்து தங்கள் திட்டங்களை முன்வைக்கவில்லை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இதில் சி.பி.ஐ, சி.பி.ஐ. (எம்) போன்ற கட்சிகள் சொல்லில் சோசலிசம், செயலில் முதலாளியச் சுரண்டல் நலனைக் காப்பவர்கள் என்ற அடிப்படையில் திரிபுவாதிகளாகவே உள்ளன.
புரட்சிகர இயக்கமான சி.பி.ஐ. (மா-லெ) இயக்கம் கூட இந்திய துணைக்கண்டத்தை சமூகப் பகுப்பாய்வு செய்யாமல் சீனாவின் சமூக நிலையை வரட்டுத்தனமாக இந்திய துணைக் கண்டத்திற்கு பொருத்தியது என்பதுதான் உண்மை. சி.பி.ஐ. (மா-லெ) இயக்கம் பின்பு பல கட்சிகளாக பிளவுண்ட நிலையில் ஒரு சில இயக்கங்கள் சாதியம் குறித்த சிக்கலில் கவனம் செலுத்தத் தொடங்கின.
1980-களில் உருவான இ.க.க. (மா-லெ) மக்கள் யுத்தக் கட்சி (தற்போதைய மாவோயிஸ்ட் கட்சி) தனது அடிப்படை ஆவணத்தில் சாதியம் அடிக்கட்டுமானம், மேல் கட்டுமானம் ஆகிய இரண்டிலும் உள்ளது என்று முன்வைத்தது. மக்கள் யுத்தக் கட்சியின் பண்பாட்டுப் பிரிவாக இருந்த புரட்சிகர பண்பாட்டு இயக்கம் (பு.ப.இ.) சென்னையில் நடத்திய “சாதியும்-வர்க்கமும்” என்ற கருத்தரங்கு சாதியச் சிக்கலில் சில முக்கிய முடிவுகளை எடுத்தது.
மக்கள் யுத்தக் கட்சியிலிருந்து தமிழ்த் தேசியச் சிக்கலை முன்வைத்துப் பிரிந்து சென்ற தோழர் தமிழரசன் மீன்சுருட்டி மாநாட்டில் சாதியம் குறித்த அறிக்கையை முன்வைத்தார். சாதியம் குறித்த திட்டவட்டமான ஆய்வுகளை மேற் கொண்ட போதிலும் திட்டவட்டமான முடிவு களையும் வந்தடையாமலே இருந்தனர்.
இடதுசாரி ஆய்வாளரான தோழர் கோ.கேசவன் “அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்” என்ற நூலில் சாதியம் குறித்த மிக ஆழமான ஆய்வுகளை முன்வைத்துள்ளார். இவர் சாதியம் ஒரு சமூக அமைப்பு. அது சமூக உற்பத்தி, அரசியல், பண்பாடு என அனைத்து தளங்களிலும் உள்ளது என்று முன்வைத்தார்.
சாதி ஒழிப்பிற்காக ஒடுக்கப்பட்ட சாதிகளுக் கான தனித்தனி சாதி அமைப்புகளையும் அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒன்றிணைக்கும் முன்னணிகளையும் வர்க்க அமைப்புகளையும் கட்ட வேண்டியதன் அவசியத்தை முன்வைத்தார்.
அடிப்படையில் சாதி ஒழிப்பிற்காக அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிகளும் ஒன்றிணைவதோடு, ஆதிக்க சாதியில் உள்ள உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு உருவாகும் ஐக்கிய முன்னணியை கட்டியமைக்க வேண்டியதன் அவசியத்தை முன்வைத்தார்.
தோழர் கேசவனின் சாதி குறித்த ஆய்வை எந்த இடதுசாரி இயக்கங்களும் உள்வாங்கி கொள்ள வில்லை. தோழர் கேசவனின் ஆய்வை விவாதிக்க விருப்பம் இல்லாதவர்களாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்.
அம்பேத்கர், பெரியாரின் சாதி குறித்த ஆய்வுகளை பரிசீலிக்கவும் தயாரற்றவர்களாகவே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடதுசாரி சக்திகள் உள்ளனர்.
முதன்முதலில் லிபரேசன் கட்சியின் சார்பாக தலித் மக்களுக்கான அமைப்புக் கட்டப்பட்டது என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். மக்கள் யுத்தக் கட்சியின் தலைமையில் தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பு சமத்துவ முன்னணி 1990களில் கட்டப்பட்டது. ஆனால் இவ்வமைப் புகள் பரந்துபட்ட தலித் மக்களை அணிதிரட்டு வதில் தோல்வியையே தழுவின. மேலும் சாதி குறித்த முழு புரிதல் வந்தடைவதிலும் சிக்கல் இருந்தது.
தமிழகத்தின் மார்க்ஸ், மாவோ என்று அவரது அணிகளால் பூஜிக்கப்படும் கட்சி கலைப்புவாதி ஏ.எம். கோதண்டராமன் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியோ, “இந்திய” புரட்சிக்கே தனது கட்சிதான் அரசியல் வழகாட்டுதலின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற குட்டி முதலாளிய இறுமாப்புடன் இருக்கும் மாநில அமைப்பு கமிட்டியோ (எஸ்.ஓ.சி), தனது கட்சியின் அணிகளே புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மாபெரும் திட்டங்களை முன்வைத்த “மாபெரும் ஆசான்” கார்முகில் தலைமையிலான தமிழ்நாடு மார்க்சிய-லெனினிய கட்சியோ இந்தியத் துணைக்கண்டம் குறித்தோ தமிழ்ச் சமூகம் குறித்தோ சாதியம் குறித்தோ முழுமையான பகுப்பாய்வு செய்யாமலே உள்ளன. வர்க்க சுருக்கல்வாதமே இவர்களிடம் உள்ளது. சோசலிசப் புரட்சி என்று புதிதாக முளைத்துள்ள சில “சோசலிஸ்ட் புரட்சியாளர்கள்” சாதிய, தமிழ்த்தேசிய சிக்கலை முற்றாக திசைதிருப்பவும் மூடிமறைக்கவுமே தங்களது சோசலிஸ்ட் முழக்கத்தை முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இடதுசாரிகள் தலைமையிலான தலித் இயக்கத்தின் தேவையை உணராமலே உள்ளனர். இதன் பலனே பல்வேறு பிழைப்பு வாத தலித் இயக்கங்களின் தோற்றமாகும்.
இ.க.க. (மா-லெ) மக்கள் யுத்தக் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்த தோழர் துரை சிங்கவேல் மக்கள் யுத்தக் கட்சியில் ஏற்பட்ட அரசியல் முரண்பாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி இந்திய துணைக்கண்டத்தை, தமிழ்ச் சமூகத்தை மார்க்சிய-லெனினிய-மாவோவிய அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார். இது “நமது பொது திட்டம் (வரைவு)” என்ற தலைப்பில் “புதிய போராளி” இதழில் வெளிவந்தது. மேலும் “சுருக்கமான தமிழக வரலாறு” என்னும் குறு வெளியீட்டில் இருந்த இந்திய துணைக்கண்டம் மற்றும் தமிழ்ச் சமூகம் குறித்த மார்க்சிய அடிப் படையிலான ஆய்வு நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். சாதி குறித்த தோழர் துரை சிங்க வேலின் முன்வைப்புகள், தோழர் கேசவன் முன்வைப்பிற்கு பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மேலும் தோழர் கேசவன் சாதி ஒழிப்பிற்கு முன்வைத்த திட்டங்களுக்கு நடைமுறைரீதியாக அமைப்பு வடிவங்களை தோழர் துரைசிங்கவேல் முன்வைத்துள்ளார்.
தமிழ்த்தேசிய இயக்கங்களின், ஆர்வலர்களின் கவனத்திற்கு
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட் டத்தை ஒட்டியும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை கண்டித்தும் அதை யட்டி வெளிவந்த பாலச்சந்திரன் படுகொலைக் கெதிராகவும் காவிரி நதிநீர் உரிமைக்காகவும் முல்லைப்பெரியாறு சிக்கலை ஒட்டியும் பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் விடுதலைக் காகவும்... நடந்த பல்வேறு போராட்டங்களின் ஊடாகவும் ஜல்லிக்கட்டு, அனிதா படுகொலைக்கு காரணமான நீட்தேர்வுக்கு எதிராக நடந்த தமிழகம் தழுவிய கிளர்ச்சியை தொடர்ந்தும் தமிழ்த் தேசிய உணர்வானது தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் முன்னுக்கு வருகின்றது.
