கோவையில் இயங்கி வரும் "கோணங்கள்"  என்ற இலக்கிய அமைப்பு உலகத் திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. கடந்த நவம்பர் 15ம் தேதி திரையிடப்பட்ட இத்தாலிய திரைப்படம் "தி போஸ்ட்மேன". இத்திரைப்படம் பல விருதுகளை சர்வதேச அளவில் பெற்றிருக்கிறது. படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நடிகரின் யதார்த்த நடிப்பு படத்தின் மிகப் பெரும் பலம். முகத்தில் காட்டப்படும் பாவங்களும், அப்பாவிக்குரிய உடல் அசைவுகளும், வருத்தத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் துளியும் மிகையற்ற யதார்த்தமான நடிப்பு. 

the_postman_350படத்தின் மையமாக லத்தின் அமெரிக்க நாட்டின் மிகச் சிறந்த கவிஞரும், போராளியுமான "பாப்லோ நெரூடா" இருக்கிறார். இத்தாலியில் ஒரு தீவில் வசிக்க வேண்டிய சூழலில் இருக்கும் நெரூடாவிற்கு தபால்களைக் கொண்டு சேர்க்கும் தபால்காரன் பணியை நாயகன் மேற்கொள்கிறான். உலகம் தெரியாதவனாக நெரூடாவுடன் பழக ஆரம்பிக்கும் நாயகனிடம் ஒரு மாமனிதன் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன? இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பின் ஆழம் போன்றவற்றைப் பேசுகிறது படம். 

நெரூடாவாக நடித்திருக்கும் நடிகரின் நடிப்பும் யதார்த்தமானதே. நெருதாவைப் பற்றிய செய்திப்படத்தைப் பார்த்தும், அவரது புகழைக் கேள்விப்பட்டும் அவர்மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கும் நாயகன் அவரோடு பழக ஆரம்பிக்கும் முன்னால் காட்டுகிற பவ்யத்திலும், அவரோடு நட்பு கொண்ட பின்னால் இயல்பாகப் பழகும் போதும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் தனது உடல் அசைவுகளாலேயே மேலே கூறிய குணாதிசயங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். நெருதாவும் தனது கம்பீரத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். 

நெருதாவும், நாயகனும் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சியில் இயக்குநர் ஒரு தலைசிறந்த கவிஞரும், உலகம் தெரியாத ஒரு அப்பாவியும் பேசிக் கொள்கிற வசனங்களை அற்புதமாக எழுதியுள்ளார். "மாபெரும் கவிஞனும் சாதாரண மனிதனிடமிருந்து கற்றுக் கொள்ள எதாவது இருந்து கொண்டேதான் இருக்கும்" என்கிற உண்மையை அழகாகச் சொல்லி இருக்கிறார். 

"கவிதை என்பது எழுதுகிறவனுடையதல்ல அது யாருக்கு தேவைப்படுகிறதோ அவனுக்கானது" என்று நாயகன் மூலம் நெருதாவிற்குத் தெரியப்படுத்தும் இயக்குநர், மேலே கூறிய சம்பவங்களில் ‍எல்லாம், தான் இந்த சமூகத்தில் இருந்து என்ன கற்றாரோ, அதன் சாரத்தை தெளிவாகக்ச சொல்வதன் மூலம் கதைக்குள் நுழைகிற இயக்குநர் இதற்காகத்தான் இப்படத்தை உருவாக்கினாரோ எனும் அளவிற்கு அழுத்தமாக ஆனால் நெருடல் தராமல் ஆதிக்கம் செலுத்துகிறார். 

எல்லோரையும் போல காதலில் விழுகிற கதாநாயகன், அதற்காக நெருதாவை கவிதை எழுதித் தரச் ‍சொல்கிற காட்சிகளும், நாயகனைத் தனது நண்பன் என மற்றவருக்குக் குறிப்பாக நாயகிக்கு தெரியப்படுத்துவதன் மூலம் காதலுக்கு உதவமுடியுமா என நினைத்து, நாயகனோடு ஹோட்டலுக்கு நெருதா செல்லும் காட்சிகளும் இருவரது நட்பையும் வெளிப்படுத்தும் சிறந்த காட்சிகள். 

காதலுக்கு உதவுகிற நெருடா, நாயகனுக்கும் கவிதைகளைக் கற்றுத் தருகிறார். கவிதைகளைப் பற்றிப் பேசினாலும் சரி, இயற்கை, காதல் என எதைப் பற்றிப் பேசினாலும், சமூகத்தைப் பற்றியும் பொதுவுடமை பற்றியும் நெருதா பேசிக் கொண்டே இருக்கிறார். 

