எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றின, எப்படி இயங்குகின்றன என்றே சிந்திக்கின்றன.நமது வேலை உலகம் எப்படித் தோன்றியது என்று நம் சிந்திப்ப தில்லை; மாறாக உலகத்தை மாற்றியமைப்பதே! என்றார்.

அதற்கு என்ன செய்வது?

“உலகத் தொழிலாளர்களே! ஒன்று படுங்கள் நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற புகழ் பெற்ற வரிகள் உலகத்தின் மிகச் சிறந்த சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் எழுதியவை; உலக வரலாற்றின் போக்கி னையே மாற்றி அமைத்தது! அந்த மா மேதையின் வரலாறு! ஜெர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையே வளைந்தோடும் ரைன் நதிக்கரையில் பசுமை நிறைந்த விளை நிலங்களிடையே காணப்படும் பழைய நகரம் டிரையர். அந்த நகரின் பிராக்கன்ஸ் வீதியில் 664ஆம் எண்ணிடப்பட்ட இல்லத்தில், யூத இனத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஹர்ஷல் மார்க்ஸ் தன் இல்லாள் ஹென்றிட் டாவுடன் வாழ்ந்துவந்தார்.

வானில் விண்மீன்கள் வழிகாட்டாமலும்,வேறு அற் புதங்கள் நிகழாமலும் 1818 ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் ஹர்ஷல் மார்க்ஸ்-ஹென்றிட்டா இணையருக்கு மூன்றாவது மகனாக, உலகப் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்திடப் போகும் சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் தோன்றினார்.

ஹர்ஷல் மார்க்ஸ் - ஹென்றிட்டா இணையருக்கு ஒரே மகன் காரல்மார்க்ஸ்; மூன்று பெண்குழந்தைகள்- சோபியா (மார்க்ஸின் தமக்கை) எமிலி, லூயிஸ் (மார்க்ஸின் தங்கைகள்).

ஒரே ஆண் மகவு என்பதால் பெற்றோர்க்கு மார்க்ஸ் செல்லப்பிள்ளை.ஆதலால் சிறுவயதில் மூர்க்கனாகவும், முரடனாகவும், வம்புகள் வளர்ப்பவனாகவும் வளர்ந்து வந்தான்.

காரல் மார்கஸின் தந்தை ஹர்ஷல் மார்க்ஸ் வழக்கறிஞர் என்றபோதிலும், போதிய வழக்குகள் வராததால் அதிக வருவாய் கிட்டவில்லை.அன்றைய ஜெர்மனியில் யூதர்கள் அலட்சியப்படுத்தப்பட்டனர். கத்தோலிக்கக் கிறித்துவர்களுக்கு மதப்பற்று அதிகம். மதப்பற்று மதவெறியாகி யூதர்களை விரோதிகள்போல் நடத்தினர்.

இதனை உணர்ந்த ஹர்ஷல் மார்க்ஸ் பிராட் டஸ்டன்ட் கிறித்துவராக மாறினார்.பெயரையும் ஹென்றிச் மார்க்ஸ் என்று மாற்றிக்கொண்டார்.மதம் மாறியது, பெயரும் மாறியது, வருவாயும் பெருகியது வசதியும் பெருகியது, வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

காரல் மார்க்ஸ் சிறுவயதில்:

சிறுவயதில் மூர்க்கனாகவும், கோபக்காரனாகவும், வல்லடி வழக்குகளில் ஈடுபடுவனாகவும் இருந்தான்,. அதனால், தினம் தினம் மார்க்ஸால் அவன் தாய்க்கு மிகுந்த தொல்லைகள் தோன்றின. தந்தைக்கு அவன் செல்லக் குழந்தை. வீட்டிலிருந்தபடியே தந்தையின் மேற்பார்வையில் கல்வி கற்றான். ஆயினும் அவனின் குறும்பும் போக்கிரித்தனமும் சிறிதும் மாறாமல் வளர்ந்தே வந்துள்ளன.