இதன்போக்கில் பல்வேறு தமிழ்த் தேசிய இயக்கங்கள் தோன்றியுள்ளன. இவ்வியக்கங் களுக்கு தலைமையேற்கும் சக்திகள் பெரும் பாலும் குட்டி முதலாளிய சக்திகளாகவும் இடை நிலை ஆதிக்க சாதி பின்னணி கொண்டவர் களாகவுமே உள்ளனர்.
தமிழக மக்களின் முக்கியச் சிக்கலாக உள்ள சாதி குறித்த சிக்கலில் இவர்கள் அக்கறையற்றவர் களாகவே உள்ளனர். உதட்டளவில் சாதி ஒழிப்பு பேசினாலும் சிந்தனையளவில் தங்கள் சொந்த சாதி அடையாளத்தை பிரதிபலிப்பவர்களாகவே உள்ளனர்.
“தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும்” என்று இனவாதம் பேசும் சீமான் ஒருபக்கம் தேவர் ஜெயந்தி விழாவிற்குச் சென்று முத்து ராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். மறுபக்கம் இமானுவேல் சேகர னுடைய நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
ஆதிக்க சாதிவெறி கொலைகாரரையும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் உரிமைக்கு போராடியதால் கொலை செய்யப்பட்ட வரையும் ஒரே மாதிரி அணுகும் “மாபெரும்” தன்மான தமிழன் சீமான், தருமபுரி இளவரசனை படுகொலை செய்து தலித் கிராமங்களை தீக்கிரையாக்கிய வன்னியர் சங்க நிறுவனர் ராம தாசை தமிழன் என்பதால் முதல்வராக சொல்வாரா?
தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தமிழராக அடையாளப்படுத்தப்படுவதில்லை. சாதியாகவும் இந்தியராகவுமே அடையாளப் படுத்தப்படுகின்றனர். தமிழன் இன்னொரு தமிழனை மணம் முடிப்பதில்லை. சாதிய அடிப் படையிலேயே திருமணங்கள் நடக்கின்றன. ஆதிக்க சாதிவெறி சக்திகள் ஒடுக்கப்பட்ட சாதி (தலித்) மக்களை கொடூரமான சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளாக்குகின்றனர். தமிழர்கள் என்று அனைவரும் ஒரே இடத்தில் குடியிருப்ப தில்லை. ஊர்த்தெரு, சேரித் தெரு என்றுதான் பிரிந்திருக்கிறது. ஏன்? மரணமடைந்து சுடு காட்டிற்குப் போனால் கூட பிணத்தின் மீதும் சாதி அடையாளம். சாதி சுடுகாடுதான் தமிழ கத்தில் உள்ளது. அரசியல், தொழில், உறவு... என்று எங்கும் சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது.
இடதுசாரிகளில் பலர் நேரடி வர்க்க வடிவத்தில் வெளிப்படும் “வர்க்க”ச் சிக்கலை தீர்த்தாலே அனைத்துச் சிக்கலும் தீர்ந்துவிடும் என்று வர்க்கச் சிக்கலின் வேறு வடிவிலான சாதியச் சிக்கலை, மீனவர் சிக்கலை, மதச் சிறுபான்மையினர் சிக்கலை, பழங்குடிகள் சிக்கலை, பெண்கள் சிக்கலை, தமிழ்த் தேசிய சிக்கலை... என்று இச்சமூகத்தில் புறவயத்தில் இருக்கும் சிக்கல் களை குறித்த ஆய்வுகளையும் தீர்வுகளையும் முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசி யத்தை உணர மறுக்கின்றனர். அதேபோல் இனவாதிகள் “தமிழன்” என்று சொன்னாலே “தமிழ்த் தேசிய சிக்கலை” முன்கொண்டு சென்றாலே அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்து விடும் என்று இனவாதத்தில் மூழ்கியுள்ளனர்.
பெரியாரிய இயக்கங்களின் கவனத்திற்கு
“நாம் சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படு கையில் மதமென்பதும் ஒழிந்து போகுமே யென்றால் அந்த மதம் நமக்கு வேண்டாம்; அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தை பொசுக்கும்போது வேதமும் பொசுங்கிப் போவதாயிருந்தால் அந்த வேதம் என்பதும் இப்போதே வெந்துபோகட்டும். வேதத்தை ஓதும்போது கடவுளும் ஓடிவிடுவாரென்றால் அந்த கடவுள் என்பதும் இந்த நிமிடத்திலேயே ஓடி விடட்டும்; அப்பேற்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்.” “தந்தை பெரியார் இன்றும் - என்றும்” (பக்-177)
சாதி குறித்த பார் வையில் அம்பேத்கரிடம் உள்ள சிக்கலே தந்தை பெரியாரிடமும் உள்ளது.
தமிழகமும் இந்தியத் துணைக்கண்டமும் அதற்கேயுரிய சமூகக் கட்டங்களை கடந்து வந்துள்ளது. வட இந்தியாவில் முதலில் வர்க்கச் சமூகமாக “சூத்திர நிலவுடமை சமூகம்” (வர்ண சமூகம்) உருவானது, பின் “சாதி நிலவுடமை சமூகம்” கட்டமைக்கப்பட்டது.
தமிழகத்தில் வர்ணச் சமூகத்தின் தாக்கம் இருந்ததே ஒழிய வர்ண சமூகம் கட்டமைக்கப் படவில்லை. பல்லவர் காலத்தில் சாதிய நிலவுடமைச் சமூகம் தமிழகத்தில் கட்டமைக்கப் பட்டது. சாதிய நிலவுடமைச் சமூகத்தின் கருத் தியலான பார்ப்பனியம். “இந்துமதம்” பிரிட்டிஷ் வருகைக்கு பின்பே உருவாகிறது. குறிப்பாக “முதலாளிய வர்க்க உருவாக்கம்” இந்துமதம் உருவாவதற்கான அடிப்படையாகும்.
அம்பேத்கரை போலவே பெரியாரும் சாதி யத்திற்கான அடிப்படையாக “பார்ப்பனியம்” மற்றும் “இந்துமதத்தை” பார்க்கிறார். தந்தை பெரியாரின் வார்த்தையிலேயே சொன்னால்,
“சாதிக்கு அடிப்படையாகயிருப்பது எது? ‘இந்துமதம்’. அதை ஆதரித்து நிற்பவைகள் எவை? வேதம், இதிகாசம், சாஸ்திரம், புராணம் முதலிய கட்டுக்கதைகள். இவைகளுக்கு அடிப்படையாக உள்ளவைகள் எவை? இந்து மத கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள்” (மேலது ப.182)
சாதி ஒழிப்பு குறித்து பேசும் போதெல்லாம் மேற்கூறிய கருத்தையே தந்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.
இதனாலேயே தந்தை பெரியாரின் முழுக் கவனமும் “இந்துமத எதிர்ப்பு”, “பார்ப்பனிய எதிர்ப்பு”, ‘கடவுள் மறுப்பு’ என்பதிலேயே குவிக்கப்பட்டிருந்தது.
திராவிடர் கழகம் தொடக்கத்திலிருந்தே பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதவர் அணுகுமுறையை கொண்டிருந்தது. பார்ப்பனரின் முதன்மை ஆதிக் கத்தை ஒழித்து அவ்விடத்தில் ஆளும் வர்க்கங் களாக, இடைநிலை ஆளும் வர்க்கங்களாக இருந்த ஆதிக்க சாதியில் உள்ள ஆதிக்க சக்தி களின் அதிகாரத்திற்கான போட்டியாக ஆரம்பத் திலிருந்தே தி.க. செயல்பட்டது.
தமிழகத்தில் சாதிச் சமூகம் உருவாக்கப் படுவதற்கு மூலகர்த்தாவாக இருந்த பார்ப்பனி யத்தை வட இந்தியாவிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வந்த வெள்ளாளர்களையே (சூத்திரர் என்று) சாதி ஒழிப்புக் களத்திற்கு அழைப்பது பெரியாரின் பார்வையில் உள்ள முக்கியச் சிக்கலாகும். இது வர்க்க சமரசம் மட்டுமல்ல; சாதியச் சமூகத்தை உருவாக்கி கட்டிக்காக்கும் ஆளும் வர்க்கங்களை (சாதிய நிலக்கிழார்களை) மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் உள்ள சிக்கலும் ஆகும். பார்ப்பனரை கூட்டுச் சேர்த்து தமிழகத்தில் சாதி சமூகத்தை கட்டியமைத்த வெள்ளாளர் சாதியை சூத்திரர் என்று பார்ப் பனிய எதிர்ப்பிற்கு அறைகூவி அழைப்பது சாதி ஒழிப்புக் களத்தில் எதிரியை மக்களுள் அடை யாளம் காட்டத் தவறுவதாகும்.
