periyar 281உலகத்திலேயே நாஸ்திகம் என்று சொல்லப்படும் வார்த்தையானது அநேகமாய் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக் கூடியதாக இருந்து வருகின்றது. காரணம் என்னவென்று பார்ப்போமானால் அவ்வார்த்தையில் கடவுள் என்பது இல்லை என்கின்ற பொருள் அடங்கியிருப்பதாகக் கொள்வதேயாகும்.

மக்கள் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதைப் பற்றி மாத்திரமே ஆத்திரப்படவும் வெறுப்புக் கொள்ளவும் புரோகிதர்கள், பாதிரிகள், மௌல்விகள், பண்டிதர்கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டு விட்டார்களே தவிர கடவுள் என்பதைப் பற்றிய விளக்கம் யாவருக்கும் தெளிவாக்கப்படாமல் இருப்பதோடு அது (கடவுள் என்பது) மனதிற்கும் புத்திக்கும் எட்டாதது என்பதாகவும் அப்படிப்பட்ட ஒன்றை நம்பித்தானாக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.

இப்படியிருந்த போதிலும் என்றையதினம் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து உண்டு என்று கற்பிக்கப் பட்டதோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதம் ஏற்பட்டு வெகு காலமாகவே இவ்வாதப் பிரதிவாதம் நடந்து வருவதோடு நாளது வரை முடிவுபெற முடியாமலே இருந்து வருகின்றது.

உதாரணமாக, கடவுள் இல்லை என்று சொல்லும்படியான பல மதங்களும் கூட உதாரணமாக சூனிய மதம், நிரீஸ்வர மதம், உலகாயுத மதம், நாஸ்திக மதம் என்பது போன்ற பல உண்டு என்றாலும் கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்கின்ற ஒரு கிளர்ச்சி வலுத்து அதை அமுலுக்குக் கொண்டு வந்து மற்றும் உலகமெங்கும் அக்கொள்கையைப் பரப்ப, பிரசாரமும் செய்ய ஏற்பாடுகள் சாதாரணமாக இந்த இருபதாவது நூற்றாண்டில்தான் தைரியமாகவும், பலமாகவும் செய்ய முடிந்து வருகின்றதென்பதாகவும் தெரியவருகின்றது.

ஏனெனில் இதுவரையில் உலகத்தில் எந்த நாடும் பெரிதும் புரோகிதக் கூட்டத்தாரின் ஆதிக்கத்திலும், கடவுள் பிரசாரத்தின் பேரால் கௌரவமும், வயிற்றுப் பிழைப்பும் நடத்தி வந்தவர்களின் ஆதிக்கத்திலும் இருந்து வந்ததாலும், உலகத்திலுள்ள அரசாங்கங்களும் மதத்துடனும், கடவுளுடனும் பிணைக்கப்பட்டே இருந்ததாலும் கடவுளை மறுக்கும் அபிப்பிராயத்திற்கோ கூட்டத்திற்கோ நாட்டில் ஆதரவு இல்லாமல் போனதோடு அவர்கள் மீது தோஷமும் கற்பிக்கப்பட்டு அந்த அபிப்பிராயம் வலுக்க முடியாமலும், பரவ முடியாமலும் போய் விட்டது.

ஆனால் இந்த நூற்றாண்டில் கடவுள் மறுப்பு என்பது பாமர மக்களுக்குள் ஒருவித வெறுப்பும், அதிருப்தியும் தரக் கூடியதாயிருந்தாலும் மற்றும் கடவுள் பேரால் அல்லது கடவுள் சம்மந்தமான மோக்ஷம், சாஸ்திரம், கதை, புராணம், பிரசாரம் ஆகியவைகளின் பேரால் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு மிகுதியும் ஆத்திரத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் நடுவு நிலையிலுள்ள அறிஞர்களால் இவ்விஷயம் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி ஆலோசிக்கப்பட்டு வருவதும் அவ்வித அபிப்பிராயக் காரர்களைப் பெரிதும் அறிவாளிகள் என்றும், ஞானவான்கள் என்றும் சொல்லுவதும் மதிப்பதுமாய் இருந்து வருகின்றன.

மேல்நாட்டு அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்களுக்குள் இன்றும் அநேகர்கள் நாஸ்திகர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அது மாத்திரமல்லாமல் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ருஷியா, சைனா முதலாகிய இடங்களின் முக்கிய பட்டணங்களில் கடவுளை நிலைப்படுத்தும் மதங்களை எதிர்க்கவும் நாஸ்திகத்தைப் பரப்பவும் என்றே பல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றிற்காக பத்திரிகைகள் துண்டுப் பிரசுரங்கள் முதலியவைகள் செய்யப்பட்டும் வருகின்றன.