நாயகனுக்குத் திருமணம் செய்து வைக்கிற நெருதா தனது நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். மிகச் சிறந்த ஒரு நண்பனை தலைசிறந்த ஒரு மனிதனைப் பிரிந்து விட்ட நிலையில் வாழ்க்கையை எதிர்கொள்ளும் நாயகன், அவ்வூரில் நடக்கிற தேர்தல் மற்றும் அவனது வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்கள் அனைத்திலும் அவனுக்கு கிடைக்கிற அனுபவம், தானும் மீனவ மக்களும் ஏமாற்றப்படுகிறோம் என்பதுதான். இவ்வாறு அவன் நினைப்பதற்கான முக்கிய காரணம் நெருதா அவனுக்குள் விதைத்த பொதுவுடமையைப் பற்றிய எண்ணங்களே. 

இத்தாலியை விட்டுப் பிரிந்து விட்ட நெருடாவிற்குப் பொதுவுடமை நாடுகளில் கிடைக்கும் பாராட்டுகளைப் பற்றி பத்திரிக்கையின் மூலம் தெரிந்து கொள்ளும் நாயகனும் குடும்பத்தினரும் நெருதா "தங்களைப் பற்றிக் குறிப்பிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். இத்தாலி பற்றிய பேட்டியில் நெருடா குறிப்பிடாதது பற்றி கோபப்படுகிறார்கள். நெருடாவைக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் நாயகன் நெருடா மீது கொண்ட அனபினால் நெருடாவிற்கு ஆதரவாகப் பேசுகிறான். இந்தக் காட்சிகள் இயக்குநரின் முத்திரை பதித்த காட்சிகளாகும்.  இருவரது நட்பின் உச்சத்தை குறிப்பிடும் காட்சிகளாகும். இத்தோடு படம் மு‍டிவடைந்து விடும் என்கிற எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகிறது இக்காட்சிகள். 

ஆனால் இதற்கு பிறகு மீண்டும் ஒரு சிறப்பான பாதையில் திரைப்படம் பயணிக்கிறது. நெருதா தீவை விட்டுப் பிரியும் போது விட்டுச் சென்ற சில பொருட்களை அனுப்பி வைக்குமாறு நாயகனுக்கு ஒரு கடிதம் வருகிறது. நெருடாவின் காரியதரிசி எழுதியிருக்கும் சாதாரணக் கடிதம் அது. அக் கடிதத்திலும் தங்களைப் பற்றிக் குறிப்பிடாதது குடும்பத்தாருக்கு மிகுந்த வருத்தமே. ஆனால் நாயகன் மிகுந்த உற்சாகத்தோடு நெருடாவிற்கு மிகவும் பிடித்தமான இயற்கையின் ஒலிகளைப் பதிவு செய்து அப் பொருட்களுடன் அனுப்பி வைக்கிறான். 

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை மறந்துவிடாமல் இருந்த நெருடா அவர்களைப் பார்க்க அத் தீவிற்கு வருகிறார். நாயகனின் குழந்தை சிறுவனாக வளர்ந்திருக்கிறான். ஆனால் நாயகன் தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அறிவித்துக் கொண்டு ஒரு பேரணியில் கலந்து கொண்டபோது காவல்துறை தாக்குதலில் உயிரிழந்து விட்டதை நாயகி மூலம் தெரிந்து கொள்கிறார் நெருடா. 

the_postman_360நெருடா தனக்கு நாயகனால் தரப்பட்ட ஒலிப் பேழை மூலம் தெரிந்து கொள்வதாக இறுதிக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுவுடமையாளர்களால் நடத்தப்படும் பேரணியில் கவிதை வாசிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று நபர்களில் ஒருவனாக கதையின் நாயகன் இருக்கிறான். அவன் மேடைக்கு அழைக்கப்பட்ட வேளையில் மேடைக்குச் சென்று தனது குருவும் நண்பருமான நெருடாவிற்கும் தோழர்களுக்கும் தனது கவிதையை சமர்ப்பிக்கும் முன்பாக காவல் துறை தாக்குதலால் இறந்து போகிறான். இப்படியாகப் படம் முடிவடைகிறது. 