“தொண்டை மண்டல வேளாளர்-தாங்கள் சூத்திரர்கள் அல்லவென்றும் தங்களுக்கும் வருணாசிரமத்திற்கும் சம்பந்தமில்லையென்றும் வெகுகாலமாகவே கூப்பாடு போட்டிருக் கிறார்கள் மற்றும் பலர் தங்களை சூத்திரர்கள் அல்லவென்றும் ‘சத்சூத்திரர்கள்’ என்றும் ‘பட்டுக் குஞ்சம் கட்டிக் கொள்வது போல்’ சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். என்ன செய்தும் அதை மாற்ற முடியாமல் போய்விட்டது. அப்படியிருக்க அய்யோ பாவம்! உலக வாழ்க்கையில் எவ்வள வோ கீழான நிலையில் வைக்கப்பட்டு எவ்வித ஆதரவும் சவுகரியமும் இல்லாத நீங்கள் பறைத் தன்மையை ஒழித்து விடுவதோ மறைத்துவிடுவ தோ என்றால், அதுவும் மதசம்பந்தமான வைதீக வேசத்தை போட்டுக் கொண்டு ஒழித்து விடுவது என்றால் அது சமுத்திரத்தை சிட்டுக்குருவி வற்றடிக்க முயற்சித்தது போலதான் ஆகுமே ஒழிய வேறில்லை.” (மேலது, பக்கம். 173-174)
சாதியச் சமூகம் இறுகிப்போயிருந்த கிராமப் பகுதிகளில் சாதிய ஆதிக்கத்தை செய்பவர்களா கவும் சாதியச் சமூகத்தை கட்டிக் காப்பவர்க ளாகவும் இருந்த ஆதிக்க சாதி பண்ணையார் களை “சூத்திரர்” என்று சாதி ஒழிப்பு போராட்டக் களத்திற்கு அழைப்பது, பார்ப்பனிய எதிர்ப்பிற்கு அழைப்பது, சாதியை கட்டிக் காத்த ஆதிக்க சாதி பண்ணையார்களுக்கு சேவை செய்வதாகவே அமைந்தது. ஆதிக்க சாதிகளில் உள்ள வர்க்க வேறுபாட்டை வரையறுத்து அச்சாதிகளில் உள்ள உழைக்கும் மக்களை சாதி ஒழிப்பு போ ராட்டத்தில் ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற தெளிவை புறக்கணிப்பதாகவே அமைந்தது.
இது சாதி சமூகத்தினால் பலனடையும், சாதி சமூகத்தை கட்டிக்காக்கும் ஆளும் வர்க்கத்திற்கு (ஆதிக்க சாதியில் உள்ள சாதி நிலக்கிழார்களுக்கு, ஆதிக்க சக்திகளுக்கு) துணை போகவே உதவியது.
சாதியச் சிக்கலில் தந்தை பெரியாரின் முக்கியப் பங்களிப்பாக நாம் பார்ப்பது சாதி சமூகத்தைக் கட்டிக்காக்கும் கருத்தியலான “பார்ப்பனியம்”, “இந்து மதம்” - “இந்து மதக் கடவுள் எதிர்ப்பே” ஆகும். இதில் தந்தை பெரியார் இறுதிவரை உறுதி யாக நின்று போராடியதோடு தனது கருத்துக் களை மக்கள் மயப்படுத்துவதில் முழுமையாக இல்லையென்றாலும் பகுதியளவில் சாத்திய மாக்கியதே பெரியாரின் பங்களிப்பாகும்.
தந்தை பெரியாரின் வழிவந்த பெரியார் இயக் கங்களும் மேற்கூறிய மூன்று அம்சங்களிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.
சாதியம் தோன்றியதிலிருந்தே சாதிய நிலவு டமை சமூகமாகவும் இச்சமூகத்தைக் கட்டிக் காக்கும் கருத்தியலாக பார்ப்பனியமும் இச்சமூ கத்தை கட்டிக்காக்கும் மதங்களாக சைவ, வைணவ மதங்களும் இச்சமூகத்தைக் கட்டிக்காக்கும் அரசியல் அதிகாரமாக தமிழகத்தில் பல்லவர், பிற்காலச் சோழர், பாண்டியர், நாயக்கர், பாளை யக்காரர் ஆட்சியும் இசுலாமியர் ஆட்சியும் (ஆற்காடு நவாப்) இருந்தன. அதன் பின் பிரிட்டிஷ் அரசிடமிருந்து இன்று அதிகாரத்தை தன் கைவசம் வைத்துள்ள இந்திய பெருமுதலாளிய அரசும் உள்ளது. இது குறித்து விரிவான கருத்துக்கள் “தலித் இயக்கங்களின் கவனத்திற்கு” என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியாருக்குப் பின் கி. வீரமணி தந்தை பெரியாரின் பண்பாட்டுத் தளத்திலான வீரிய மிக்க செயல்பாட்டை கைவிட்டு தந்தை பெரியா ரால் சேர்க்கப்பட்ட அமைப்புச் சொத்தை அனு பவிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
கி. வீரமணியின் துரோகத்தை எதிர்த்து தி.க.விலிருந்து விலகி சென்றுள்ள தோழர் கொளத் தூர் மணியின் தலைமையிலான திராவிடர் விடு தலைக் கழகம் சாதியத்தின் பால் எழும் பல்வேறு சிக்கல்களில் ஒப்பீட்டளவிலான ஊக்கத்துடன் தலையீடு செய்து வருவது வரவேற்கத்தக்கதாகும்.
தலித் இயக்கங்களின் கவனத்திற்கு
“இழந்த உரிமைகளை மீண்டும் பெறுதலுக் கான ஓர் உக்கிரமான போராட்டத்தில் ஈடுபட வேண்டுமேயழிய பிச்சை கேட்பதன் மூலமோ கொடுமையாளர்களின் மனசாட்சிக்கு வேண்டு கோள் விடுப்பதன் மூலமோ பெற இயலாது.”
- அண்ணல் அம்பேத்கர்
நமது தமிழகத்தில் இயங்குகின்ற பெரும்பா லான தலித் இயக்கங்கள் குறிப்பிட்ட சாதியை அடையாளப்படுத்தும் இயக்கங்களாகவே உள்ளன. தலித் என்பது “ஒடுக்கப்பட்ட சாதி களை” குறிப்பிடும் பொது அடையாளமாக இருக்கின்றது. ஆனால் எந்த தலித் இயக்கமும் ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒருங்கிணைக்கும் பணியில் குறைந்தபட்ச வெற்றியைக் கூட ஈட்டாத நிலையிலேயே உள்ளது.
அம்பேத்கரிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் அம்பேத்கரின் சாதி குறித்த திறனாய்வு களை அவர் முன்வைத்துள்ள தீர்வுகள் குறித்து படித்தறிந்து அம்பேத்கரின் கருத்துக்களை சாதி ஒழிப்பு போராட்டக் களத்தில் பிரயோகிப்ப தற்கு பதில் அம்பேத்கரை வழிபாட்டுக்குரிய வராக அம்பேத்கரின் கருத்தியலை குழித் தோண்டி புதைத்துள்ளனர். அம்பேத்கர் மீதான கண்மூடித்தனமான பக்தியை வளர்க்கின்றனர். தலித் மக்கள் அம்பேத்கர் மீது வைத்துள்ள அளவு கடந்த பாசத்தை தங்கள் பிழைப்புவாத அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அம்பேத்கர் தலித் மக்களின் இதயங்களில் ஒப்பற்றத் தலைவராக, ஏன் கடவுளாகவே குடி கொண்டிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இத்தகைய பெருமையானது அம்பேத்கர் சாதி ஒழிப்பிற்காகவும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித் தவர் எனவும் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சாதிய இழிவை இவ்வுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய மாபெரும் தலைவர் எனவும் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை அச்சாதி ஒடுக்குமுறையிலிருந்து மீட்பதற்கான வழியை அறிவுப்பூர்வமாக தேடியவர் எனவும் சாதி குறித்த ஆய்வோடு நிற்காமல் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக தொடர்ந்து போராடியவர் எனவும் அம்மக்கள் கருதுவதால் கிடைத்த ஒன்றாகும்.
தலித் மக்களும் இயக்கங்களும் அறிவு ஜீவுகளும் அம்பேத்கரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவும் சிலர் கடவுளாக அவரை அடையாளப்படுத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
அண்ணல் அம்பேத்கர் சாதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் முன்வைத்துள்ள கருத்துக்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இன்றைய சூழலில் உள்ளது.
