நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (10)

முதலாளித்துவம் அதற்கு முன்னிருந்த பொருளாதார அமைப்புகளின் சாம்பலிலிருந்தே உருவாக்கப்பட்டது. ரஜனி பாமிதத் இன்றைய இந்தியா என்ற தன் புத்தகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1857ல் இந்தியாவில் உள்நாட்டு தொழில்கள், முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டன. சிறு உற்பத்தியாளர்கள் நசிவடைந்தனர்.

முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த சமுதாய அமைப்புகளில் எளிய உற்பத்தி முறையில் குறைந்த அளவில் சரக்குற்பத்தி செய்யப்பட்ட போதிலும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் போதுதான் சரக்குற்பத்தி முழு வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களுமே முதலாளித்துவத்தில் சரக்குகளாக்கப்படுகின்றன.

எளிய சரக்குற்பத்தியை முதலாளித்துவச் சரக்குற்பத்தியிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான பண்பு என்னவென்றால். முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த உற்பத்தி முறைகளில் உழைப்புச் சக்தியானது சரக்காக மாற்றப்படவில்லை. முதலாளித்துவத்தில்தான் உயிருள்ள உழைப்புச் சக்தியானது சரக்காக மாற்றப்பட்டுள்ளது.

எளிய உற்பத்தி முறையில் உற்பத்திச் சாதனங்களை உற்பத்தியாளார்களே உடைமையாகக் கொண்டிருந்தனர். தங்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களைப் பெறும் பொருட்டே, தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தையில் பரிவர்த்தனை செய்து கொண்டனர். சரக்குற்பத்தியானது பெருமளவில் நேரடி நுகர்வுக்காகவே செய்யப்பட்டது.

எளிய  உற்பத்தி முறையில் நடைபெறும் பரிவர்த்தனையில் (i) உற்பத்தியாளர் தன் சரக்கை விற்கிறார் அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ii) தனக்கு தேவையான இன்னொரு பொருளை வாங்கிக் கொள்கிறார்.முதல் கட்டத்தை ச-ப எனக் குறிப்பிடலாம், இதில் ச என்பது விற்கப்பட்ட சரக்கையும், ப என்பது அதன் மூலம் கிடைக்கும் பணத்தையும் குறிக்கிறது.

இரண்டாம் கட்டத்தை  ப-ச’ என குறிப்பிடலாம்.இதில் ச’ என்பது முதல் கட்டத்தில் கிடைத்த பணத்தை கொண்டு வாங்கப்பட்ட புதிய சரக்கைக் குறிக்கிறது. எளிய உற்பத்திமுறையைக் குறிக்கும் இந்த  சுற்றை ச-ப-ச’ என்று குறிப்பிடலாம்.

முதலாளித்துவ உற்பத்திமுறையின் சுற்று  இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. எளிய சரக்குற்பத்தியின் சுற்று ச-ப-ச’. முதலாளித்துவ உற்பத்திமுறையின் சுற்று ப-ச-ப’ என்ற வடிவத்தில் உள்ளது.

பணத்துடன் தொடங்கிய முதலாளித்துவச் சுற்று அதை மீண்டும் பணமாகப் பெறவே   ச-சரக்காக மாற்றப்படுகிறது. இந்தச் சுற்றின் செயல்பாடு பணத்தில் தொடங்கி பணத்தில் முடிவடைவதால் பயன்மதிப்பில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

ப-வைவிட ப’ அதிகமாக இருக்கவில்லை என்றால் இந்தச் சுற்று நடைபெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்தச் சுற்றானது நுகர்வுக்காக செய்யப்படாமல் பணம் ஈட்டி இலாபம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

ச-ப-ச’ சுற்றானது பயன்மதிப்புக்காகவும், நுகர்வுக்காகவும் செய்யப்படுகிறது. ஆனால் ப-ச-ப’  என்பது இலாபம் ஈட்டுவதையே, ப அளவிலான பணத்தை ப’ அளவிற்கு அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எளிய பொருளுற்பத்தி நுகர்வை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் மட்டுமே  செய்யப்பட்டது.