கல்வி:

ஆகவே, மார்க்ஸுக்கு 12 வயதாகும் போது ஜிம்னாசியத்தில் (பள்ளிக்கூடம்) சேர்த்துவிட்டார் அவர் தந்தை.தந்தையின் மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்த மார்க்ஸ் அவரது புகைப்படத்தைத் தன் சட்டைப் பையில் எப்போதும் வைத்திருப்பார். இந்தப் பழக்கம் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்திருந்தது. அவர் படித்த அந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் ஜோஹன் டிரையர், நகரத்திலிருந்த புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டி ருந்தார். அந்த ஆசிரியர் ஒரு துண்டறிக்கையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவர் மார்க்ஸின் உள்ளத்தில் புரட்சி எண்ணங்களை விதைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் விஸ்டுஸ், ஜோஹனின் அரசு விரோதச் செயல்களை அரசிற்குத் தெரியப்படுத்தியதால் ஜோஹன் கைது செய்யப்பட்டார், ஜோஹனின் கைது மார்க்ஸ் உள்ளத்தில் ஆவேசத்தையும் புரட்சி எண்ணத் தையும் ஆழமாக விதைத்தது.

ஜோஹன் கைதுக்குக் காரணமான விஸ்டுஸ் தலைமை ஆசிரியர். பள்ளி வாழ்க்கையின் இறுதி நாளில் தலைமை ஆசிரியரைச் சந்தித்து விடை பெற மார்க்ஸ் மறுத்துவிட்டார். ஆனால், காரல் மார்க்ஸ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இலக்கியங்களுக்குப் புதிய விளக்கங்கள் தருவதில் வல்லவர். எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார் என்று 25-8-1835 இல் பள்ளியிலிருந்து நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

பள்ளி வாழ்க்கை முடிவுற்றபின், காரல் மார்க்ஸ் கல்லூரியில் சேர்ந்து மெய்யியல் (தத்துவம்) படிக்க விரும்பினார். ஆனால் அவருடைய தந்தையின் விருப்பம் மார்க்ஸ் சட்டம் படிக்கவேண்டும் என்பதாகவிருந்தது.

கல்லூரி வாழ்க்கை:

தந்தையின் விருப்பத்திற்காக சட்டம் பயில, பான் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.தந்தையின் விருப்பத்திற் காக சட்டம் பயின்றதால் மார்க்ஸிற்கு படிப்பில் நாட்ட மில்லை. அதனால் அவர், பான் நகரில் அமைந்திருந்த குடிகாரர் சங்கத்தில் உறுப்பினராகிப் பின் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார்.ஒரு நாள் அச்சங்கத்தில் நடைபெற்ற உச்சக்கட்ட கேளிக்கையின் போது கைது செய்யப்பட்டார். இதனால் வெகுண்ட தந்தை, மார்க்ஸை, பாதிப் படிப்பில் பான்பல்கலைக் கழகத்திலிருந்து விடுவித்து, பெர்லின் பல்கலைக் கழகத்தில் சேர்த்துவிடத் திட்டமிட்டுச் செயல்பட்டார். பெர்லின் பல்கலைக் கழகம் 2 மாதங்களுக்கு விடுமுறையாதலால், காரல் மார்க்ஸ் தன் இல்லத்திலேயேத் தங்கிப் பொழுதைக் கழித்தார்.

காரல் மார்க்ஸின் வீட்டிற்கு அடுத்த வீட்டில், ரைன்லாந்து பகுதியின் உயர்ந்த பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த லுட்விக் வான் வெஸ்டு ப்ளான் என்ற பிரபு வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு அறிவிலும் அழகிலும் சிறந்து விளங்கிய பெண் ஜென்னி 1814 ஆம் ஆண்டு பிறந்தவர். காரல் மார்க்ஸைவிட நான்கு ஆண்டுகள் மூத்தவர்.