இந்நிலையில் சாதி ஒழிப்புக் களத்தில் உள்ள தலித் இயக்கங்கள், தலித் அறிவுஜீவிகள் கோட் பாட்டுரீதியான சிக்கல்களை களைவதற்காக தம்மை சுய பரிசீலனைக்கு உள்ளடக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
தலித் இயக்கங்கள்-அம்பேத்கரிஸ்ட்களிடம் உள்ள சாதி ஒழிப்பு குறித்த பார்வைச் சிக்கல்கள்
“ஒரு தீமை அழிக்கப்பட வேண்டுமெனில் தீமையின் வேரை கண்டறிந்து அதை முற்றாக களைந்து எறிய வேண்டும்.”
- அண்ணல் அம்பேத்கர்
சாதியம் இச்சமூகத்தின் தீமையாகும். எனவே சாதியம் அழிக்கப்பட வேண்டுமெனில் சாதி யத்தின் வேரை கண்டறிந்து அதை முற்றாக களைந்து எறிய வேண்டும்.
பார்ப்பனியம், இந்துமதம் குறித்த ஆய்வை ஆழமாக முன்வைத்துள்ள அம்பேத்கர் சாதியம் குறித்த ஆய்விலும் தீர்விலும் முன்வைத்துள்ள கருத்துகளில் உள்ள சிக்கல்களை காண்போம்!
அ. சாதியம்
சாதியம் என்பது ஒரு சமூக அமைப்பு. தமிழ கத்தில் வெள்ளாளர் மற்றும் பார்ப்பனர்களால் பல்லவர் ஆட்சிக் காலத்தில் சாதிய சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டது. இந்திய துணைக்கண் டத்தில் நிலவுடமைச் சமூகமானது சூத்திர நிலவுடமை மற்றும் சாதிய நிலவுடமைச் சமூகமாக கட்டமைக் கப்பட்டது. தமிழகத்திலோ சாதிய நிலவுடமைச் சமூகமாக மட்டுமே கட்டமைக்கப்பட்டது. தமிழகத்தில் வெள்ளாளர், பார்ப்பனர் சாதியினர் நிலவுடமையாளர்களாக இருந்தனர். தலித் மக்கள் சாதிய அடிமைகளாக்கப் பட்டிருந்தனர். எத்தகைய உழைப்பின் பலனும் கிட்டாமல் மனிதத் தன்மையற்ற மிக கொடூர மான உழைப்புச் சுரண் டலுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தனர். மட்டுமல்லாமல் கல்வி மறுக்கப் பட்ட சமூகமாக, சொத்துரிமை கருவி, (ஆயுதம்) ஏந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக மனிதனை மனிதனாக மதிக்காத தீண்டாமைக்குள்ளான வர்களாக இருந்தனர். பெண்களுக்கும் சொத் துரிமை, கல்வி உரிமை ஆகியன மறுக்கப்பட்டு குடும்ப அமைப்பிற்குள் முழு அடிமைகளாக்கப் பட்டனர்.
சாதிய நிலவுடமைச் சமூகத்தை, வெள்ளாளர் மற்றும் பார்ப்பனர்-சாதிய நிலவுடமையாளர் களின் சுரண்டலை கட்டிக் காக்கும் கருத்தியலாக ‘பார்ப்பனியம்’ இருந்தது.
இச்சாதிய நிலவுடமைச் சமூகத்தை கட்டிக் காக்கும் அதிகார அமைப்பாக பல்லவப் பேரரசு, அதன்பின் வந்த சோழப் பேரரசு, விஜய நகரப் பேரரசு, இசுலாமிய ஆட்சி மற்றும் பாளையக் காரர் ஆட்சி இருந்தன.
சாதியமானது பொருளாதாரம் (சமூக உற்பத்தி), அரசியல், பண்பாடு என்று மூன்று தளங்களிலும் வினையாற்றியது. அம்பேத்கர் சாதியத்தை ‘பார்ப்பனியம்’ என்ற கருத்தியல் தளத்தில் மட்டும் சுருக்கிப் பார்த்தார். இதுவே அவரை “இந்துமதம் இருக்கும் வரை சாதியம் இருக்கும்” என்று ஒற்றை பரிமாணத்தில் பார்க்க வைத்தது. எனவே இதற்கு மாற்றாக புத்த மதத்தை முன்வைத்தார்.
“பார்ப்பனர்கள் இல்லையெனில் இந்து சமயம் இல்லையென்றும் இந்து சமயம் இல்லையெனில் சாதியம் இல்லையென்றும் அம்பேத்கர் முடிவிற்கு வருகிறார்.” (கோ. கேசவன், அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் - பக்கம்.23)
ஆ. புத்தமதம் குறித்த சிக்கல்
“மதத்தை வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று புறப்பட்ட ஒருவர் கூட இதுவரையில் சிறிதளவும் வெற்றி பெற முடியாமலே போய்விட்டது!
- தந்தை பெரியார்.
இந்து மதத்தை ஒழிக்க புத்த மதத்தை முன்வைத்த அம்பேத்கர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘புத்தமானது சாதியை மட்டு மல்லாமல் தனிவுடமையை ஒழிக்கும் வழிகாட்டி எனவும் சோசலிச சமூகத்தை கட்டியமைப்பதற் கான சிறந்த தத்துவம்’ என்றும் முன்வைக்கின்றார்.
சமூக வளர்ச்சியை அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து முதலாளிய சமூகம் தனக்கேயுரிய தன்மையில் உற்பத்தியை சமூகமயமாக்கி உற்பத்தி காரணிகளை (மூலப்பொருள், இயந் திரம், பணம்... உள்ளிட்டவை) தனிவுடமையாக்கி வைத்துள்ளது. இம்முரண்பாட்டின் விளைவாக உற்பத்தி எப்படி சமூகமயமாகியுள்ளதோ அது போல் நாளை உற்பத்திச் சாதனங்களும் சமூக மயமாக்கப்படும் என்றும் இதுவே சோசலிச சமூகத்தின் அடிப்படை என்றும் மார்க்ஸ் முன் வைத்ததை புத்தரின் பார்வையோடு பண்டைய (புராதன பொதுவுடமைச் சமூகம்) பழங்குடி சமூகத்திலிருந்து தனியுடமை தோன்றும்போது பண்டைய பழங்குடி சமூகப் பார்வையிலிருந்து தனியுடமையை எதிர்த்த புத்தரின் பார்வையை... ஒப்பிட்டு அன்றைய தனியுடமை சமூக உருவாக்கச் சூழலில் புத்தர் முன்வைத்ததையும் இணைத்துப் பார்க்கும் அம்பேத்கரின் பார்வை சமூக வளர்ச்சி பற்றிய கோட்பாட்டில் அவரிடம் உள்ள சிக்கலையே வெளிப்படுத்துகிறது.
சாதிய அமைப்பினால் பலனடையும் சாதிய நிலவுடமையாளர்கள், இன்றைக்குள்ள இந்திய பெருமுதலாளிகள், ஏகாதிபத்திய முதலாளிகள் மற்றும் பார்ப்பனர்கள் மற்றும் ஏனைய ஆதிக்க சாதிகளிலுள்ள வளர்ந்த பிரிவினர் தங்கள் சுரண் டலை, அதிகாரத்தை எத்தகைய பலாத்காரத் தையும் பிரயோகிக்காமல் உபந்நியாசம் செய் வதன் மூலமே விட்டுக் கொடுப்பார்கள் என்ற கற்பனாவாதத்தை அம்பேத்கர் முன்வைத்துள்ளார்.
இதன் எதிர்வினையாக பலாத்காரத்தை பிரயோகிக்காமல் சுரண்டும் வர்க்கத்தின், ஆதிக்க சக்திகளின் சுரண்டலை, அதிகாரத்தை ஒழிக்க முடியாது என்ற மார்க்சியத்தை அம்பேத்கர் மறுதலித்தார்.
ஆதிக்கச் சாதிவெறியன் ராமதாசையே உபந் நியாசம் செய்து மாற்ற முடியாது. அப்படியிருக்க இச்சமூகத்தின் மொத்த பலனையும் அனுபவிக்கும் சாதியை, தனியுடமையை, சுரண்டலை கட்டிக் காக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், ஏகாதிபத்திய முதலாளிகள், சாதிய நிலவுடமை யாளர்கள், அதிகாரவர்க்க முதலாளிகள், பார்ப் பனர்கள் தங்கள் சுரண்டலை அதிகாரத்தை அவர் களாகவே எப்படி விட்டுக் கொடுப்பார்கள்?