குறிப்பாக அமெரிக்காவில் நியூயார்க் என்கின்ற பட்டணத்தில் “நாஸ்திகத்தை உலகமெங்கும் வியாபிக்கச் செய்வதற்கான சங்கம்” என்னும் பெயரால் ஒரு ஸ்தாபனத்தை ஏற்பாடு செய்து அதன் மூலம் 3, 4 வருஷங்களாக நல்ல வேலைகள் மும்முரமாய் செய்யப்பட்டு வருகின்றன. அங்கிருந்து நமக்கு அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையின் படி அச்சங்கமானது பிரசாரத்திற்காகவும் துண்டு பிரசுர வினியோகத்திற்காகவும் வருஷம் ஒன்றுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாயுக்கு மேலாகவே செலவு செய்து வந்திருக்கின்றது.

இப்போது இந்த வருஷத்தில் “கிறிஸ்துவ மதம் வெடிப்புக் கண்டு விட்டது” என்கின்ற பேராலும் “மதம் என்றால் என்ன?” “கடவுள் என்றால் என்ன?” “கடவுள் இல்லாத முற்போக்கு” ஆகிய இவை போன்ற தலைப்புகளால் பல லக்ஷக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வெளியாக்கப் பட்டிருப்பதாகக் காணப்படுகின்றது.

சங்க அங்கத்தினர்கள் வருஷத்திற்கு வருஷம் 100 க்கு 50 வீதம் உயர்ந்துக் கொண்டு வருவதுடன் பல இடங்களில் கிளை ஸ்தாபனங்கள் ஏற்பட்டு வெளிநாடுகளிலும் கூட பிரசாரங்கள் செய்யப்பட்டு வருவதாய்க் காணப்படுகின்றது.

வேறு பாஷைகள் மூலமும் சைனா முதலிய இடங்களுக்கு ஆட்களை அனுப்பி இது போன்ற பிரசாரமும் துண்டுப் பிரசுரங்களும் நடைபெற்று வந்திருப்பதாகவும் காணப்படுவதோடு ஒவ்வொரு கனவான் ஒவ்வொரு வேலையை ஏற்றுக் கொண்டு திருப்தி தரத்தக்க அளவு பிரசாரம் செய்திருப்பதாயும் காணப்படுகின்றது.

இதன் தலைமை காரியஸ்தலம் அமெரிக்க நியூயார்க் பட்டனத்தில் 14 வது வீதி 307 - நு நெம்பர் கட்டிடத்தில் நிருவப்பட்டிருக்கின்றது. இதில் சேரவிரும்பும் அங்கத்தினற்கு வருட சந்தா ஒரு டாலர் அல்லது மூன்று ரூபாயாகும் என்பதாகவும் காணப்படுகின்றது.

இப்படியே லண்டன் பட்டணத்தில் சில ஸ்தாபனங்கள் அதாவது “தாராள நினைப்புக்காரர்கள் சங்கம்” என்றும் “அறிவாளிகள் சங்கம்” என்றும் “உண்மை நாடுவோர் சங்கம்” என்றும் பல சங்கங்கள் ஏற்படுத்தி அது போலவே பிரசாரமும் செய்யப்பட்டு வருகின்றன.

இச்சங்கங்களில் சிலதுக்கு வயது 40, 50க்கு மேல் ஆயிருந்த போதிலும் அவைகள் இப்போது தான் மிக்க பிரபலமாயும், செல்வாக்காயும் நடைபெற்று வருகின்றதாக அறிவிக்கப்படுகின்றன.

இவற்றில் கலந்துள்ள நபர்களில் உலகத்திலே மிக்க அறிவாளிகள் ராஜதந்திரிகள் என்று சொல்லப்பட்ட பெரியார்களே அதிகமாயிருக்கின்றார்கள்.

ஆகவே நாஸ்திகப் பிரசாரம் உலகில் சகஜமாகவும் செல்வாக்காகவும் நடைபெறுகின்றன என்பதை தெரிவிக்கவே இவற்றை மேற்கோள்களாக குறிப்பிட்டோம். இனி அதனால் ஏற்படும் கெடுதி என்ன? நன்மை என்ன? என்பவைகளைப் பற்றி யோசிப்போம்.