அண்டை வீடாகயிருந்ததால், சிறுவயதிலிருந்தே மார்க்ஸின் சகோதரிகளுக்கும் ஜென்னிக்கும் இடையே ஆழமான தோழமை நிலவியது. மார்க்ஸின் தமக்கை சோபியா, ஜென்னியின் உயிர்த் தோழியாக இருந்தார். காதல் பிறந்தது:

கண்ணொடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல். (1109)

மார்க்ஸின் தமக்கையின் மூலம் ஜென்னியின் தொடர்பு ஏற்பட்டது ஜென்னியைக் கண்டான். காதல் கொண்டான். அண்ணலும் நோக்கினான் அன்னவளும் நோக்கினாள், காதல் மலர்ந்தது

மார்க்ஸின் கவிமனம் அவளைக் கண்டதும், உலகின் மிகச் சிறந்த பூ ஒன்று இருக்குமானால், அது அவள் முன் தோற்றுப்போகும் என்று எண்ணியது. காரல் மார்க்ஸின் எரிமலை இதயத்தில் வாடாத மலராக ஜென்னி வாழ்ந்தாள்.

ஆரவாரமற்ற ஆழ்ந்த அறிவும், தன்னலமற்ற தியாகமும், பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் உண்மையான அழகு என்பதை ஜென்னி நன்கு உணர்ந்திருந்தாள் ஆதலாள் மார்க்ஸைக் கண்டதும் ஜென்னியின் உள்ளத்தில் காதல் மலர்ந்தது.

ஜென்னியின் தந்தையும், மார்க்ஸும் அடிக்கடி சந்தித்து ஷேக்ஸ்பியர் கவிதைகளை உரக்கப் பாடி வியந்து பேசி மகிழ்வர், இருவரும் ஷேக்ஸ்பியரின் தீவிர இரசிகர்கள். அதனாற்றான் ஜென்னியின் தந்தைக்கு மார்க்ஸின் மீது நம்பிக்கையும்,மதிப்பும், பிரியமும் இருந்தன; ஜென்னியை மார்க்ஸிற்கு மணமுடிக்கவும் விரும்பியிருந்தார்.

ஜென்னி போன்ற அழகும் அறிவுமிக்க பெண்ணைத் தன் வாழ்வின் இணையாக்கிக் கொள்ள வேண்டு மானால், அதற்குத் தன்னைத் தகுதி படைத்தவனாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்று மார்க்ஸ் எண்ணி னார்.

மீண்டும் கல்லூரி வாழ்க்கை:

ஆதலினால், மார்க்ஸ்,1836 ஆம் ஆண்டு பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க விண்ணப்பித்து, தத்துவம், வரலாறு, பொருளாதரம்ஆகிய பாடங்களைப் படிக்கத் தொடங்கினார். அந்தப் பல்கலைக் கழகத்தில், ஆய்வு மாணவர்கள் சங்கம் நிறுவி, அரசியல், வரலாறு, பொருளாதரம் ஆகிய பொருள்கள் பற்றி விவாதித்தனர். முதல் நாள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, இரவு முழுதும் படித்து மறுநாள் எவரும் வினா எழுப்பவொண்ணா தவாறு விடையளித்து, எதிர் கருத்தினரைக் கவர்ந்தார்.

ஆழ்ந்து படிப்பதிலும் விவாதங்களில் கலந்து கொண்டு ஆய்வுரையாற்றுவதிலும் பெரும்பொழுது கரைந்தது. இவற்றுடன் தத்துவமேதை எபிக்யூரஸ் குறித்து ஆய்வுக் கட்டுரை வரைந்து, முனைவர் பட்டம் 1841 ஆம் ஆண்டு பெற்றார். முனைவர் பட்டம் பெற்றதும், மார்க்ஸ், ஜென்னி யைக் கரம் பற்றுவதற்கு ஓரளவு தகுதி பெற்றுவிட்டதாக அகமகிழ்ந்தார், கருமமே கண்ணாயிருந்த மார்க்ஸ், இப்பொழுது தன் உயிரினும் மேலாய் நேசித்தத் தன் காதலி ஜென்னிக்கு தன் உள்ளத்து உணர்வுகளை எழுத்தில் பதித்து ஒரு கடிதம் அனுப்பிவைத்தார். ஜென்னி தன் விரல்கள் நடுங்க அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கமுற்பட்டாள்.