அம்பேத்கரின் புத்தமத மாற்றத்தை, புத்தரின் கோட்பாடுகளை, சரியாகச் சொன்னால், அம்பேத்கர் முன்வைத்த “புத்தரின் கோட்பாடு களை” கண்மூடித்தனமாக பின்பற்றும் அம்பேத் கரிஸ்டுகள் புத்தரின் சிலையை தன் வீட்டில் வைத்து வழிபட்டுக் கொண்டிருப்பதை தவிர, “சாதி ஒழிப்புக் களத்தில்” எந்த ஒரு குறிப்பிட்ட நகர்வையும் செய்யாதவர்களாகவே உள்ளனர். ‘அன்பு’, ‘கொல்லாமை’ ஆகியவற்றை முன் வைத்த புத்தமதம் தான் தோன்றிய காலத்தில் இருந்த தன் முற்போக்கு பாத்திரத்தை இழந்து, இன்று இலங்கையில், மியான்மரில் இனப்படு கொலைகளுக்கு துணைபோகும் கருத்தியல் கட்டமைப்பைக் கொண்டதாக மாறி “ரத்த பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.”
“இழந்த உரிமைகளை மீண்டும் பெற ஓர் உக்கிரமான போராட்டத்தில் ஈடுபடவேண்டும்” என்று சொல்லும் அம்பேத்கர், “கொடுமையாளர்களின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் உரிமையை பெற இயலாது” என்று சொல்லும் அம்பேத்கர், இன்னொருபுறம் சுரண்டலாளிகளின், சாதிவெறியர்களின் மனசாட்சியை உபந்நியாசம் மூலம் மாற்றச் சொல்கிறார். அம்பேத்கரை முன்னிறுத்தும் தலித் இயக்கங் களே! சாதி ஒழிப்பு போராளிகளே! “உக்கிரமான போராட்டம்”, “உபந்நியாசம்” இதில் எந்த வழியை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?
இ. இந்து மதம் - பார்ப்பனியம் குறித்த சிக்கல்
“பிறவி வழி வேலைப்பிரிவினை, அகமண முறை, படிநிலை வரிசை, தீண்டாமை ஆகியன வற்றை சாதியத்தின் அம்சங்கள் என்பர்”.
(அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும், கோ. கேசவன், பக்கம். 60)
“வேலைப் பிரிவினை, வர்ணக் கலப்பு, புதிய தாக போரில் இணைக்கப்படும் இனக்குழுக்கள் இவைகளே சாதிகளாக பகுக்கப்பட்டன.
இவைகளுக்கு வர்ண அடிப்படையில் படி நிலைத் தகுதி பிராமணர்களால் வழங்கப்பட்டன. சாதி நிலவுடமை முறையிலேயே நிலக்கிழாரியம் உருவானது. சாதி நிலக்கிழார் களே இடைநிலை ஆளும் வர்க்கங்களாக இருந்தனர்.
(புதிய போராளி- சிறப்பிதழ்:1 பக்.10)
தோழர். துரைசிங்கவேல்
சாதியம்- ஒரு சமூக அமைப்பு. அதாவது சாதி நிலவுடமையாகும். இது சமூக உற்பத்தி, அரசதி காரம், பண்பாடு என்ற மூன்று தளங்களிலும் உள்ளது. எனவே சாதி ஒழிப்புப் போராட்டத்தை இம்மூன்று தளங்களிலும் நாம் முன்னெடுக்க வேண்டும். ஆனால் அம்பேத்கர் இந்துமத-பார்ப்பனிய எதிர்ப்பில் மட்டுமே சாதிய எதிர்ப்பை குவிமையப்படுத்துகிறார் (அ) சுருக்குகிறார். பார்ப்பனிய எதிர்ப்பில் அம்பேத்கர் சமரசம் அற்ற போராட்டத்தை முன்னெடுத்த அதே வேளை நவீன பார்ப்பனிய கருத்தியலான இந்தியா-இந்தி-இந்து என்ற கூறுகளுக்கு துணை போகின்றார். இதை புரிந்து கொள்ள பார்ப்பனியம் குறித்த வரலாற்றை சுருக்கமாக முன்வைக்கின்றேன்.
பார்ப்பனியம் - சுருக்கமான வரலாறு
அ. பண்டைய பார்ப்பனியம்
மௌரிய பேரரசின் கடைசி மன்னனை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிராமணன் புஷ்யமித்திர சுங்கன், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு பௌத்தத்தை முற்றாக அழித்ததோடு, வர்ணத்தை பரம்பரையாக்கினான். பார்ப்பனர் களின் அதிகாரத்தை, சுரண்டலை உறுதிப்படுத்தி னான். பார்ப்பன, சத்திரியர், வைசியர் வர்ணத் தார் சுரண்டும் வர்க்கமாகவும் சூத்திர வர்ணம் எத்தகைய உரிமையும் அற்ற சுரண்டப்படும் வர்க்கமாகவும் மாற்றப்பட்டது. பெண்களும் இரண்டாம்தர பிரஜைகள் ஆக்கப்பட்டனர். வைசியர் சுரண்டுபவராகவும் சுரண்டப்படுபவ ராகவும் இருந்தனர். வர்ணச் சமூக அமைப்பை முறைப்படுத்தவும் நியாயப்படுத்துவதற்குமான கருத்தியலாக ‘மனுதர்மம்’ என்ற நூல் படைக்கப் பட்டது. இந்நூல் கி.மு.170-க்கும் கி.மு 150-க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றியிருக்க வேண்டும் என்று அம்பேத்கர் முன்வைக்கின்றார்.
சூத்திரர் மீதான சுரண்டலை அடிப்படை யாகக் கொண்ட நிலவுடமை சமூகத்தை (வர்ணச் சமூகத்தை) கட்டிக்காக்கும் கருத்தியலாக மனு தர்மம் விளங்கியது. ‘மனுதர்மமே!’ பண்டைய பார்ப்பனியம் ஆகும்.
ஆ. இடைக்கால பார்ப்பனியம்
மௌரியர்களுக்குப் பிறகான குஷான மற்றும் சாதவாகனர்களின் அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ரோம் உடனான வணிகம் தடைபட்டதானது கடும் சமூக நெருக்கடியை கொண்டு வந்தது. நகரங்கள் வீழ்ச்சியடைந்தன, கைவினைஞர்கள் கிராமங் களை நோக்கித் திரும்பினர். மேலும் சூத்திரர்களின் கலகங்கள், வர்ணக் கலப்புகள் போன்றவை ஏற்பட்டன.
குப்தப் பேரரசு (கி.பி. 335-455) உருவான பிறகே மேற்கூறிய சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வர்ணச் சமூகம் வீழ்ச்சியுற்று சாதிய நிலவுடமை சமூகம் கட்டமைக்கப்பட்டது. சாதிய நிலவுடமை சமூகத்தின் கருத்தியலாகவும் மனுதர்மமே நீடிக்கிறது.
தமிழகத்திலோ வர்ணப் பிரிவினையானது ஒரு சமூகமாக கட்டமைக்கப்படவில்லை, வர்ண சமூகத்தின் தாக்கமே இருந்தது. வணிக வீழ்ச்சிக்கு பிறகான சமூக நெருக்கடியை ஒட்டி உருவான கலப்பிரர் ஆட்சியானது இந்நெருக்கடியை தீர்த்து அடுத்த கட்ட சமூக வளர்ச்சியை நோக்கி நகராமலே இருந்தது. தமிழகத்தில் பெரும் வேளாண் குடிகளான வெள்ளாளர்கள் சாதி நிலக் கிழாரிய சமூகத்தை கட்டியமைக்க பார்ப்பனர்களை வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு அழைத்து வந்து சாதி நிலவுடமை சமூகத்தை கட்டியமைத்தனர்.
“சோழர் ஆட்சிக்காலம் மனுவின் அடிப் படையில் நடைபெற்றது” என்று சோழ அரசே அறிவித்துக் கொள்கிறது. சோழர் காலம் சாதியச் சமூகம் நிலை நிறுத்தப்பட்ட காலமாகும். தலித் துகள் சாதி அடிமைகளாக்கப்பட்டு மிகக் கொடூர மான சுரண்டலுக்கும் சமூக (சாதிய) ஒடுக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் வெள்ளாளர், பிராமணர் சாதிகளே ஆளும் சாதி களாக, சாதிய நிலக்கிழார்களாக இருந்தனர்.
சாதியச் சமூகத்தை கட்டிக் காக்கும் பார்ப் பனியமே இடைக்கால பார்ப்பனியமாகும். பார்ப்பனியத்தின் மூன்று முக்கிய கூறுகளாக சாதி, பெண்ணடிமை, மூடநம்பிக்கை இருந்தது.
