savonarolaஉலக வரலாற்றில் இத்தாலிக்கு தனியிடம் உள்ளது. அதில் சாவனரோலா எரித்துக் கொல்லப்பட்ட கொடிய நிகழ்வும் ஒன்று. சாவனரோலா 1475ல் ஒரு மடத்தில் சேர்ந்து மதப் பிரசாரகராகப் பணியாற்றத் தொடங்கினார். புதிய மதச் சீர்த்திருத்தம் ஒன்றைச் செய்ததன் காரணமாக மக்களிடையே பெரும் செல்வாக்கடைந்தார். எட்டாவது சார்லசின் ஆட்சி குறைகளை வன்மையாகக் கண்டித்தார். ஜனநாயகக் கருத்துக்களைப் போதித்து, எவ்வித தீங்கும் அடையாமல் மக்களைக் காப்பாற்றினார்.  

தமது பரிசுத்த பக்திக் கொள்கையை மிகத் தீவிரமாக செயல்படுத்தி, அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். அவருடைய அதிகாரத்தின் கீழ் இயங்கிய நகர ராஜ்யத்தில் பெரும்பாலான மக்கள் உலக இன்பங்களைத் துறந்து, எளிய உடையணிந்து பஜனைப் பாடல்களைத் தவிர, வேறு பாடல்களைப் பாடாதவர்களாய் நடந்து வந்தார்கள். சாவனரோலாவின் கொள்கை வெறி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வளர்ந்து வந்தது.

இறுதியில் சிற்றின்பம் பற்றிய புத்தகங்களையும், பாடல்களையும், காம உணர்ச்சிகளைத் துாண்டக் கூடிய கதைகளையும், பாடல்களையும் தேடிப் பிடித்து, தீயிலிட்டு அழிக்கும்படி தம் சீடகோடிகளுக்கு உபதேசம் செய்தார். மாயைகளை எரிக்க வேண்டுமென்றே இந்த இயக்கத்தால் உயர்ந்த மதிப்பிற்குரிய பல கலை நுால்கள் அழிந்து போயின. 

அவருடைய முட்டாள்தனமான சீர்திருத்த வேகம் முற்றியதும், யாருடனும் இணங்கிப் போகாத அகம்பாவ குணத்தால் சொந்த நாட்டிலேயே பல எதிரிகளை உருவாக்கிக் கொண்டார். நகர மக்களுக்கு பரிசுத்த பக்திக் கொள்கையில் அலுப்புத் தட்டியது. அந்த சமயத்தில் பிளாரன்சில் ஒரு நோய் பரவியது. மெடிசி பரம்பரையைப் பின்பற்றுவோர் பலர் இறந்தனர். இப்படிப்பட்ட பல துன்பங்களும் ஏற்பட்டதால் அவருக்கு எதிராக எங்கும் அதிருப்தி பரவியது.

தம் போதனைகளை ஆயுத பாணிகளால் கடுமையாகக் கையாண்டார். கடைசியில் தங்கள் கொள்கையை மெய்ப்பிப்பதற்காக அவருடன் தீப்புகுந்து காண்பிப்பதாக அவருடைய சீடகோடிகள் அறிவித்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை! 

அதனால், அவரை ஏமாற்றுக்காரன் என்றும், கோழையென்றும் துாற்றிக் கொண்டு கற்களையும், தீவட்டிகளையும் கொண்டு மக்களில் ஒரு சாரர் அவருடைய மடாலயத்தைத் தாக்கி, கலகம் விளைவித்தார்கள். இதன் காரணமாக 1497ல் போப்பினால் மதப்பிரஷ்டம் செய்யப்பட்டு 1498ல் மதத்துவேஷி என்று குற்றம் சாட்டப்பட்டு பிளாரன்ஸ் சர்க்காரால், 1498ம் ஆண்டு மே மாதம் 23ம் நாள் துாக்கிலிட்டு எரித்துக் கொள்ளப்பட்டார் சாவனரோலா.

மக்கள் கூட்டம் அவரை நம்பாத போது, நம்பிக்கை உடையவர்களையேனும் உறுதியாக இருக்கும்படிச் செய்ய அவருக்கு வழியில்லை. அல்லது நம்பிக்கையற்றவனிடம் நம்பிக்கையைப் புகுத்தும் வழியும் அவருக்குத் தெரியவில்லை என்று சாவனரோலா குறித்து மக்கியவெல்லி கூறியதுதான் இன்று நினைவிற்கு வருகிறது.

- கணியூர் சேனாதிபதி

Pin It