கடிதத்தின் இறுதி வரிகள்

இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்துக்கும் காதல் என்றால்ஜென்னி - ஜென்னி என்றால் காதல்! இந்த வரிகளைப் படித்ததும் ஜென்னியின் மாவடுக்கண் களிலிருந்து கண்ணீர் மழையெனப் பொழிந்தது! உணர்ச்சிப்பெருக்கில்! கல்லுரியில் பயிலுங்காலத்தில், மார்க்ஸ், தான் கல்லூரிப் பேராசிரியராகப் பணியேற்க வேண்டும் என்று விரும்பியிருந்தார்.பெர்லின் பல்கலைக் கழகத்தில் மார்க்ஸின் கருத்துக்களுக்கு ஆதரவாகவும், மிகுந்தத் தூண்டு கோலாகவும் இருந்த இரண்டு இடதுசாரிப் பேராசிரியர்கள் இருந்தனர்.ஒருவர் ஃபயர் ஃபாக்ஸ், மற்றொருவர்; கோபன். இருவரும் இடதுசாரிக் கொள்கையினர்.

அன்றைய பிற்போக்கு பிரஷ்ய (ஜெர்மனி) மன்னர் ஆட்சியில், இடதுசாரிக் கொள்கையுடைய பேராசிரியர்கள் பல்கலைக் கழகங்களில் பணிபுரிவ தற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆகவே மார்க்ஸ் ஆசிரிய ராகப் பணியில் அமரவேண்டும் என்ற விருப்பத்தைத் துறந்தார்.

இதனால், தத்துவங்களில் மூழ்கிக் கிடந்த மார்க்ஸ் மனம் எரிமலையாயிற்று. மன்னனும் ஒரு சாதாரண மனிதனே; மன்னன் மகேசனால் தேர்ந்தடுக்கப்பட்டவன் என்பது கட்டுக்கதை; மன்னனும் மதவாதிகளும் கூட்டுக் களவாணிகள். மன்னனுமில்லை மகேசனுமில்லை. மக்கள் அனைவரும் சமம் என்று எண்ணி மார்க்ஸ் செயலாற்ற முனைந்தார். மார்க்ஸின் இந்தப் போக்கு அவரின் தந்தையை நிலைகுலையச் செய்தது.

இந்தச் சூழலில்தான் 1838 இல் மார்க்ஸின் தந்தை மரணத்தை முத்தமிட்டார். தந்தையின் மரணம் மார்க்ஸுக்குப் பொருளாதார நெருக்கடியைத் தோற்று வித்தது. ஜென்னியைத் தவிர்த்து ஆதரவாக எவருமிலர். மார்க்ஸ் ஜென்னியை மணமுடிக்கத் தனக்கொரு வேலை அவசியம் என்றுணர்ந்தார். எனவே “ரைன் கெஜட்” என்ற செய்தித்தாளில் துணை ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார்.1842 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் முதன்மை அசிரியராக உயர்ந்தார்.

