கோவையில் இயங்கி வரும் கோணங்கள் இலக்கிய அமைப்பின் சார்பாக உம்பர்ட்டோ டி என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இதன் இயக்குநர் உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றான "பை சைக்கிள் தீவ்ஸ்"ன் இயக்குனரான விக்டோரியா டிசிகா. 

படத்தின் ஆரம்பக் காட்சியில் வயதானவர்கள் ஒன்று கூடி பென்சனை உயர்த்தக் கோரி ஊர்வலம் வருகிறார்கள். காவல்துறை மிக எளிதாக அவ்வூர்வலத்தை கலைத்துவிடுகிறது. அதன் தொடர்ச்சியாக மிகக் குறைந்த பென்சனைப் பெற்று, அதனை நம்பியே வாழும் வயதானவர்களின் சோகத்தை சில காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் இயக்குநர். 

Umberto_Dபணப் பற்றாக்குறையின் காரணமாக ஒவ்வொரு பொருளாக விற்கிற சோகத்தை அழகாகப் படம் பிடித்துள்ளார். கதையின் நாயகனுக்கு ஒரு நெருக்கடி வருகிறது. அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான பெண்மணி தனது தேவைக்காக அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். அதற்காக அவர் தர வேண்டிய வாடகை பாக்கியை முழுவதுமாகத் தரச் சொல்கிறாள். அவரால் பாக்கித் தொகையை எவ்விதத்திலும் தர முடியாது என்பது நிதர்சனமாகிறது.

அப்பெண்மணியின் தொல்லையிலிருந்து தப்பிக்க இலவச மருத்துவமனையில் சிறிது காலத்தை கழிக்கிறார் அம்முதியவர். ஆயினும் அவர் திரும்பி பழைய வீட்டுக்கே வரவேண்டியிருக்கிறது. செய்வதறியாது திகைக்கிறார். பிச்சை எடுக்கிற நிலைக்கும் செல்கிறார். ஆனால் அவரது சுய கவுரவம் அவரைத் தடுத்து விடுகிறது. பிச்சை எடுப்பது சம்பந்தமான காட்சிகளை அதன் உண்மையான உணர்ச்சிகளோடு எழுதினால் உலகின் தலைசிறந்த சிறுகதையாக அது விளங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு சுயமரியாதை மிக்க மனிதனின் வறுமையும் அநாதரவான நிலையும் எப்படி அவனை அலைக்கழிக்கிறது என்பதை நாயகன் பிச்சை எடுக்கத் தீர்மானித்து இயலாமற் போகிற காட்சிகளில் அற்புதமாகப் படமாக்கியுள்ளார். 

கதையின் மையமான அநாதரவான அதாவது எந்தவித ஆதரவுமற்ற உயிர்களின் சோகத்தை கதை நாயகனின் வாழ்க்கையை காட்சிப்படுத்துவதோடு மட்டும் நில்லாமல் அவரால் வளர்க்கப்படுகிற நாய்க்குட்டி ஒன்று மற்றும் அவர் குடியிருக்கும் வீட்டின் வேலைக்காரப் பெண் ஒருத்தியின் வாழ்க்கை ஆகியவற்றின் மூலமும் சிறப்பாகத் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். 

தான் வளர்த்துவரும் நாயைத் தனியே விட்டுச் செல்ல முடியாது என்ற ஒரு மனிதாபிமான உணர்வனோலேயே தற்கொலை கூட செய்து கொள்ள முடியாத அவஸ்தை நாயகனுக்கு. அதாவது ஆதரவற்ற நிலையில் தன்னால் வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை சாகக் கூட முடியவி‍ல்லையே என்று அவனை ஏங்க வைத்துவிடுகிறது இந்தச் சமூகம். அதே சமயம் தனது நாய்க்காக அம்மனிதன் ஏங்குகிற காட்சிகளில் எதைப் பற்றியும் கவலைப்படாத மனிதர்கள் ஒருபுறமும், ஆதரவற்ற மனிதர்கள் தங்களுக்குள்ளேயே உதவிக் கொள்கிற நேசத்தை மறுபுறமும் சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர். 