சாதாரணமாக மனிதன் நாஸ்திகனாயிருந்தால் அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவனாயிருந்தால் ஒரு கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்க மாட்டான் என்றும் திருட்டு, பொய், மோசம், ஒருவன் சொத்தை ஒருவன் அபகரித்தல், முறை தவரி கலத்தல் மக்களை இம்சித்தல் முதலாகிய காரியங்கள் செய்யப் பயப்பட மாட்டான் என்றும் சொல்லப்படுகின்றது.

இதைப்பற்றி கவனிக்குமுன்பு உண்மையான கருத்தில் இந்த கடவுள் நம்பிக்கை உள்ள மனிதன் எவனாவது உலகில் இருக்கின்றானா என்பதை முதலில் யோசிப்போம்.

சாதாரணமாக கடவுள் என்கின்ற பதத்திற்கு மக்களில் பெரும்பான்மையோர்கள் கருதிக் கொண்டிருக்கும் கருத்து என்ன வெனில் சர்வ சக்தியும் அதாவது உலகம் உலகத்திலுள்ள ஜீவராசிகள், புல் பூண்டு தாவரங்கள் முதலிய யாவும் தனது இச்சையால் உண்டாக்கப்பட்டு தனது சக்தியால் இயங்கச் செய்யப் படுகின்றதானதும் எங்கும் வியாபித்திருப்பதானதும் சர்வ ஜீவராசிகளையும் ரக்ஷிக்கும் தன்மையுடையதானதும் எல்லாவற்றையும் சமமாய்ப் பார்ப்பதானதும் சுருக்கமாய் சொல்வதனால் அவனன்றி (அக் கடவுள் சித்தம் அன்றியில்) ஒரு அணுவும் அசையாததான சக்தியுடைத்தானது என்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

இக் கருத்து சரியா, தப்பா என்று யோசிப்பதற்கு முன்னும் இப்படி ஒரு வஸ்த்து இருக்கின்றதா இல்லையா என்று முடிவு செய்வதற்கு முன்னும் இப்படி மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதானது உலகத்திற்கு நன்மையா? தீமையா? என்று முடிவு செய்வதற்கு முன்னும் இந்தப்படி உலகத்தில் எந்த மனிதனாவது உண்மையில் நம்பி இருக்கின்றானா? அந்தப்படி நம்பி இருப்பதற்குத் தகுந்தபடி அவனது மனம், மெய், மொழி ஆகியவைகளால் ஏற்படும் நடவடிக்கைகள் காணப்படுகின்றனவா?

அதாவது எந்த மனிதனுடைய நடவடிக்கையில் இருந்தாவது மேல்கண்ட சக்தியும் குணமும் கொண்ட ஒரு வஸ்துவை நம்பி நடக்கின்ற மனிதனின் நடவடிக்கைகள் இவை என்று கருதும்படியாக இருக்கின்றனவா? என்பதை யோசிப்போமானால் இதுவரை ஒரு மனிதனையாவது அம்மாதிரி நம்பிக்கையின் மீது நடக்கின்றான் என்பதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் அந்தப்படி ஒரு கடவுள் இருப்பதாக ஒரு மனிதன் கூட தனது வாழ்க்கையில் எண்ணி இருக்க முடிவதில்லை என்றும்தான் சொல்ல வேண்டி இருக்கின்றதே தவிர வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

இது அதாவது இப்படிச் சொல்லுவதானது சாதாரண மக்களிடையே மாத்திரமல்லாமல் கடவுள் பிரசாரம் செய்பவர்களிலாவது கடவுளைக் கண்டவர்களாக சொல்லப்பட்டவர்களிலாவது கடவுளுக்குச் சமமாகக் கருதும் சமயாச்சாரிகள், மதத்தைக் காப்பாற்றும் ஸ்தாபனத் தலைவர்கள் முதலாகியவர்களுக்குள்ளாவது நாஸ்த்திகத்தைக் கண்டு பயந்து நடு நடுங்கித் துயரப்பட்டு கண்ணீர் வடிக்கும் ஆஸ்திகப் பண்டிதர்கள், சாஸ்திரிகள், வைதீகர்கள் முதலாகியவர்களுக்குள்ளாவது மற்றும் மகாத்மாக்கள் வேதாந்திகள் பெரியோர்கள் முதலியவர்களுக்குள்ளாவது இதுவரை ஒருவராவது இருந்ததாகவோ, இருப்பதாகவோ சொல்லுவதற்கில்லையே.

ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு தனி மனிதனென்றும் தனக்காகத் தான் செய்யவேண்டிய காரியம் பல உண்டு என்றும் அவற்றை தினமும் செய்வதாகவும், அவனவன் இஷ்டப்பட்டபடி செய்து கொண்டும் அதனதன் பலனை அடைந்து கொண்டும், அது போலவே மற்றவர்களையும் செய்யும் படி தூண்டிக் கொண்டும் மற்றவர்கள் செய்வதில் குண தோஷம் கற்பித்துச் சொல்லிக் கொண்டும், அதற்காக விருப்பு வெறுப்புக் காட்டிக் கொண்டும், மகிழ்ச்சி துக்கமடைந்து கொண்டும் தான் இருக்கிறானே ஒழிய கடவுளின் சர்வசக்தியைப் பற்றியோ, சர்வவியாபகத்தைப் பற்றியோ, சர்வ தயாபரத்தைப் பற்றியோ, சர்வ சமத்துவத்தைப் பற்றியோ நம்பி இருப்பவன் ஒருவனும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

ஆகவே இதிலிருந்து அப்படிப்பட்ட ஒரு வஸ்து இல்லை என்றும் இருப்பதாகவும் யாரும் நம்பி இருக்கவில்லை என்றும்தான் முடிவு கட்ட வேண்டியிருக்கின்றதென்பது ஒரு பக்கமிருந்தாலும் அப்படி ஒன்று இருப்பதாக கற்பித்து நம்பச் செய்வதினாலாகிலும் காரியத்தில் ஏதாவது, அதாவது கடவுள் நம்பிக்கையினால் ஏற்படக் கூடும் என்று கருதுகின்ற, முன் சொன்ன காரியங்களாவது நடக்கின்றதா என்று பார்த்தால் திருடாதவன், பொய் சொல்லாதவன் பிறர் பொருளை வஞ்சிக்காதவன் முறை தவறி கலவி செய்யாதவன், பிறருக்கு இம்சை கொடுக்காதவன் முதலான காரியங்கள் செய்யாதவன் என்பவன் ஒருவனைக் கூட காண முடிவதில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

அன்றியும் திருட்டு, வஞ்சகம், பொய், முறை தவறிகலத்தல் முதலாகிய காரியங்கள் எவை என்று தீர்மானிப்பதே கஷ்டமான காரியமாயிருக்கின்றது என்றாலும் மக்கள் எதை எதை மேல் கண்ட மாதிரிகுணங்கள் என்று கருதுகின்றார்களோ அதைச் செய்யாமல் இருக்க இந்த எண்ணத்தையும் நம்பிக்கையும் உண்டாக்குவதாலோ நிலை நிருத்துவதாலோ முடிகின்றதா? என்பதுதான் இங்கு யோசிக்கத்தக்கதாகும்.

இது ஒரு புரமிருக்க மேல்கண்ட அதாவது கடவுள் என்பதற்குக் கற்பிக்கப்பட்ட குணங்கள் உடையதான ஒரு கடவுள் என்பது இல்லை என்றும், அல்லது இருக்க முடியாது என்றும் கருதுகின்றவர்களிடத்திலாவது அந்தப்படி கருதிக் கொண்டிருக்கின்றார்கள் என்று பிறரால் கருதப் படுகின்றவர்களிடத்திலாவது முன் சொல்லப்பட்ட திருட்டு பொய் வஞ்சகம் பிறரை இம்சிப்பது முதலிய குணங்கள் கடவுள் நம்பிக்கைக்காரர்களை விட (ஆஸ்திகர்களை விட) அதிகமாய் இருப்பதாகவாவது, அல்லது பிற மக்களுக்கு ஆஸ்திகர்களைப் போன்ற நன்மை செய்யவில்லை என்றாவது சொல்ல முடியுமா என்று பார்த்தால் அதுவும் முடியாத காரியமாய்த்தான் காணப்படுகின்றதே ஒழிய வேறில்லை.

மக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேல்கண்ட விதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டு விட்டு தனக்கே புரியாத படி ஒன்றை நினைத்துக் கொண்டு

“கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும்,

“கடவுளை ஒப்புக் கொள்ளுகின்றாயா இல்லையா” என்று கேட்பதும்,

“கடவுள் இல்லாமலிருந்தால் மக்களில் ஒருவருக்கொருவர் ஏன் வித்தியாசமாயிருக்க வேண்டும்?”

“ஒருவர் பணக்காரனாகவும் ஒருவர் ஏழையாகவும் ஏன் இருக்க வேண்டும்?”

“ஒருவர் கூன், குருடு, மொண்டி, குஷ்ட ரோகி முதலியவனாயும், ஒருவன் நல்ல திட சரீரியாகவும் ஏன் இருக்க வேண்டும்?”