அந்தப் பத்திரிக்கைக்கு, இலண்டனிலிருந்து ஏங்கெல்ஸ் என்பவர் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். அந்தக் கட்டுரைகள் மார்க்ஸின் கவனத்தை ஈர்த்தன. அவரது கட்டுரைகள் வந்தவுடனே மார்க்ஸ், மிகுந்த ஆவலுடன் முதல் வாசகனாக வாசித்து மகிழ்ந்தார். மார்க்ஸின் ஆசிரிய உரைகள் புரட்சிகரமான, ஜனநாயக உணர்வுகளைத் தூண்டுவனவாக வளர்ந்து வந்துள்ளன. அந்த நிலையில் அரசு தினமும் பத்திரிக்கையைத் தணிக்கை செய்யத் தொடங்கியது. மேலும் 1843 சனவரி முதல் தேதியன்று, பத்திரிக்கையைத் தடை செய்ய அரசுத், திட்டமிட்டி ருந்தது. இதனையறிந்த மார்க்ஸ் தடை செய்வதற்கு முன்பே ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகினார். இருப்பினும் அந்தப் பத்திரிக்கை நின்று போனது.

இதனிடையே ஜென்னியின் தந்தை வான் வெஸ்ட் ப்ளான் மறைந்தார்.அதனால் ஜென்னியின் குடும்பம் க்ரூட்ஸ்னக் நகருக்குக் குடிபெயர்ந்தது. அப்போது ஜென்னிக்கு அகவை 29. கீழ் வானில் எழும் ஞாயிறுக் காக மலரக் காத்திருக்கும் தாமரை என ஜென்னி காதலன் வருகைக்காகக் காத்திருந்தாள்.

1843ஆம் ஆண்டு ஜூன்19, அன்று கார்ல் மார்க்ஸ்-ஜென்னி திருமணம் எளிமையுடன் நடந்தேறியது.

உலகின் தலை சிறந்த காதல் இலக்கணப் புத்தகம் மூடிவைக்கப்பட்டது!

அதேநாளில், உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கை இலக்கணப் புத்தகம் திறந்து வைக்கப்பட்டது!

திருமணத்திற்குப் பின் தன் கணவரோடு, தான் வாழ்ந்த இல்லத்தை விட்டு 1843 அக்டோபர் திங்களில் வெளியேறி, பாரிஸுக்குப் பிழைப்பைத் தேடிவந்தனர். பாரீஸ் நகரில் எண் 38, வன்னியே என்னும் வீதியில் மார்க்ஸ் தன் புது மனைவியுடன் குடியேறினார்.

ஆர்னால்ட் ரூஜ் என்பவர், மார்க்ஸை ஆசிரியராகக் கொண்டு ஜெர்மன்-“பிரெஞ்சு மலர்” என்ற இதழை வெளியிட்டார்..முதல் இதழோடு அது நின்றுவிட்டது. அவ்வாறு வெளியான முதல் இதழ் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஆகியோரின் கட்டுரைகளைக் கொண்டதாக இருந்தது. அந்தக் கட்டுரைகள் பொருள் முதல் வாதம், கம்யூனிசம் போன்ற கொள்கைகளை விளக்குவனவாக இருந்தன. மார்க்சிய தத்துவம் உருவாகத் தொடங்கிய காலம், அது.

ரைன் மாகாணத்தின், பார்மன் நகரத்தில் 1820 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் நாள் பிறந்தவர் பிரடரிக் ஏங்கல்ஸ்.செல்வச் சீமான். நெசவாலை முதலாளியின் மகன் என்ற போதிலும் ஏழைத் தொழிலாளிகளின் நிலை குறித்து மெத்தக் கவலைப்பட்டு, அவர்கள் எழுச்சி பெறக் கட்டுரைகள் எழுதி வருபவர். அவர் இலண்டனிலிருந்து தன் சொந்த ஊரான பார்மன் போகும் வழியில், பாரீஸில் இறங்கி மார்க்ஸை 1844 ஆகஸ்டு மாத இறுதி நாளில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். மார்க்ஸின் அறிவாற்ற லைப் போற்றி நட்பு கொண்டார். அந்த நட்பு வாழ்நாள் நட்பாய் அமைந்திருந்தது.