முதலாளித்துவ உற்பத்தி முறை இலாபத்தை எல்லையில்லாமல் விரிவாக்கம் செய்வதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்தில் ப-ச-ப’  சுற்றே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்    ச-ப-ச’ சுற்று இல்லாமல் மறைந்து விடுவதில்லை. பிழைப்பிற்காகத் தன் உழைப்புச் சக்தியை விற்கும் பெரும்பான்மையான மக்கள் இச்சுற்றிலே ஈடுபடுகின்றனர். அவர்கள் தமது உழைப்புச் சக்தியை (ச) விற்று அதில் கிடைக்கும் பணத்தில் அத்தியாவசியமான பொருட்களை ( ச’ ) வாங்குகின்றனர்.

ப-ச-ப’  என்ற மூலதனச் சுற்றில் ஆரம்பப் பண மதிப்பை விரிவாக்கம் செய்வதே அதன் சாரமாக உள்ளது. ஒரு பொருளை மலிவாக வாங்கி அதிக விலைக்கு விற்கும் வணிக மூலதனமும், சரக்கு என்ற இடைநிலை வடிவத்தைச் சுற்றில் கொண்டு வராமல் பணத்தின் மூலம்  மேலும் அதிகப் பணத்தைப் பெறும் ப-ப’ என்று குறியிடப்படும் வட்டிமூலதனமும், மூலதனத்தின் ஆரம்ப வடிவங்களாக இருந்தன.

முதலாளித்துவத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவது தொழில்துறை மூலதனமே. பண மதிப்பை எல்லையில்லாமல் விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ மூலதனச் சுற்றான ப-ச-ப’ (பணம்-சரக்கு–பணம்’) எனும் சுற்றில் உற்பத்தி மூலதனமானது ஒரு நேரத்தில் பணமாகவும், பிறகு சரக்கு வடிவிலும் காணப்படுகிறது. பணம், சரக்கு ஆகியவை மதிப்பின் வெவ்வேறு வடிவங்களாக உள்ளன. பணம் மதிப்பின் பொதுவான வடிவமாகவும், சரக்கு அதன் குறிப்பிட்ட வடிவமாகவும் உள்ளது.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது ச-ப-ச’ (சரக்கு–பணம்–சரக்கு’) என்ற சுற்றைத் திருப்பிப் போட்டால் ப-ச-ப’ பெறலாம், உபரி-மதிப்பு என்பது ப-ப’  இடையிலான வேறுபாடே. ஆனால் ப-ச-ப’ என்ற சுற்றில் மட்டும் எப்படி மதிப்பு விரிவாக்கம் அடைந்து கூடுதல் மதிப்பு – உபரி-மதிப்பு - கிடைக்கிறது. சரக்குகள்  மதிப்பின் அடிப்படையிலே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன எனப் பார்த்திருந்தோம். சம மதிப்புடைய சரக்குகளிடையேயான பரிவர்த்தனை செய்யப்படும் போது உபரி-மதிப்பு உருவாக்கம் எவ்வாறு சாத்தியமாகிறது என்பது புதிராக இருந்தது.

உபரி-மதிப்பு வர்த்தகத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது என்று ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. வர்த்தகத்தின் மூலம் மதிப்பு கூட்டப்படுவதால் பொருளை வாங்கும் நுகர்வோருக்கு அது அதிக மதிப்புடையதாக இருக்கிறது என்று கூறப்பட்டது. இன்னொரு வாதமாக பொருட்களை விலையை கூட்டி விற்பதன் மூலமும், குறைந்த விலைக்கு வாங்குவதன் மூலம் உபரி-மதிப்பு பெறப்படுவதாக கூறப்பட்டது. அவ்வாறு எல்லாப் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுமானால், விற்பவராக ஒருவர் ஈட்டுவதை, வாங்குபவராக இழக்கும்  நிலை ஏற்படுகிறது.

