கசாப் - இந்த பெயர் சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இந்தியாவிலுள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்ட பெயர். மும்பையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவன்தான் கசாப். சரி, இது அப்படியே இருக்கட்டும். ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரை இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்? மாலேகால் குண்டு வெடிப்பு சம்பவம் பொதுமக்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க வாயப்பு இருக்கிறது? மேலே குறிப்பிட்ட அந்தப் பெயரும், அந்த சம்பவமும், திரளான மக்களுக்கு சென்றடையாத செய்திகளாகவே இன்றளவும் உள்ளன.

2007, பிப்ரவரி 18ல் தில்லி – லாகூர் இடையிலான சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 68 பேர் உயரிழந்தனர். 68 அப்பாவி பொதுமக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்து செயல்பட்டவை ‘இந்து’ தீவிரவாத அமைப்புகள். அந்த ‘இந்து' தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்தான் சாத்வி பிரக்யா என்பவரும், அவரது கூட்டாளியான சுனில் ஜோஸி என்பவரும். ‘இந்து’ தீவிரவாதம் என்கிற வார்த்தையே நம் மக்களுக்கு புதிய சொல்லாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்து தீவிரவாத அமைப்பு, இந்து தீவிரவாதிகள் போன்ற செய்திகளை நமது ஊடகங்கள் நமக்கு எடுத்துச் சொல்வதில்லை. சொல்ல விரும்புவதுமில்லை. எழுத்து ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் சினிமா என மக்களிடம் நேரடியாக பேசும் எந்த அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பற்றி மக்களுக்கு துளி அளவும் சொன்னதில்லை. அதே நேரத்தில் இசுலாமிய தீவிரவாதம், தீவிரவாதிகள் என்றாலே இசுலாமியர்கள் என்கிற சித்தரிப்பை ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ‘கசாப்’ என்கிற 22 வயது இளைஞனுக்கு மரண தண்டனை ஏன் வழங்க வேண்டும், மரணம் எந்த வகையில் அவனுக்கு அமைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தண்டனை முறைகளை ஆங்கில ஊடகங்கள் அரசுக்கு ஆலோசனைகளாக வழங்கின. சிறுமி முதல் பெரியவர் வரை ‘கசாப்’ மரண தண்டனை குறித்து கருத்து கேட்டு, இந்தியா முழுவதும் ‘கசாப்’ சாக வேண்டியவன் என்கிற பிரச்சாரத்தை செய்தன. மும்பை தொடர்வண்டி நிலையத்தில் இறந்து போன அப்பாவி மக்கள் மீது தாங்கள் காட்டும் கருணையாக, கசாப் சாகவேண்டும் என்று நினைப்பதே தேசப்பற்றுள்ள இந்தியனின் கடமை என்பது போலவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்து தீவிரவாதி ‘சாத்வி பிரக்யாவால்’ சுட்டு கொல்லப்பட்ட 68 பேரும், இந்தியர்கள்தான். இந்த 68 பேர் இறந்துபோன செய்தியையும், இதற்குக் காரணமான இந்துத்துவ அமைப்புகளைப் பற்றியும், இப்பாதகச் செயலை செய்த சாத்வி பிரக்யாவை தூக்கில் போட வேண்டும் என்றும், எந்த ஊடகமும் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. தங்களை நடுநிலையாளர்களாக சொல்லி கொள்ளும் ஆங்கில ஊடகங்களின் உண்மை முகம் இதுதான்.

ஊடகம் என்பது இந்திய அளவில் பார்ப்பன, பனியாக்களின் தலைமையில் செயல்படும் அமைப்பாகவே இருக்கிறது. இந்திய வல்லாதிக்க கூறுகளான, 'தேசிய இனங்களின்' மீதான ஒடுக்குமுறை, இசுலாமியர்கள் மீதான பொய் சித்தரிப்பு, தரகு தேசிய முதலாளிகளுக்கான ஆதரவு மனநிலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தியல், பிராந்திய உணர்வுகள் கொண்ட மாநில கட்சிகளை சிறுமைப்படுத்துதல் என அனைத்து கருத்தாக்கங்களையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத்தான் இங்குள்ள ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. சமூக நீதிக்கு முரணான இந்திய தேசிய கட்டமைப்பை, இந்துத்துவா உணர்வை, இந்தி மொழி திணிப்பை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பொது புத்தியாக உருவாக்கும் அரசியலைத்தான் இந்த ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, பழனிபாபா படுகொலை என இந்துத்துவா அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை இதுவரை எந்த ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை. 1984-ல் விஷ்வ இந்து பரிஷத் தொடங்கிய பிறகு தான் இந்திய அளவில் மதக்கலவரங்களும், வன்முறை தாக்குதல்களும் பரவலாகின. குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை இந்நாட்டில் துவங்கி வைத்த இந்த்துவ பார்ப்பனிய அமைப்புகளை தீயசக்திகள் என்கிற பிரச்சாரத்தை எந்த ஊடகங்களும் செய்ததில்லை. தீவிரவாத அமைப்புகள் என்றால், தேசிய இன விடுதலை அமைப்புகள் மற்றும் இசுலாமிய மத அமைப்புகள்தான் என்பதை பொதுமக்கள் மத்தியில் ஆழமாகப் பதிவு செய்வதில் முகாமையான பங்கை இந்த ஊடகங்கள் வகிக்கின்றன.