பாரீஸ் நகரில் அப்போதிருந்த பல்வேறு உயர் நடுத்தர வர்க்கத்தினர் பேசி வந்த போலியான சோஷலிச கருத்துகளை எதிர்த்து இருவரும் கடுமையாகப் போராடி வந்தனர்

‘உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தொழி லாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும்” என்று கூறியதோடு நில்லாமல் அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் மார்க்ஸ் இறங்கினார். அதற்காக முன் னேற்றம் என ஓர் இதழைத் தொடங்கினார்.அதில் மக்களையும், தொழிலாளர்களையும் புரட்சிப் பாதைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஜெர்மானிய மன்னர் நான்காம் ஃபிரடெரிக், பிற்போக்காளரின் முதன்மைப் பிரதிநிதி என்று சாடினார். இதனால் ஜெர்மன் அரசு, பிரெஞ்சு அரசிடம், மார்க்ஸையும் அவரது தோழர் களையும் பயங்கரமான புரட்சியாளர்கள் என்று முத்திரை குத்தி நாடு கடத்தும்படி வேண்டிக் கொண்டது. 1845 ஜனவரி 11 ஆம் நாள் பிரான்சில், முன்னேற்றம் தடை செய்யப்பட்டது. மார்க்ஸ் மட்டும் இரவோடு இரவாக பாரிசிலிருந்து வெளியேற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையில் மார்க்ஸ் மன்னிப்புக் கேட்டால், பாரீசில் அமைதியாகக் குடும்பம் நடத்தத் தடையில்லை யென்றும் கண்டிருந்தது.

மார்க்ஸ் இரவோடு இரவாக பாரிஸ் நகரிலிருந்து வெளியேறி, பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸல் சென்ற டைந்தார், பெல்ஜியும் அரசு மார்க்சைக் கண்டு அஞ்சியது; குறிப்பாக அவரின் பேனாவைக் கண்டு மிகவும் மிரண்டது. அவர் பேனாவைத் தொடக்கூடாது; தொட்டால் சிறைவாசம் என்று எச்சரித்தது..கார்ல் மார்க்ஸ் அந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டார். ஆனால் ஜெர்மனி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. அந்த நிலையில் தனக்கும் ஜெர்மனிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்து, ஜெர்மன் குடியுரிமையை இரத்து செய்துவிட்டார்.அதன் பிறகு மார்க்ஸ் எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறவில்லை. நாடற்றவரானார் மார்க்ஸ்.

மார்க்ஸைத் தேடி ஏங்கல்ஸ், தான் எழுதிய “இங்கி லாந்தில் தொழிலாளர் நிலை” என்ற நூலுடன் பெல்ஜியம் வந்தார். அந்த நூல் காரல் மார்க்ஸை வெகுவாகக் கவர்ந்தது. உலகம் முழுக்கத் தொழிலாளர்கள் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கியுள்ளது அந்த நூல். அந்த நூல் அளித்த உணர்வால் இருவரும் இணைந்து, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு சக்தியாக பொதுவு டைமைச் சங்கத்தைத் தோற்றுவித்தனர். தொழிலாளர் களை அவர்கள் “கம்யூனிஸ்டுகள்” என்று அழைத்தனர். 1847 ஜூன் மாதத்தில் இலண்டன் மாநகரத்தில் உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து முதல் கம்யூனிஸ்டு சங்கத்தை உருவாக்கினர். அடுத்த ஆண்டு இரண்டாவது மாநாடு இலண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் இணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்டு அறிக்கையில், சமூக வாழ்க்கை பற்றிய புதிய உலகக் கண்ணோட்டம் வெளிப்பட்டது. தங்களின் புரட்சிகர எண்ணங்களால் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் இதயங்களில் உன்னதத் தலைவர்களாக உருவெடுத் தனர்.

இதன் விளைவாக 1848 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதியன்று முதல் புரட்சி பாரிசில் ஏற்பட்டது. மன்னர் லூயிரிபிலிப் தப்பி ஓடினார். மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி மலர்ந்தது.