எனவே எல்லாப் பரிவர்த்தனைகளையும் மொத்தமாகக் கணக்கில் கொண்டால் மதிப்பில் ஈட்டமோ, இழப்போ இல்லை. இதன் மூலம் தனி நபர் அளவிலோ, சமூக அளவிலோ உபரி-மதிப்பு எப்படி உருவாகிறது என்பதற்கான எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. ‘எ’ என்பவர் பொருளை அதன் மதிப்பைக் காட்டிலும் அதிக விலைக்கு சாதுரியமாக ‘பி’ என்பவரிடம் விற்கிறார் என்றும், ‘பி’ என்பவர் சரக்கின் மதிப்பிற்கே அதை ‘ஏ’-யிடம் விற்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.

இதில் ‘ஏ’ ஆதாயமடைபவராகவும், ‘பி’ இழப்பவராகவும் உள்ளார். ஏ, பி ஆகிய இருவர் கொண்டிருக்கும் மதிப்பைச் சேர்த்து பார்த்தால் மொத்த மதிப்பில் ஏற்றமோ இழப்போ இல்லை. இதன் மூலம் ‘ஏ’ என்ற தனி நபர் அடையும் உபரி-மதிப்பிற்கான விளக்கத்தைப் பெற முடிந்தாலும், சமூகத்தின் ஒட்டுமொத்த அளவில் உபரி எவ்வாறு உருவாகிறது என்பதை இது விளக்கவில்லை.

இதில் நடந்தது என்னவென்றால் சுற்றோட்டத்தில் மொத்த மதிப்பின் விநியோகத்தில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது. ’ஏ’-க்கு அதிகமாகச் சென்றுள்ளது, பி-க்குக் குறைவாகச் சென்றுள்ளது. விநியோகத்தில் ஏற்படும் மாற்றத்தினால் மட்டுமே சுற்றோட்டத்தின் மொத்த மதிப்பு அதிகரிப்பதில்லை. சுற்றோட்டத்தின் மூலமோ, பரிவர்த்தனையின் மூலமோ புதிய மதிப்பு உருவாக்கப்படுவதில்லை. உபரி-மதிப்பு சுற்றோட்டத்தின் மூலம் பெறப்படுவதில்லை.

அதே நேரத்தில் சுற்றோட்டம் இல்லாமல் வேறு சரக்குற்பத்தியாளர்களின் தொடர்பில்லாமல் சரக்குற்பத்தியாளர் மதிப்பை விரிவாக்கம் செய்து சரக்குகளை மூலதனமாக மாற்றவும் முடியாது என்பதால் ஒரே நேரத்தில் உபரி-மதிப்பு சுற்றோட்டத்தில் தோன்றாதது போலவும், தோன்றுவது போலவும் ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்கிறது.

இந்த முரண்பாட்டை ஆராய, உற்பத்தி மூலதனத்தின் சுற்றுக்குச் சென்று பார்ப்போம். ப-ச-ப’ என்ற உற்பத்தி மூலதன சுற்றை விரிவாக்கி ப-ச-உ-ச’-ப’ என்று குறிப்பிடலாம். இதில் ‘உ’ என்பது உற்பத்திச் செயல்முறையைக் குறிக்கிறது. பண மூலதனத்தைக் கொண்டு வாங்கிய உற்பத்திச் சாதனங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி சரக்குற்பத்தி செய்து அதைச் சந்தையில் விற்றுப் பணமாக்குவதையே  ப-ச-உ-ச’-ப’ குறிக்கிறது.

ப-ச-உ-ச’-ப’ என்ற உற்பத்தி மூலதனச் சுற்றில் ப-ச என்பதும் ச’-ப’ என்பதும் பரிவர்த்தனைகளையே குறிக்கிறது. ஆகையால் இந்த இரண்டு படிநிலைகளிலும் பரிவர்த்தனையின் போது மதிப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் உற்பத்தி மூலதனச் சுற்றின் ச-உ-ச’ பகுதியில்தான் உபரி-மதிப்பின் மூலத்தைக் கண்டறிய வேண்டும்.