உலகம் தெரியாத ஒரு அப்பாவி மனிதனும், உலகின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும் நண்பர்களானதை, அவர்களது பிரிவை இருவருக்குள்ளும் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திய தாக்கத்தையும், ஒரு திரைப்படமாக எடுத்திருப்பதே நமக்குப் புதிதான ஒரு செய்தி எனலாம். அது மட்டுமின்றி தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டுமென்ற நமது தொனியை இப்படத்தில் எங்கும் காண முடியாது. இயல்பு என்பதே படத்தின் இயல்பாக அமைந்துள்ளது. ஒரு மாபெரும் மனிதன் தனது ஆளுமைகளை எந்தவிதத்திலும் அறிவுரைகளாக இல்லாமல் சாதாரண உரையாடல்கள் மூலமே தன்னோடு பழகுபவர்களுக்குள் விதைத்து வளர்க்கிறார் என்பதை இப்படம் சிறப்பாக விளக்குகிறது. மிகக் குறைந்த வசனங்கள் மூலமே மிகுந்த பாதிப்பை உண்டாக்குகிறார் இயக்குநர். குறைவான அளவு வசனங்களில் நமது கருத்தை வெளிப்படுத்தத் தெரியாமல்தான் பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறதோ தமிழ் சினிமா எனும் கருத்தை நமக்குள் உருவாக்கி விடுகிறது இப்படம். 

இப்படம் கவிஞரின் பார்வையிலிருந்து எடுக்கப்படாமல் அப்பாவி நாயகனின் வாழ்க்கை முறையை ஒட்டி இயக்கப்பட்டுள்ளது. நெருடா இரண்டாம் இடத்தில்தான் வைக்கப்படுகிறார். அது மட்டுமல்ல நெருடாவுடன் பழகியதாலேயே நாயகன் உலகின் தலைசிறந்த கவிஞனாகவோ, மாபெரும் புரட்சியாளனாகவோ காட்டப்படவில்லை. மாறாக ஒரு தீவில் இருக்கிற அப்பாவி மனிதனுக்குள் நெருடா ஏற்படுத்தும் பாதிப்பின் விளைவுகளால் அம்மனிதன் செல்லும் அடுத்த கட்டத்தை மட்டுமே இயக்குநர் காட்டியிருக்கிறார். யதார்த்தம், இயல்பு என்பதற்கு இதுவே அடையாளமாகிறது. 

இப்படத்தில் தனது அரசியல் சிந்தனையையும் இயக்குநர் சிறப்பாகப் பதிவு செய்கிறார். நாயகனின் திருமண ஏற்பாட்டின் போது பாதிரியார் ஒருவர் "கம்யூனிஸ்ட்டுகள் குழந்தைகளையே உண்பார்கள், அப்படிப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட்டான நெருடாவையா உங்கள் திருமணத்திற்கு சாட்சியாக அழைத்திருக்கிறீர்கள்" எனக் கேட்கும் காட்சியில் தனது அரசியலை வெளிப்படுத்துகிறார் இயக்குநர். நாயகனும், நாயகியும் "நெருடா அப்படிப்பட்டவரல்ல" என பாதிரியாரிடம் வாதாடுகிறார்கள். அதாவது அவ்விருவருக்கும் பாதிரியார் கூறும் குற்றச்சாட்டுக்கான விளக்கம் சொல்லும் பரந்த அறிவு இல்லை. ஆனால் நெருடா எந்த வகையிலும் அப்படிப்பட்டவரில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரியும். அதை அவர்கள் வெளிப்படுத்துவதாக இயக்குநர் கூறியிருப்பதன் மூலம் கம்யூனிஸ்டுகளின் மீதான பொய்ப் பிரச்சாரத்தையும், நெருடா போன்றவர்கள் அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதையும் மதவாதிகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் தெளிவாக சொல்கிறார். 

வழக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்முலா திரைப்படங்களுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, எந்தவிதத்திலும் மிகைப்படுத்தாத, சம்பவங்களையும் திரைக்கதையையும் அமைத்து, குறைவான வசனங்களில் அழுத்தமான பதிவுகளை அமைத்ததன் மூலம் தான் உலகின் சிறந்த இயக்குநர் என்பதை இப்படத்தின் இயக்குநர் பதிவு செய்கிறார். 

இப்படிப்பட்ட படங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்லும் பொழுது, மக்கள் யதார்த்தமாக திரைப்படம் எடுப்பதற்கும் மிகைப்படுத்தி உணர்ச்சிகரமாக மாற்றுவதற்குமான வித்தியாசங்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். அது தமிழ் சினிமா பற்றிய ரசனையை மாற்ற உதவும். சினிமா என்று எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் நீக்கி மனிதனை மனிதனாக மாற்றும் ஒரு கலை ஆயுதமாக மாறும். அதற்கான ஒரு முயற்சியாக இது போன்ற திரைப்படங்களை வெளியிட்டு வரும் "கோணங்கள்" அமைப்பு பாராட்டுக்குரியது. 

- தா.சந்தரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It