பெல்ஜியம் நாட்டின் மன்னர் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டு, காரல் மார்க்ஸையும் அவர் மனைவி ஜென்னியையும் சிறையில் அடைத்தார்.பின் மன்னர், அவர்கள் இருவரும் 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஆணை யிட்டார்.இவ்வாறு பன்முறை பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார்.

அப்போது அவர் கூறியது

எல்லா நாடும் என் நாடே! எல்லா மக்களும் என் மக்களே!

இந்த வரிகள் நம் புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பாடிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரியை நினைவூட்டுகிறது!

பெல்ஜியத்திலிருந்து அவர்கள் இருவரும் இலண்டன் நகர் வந்து சேர்ந்தனர். வாழ்க்கை என்பது போராட்டம் தான் பலருக்கு.ஆனால் மார்க்ஸிற்கு, போராட்டமே வாழ்க்கையாக அமைந்திருந்தது.

மார்க்ஸிற்கு இலண்டனில் நிரந்தரமாக வேலை ஏதும் கிட்டவில்லை.வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தார். அவரின் வாழ்நாள் நண்பர் ஏங்கல்ஸ், அவ்வப்போது தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகள் வழங்கி வந்துள்ளார்.

“அமெரிக்காவிலிருந்து வெளிவந்த” நியூயார்க் ட்ரிபியூன் என்ற இதழுக்கு, அவர் எழுதிய கட்டுரைகளுக் குக் கிடைத்த சொற்ப வருமானம் குடும்பம் நடத்த உதவியது. அந்த வருமானமும் சிலகாலத்திற்குப் பின் நின்று போனது. வீட்டு வாடகைக் கூடத் தர இயலாத வறுமை அவரை வாட்டியது!

மார்க்ஸ்-ஜென்னி இணையருக்கு 7 குழந்தைகள் பிறந்தனர். மூன்று குழந்தைகளைத் தவிர, ஏனையோர் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். 1850, ஆகஸ்டு மாதத்தில் ஜென்னி 5 ஆவது குழந்தைப் பேறடைந்தாள். கைக்குழந்தை, லிட்டில் பாக்ஸ்க்கு நிமோனியா காய்ச்சல். கையில் பணம் இல்லை உதவி வேண்டி அவரது உறவினர் கார்லைத் தேடிச்சென்றாள். ஆனால் அவர் உதவ மறுத்துவிட்டார். தன் வறுமைக்கு லிட்டில் பாக்ஸ் முதல் பலி என்றாள்.

மார்ச் 28, 1851 இல் புதிய குழந்தை பிரான்சிஸ்கா பிறந்தாள். பிறந்த சில நாள்களில் அந்தக் குழந்தை இறந்து விட்டது. பிறந்த இக் குழந்தையின் மரணம் குறித்து, ஜென்னி சோகத்துடன், “பிறந்த போது தொட்டில் வாங்கப் பணமில்லை. இறந்தபோது சவப் பெட்டி வாங்கப் பணம் இல்லை” எனக் கூறியது அவலத்தின் உச்சம்! 1849 முதல் 1855 வரை வறுமை யின் கோரப்பிடியில் சிக்கி அவதிக்குள்ளான நிலையிலும், மார்க்ஸ் தொடர்ந்து பொருளாதாரம் பற்றி அரிய கட்டுரைகளை எழுதி வந்தார். இந்த ஆய்வுக் கட்டுரை களுக்காக நாள் முழுதும் இலண்டன் மியூசியம் நூலகத் திலுள்ள அரிய நூல்களை வாசிப்பதிலும் குறிப்புகள் எடுப்பதிலும் கண்ணுங் கருத்துமா யிருந்தார்

1856 ஆம் ஆண்டில் தனது தாயார் இறப்புக்காக ஜென்னி, ஜெர்மனி சென்றார். மார்க்ஸால் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.; ஜென்னிக்குக் கடிதம் எழுதினார். அதில் அவர், “உன் பிரிவு எனக்குள் மிகுந்த மனக் கிளர்ச்சியைத் தருகிறது என் சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். ஒரேமுறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக்கொண்டால் போதும். என் இதயம் அமைதியாகிவிடும். அதன் பிறகு, எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது” எனத் தன் பிரிவின் வலியை விவரித்திருந்தார்.