ப-ச என்பது ப-உ.ச மற்றும் ப-உ.சா ஆகிய இரண்டு கூறுகளை கொண்டுள்ளது. இதில் உ.ச என்பது உழைப்புச் சக்தியையும், உ.சா என்பது உற்பத்திச் சாதனங்களையும் குறிக்கும். . உழைப்புச் சக்தியை வாங்குவதற்கான மூலதனமானது மாறுமூலதனம் எனப்படுகிறது. நிலை மூலதனத்தை இறந்த உழைப்பாகவும், மாறு மூலதனத்தை உயிருள்ள மூலதனமாகவும் அழைக்கலாம்.

ப-உ.ச மற்றும் ப-உ.சா ஆகிய இரண்டுமே மதிப்பின் அடிப்படையில் ‘சம’ அளவிலான  பரிவர்த்தனைகளைக் குறிப்பிடுவதால், ப-ப’ என்று மதிப்பளவில் மாற்றம் பெறுவதற்கான மூலத்தை, உற்பத்திக்காக வாங்கப்பட்ட சரக்குகளின் பயன்மதிப்பிலிருந்தே கண்டறிய வேண்டும். ப என்ற ஆரம்ப மதிப்பை ப’ என பெருக்கச் செய்யும் வித்தையை, தன் மதிப்பை காட்டிலும் அதிக மதிப்பை உருவாக்கும் பண்பைக்  கொண்ட சரக்கில்தான் காண முடியும்.

உழைப்புச் சக்தியே இத்தகைய சிறப்பான பண்பைக் கொண்டிருக்கும் சரக்கு என்பதை மார்க்ஸ் கண்டறிந்தார். இங்கே மிகவும் முக்கியமானது ‘உழைப்பு’ என்பதற்கும் ‘உழைப்பு சக்தி’என்பதற்கும் இடையிலான வேறுபாடு. ஒரு கூலித் தொழிலாளி முதலாளியிடம்  நேரடியாக விற்பது  உழைப்பை அல்ல, ‘உழைப்பதற்கான  திறனை’ யே விற்கிறார் என வேறுபடுத்திக் காட்டினார் மார்க்ஸ்.

உழைப்புச் சக்தியின் நுகர்வானது மதிப்பை உருவாக்கும் உழைப்புச் செயல்முறை ஆகும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உழைப்புச் சக்தியைப் பயன்படுத்தும் போது தன்னை மறுவுற்பத்தி  செய்வதற்குத் தேவைப்படும் மதிப்பைக் காட்டிலும்  அதிக அளவில்  மதிப்பை  உருவாக்குகிறது. உழைப்புச் சக்தியின் பயன்மதிப்பு உபரி மதிப்பை உருவாக்கக் கூடிய பிரத்யேகப் பண்பைக் கொண்டுள்ளது.

ஊதிய ஒப்பந்தத்தின் மூலம், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தொழிலாளியின் உழைக்கும் திறனை  முதலாளி தன்வசப்படுத்துக்கிறார்.  தினசரி வேலை செய்யும் போது செலவாகும் இந்த உழைப்புத் திறனை உழைப்பாளி ஒவ்வொரு நாளும் உணவின் மூலமாகவும், ஓய்வு மற்றும் உறக்கத்தின் மூலமாகவும் மறுவுற்பத்தி (புதுப்பிக்கப்பட) செய்ய வேண்டும்.

தொழிலாளியிடம் உள்ள ஒரே ‘சொத்து’ இந்த உழைப்புச் சக்தி மட்டுமே, அதை விற்றால் ஒழிய அவரால் பிழைக்க முடியாது என்ற நிலையை முதலாளித்துவம் உருவாக்குவதாலே, உழைப்புச் சக்தி சரக்காக்கப்படுகிறது.