1995க்குப் பிறகு தமிழகத்தில் இசுலாமிய அமைப்புகளில் சில தலைவர்கள் தங்களது மத இறுக்கத்தை விடுத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து சமூகநீதிக்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். பார்ப்பனியத்திற்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை ஒருங்கிணைத்து குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் பழனிபாபா. அமெரிக்காவில் உள்ள பிடாலபியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, முதலாளித்துவத்தின் கோரமுகத்தையும், நுகர்வு கலாச்சாரத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளையும் கண்டித்து பேசிய ஆற்றல்மிகு பேச்சாளர் பழனிபாபா. 1997ல் இந்து தீவிரவாதி ஒருவனால் வெட்டிக்கொல்லப்பட்டார் பழனிபாபா. இந்துத்துவத்திற்கு எதிராக இசுலாமிய அடிப்படைவாத சக்தியாக இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உதவியுடன் சமூக நீதிக்காக களம் கண்டவர் பழனிபாபா. அதன் காரணமாகவே பார்ப்பனியத்திற்கு பலியானார்.

‘சாத்வி பிரக்யா’ என்கிற இந்து தீவிரவாதியை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் இந்திய தேசியகட்டமைப்பு எப்படி பாதுகாத்து வருகிறதோ, அதேபோல் பழனிபாபா போன்ற இந்துவத்திற்கு எதிரான ஆளுமைகளையும் மறைத்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் தலித் மாணவர்களுக்கும், சாதி இந்து மாணவர்களுக்கும் இடையே நடந்த வன்முறையை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை ஒளிபரப்பின. ஆண்டாண்டு காலமாக தலித்களின் மீதான வன்கொடுமைகளை பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்காத ஊடகங்கள் தலித் கையில் ஆயுதமேந்தியவுடன் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஈழவிடுதலைக்காக உயிர் துறந்த முத்துக்குமரன் முதல் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் வரை தமிழின உணர்வாளர்களின் போராட்டங்களையும், அர்ப்பணிப்பு வாழ்வையும் திட்டமிட்டு மறைத்து வருகிறது இந்திய வல்லாதிக்கத்திற்கு துணை நிற்கும் இந்த ஊடகங்கள். ராகுல்காந்தி போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதி தலித்கள் வீட்டில் தங்கினாரென்றும், அவர்களை தொட்டுப் பேசினார் என்றும் கற்பனைவாத சோசலிச கருத்துக்களைப் பரப்பும் இந்த ஊடகங்கள் ஈழத்திற்குச் சென்று சிங்கள ராணுவத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட தோழர் அங்கையர்கண்ணியைப் பற்றியும், சிங்களக் காடையர்களால் வன்தீண்டலுக்கு ஆளான தோழர் திருமலையைப் பற்றியும் இன்று வரை ஏன் பேசவில்லை?

பாலியில் வன்முறை, குழந்தைகளை கடத்தி கொலைச்செய்தல் போன்ற சம்பவங்களை மையமாக வைத்து ஊடகங்கள் தங்கள் கவலையை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகின்றன. சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் அவை. இருப்பினும், கோவையில் மார்வாடிக் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு இறந்த பிறகே, இந்திய தேசிய கட்டமைப்பும் ஊடகங்களும் இப்பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டன. சேரிக் குழந்தைகள் பலபேர் அரசு மருத்துவமனையில் கடத்தப்படுவதும், அக்குழந்தைகள் பிச்சைக்காரர்களாக்கப்படுவதும், சாதி இந்துக்களால் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவதும், நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சமூக அவலங்கள். அதிகார வர்க்கத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டும்தான் ஊடகங்களும், இந்திய அரசும் அப்பிரச்சனையில் அக்கறை கொள்கின்றன.

தமிழக அமைச்சர் ஒருவருக்கு டெல்லியில் ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், இந்தியாவின் அனைத்து பத்திரிகைகளிலும் அது கேலிச்சித்திரமாகிறது. ஆனால், வெளியுறவுதுறை அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணா ஐ.நா.பாதுகாப்பு அவை உரையின்போது, வேறு நாட்டு உரையை வாசித்தால் அது வெறும் செய்தியாக மட்டுமே வருகிறது. இதே தவறை தமிழ்நாட்டைச் சேர்ந்த மந்திரி செய்திருந்தால் சும்மா விட்டிருக்குமா இந்த ஊடகங்கள்? மாநில உரிமைகளுக்கான போராட்டத்தை ஒடுக்குதல், தமிழ்தேசியப் போராட்டத்தை பகடி செய்தல், பழங்குடிகளின் வரலாற்றை மறைத்தல், சிறுபான்மை மக்களை அந்நியப்படுத்துதல் உள்ளிட்ட இந்திய வல்லாதிக்க கனவுகளை சராசரி குடிமகனின் பொதுப் புத்தியாக கொண்டு வருவதில் இந்திய ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ‘சாத்வி பிரக்யா’ போன்ற இந்து தீவிரவாதிகளை திட்டமிட்டே மறைத்து, பாதுகாத்து வருகிறது இந்திய தேசிய கட்டமைப்பு. இதன் இத்துத்துவ, ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து, தமிழ்தேசிய இன அடையாளத்தையும், தமிழ்தேசிய கட்டமைப்பையும் வளர்த்தெடுக்க வேண்டிய பெரும்பணி நமக்கு இருக்கிறது.

Pin It