இ. நவீன பார்ப்பனியம்
பிரிட்டிஷ் வருகைக்குப் பின் சாதிய நிலவுடமை யாளர்கள் பணப்பயிரிடுதல் மூலம் முதலாளிய சந்தையோடு விவசாயத்தை இணைக்கின்றனர். சில தொழில்களில் மில் முதலாளிகளாக, முதலீடு செய்து “மூலதன சாதி நிலவுடமையாளர் களாகின்றனர்.” பிரிட்டிஷ் அரசு தனது சுரண் டலுக்கு, தேவைக்கேற்ப சாதிய நிலவுடமையில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த பெரும் வணிகர்கள் படிப் படியாக தங்கள் வணிக மூலதனத்தை தொழில் துறையில் இடுகின்றனர். மேலும் இயல்பாக வளர்ந்து வந்த கைத்தறி வளர்ச்சியானது அரசால் அழிக்கப்படுகிறது. படிப்படியாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது அதிகாரத்தின் கீழ் இந்திய பிராந்தியத்தை கொண்டுவந்து அதை முழுக்க தனது சுரண்டல் மற்றும் சந்தைக்காக பயன்படுத்து கின்றது. இந்திய பிராந்திய சந்தையை, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட இந்திய பிராந்திய முதலாளிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் கூட்டு மற்றும் பேரம் என்ற வகையில் உறவை வைத்து வளர்கின்றனர். இந்திய பிராந்திய முதலாளி களின் கட்சியாக காங்கிரசு கட்சி இருந்தது.
1947- ஆகஸ்டு 15இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் திடமிருந்த அரசியல் அதிகாரம் இந்திய பிராந்திய பெரு முதலாளிகளின் கைகளுக்கு மாறுகிறது. இந்திய பிராந்திய பெருமுதலாளிகள், மூலதன-சாதி- அரைநிலக்கிழார்களையும் ஏகாதிபத்திய முதலாளிகளையும் தங்களின் கூட்டாளி களாக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் இந்திய பிராந்திய பெருமுதலாளிகள் தங்கள் சுரண்டல் மற்றும் சந்தைக்காக இந்திய பிராந் தியம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முனைகின்றனர். இதற்காக வளர்ந்து வரும் தேசிய இனங்களின் உரிமையை முற்றாக மறுத்து ‘போலியான இந்திய தேசி யத்தை’ கட்டியமைக்கும் வேலையைத் துவங் கினர். இல்லாத ‘இந்திய தேசியத்தை’ கட்டி யமைத்த இந்திய பெருமுதலாளி வர்க்கம், இல்லாத ‘இந்திய மொழியை’ இந்திய தேசி யத்தின் மொழியாக உருவாக்க முயற்சிக்கின்றது.
குலக்குழுக்களாக இருந்தபோது மக்களிடம் குலதெய்வ வழிபாடே இருந்தது. பிறகு குலக் குழுக்கள் (பழங்குடி சமூகம்) சாதிய நிலவுடமை யுடன் இணைக்கப்பட்டு, பேரரசுகள் கீழ் இணைக் கப்படும்பொழுது பெருங்கடவுளர்கள் உருவாக் கப்பட்டு சைவம்-வைணவம் என்ற பெரும் மதங்கள் உருவாகின்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத் தியம் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மக்களை வகைப்படுத்தும் நோக்கில் கிறித்துவம், முஸ்லிம் அல்லாதவர்களை “இந்துக்கள்” என்று வகைப்படுத்துகிறது.
இல்லாத ‘இந்திய தேசியத்தை’, ‘இந்தி மொழியை’ உருவாக்கிய இந்திய பிராந்திய பெரு முதலாளிகள் இந்தியாவின் மதமாக இல்லாத “இந்து மதத்தை கட்டியமைக்கிறது.” இது குல தெங்வங்கள், சைவ, வைணவ கடவுள்கள் அனைத் தையும் இணைப்பதற்கு ஒவ்வொரு கடவுளுக் கும் உறவை ஏற்படுத்தி அனைத்து கடவுள்களை யும் “இந்து கடவுள்கள்” என்று அடையாளப் படுத்துகிறது. இதோடு நிற்காமல் ராமன், சிவன், விநாயகர் போன்றவர்களை இந்தியத் துணைக் கண்டம் முழுக்க பிரபலமாக்கி இந்திய தேசி யத்தின் மதமாக இந்துமத கடவுள்களாக முன் நிறுத்த முயற்சித்து வருகின்றது.
இந்திய பெருமுதலாளிகள் தங்கள் சுரண்ட லுக்காக, சந்தைக்காக கட்டமைக்கப்பட்டுள்ள “இந்திய தேசம்”, “இந்திய மொழி”, “இந்து மதம்” இவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் இக்கருத்தியலை மக்களின் கருத்தியலாக உருவாக்கவும் புதிய ஆளும் வர்க்கங்களான இந்திய பிராந்திய பெருமுதலாளிகள், மூலதன சாதி நிலக்கிழார்கள், ஏகாதிபத்திய முதலாளிகள் மற்றும் அதிகார வர்க்க முதலாளிகளின் சுரண் டலை கட்டிக்காக்கவும் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டுள்ள கருத்தியலே “இந்தியா” “இந்தி” “இந்து”-என்ற நவீன பிராமணியமாகும்.
ஏனெனில் அம்பேத்கர் பார்ப்பனியத்தை வரலாற்று பொருள்முதலியல் அடிப்படையில் காணத் தவறுகிறார். வர்ணச் சமூகத்தில் பண்டைய பார்ப்பனியம், சாதிய நிலக்கிழாரிய சமூகத்தில் இடைக்காலப் பார்ப்பனியம், இன்றைய முதலாளிய அரசு அதிகாரத்திற்கான, சுரண்டலுக் கான நவீனப் பார்ப்பனியம் என்று ஆளும் வர்க் கங்களின் மாற்றத்திற்கேற்ப (அ) சமூக மாற்றத்திற் கேற்ப பார்ப்பனர்களால் பார்ப்பனிய கருத்தியலும் மாற்றப்பட்டுக் கொண்டே வருகிறது என்பதை காணத் தவறுகிறார். மார்க்சியம்தான் ஒவ்வொரு சமூகத்தையும் முழுவதுமாக புரிந்து கொள்வதற் கான அறிவியல் கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது.
பார்ப்பனிய-இந்துமத எதிர்ப்பில் தலித் இயக்கங்கள்
அண்ணல் அம்பேத்கர் இந்துமத எதிர்ப்பில் மிக உறுதியாக இருந்தார். பஞ்சாபில் நடந்த மாநாட்டிற்கு வைத்த கட்டுரையில் இந்துமதம் குறித்த கருத்தினை திருத்தக் கோரியபோதும் அதை ஏற்க மறுத்து அம்மாநாட்டையே புறக் கணித்தார். இந்துமதமே சாதியத்திற்கு அடிப் படை என்று கூறினார். இந்துமதம் இருக்கும் வரை சாதியத்தை ஒழிக்க முடியாது என்றார். இந்து மதத்தை சாதி இந்துக்களின் மதம் என்றார். தலித் மக்களை இந்துமதம் மனிதனாகக் கூட மதிக்கவில்லை என்று முழங்கினார்.
இன்றைய தலித் தலைவர்களில் சிலர் “இந்து மதவெறியை”, “இந்துமதவெறி பாசிசத்தை” அடித்தளமாகக் கொண்டு இயங்கும் பா.ஜ.க-வுடன் இணைந்து பிழைப்புவாத அரசியல் செய் கின்றனர். பீகாரில் ராம்விலாஸ் பஸ்வான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ளார். தமிழகத்தில் இந்துமதவெறி கும்பலோடு சேர்ந்துள்ள கிருஷ்ணசாமி படுகேவலமாக இந்துத்துவா கருத்துக்களை பேசி வருகிறார். காஞ்சி சங்கராச்சாரியின் காலில் விழுந்து அரசியல் நடத்திய ‘தடா’ பெரியசாமி, தலித் இயக்கங்களை இணைத்து இந்து மதவெறி கட்சியின் தலைவன் அமித்ஷாவை-அழைத்து கூட்டம் நடத்த முயல் கிறார். பதவிக்காக இந்து மதவெறி கும்பலுடன் கரம் கோர்க்கும் இத்தகைய தலித் விரோதிகளை அம்பேத்கரின் இந்துமத எதிர்ப்பை முனை மழுங்க வைக்கும் அம்பேத்கர் விரோதிகளை தலித் மக்கள் உடனடியாக தூக்கியெறிய வேண்டும்.
