நிலமிசை கிடந்த உழவர் தம்மை
நலம்பெற வென்று மீட்ட முதலிகள்
சந்தையின் ஆட்சியில் நலம்கெடக் காணினும்
சிந்திக்க மறுத்தனர் வினைஞர் துயர்தனை
உழைப்பவர் துயர்தனைக் காண மறுப்பவர்
பிழையைப் பொறுப்பது வினைஞர் தவறே
சந்தையின் விரட்டலின் உற்பத்தி முறையால்
புவியின் வெப்பம் உயர்ந்திடச் செய்து
அவிவதின் அதனைக் காவு கொடுத்து
குந்தக மில்லா உற்பத்தி முறையை
ஏற்பின் உலகம் தழைக்கும் மறுப்பின்
அழியும் என்பதை முதலியும் அறிவார்
அடிமை கொள்ளா வாழ்வைக் காட்டிலும்
மடிந்து போவதே நன்றென நினைக்கும்
முதலியை ஒழிக்க முனையா திருப்பது
வினைஞர் மற்றும் அனைவரின் குற்றமே.


((பண்ணையார்களின் சேவகர்களாக) நிலத்தில் கட்டுண்டு கிடந்த உழவர்களை (தொழிற்சாலைகளில் வேலை செய்து) நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விடுவித்த முதலாளிகள், சந்தையின் ஆட்சிப் போக்கில் அவர்களுடைய நலன்கள் பாதிக்கப்படுதைக் கண்ட போதும் (பண்ணையார்களிடம் பட்ட துயரினை நீக்க முன் வந்ததற்கு மாறாக, இப்பொழுது) அதைக் காண மறுத்தனர். தங்களுடைய துயரங்களைக் காண மறுப்பவர்களின் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு இருப்பது தொழிலாளர்கள் செய்யும் பெரும் தவறாகும். சந்தை விரட்டுகின்ற வழியில் செய்யப்படும் (ஆயுதங்கள், வாகனங்கள், குளிர் சாதனங்கள் போன்ற) பொருள் உற்பத்தி, புவியின் வெப்பத்தை உயர்த்தி அதன் அழிவிற்கு இட்டுச் செல்கிறது. அப்படி இந்த பூமியை அழிய விடுவதை விட இந்த (சந்தை வழி உற்பத்தி) முறையைக் காவு கொடுத்து விட்டு, சுற்றுச் சூழலுக்குத் தீங்கு ஏற்படாதபடியான (திட்டமிட்ட பொருளாதார முறையான சோஷலிச) உற்பத்தி முறையை ஏற்றுக் கொண்டால் உலகத்தை அழிவில் இருந்து காக்கலாம் என்பதையும் அப்படிச் செய்யவில்லை என்றால் உலகம் அழிந்து விடும் என்பதையும் முதலாளிகளும் அறிவார்கள். (ஆனால் அப்படி சோஷலிச முறையை ஏற்றுக் கொண்டால் பிறரை அடிமை கொள்ள முடியாது என்பதால்) அடிமை கொள்ள முடியாத வாழ்வை வாழ்வதை விட இப்புவியே அழிந்து போகட்டும் என்று நினைக்கும் முதலாளிகளை ஒழிக்க உறுதியுடன் போராடாமல் இருப்பது தொழிலாளர்களின் குற்றம் மட்டும் அல்ல; அனைவருடைய குற்றமும் ஆகும்)

- இராமியா

Pin It