உபரி மதிப்பின் ரகசியம்:

தொழிலாளியின்  மொத்த வேலை நேரத்தை விட அவரது  உழைப்பு சக்தியை மறுவுற்பத்தி செய்யத் தேவையான மதிப்பானது (உழைப்பு நேரம்) குறைவாகவே  உள்ளது. உழைப்புச் சக்தியை மறுவுற்பத்தி செய்யத் தேவையான உழைப்பு நேரமானது அவசியமான உழைப்பு நேரம் என்றழைக்கப்படுகிறது. வேலை  நேரம்  பத்து மணி நேரம் என வைத்துக் கொள்வோம்.

தொழிலாளியின் சராசரியான தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான உழைப்புச் சக்தியின் மதிப்பான அவசிய உழைப்பு நேரம், ஆறு மணி நேரமாக இருக்குமானால் கூடுதலாக அவர் நான்கு மணி நேரம் உழைப்பில் ஈடுபடும் போது உருவாக்கப்படும் மதிப்பை முதலாளி இலவசமாகத் தனதாக்கிக் கொள்கிறார்.

தொழிலாளி நான்கு மணி நேரம் ஊதியமற்ற உழைப்பில் ஈடுபடுகிறார். இவ்வாறு உழைப்புச் சக்தியை மறுவுற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரத்தைக் காட்டிலும் தொழிலாளி கூடுதலாக உழைக்கிறார்.  இந்த உபரி உழைப்பின் மூலமே தொழிலாளி உபரி மதிப்பை உருவாக்குகிறார். உழைப்புச் சுரண்டலின் மூலம் தொழிலாளியின் உபரி உழைப்பை, உபரி மதிப்பாக முதலாளி அபகரித்துக் கொள்கிறார்.

தொழிலாளியின் வேலை நேரத்தை கூடிய அளவு நீட்டிப்பதன் மூலம் உபரி மதிப்பானது பெருக்கப்பட்டது. இங்கிலாந்தில் சார்ட்டர் இயக்கம் வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடியது. முதலாளித்துவமானது ஆணாதிக்கச் சமூகத்தின் சமமின்மையையும், ஏற்றத்தாழ்வையும், பாலின அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பெண்களையும், , குழந்தைகளையும் மலிவான உழைப்புச் சக்தியாக்கிக் கொண்டது.

உழைப்புச் சுரண்டலின் வடிவமானது முன்-முதலாளித்துவப் பொருளாதாரத்தில், முதலாளித்துவச் சமூகத்தில் காணப்படுவது போல் மர்மமாக இல்லை. அதில் உழைப்புச் சுரண்டல் நேரடியாக வெளிப்பட்டது. விவசாயி தனது நிலத்தில் மூன்று நாள் வேலை பார்ப்பார். பண்ணையார் நிலத்தில் மூன்று நாள் வேலை பார்ப்பார். ஒரு நாள் கடவுளுக்காக உழைப்பார். நவீன மூலதனம் சாதுரியமாக சுரண்டலை மறைத்துள்ளது. காகித அளவில் மட்டுமே முதலாளியும், தொழிலாளியும் சம தகுநிலை பெற முடியும்.

பயன் மதிப்பின் உற்பத்தியாக உழைப்பு செயல்முறை:

உழைப்புச் செயல்முறையில் மனிதர்கள் இயற்கையுடன் செயலாற்றுகின்றனர். இந்தச் செயல்முறையில் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றுவதன் மூலம் மனிதன் தானே மாற்றத்துக்குட்படுகிறான். உழைப்பு  நிகழ்வில் மனிதர் உணர்வுபூர்வமாக சமூகப் பயனுள்ள செயல்பாட்டில் ஈடுபடுகிறார். ஆனால் முதலாளித்துவத்தில் தொழிலாளியின் உணர்வுபூர்வமான செயல்பாடும், படைப்பாக்கத் திறனும் அழிக்கப்படுகிறது.