தமிழகத்தில் இயங்கும் தலித் இயக்கங்களின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துமத சடங்குகளில் கலந்து கொள்வதோடு இந்துமத கடவுள் ஐயப்பனுக்கு மாலைபோட்டு தன்னைத் தீவிர இந்துமத பற்றாளனாக காட்டிக்கொள் கின்றனர். அண்ணல் அம்பேத்கர் “நான் சாகும் போது இந்துவாக சாகமாட்டேன்” என அறிவித்து பல்லாயிரக்கணக்கான தலித் மக்களை அணி திரட்டி இந்துமதத்திற்கு அடி கொடுக்கும் வகையில் புத்த மதத்திற்கு மாறி கலகம் செய்தார். இதை உயர்த்திப் பிடிக்கும் அம்பேத்கரிஸ்டுகள் அத்தகைய பெரிய மக்கள் திரள் நடவடிக்கைக் காக எத்தகைய முயற்சியையும் எடுத்ததாகத் தெரிய வில்லை.
அம்பேத்கரிஸ்டுகள் என கூறிக்கொள்ளும் தலித் அமைப்புகள், அறிவு ஜீவிகள் அம்பேத்கர் நடத்திய பார்ப்பனிய - இந்துமத எதிர்ப்பு கலகங் களை, கருத்தியல் போராட்டங்களை எடுப்பதில் ஆர்வம் குன்றியவர்களாகவே உள்ளனர்.
தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்து மதவெறிக்கெதிராக அரசியலை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது என்றாலும் தனது அமைப்பை அரசியல்படுத்துவதில் தோல்வியைக் கண்டவ ராகவே உள்ளார். கீழ்மட்ட அணிகளை தயார் செய்வது சற்றுக் காலம் ஆகும் என்பதை நாம் ஏற்கலாம். ஆனால் மாவட்ட, ஒன்றிய பொறுப் பாளர்களே தீவிர இந்துமத பற்றாளர்களாக இருப்பதைக் கூட அவரால் மாற்றியமைக்க முடியவில்லை என்பது அவரது தலைமையின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
இத்தகைய சூழலானது இந்து மதவெறிக் கும்பலுக்கு மிகச் சாதகமாக உள்ளது. தங்களுடைய இந்துமதவெறி அரசியலுக்கு தலித் தலைவர் களையும் தலித் மக்களையும் மிக எளிதாக உள்வாங்குகின்றனர்.
தலித் மக்களை மனிதர்களாகக் கூட மதிக்காத பார்ப்பனியத்திற்கும் இந்துமதத்திற்கும் தலித் துகள் பலியாகி வருவதும் இந்துமதவெறி சக்தி களாக மாறிவிடுவதும் நாம் மிகவும் கவனத் துடன் கையாள வேண்டிய ஒன்றாகும்.
அரசியல் அமைப்பு சாசனத்தின் மீதான பக்தி
“என் கைகளை வைத்து எழுதிக் கொண் டார்கள்” ; “என் சமூக மக்களின் விடியலுக்கு அரசியல், அமைப்பு சாசனம் உதவவில்லை என்றால் அரசியல், அமைப்பு சாசனத்தை எரிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.” (அண்ணல் அம்பேத்கர்)
பெரும்பாலான தலித் இயக்கங்கள் அம்பேத் கரை சாதி ஒழிப்புப் போராளியாக அடையாளப் படுத்துவதை விட அரசியல் அமைப்பு சாசன சிற்பியாக அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றன. அம்பேத்கர் சிலையை நிறுவும் போதோ (அ) அம்பேத்கர் படத்தை பேனரில் போடும் போதோ அவர் கையில் அரசியல் அமைப்பு சாசன புத்தகத்தை வைத்திருப்பது போல் “இந்தி யாவிற்கே எங்கள் தலைவர்தான் அரசியல் அமைப்பு சாசனம் உருவாக்கிக் கொடுத்தார்” என்று மார் தட்டிக் கொள்கின்றன. இது சுருக்குக் கயிறு. தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு “சுருக்கு கயிறு எவ்வளவு அழகாக இருக்கிறது பார்” என்று ஏமாளியாக கூத்து ஆடுவது போல் உள்ளது.
இந்திய அரசும் அரசியல் அமைப்பு சாசனமும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் சாதி நிலக் கிழார்களுக்கும் ஏகபோக கார்ப்பரேட் முதலாளி களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆதிக்க சாதி வெறி சக்திகளுக்கும் இந்து மதத்திற்கும் பார்ப் பனியத்திற்கும் சேவகம் செய்கின்றது என்பதை உணராமலே உள்ளனர். நம்மைச் சுரண்டும் கூட்டம், நம்மை ஏமாற்றத்தான் நம்மில் ஒருவரை வைத்து அரசியல் அமைப்பு சாசனத்தை இயற்றியது. இதனாலேயே நாம் அரசியல் அமைப்பு சாசனம் நமக்கானது என்று கண் மூடித்தனமாக நம்புகிறோம்.
தோழர் லெனின் “அரசு என்பது ஒரு வர்க் கத்தின் ஒடுக்குமுறைக் கருவி. எந்த வர்க்கம் அதிகாரத்தில் உள்ளதோ அந்த வர்க்கத்திற்கு அது சேவை செய்யும்” என்று அரசு பற்றி வரை யறுத்துக் கூறியுள்ளார்.
இன்று அதிகாரத்தில் உள்ளது கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கம். அதற்குத்தான் இந்த அரசு சேவை செய்யும். இதை புரிந்துகொள்ளும் போதுதான் தலித் இயக்கங்கள் அ.அ. சாச னத்தைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
அம்பேத்கர் அரசியல் அமைப்பு சாசனத்தை இயற்றும்போது நமக்காக சில சீர்த்திருத்தச் சட்டங்களை அதாவது இட ஒதுக்கீடு, தனித் தொகுதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம், பெண்களுக்கு சொத்துரிமை... என்று போராடிப் பெற்றார். அச்சட்டங்களைக் கூட இந்த அரசு படிப்படியாக செல்லாததாக மாற்றி வருகிறது. அதை திரும்பப் பெற போராட வேண்டியச் சூழலில் உள்ள நாம் அதற்கான போராட்டங் களை முன்னெடுக்காமல் அ.அ. சாசனத்தைப் பூஜித்துக் கொண்டிருக்கிறோம்.
சாதி சுருக்கல்வாதம்
வர்ணச் சமூகத்தில் வர்க்கங்களே வர்ணங் களாக இருந்தன. ஆனால் சாதி முறையில் ஒவ்வொரு வர்க்கமும் பல சாதிகளாக பிளவு களுக்கு உள்ளாகின. நுண் பிளவு வர்க்கங்கள் அல்லது பிளவுள்ள வர்க்கங்களின் சமூகமாக சாதிய நிலவுடமைச் சமூகம் மாறியது. (புதிய போராளி. சிறப்பிதழ்-1, பக். 10, தோழர் துரைசிங்கவேல்)
பெரும்பாலான இடதுசாரிகள் அனைத் தையும் சுருக்கவாதப் பார்வையில் நேரடி வடிவிலான வர்க்க சிக்கலாக சுருக்கிப் பார்ப்பது போல், அம்பேத்கர் அனைத்துச் சிக்கல்களையும் சாதியச் சிக்கலாகவே சுருக்கிப் பார்க்கின்றார். இதனாலேயே பெரும்பாலான தலித் இயக்கங்கள் வர்க்கச் சிக்கலில் கவனம் செலுத்த மறுக்கின்றன. சாதிய சிக்கலையும் வர்க்கச் சிக்கலையும் எப்படி கையாள்வது, ஒன்றின் போராட்டத்தை மற்றொன்றின் போராட்டத்தோடு எப்படி இணைப்பது, சாதி, வர்க்கம் இவை இரண்டுக்கு மான உறவை மிகச் சரியாக புரிந்து கொள்வது என்பதை நாம் கற்றுணர்வதோடு நடைமுறை யிலும் இதை சாதிக்க வேண்டியுள்ளது.
இடதுசாரி தலித் இயக்கத்தின் தேவை
தமிழகத்தில் உள்ள பரந்துபட்ட மக்கள் மீது இரண்டு விதமான ஒடுக்குமுறை உள்ளது. ஒன்று வர்க்க ஒடுக்கு முறை, மற்றொன்று சமூக ஒடுக்கு முறை, வர்க்க ஒடுக்குமுறைக்கு உள்ளான வர்க்கங் களாக தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் உள்ளனர். சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களாக பெண்கள், தலித்துகள், மீனவர்கள், மதச்சிறு பான்மையின மக்கள், பழங்குடிகள் உள்ளனர். புரட்சி என்பது மக்களை அனைத்துவிதமான ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்கே ஆகும். புரட்சியின் தேவை அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உள்ளது. புரட்சியை நடத்த விரும்பும் எந்த ஒரு கட்சியும் அனைத்து ஒடுக்கப் பட்ட மக்களையும் அணிதிரட்ட வேண்டும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணி திரட்ட வேண்டுமென்றால், அவர்களின் ஒடுக்கு முறைக்கேற்ற அமைப்பு வடிவங்கள் தேவைப் படுகிறது.
சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தலித் மக்களை அணிதிரட்ட தலித் அமைப்பு தேவைப் படுகின்றது. அதனடிப்படையிலேயே இடது சாரி அமைப்புகள் தலித் மக்களை அமைப்பாக அணிதிரட்ட வேண்டியுள்ளது.
இக்கருத்தை நாம் முன்வைக்கும் போது ஏன் மக்களை சாதியாக பிரிக்கிறீர்கள் என்கின்ற கருத்தை நம்முன் வைக்கின்றனர். இது வர்க்க ஒற்றுமையை சிதைக்கும் செயல் என்கின்றனர். நாம் அவர்களை பார்த்து பெண்கள் அமைப்பை கட்டுகிறீர்களே, இது ஆண்-பெண் ஒற்றுமையை, வர்க்க ஒற்றுமையை சிதைக்கும் செயலாகாதா, பழங்குடிகள் அமைப்பைக் கட்டும்போது பழங்குடிகள்-பழங்குடி அல்லாதவர் என பிரிக்கும் செயலாகாதா- என கேட்டால் முழிக் கின்றனர்.
பெண்கள், பழங்குடிகள் ஆகியோரின் மீதான சமூகச் சுரண்டலை, ஒடுக்குமுறையை புரிந்து கொண்ட இவர்களால் தலித்துகள், மீனவர்கள், மதச்சிறுபான்மையினர் மீதான சமூக சுரண்டலை, ஒடுக்குமுறையை புரிந்து கொள்ள முடிய வில்லை என்பதுதான் உண்மை.
அனைத்து இடதுசாரி இயக்கங் களும் தலித் இயக்கங்களை தங்கள் இயக்கத் தலைமையின் கீழ் உடனடியாக கட்டி தலித் மக்களை சாதி யத்தின் அனைத்து ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலையை அடைய வேண்டும்.
அதே போல அனைத்து தலித் இயக்கங்களும் அம்பேத்கரின் பார்ப்பனியம் - இந்துமதம் - குறித்த ஆழமான ஆய்வை, எதிர்ப்பை உள் வாங்கிக் கொள்வதோடு சாதியம் குறித்த ஆய்வையும் உள்வாங்கி அதை (இடதுசாரி சிந்தனையில்) மார்க்சிய அடிப்டையில் மறு பரிசீலனைக்கு உள்ளாக்கி சாதி ஒழிப்பிற்கான தெளிவான திட்டத்தை மார்க்சிய அடிப்படையில் முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இத்தகைய பணியை முழுமையாக இல்லா விட்டாலும் ஒப்பீட்டளவில் சில தலித் இயக்கங் கள் செய்ய முன்வந்துள்ளது மிகவும் வரவேற்கத் தக்க ஒன்றாகும். குஜராத்தில் மாட்டு அரசியலை ஒட்டி முன்வந்த தலித் இயக்கத்திற்கு தலைமை தாங்கும் ஜிக்னேஷ் மேவானி முன்வைக்கும் கருத்துகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டி யுள்ளது.
ஒரு பேட்டியில் ஜிக்னேஷ் மேவானி சொன்ன கருத்துகளில் சிலவற்றைக் கீழே அப்படியே தருகிறேன்.
* ஒவ்வொரு தலித் குடும்பத்திற்கும் 5-ஏக்கர் நிலம் என்ற முழக்கம் முக்கிய முழக்கமாக முன் வைக்க வேண்டும்.
* தலித் அரசியல்-அடையாள அரசியலில் முடங்கிக் கிடக்கிறது.
* தற்போதைய சவால் சமூக நீதி மற்றும் பொருளாதார நீதிக்காகப் போராடவும் அடை யாள அரசியலை பொருளாதார கோரிக்கை களுடன் இணைக்கவும் வேண்டும் என்பதுதான்.
* இடதுசாரிகளை நான் நிச்சயமாகக் கூட்டாளி யாகவே பார்க்கிறேன். இது இடதுசாரிகள் தலித்து களுடன் சேருவதாகவோ தலித்துகள் இடதுசாரி களுடன் சேருவதாகவோ எடுத்துக் கொள்ளாமல் தலித்துகள் இடதுசாரியாக மாறுவது-என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பொருள் அவர்கள் வர்க்கப் போராட்டம் குறித்து முழுமை யான புரிதல் கொள்வதுதான். ஒரு வர்க்கமில்லாத சமூகத்தை நாம் அமைக்க முடியவில்லை என்றாலும்கூட குறைந்த பட்சம் நாம் தற் போதைய சமுதாயத்திலுள்ளதை விட குறை வான ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூகத் தினை உருவாக்குவதை நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். பொருளாதார பிரச்சனை களே தலித் அரசியலின் இதயம் போன்றவை.
“நீங்கள் பசுவின் வாலைப் பிடித்து கொள்ளுங்கள்!
எங்களுக்கு நிலங்களை கொடுங்கள்!”
-என்ற முழக்கத்தை முழங்குவோம். இதில் “தலித்துகள் இடதுசாரியாக மாறவேண்டும்”, “பொருளாதார பிரச்சனைகளே தலித் அரசிய லின் இதயம் போன்றவை” என்ற ஜிக்னேஷ் மேவானியின் கருத்துகள் நாம் கூர்ந்து கவனிக்கத் தக்கவை ஆகும்.
மேற்கு உத்திரப்பிரதேசத்தில் “பீம் படை”- என்ற தலித் அமைப்பின் நடவடிக்கைகளும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.
தெலங்கானாவில் சி.பி.எம். உட்பட பல கம்யூனிஸ்ட் அமைப்புகளும் தலித் அமைப்பு களும் முஸ்லீம் அமைப்பு உள்ளிட்டு (மொத்தத்தில் சுமார் 28 அமைப்புகள்) இணைந்து Bahujan Left Front என்ற முன்னணி அண்மையில் தொடங்கப் பட்டுள்ளது. தெலங்கானாவின் பெரும்பாலான கிராமங்களில் இம்முன்னணியின் அலகு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதுபோன்ற ஒரு முன்னணியானது தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் கட்டப்பட வேண்டும். இம்முன்னணியானது சாதி ஒழிப்பை உள்ளடக்கி ஆனால் சாதி ஒழிப்புக்கான பிரத்யேக முன்னணி அல்ல. அத்துடன் குஜராத்தில் டாக்டர் சுரேஷ் மானே என்பவரது தலைமையில் இந்திய பகுஜன் சோலிச கட்சி தோன்றியுள்ளது. மேலும் பகுஜன் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் வட இந்தியாவில் தோன்றியது.
தமிழகத்தில் உள்ள சில சிறு தலித் இயக்கங்கள் தலித் மக்களின் சிக்கலோடு தங்களை சுருக்கிக் கொள்ளாமல் தமிழ்த் தேசிய சிக்கல், வர்க்கச் சிக்கலோடு தங்களை இணைத்துக் கொள்வதற் கான கருத்தியல்களை முன்வைக்கின்றனர். இது நல்ல முன்னேற்றமாகும்.
தலித் இயக்கங்கள் மார்க்சியத்தின் தேவையை உணர்ந்து இடதுசாரி அரசியலை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளன. சில இடதுசாரி இயக்கங்கள் தலித் இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்து தலித் இயக்கங்களை கட்டத் தொடங்கியுள்ளன.
டெல்லி ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கண்ணையகுமார் சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததும் அவரை வரவேற்ற மாணவர்கள் - “ஜெய் பீம்”, “லால்சலாம்” - என்ற முழக்கங் களை விண்ணதிர முழங்கினர். ஆம் இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் தலித்துகளும் அறிவு ஜீவிகளும் இடதுசாரிகளும் இடதுசாரி இயக்கங்களும் தலித் இயக்கங்களும் தமக்கிடையே கருத்தியல் வேறுபாடு இருந்தாலும் பரந்துபட்ட மக்களின் பொதுக் கோரிக்கைகளுக்காக இணைந்து செயல்படுவதற்காக,
“ஜெய்பீம்”, “லால்சலாம்”
என்ற முழக்கங்களை முழங்கினர்.
நாமும் அத்தகைய வரலாற்றுக் கடமையை உணர்ந்து இடதுசாரி அரசியலின் தலைமையில் தலித் இயக்கங்களைக் கட்டியமைப்போம். தலித் மக்களை அனைத்து சாதிய ஒடுக்குமுறை யிலிருந்தும் விடுவிப்போம்! சாதி சமூகத்திற்கு முடிவுகட்டுவோம்!