“ஒருவனுக்கு ஏன் பத்துப் பிள்ளை? ஒருவனுக்கு ஏன் நாலு பிள்ளை? ஒருவனுக்கு ஏன் பிள்ளை இல்லை?” என்றும்

இருவர் ஒரே காலத்தில் தனித்தனியாக வியாபாரம் ஆரம்பித்தால் ஒருவர் நஷ்டமும், ஒருவர் லாபமும் ஏன் அடைவேண்டும்? என்பது போன்ற கேள்விகள் கேட்டு அதன் மூலம் மேல்கண்ட குணங்கள் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று உண்டு என்று மெய்ப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இம்மாதிரி கேள்விக்காரர்களை பகுத்தறிவு இல்லாதவர்கள் ஆராய்ச்சி சக்தி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.

இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களை ஒரே ஒரு பதிலில் வாயை அடைக்க வேண்டுமானால் இம்மாதிரியாக தோற்றங்களில் ஒன்றுக் கொன்று வித்தியாசங்கள் காணப்படுவதாலேயே (மேல் கண்ட குணமுடைய) கடவுள் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லிவிடலாம்.

எப்படியெனில் சர்வ சக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராயிருந்தால் சர்வத்தையும் ஒன்று போலவே சிருஷ்டித்திருக்கலாமல்லவா? வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வசக்தியும் சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பது தான் பதிலாகும்.

ஏனெனில், மொண்டிக்கும், முடவனுக்கும், நல்லவனுக்கும், கஷ்டப் படுபவனுக்கும், கஷ்டப்படுத்துகிறவனுக்கும் “கடவுளே” காரணஸ்தனாயிருந்தால் கடவுளை சர்வ தயாபரத்துவமுடையவனென்றும், பாரபக்ஷமில்லாத சர்வசமத்துவ குணமுடையவனென்றும் எப்படிச் சொல்லமுடியும்? இந்தப்படி பகுத்தறிவைக் கொண்டு சொல்லக்கூடிய சமாதானங்கள் ஒரு புறமிருக்க ஆராய்ச்சியைக் கொண்டு அறியக் கூடிய சமாதானங்களைப் பற்றி சற்று கவனிப்போம்.

ஒரே கையால் கை நிறைய அரிசியை அள்ளி அள்ளி வேறாய் வைத்து ஒவ்வொரு தடவை அள்ளிய அரிசியைத் தனித் தனியாய் எண்ணிப் பார்த்தால் அவற்றுள் ஒன்றுக் கொன்று எண்ணிக்கை வித்தியாசமிருப்பானேன்? அதே மனிதன் அதே கையால் அதே நிமிஷத்தில் அதே குவியலிலிருந்து அள்ளினவைகள் ஏன் வித்தியாசப்படுகின்றது?

ஒரே பூமியில், ஒரே வினாடியில் விதைக்கும் ஒரே மாதிரி விதைகள் சில முளைத்தும், சில முளைக்காமலும் முளைத்தனவைகளில் சில வளராமல் கூளையாகவும், சில அதிக உயரமாகவும், சில அதிகமான மணிகள் கொண்ட கதிராகவும், சில குறைவான மணிகள் (தானியங்கள்) கொண்ட கதிராகவும், சில முளைத்து நன்றாய் தளைத்தும் ஒரு மணி கூட இல்லாத வெறும் கதிராகவும் இருக்கக் காரணம் என்ன?

ஒரு வினாடியில் ஒருபூமியில் நட்ட செடிகள் ஒன்று பல கிளைகளுடனும், ஒன்று சுவல்ப்ப கிளைகளுடனும் வளருவதும் ஒன்று பதினாயிரக்கணக்காக காய்ப்பதும், ஒன்று நூற்றுக் கணக்காக காய்ப்பதும், ஒன்று பூ விட்டு எல்லாம் கருகி உதிர்ந்து விடுவதும் ஒன்று பூ விடாமலும் பிஞ்சு விடாமலும் வரடாயிருப்பதும் என்ன காரணம்? கடவுள் ஒருவர் இருந்தால் இவைகள் எல்லாம் அதனதன் இனத்தில் ஏன் ஒன்றுபோல் இருக்கக் கூடாது?

ஒரு சமயம் கடவுளே இந்தபடி செய்திருப்பார் என்று சொல்வதானால் அம்மரம் செடி தானியம் முதலியனவைகள் இப்படி பலன் அடைவதற்கு காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு என்ன சமாதானமோ அதுதான் மனிதர்களைப் பற்றிய சம்மந்தமான கேள்விகளுக்கும் சமாதானம் என்பது தானாகவே புலப்படும். ( மறுபடியும் தொடரும்)

(குடி அரசு - தலையங்கம் - 28.09.1930)

Pin It