1859 ஆம் ஆண்டில் மார்க்ஸ் எழுதிய பொருளாதரக் கட்டுரைகள் எங்கல்ஸின் முன்னுரையோடு ஒரு நூலாக வெளிவந்தது.

1867 செப்டம்பர் 14 இல் மார்க்ஸின் ஒப்பற்ற நூல் மூலதனம் வெளியானது. இந்த நூல் வெளியாவதற்கு அவரது நண்பர் ஏங்கல்ஸ் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மூலதனம் வெளியான அந்தக் காலகட்டத்தில். சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினங் களின் பரிணாம வளர்ச்சி” என்ற நூல் வெளியானது. அந்த நூல் மத நம்பிக்கைகளைத் தகர்த்தது..

டார்வின் நூலைப் பாராட்டி, மார்க்ஸ் கடிதம் எழுதினார், அந்தக் கடிதத்தில் மூலதனம் நூலினை, சார்லஸ் டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பி அவரின் ஒப்புதல் வேண்டியிருந்தார்.,

டார்வின் ஒப்புதல் தர மறுத்துவிட்டார். அதற்கு டார்வின், தற்போதைய நிலையில், “தான் மத நம்பிக் கைகளுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுவதில்லை என்று தன் குடும்ப உறவுகளிடம் உறுதியளித்துள்ளதால் தன் பெயரைக் குறிப்பிடவேண்டாம்” என்று வேண்டி னார். டார்வின் பதில் மார்க்ஸுக்கு வியப்பாயிருந்தது. அதன் பின்னர், மார்க்ஸ், தன்னுடைய தோழரும், சோஷலிச இயக்கத் தியாகி வில்லியம் உல்ஃப் என்பவருக்கு மூலதனம் நூலினைச் சமர்ப்பணம் செய்தார்.

வறுமை வாட்டிய போதும், மார்க்ஸின் சிந்தனைக்கு உரம் ஊட்டிவந்த அவரின் காதல் மனைவி ஜென்னி 1881 ஆம் ஆண்டில் புற்று நோய்க்குப் பலியானார். மனைவியின் இழப்பால் இடிந்து போனார் மார்க்ஸ். இடிமேல் இடி தாக்கியது போன்று மார்க்ஸின் மூத்தமகள் ஜென்னி, தாயைப்போன்று பொறுமையும் சாயலும் கொண்ட வளை, மனைவி மறைந்த மறு ஆண்டே இழந்து விட்டார்.

மார்க்ஸ். மார்க்ஸ் உள்ளமும் உடலும் ஓய்ந்து போனார். அந்த உலகம் போற்றும் சிந்தனையாளர் 1883 மார்ச் 14 பகல் 2.30 மணிக்கு சாய்வு நாற்கலியில் அமர்ந்தார். தன் பையில் எப்பொழுதும் இருக்கும் தன் தந்தை, மனைவி, மகள் ஜென்னியின் படத்தைப் பார்த்த வண்ணம் அந்தச் சிந்த்னைச் சிற்பி, சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

மனைவியும், மகள் ஜென்னியும் அடக்கம் செய்யப் பட்ட இலண்டன் ஹைகேட் மைதானத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்பொழுது இரங்கல் உரையில் ஏங்கல்ஸ், இவ்விதம் கூறிணார்.

“அவர் யூதனாகப் பிறந்தார் கிறிஸ்தவனாக வாழ்ந்தார், மனிதனாக இறந்தார் காலங்கள் தோறும் அவரின் பெயரும் புகழும் நிலத்து நிற்கும்”

மார்க்சியம் வாழ்க!

தொழிலாளர் புரட்சி ஓங்க்குக!

- மரு.சோமாஸ்கந்தன்