வேறு வழியின்றி தனது இயலாமையின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என்று சவாலாகப் பேசிய நாயகன் இரவில் யாருக்கும் தெரியாமல் வெளியேற வ‍ேண்டிய நிலை ஏற்படுகிறது. அதற்குப் பிறகு தங்குவதற்கான இடம் எங்கே என்ற கேள்விக்கு விடையில்லை. அந்த நாயைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது முதல் கடமையாகிறது. நாய்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிற ஒரு காப்பகத்திற்குப் போகிறார். ஆனால் அங்கு தன்னிடமுள்ள பணம் அனைத்தையும் தந்தாலும் தனது நாய்க்க்குப் பாதுகாப்பு இருக்காது என்பதை உணர்ந்தபின் அந்த நாய்க்குட்டியை ஒரு பூங்காவிற்கு அழைத்துச் செல்கிறார். அங்குள்ள குழந்தைகளோடு விளையாட விட்டு அங்கிருந்து மறைந்துவிடுகிறார். ஆனால் அந்நாய் அவரைத் தேடிக் கண்டுபிடித்துவிடுகிறது. அதன்பின் ஒரு குழந்தையை சரி செய்து அதனிடம் நாயை ஒப்படைக்க முயற்சிக்கிறார். அதற்குள் அக் குழந்தையைப் பராமரிக்கும் ஆயா அது தனக்குத் தொல்லை தரும் என்பதால் நிராகரித்து விடுகிறாள். வேறுவழியின்றி இரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்றெண்ணி நாயை இறுகப் பிடித்துக் கொண்டு தண்டவாளத்தின் அருகில் நிற்கிறார். இரயில் அருகாமையில் வரவர பிடி இறுகுகிறது. அதை உணர்நது கொள்ளும் நாய் பிடியிலிருந்து தப்பித்து ஓடி விடுகிறது. அதிர்ச்சியில் அவரும் தற்கொலை செய்யாமல் தப்பித்து விடுகிறார். 

மரணத்திற்கு தன்னை அழைத்துச் செல்கிற மனிதன் என்ற உணர்வில் நாயகனிடமிருந்து விலகிச் சென்று ஒட்டாமல் தள்ளித்தள்ளிச் செல்கிறது அந்நாய். குற்றவுணர்வு அடைந்த நாயகன் தனது பழைய செய்கைகள் மூலம் நாயை தன்வயப்படுத்தி இருவரும் விளையாடிக் கொண்டே செல்லும் காட்சியோடு படத்தை இயக்குநர் நிறைவு செய்கிறார். 

கதையின் நாயகனும் அவரின் வளர்ப்பு நாயும் ஆதரவற்று இருப்பது போலவே அந்த வீட்டில் தங்கி வேலை செய்து வரும் வேலைக்காரப் பெண்ணும் ஆதரவற்றவளாக இருக்கிறாள். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் பின்புறமுள்ள ஆலையில் பணிபுரியும் இரண்டு இளைஞர்கள் அவளை வசப்படுத்தியுள்ளனர். அவர்கள் உறவு அவளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. அதனால் ஒரு குழந்தையும் வயிற்றில் உருவாகியுள்ளது. இது தெரிந்தால் வீட்டின் உரிமையாளர் தன்னை வீட்டை விட்டுத் துரத்தி விடுவாள் என்கிற பயத்துடனே அப்பெண் வாழ்கிறாள். 

umberto_d_340அதாவது கருவுற்றதைவிட தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் இடம் பறிபோய்விடுமே என்ற பயமே அவளுக்கு அதிகமாக உள்ளது. ஆதரவற்ற அப்பெண்ணிற்கு சமூகம் பற்றிய பயமே இவ்வாறு நினைக்க வைக்கிறது என்பதையும் ஆதவற்ற நிலையே அவ்விரு இளைஞர்களோடும் உறவு கொள்ள, காதல் வயப்படக் காரணமாகிறது என்பதையும் இயக்குநர் போகிற போக்கிலே சொன்னாலும் ஆமாகப் பதியுமாறு படமாக்கியுள்ளார். 

