"மக்கள் எளிமையினை
மதிக்கும் எளியோராகி
முக்காலும் சிறக்கும்
மணித்தலைவர் வாழியவே!"

அய்யம்பேட்டை அ. ஷேக் அலாவுதீன் காயிதே மில்லத் பற்றி எழுதிய கவிதையில் இடம்பெற்றிருக்கும் முத்தான வரிகள்தான் இவை.

anna and QM

மக்களோடு மக்களாக கலந்து எளிமையாக வாழ்ந்து மறைந்த மிகச் சில தலைவர்களில் காயிதே மில்லத்தும் ஒருவர். வாரி இறைத்த செல்வந்த குடும்ப பின்புறத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எளிமையுடன் வாழ்வதையே மனதார விரும்பி ஏற்றவர் காயிதேமில்லத்.

அவருடைய நடையையும், உடையையும் பார்ப்பவர்கள் அவர் பெரிய தலைவர் என்பதையே நம்ப மறுப்பார்கள். அந்த அளவில் எளிமை மிகுந்திருக்கும். தனக்கான வாழ்வு என்று எதையும் சிந்திக்காதவராக இருந்தார். இறுதிவரை அதில் உறுதியாகவும் இருந்தார்.

நான்குபேர் சேர்ந்து வந்தாலே நெருக்கடிக்குள்ளாகும் குரோம்பேட்டையில் இருக்கும் தயாமன்ஜில் என்ற சிறிய வீட்டில்தான் அவர் வசித்து வந்தார். கட்சி அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் அங்கிருந்து தொடர்வண்டி மூலம் பீச் ஸ்டேஷனனில் இறங்கி அங்கிருந்து ரிக்சாவில் ஏறி மண்ணடியில் உள்ள அலுவலகத்திற்கு செல்வார். தனக்காக தனி வாகனம் வைத்துக்கொள்ள அவர் எப்போதும் விரும்பியதில்லை.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்பவராக அவர் இருந்ததால் கட்சியினர் அவருக்கு கார் வாங்கி தர விரும்பினர். வெளிநாட்டில் உள்ள அவரது நலம்விரும்பிகளும் முயன்றனர். எதற்கும் அவர் இசைவு தரவில்லை. ஒருமுறை கேரளா சென்றிருந்தபோது கட்சித்தோழர்கள் கார் ஒன்றை வாங்கி அதன் சாவியை காயிதே மில்லத்தின் கையில் திணித்தார்கள். அதை வேண்டா வெறுப்பாக பெற்றுக்கொண்டவர் கொஞ்சமும் தாமதிக்காமல் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரியின் பயன்பாட்டிற்கு அந்த காரை அன்பளிப்பாக வழங்கிவிட்டார். அதுதான் காயிதேமில்லத். தனக்கு வாகனம் வைத்துக்கொள்வதை மட்டுமல்ல கட்சிப்பணத்தில் ஒரு பைசாகூட தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி விடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

கட்சி அலுவலகத்திற்கு வருகிறார் காயிதே மில்லத். அலுவலக பணியாளரை அழைக்கிறார். அவர் கையில் ஒரு உரையை கொடுத்து அதோடு தனது பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து அஞ்சல் தலை ஒட்டி அஞ்சலில் அனுப்பி விடுமாறு பணிக்கிறார். அலுவலக செலவிலேயே அனுப்பலாமே என்கிறார் அந்த பணியாளர். இல்லை இது எனது சகோதரனுக்கு அனுப்புகிற கடிதம் என்கிறார். உங்கள் சகோதரரும் கட்சியில்தானே இருக்கிறார்; இதில் என்ன தவறு இருக்கிறது வினவுகிறார் பணியாளர். உடனே காயிதே மில்லத் இதில் கட்சி விஷயங்கள் எதுவும் எழுதவில்லை. குடும்ப விஷயங்கள் மாத்திரமே எழுதிருக்கிறேன். ஆதலால் கட்சிப் பணம் செலவழிப்பது முறையாகாது. நான் கொடுத்த இரண்டானாவில் அஞ்சல் தலை ஒட்டி அனுப்புமாறு கண்டிப்புடன் கூறுகிறார். பணியாளரும் அவ்வாறே செய்கிறார். கட்சி பண விஷயத்தில் எந்த அளவு நேர்மையாக, நாணயமாக காயிதே மில்லத் செயல்பட்டிருக்கிறார் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

ஒருசமயம் பள்ளிவாசலில் சமயம் சார்ந்த நிகழ்ச்சி. காயிதேமில்லத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பெரிய தலைவர் வந்திருப்பதால் விருந்து அமர்க்களப்படுகிறது. பிரியாணி, நெய்ச்சோறு, இறைச்சி என்று தடபுடலாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த எல்லோரையும் நன்கு சாப்பிட பணித்த அவர் தனக்கு மட்டும் தனியாக தட்டில் உப்புமா வாங்கி ஒரு ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்காக வெளியே செல்லும்போது அந்த பகுதி கட்சி தோழர்களின் வீட்டில் தங்குவது அவர் பழக்கம். அப்படி ஒருநாள் ஒருவர் வீட்டில் தங்கும்போது காலை உணவிற்காக அந்த பகுதியின் சிறப்பான உணவு வகைகளை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பிட வந்த காயிதே மில்லத் எனக்கு எதற்கு எவையெல்லாம், எனது தேவை இவ்வளவே போதும் என்று இரண்டு இடியாப்பத்தை மட்டும் எடுத்துக்கொண்டார். தனக்காக மற்றவர்கள் சிரமப்படுவதை விரும்பாதவர் அவர். உணவு விஷயத்திலும் தனக்காக யாரும் மெனக்கெட கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். காயிதே மில்லத்தை 'அன்பின் உறைவிடம்' என்று ஒருமுறை அறிஞர் அண்ணா சொன்னார். அவர் அன்பின் உறைவிடம் மட்டுமல்ல எளிமையின் உச்சமும்கூட.

காயிதேமில்லத் தமிழகம் கண்டெடுத்த முத்து. முஸ்லிம்களின் சொத்து. இரண்டு தரப்பும் அவரை பயன்படுத்திக்கொண்டதா என்பதே கேள்வி. கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் காயிதே மில்லத்தை வாழ்த்தி ஒரு கவிதை வடித்திருப்பார். அதில் இடம்பெற்றிருக்கும் சில வரிகளை இங்கு பொருத்துவது சாலப்பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கவிஞரோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.

"இரவு பகல் பாராது உழைத்து உழைத்தே
இணையற்ற சாதனையில் வெற்றிகண்டே
உறவுமுறை பாராது உண்மை பார்க்கும்
ஒப்பரிய காயிதே மில்லத் வாழ்க!"

- வி.களத்தூர் எம்.பாரூக்

Pin It