கதையின் நாயகன் ஆதரவற்றவராக இருக்கும் இலவச மருத்துவமனைக்குப் போகும் போது நாய்க்குட்டியை பராமரிப்பது குறித்து வருந்துவதும், மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிறகு நாயைக் காணமல், அரசு நாயைக் கொல்லும் இடத்திற்கு சென்று தேடும் பதட்டத்திலும், வேலைக்காரப் பெண்ணின் கர்ப்பம் மற்றும் எதிர்காலம் குறித்துக் கவலைப்படும் இடத்திலும் தன்னைப் போல‍வே ஆதரவற்ற உயிர்களின் மேல் உண்மையான அக்கறை செலுத்துவதை மிகவும் சிறப்பாக இயக்குநர் பதிவு செய்துள்ளார். 

நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கியுள்ள உலகில் மனிதனைத் தவிர அனைத்துப் பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மனிதன் மட்டும் பயன்படக் கூடியவனாக இருந்தும் சில நேரங்களில் சக மனிதர்களுக்குச் சுமையாக மாறிவிடுவதாகக் கருதப்படுகிறான். அப்படி சுமையாக நினைக்கப்படுகிற மனிதர்களும், மனிதர்களோடு வாழ்கிற சக ஜீவிகளும் சமூகத்தாலும், அரசு போன்ற அதிகார நிறுவனங்களாலும், எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதனால் உண்டாகும் வேதனைகளையும் படம் முழுவதும் அழுத்தமாக, நேர்த்தியாகச் சொல்கிறார் இயக்குநர் விக்டோரியா டிசிகா.

இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்த இயக்குநர் படத்தின் முடிவில் நாயகனும், நாயும் எந்த ஒரு முடிவுக்கும் செல்லாமல், தன்னிடமிருந்து அந்நியப்பட்ட நாயை தன்னோடு இணைக்கும் முயற்சியில் நாயகன் ஈடுபட்டிருப்பதாக மட்டும் சொல்லி படத்தை முடித்ததன் மூலம் படம் முழுக்க சொல்லி வந்த சோகத்தை சமூகத்தின் அலட்சியத்தை, எதிர்கால நெருக்கடியை அப்படியே நமது மனதில் தக்க வைத்து விடுகிறார். 

ஏதாவது ஒரு முடிவைச் சொல்லியிருக்கும் பட்சத்தில் படம் முழுக்க சொல்லிவந்த விசயங்களின் பாதிப்பை முடிவு பாதித்துவிடும். அப்படி முடிக்காமல் விட்டதன் மூலம் இப்படம் முழுக்க வந்த பாதிப்பு நம்முள் தொடர்ந்து தங்கியிருந்து தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. 

முதுமை ஆதரவற்ற தன்மை போன்றவை விரக்தியை மட்டுமே உண்டு பண்ணும் என்பது போன்ற கருத்துக்களை உடைத்து, அப்போதும் சக மனிதர்களை, சக உயிர்களை நேசிக்க முடியும் என்கிற கருத்தையும் இப்படம் நமக்குள் விதைக்கிறது. உலகின் சிறந்த இயக்குநரான விக்டோரியா டிசிகா இப்படம் மூலம் மீண்டும் தன்னை நிரூபிக்கிறார். இது போன்ற படங்களை திரையிட்டு திரையிடலுக்குப் பின் படம் குறித்த விவாதங்களுக்கும் அனுமதி தந்து திரைப்பட ரசனையை வளர்க்கும் "கோணங்கள்" அமைப்பு பாராட்டுக்குரியது. அதைவிடச் சிறப்பு இப்படத்தின் வசனங்களை தமிழ்படுத்தி படத்தின் கீழே இடம் பெறச் செய்து(சப் டைட்டில்), தமிழ்படம் பார்க்கிற உணர்வையும் உண்டு பண்ணியிருக்கிறார்கள். இச் செய்கை சாதாரணமான சினிமா விருப்பமுள்ள அனைவரையும் உலகத் திரைப்படங்களை பார்க்க வேண்டுமென்ற தூண்டுதலை உருவாக்க காரணமாக அமைந்தது-இதற்காகவும் "கோணங்கள்" பாராட்டுக்குரியது 

- தா.சந்தரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It