முதலாளித்துவ உழைப்பு முறையில், முதலாளி அல்லது மேற்பார்வையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழே தொழிலாளி உழைப்பில் ஈடுபடுகிறார். உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளி தன் உழைப்புச் செயல்முறையின் தன்மையோ, அதன் விளைவோ, எவ்வாறு இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் ஆற்றலை இழந்து விடுகிறார்.

அவர் என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எப்படி உற்பத்தி செய்யவேண்டும் என உழைப்புச் செயல்முறை முழுவதையுமே முதலாளியே தீர்மானிக்கிறார். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் அவற்றை உற்பத்தி செய்த தொழிலாளிக்கு கிடைப்பதில்லை, அவை முதலாளியின் உடைமையாக்கப்படுகிறது என்பதால் முதலாளித்துவ உழைப்புச் செயல்முறையில் தொழிலாளரின் அயன்மைப்பாடு இரட்டைத்தன்மை பெற்றுள்ளது.

முதலாவதாக அவர் உழைப்புச் செயல்முறையிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறார், அவரது உழைப்புச் செயல்முறையைத் தீர்மானிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் முதலாளியிடம் உள்ளது. அதே நேரத்தில் தான் உற்பத்தி செய்த பொருளிலிருந்தும் தொழிலாளி அந்நியப்படுத்தப்படுகிறார்.

உற்பத்திச் செயல்முறையில் தொழிலாளர் ஆற்றும் பங்கும் மூலப்பொருட்கள் மற்றும் எந்திரங்கள் ஆற்றும் பங்கும் ஒரே தன்மையுடையன என்று முதலாளித்துவப் பொருளாதாரவியலாளர்கள் கருதுகிறார்கள். மார்க்சின் பார்வையில் தொழிலாளியின் உழைப்பே உழைப்புச் செயல்முறையில் செயல்முனைப்பான பங்கு வகிக்கிறது.

அவரது உழைப்புச் செயல்முறை பொருளில் நிலைத்த பண்பாக இறுகலாக்கப்படுகிறது. பயனுள்ள மனித உழைப்பு இல்லையென்றால், உழைப்புக் கருவிகள் துருவேறி விடும், இயற்கை அளிக்கும் மூலப்பொருட்களும் அழிந்து போகும். அவற்றில் சாத்தியமாகத் தென்படும் பயன்மதிப்பை உண்மையாக்குவது தொழிலாளியின் உயிருள்ள உழைப்பே என்கிறார் மார்க்ஸ்.

முதலாளித்துவ உற்பத்தி முறை பயன்மதிப்பை உற்பத்தி செய்வதை மட்டுமில்லாமல் மதிப்பையும் உபரி மதிப்பையும் உற்பத்தி செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. உற்பத்திக் கருவிகளும் மூலப்பொருட்களும் அவற்றை உற்பத்தி செய்யத் தேவையான சமூக அளவிலான சராசரி உழைப்பு நேரத்துக்குச் சமமான மதிப்புடனே உழைப்புச் செயல்முறையில் பங்கேற்கின்றன.

அவற்றில் மறைமுக உழைப்பு  பொதிந்துள்ளது. மதிப்பை உருவாக்கும் உற்பத்திச் செயல்முறையில் உழைப்பு நிகழ்முறைக்குள் வரும் மூலப்பொருட்களை, தொழிலாளி தன் உழைப்பின் மூலம் பயன்மதிப்புடைய வேறொரு பொருளாக மாற்றுகிறார். அதற்கு உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்துகிறார். அதன் மூலம் உற்பத்திக் கருவியின் மதிப்பில் ஒரு பகுதியானது பொருளுக்கு மாற்றப்படுகிறது. இந்த உழைப்புச் செயல்முறையில் மூலப்பொருளோ, எந்திரங்களோ புதிய மதிப்பு உருவாக்கத்தில் பங்கேற்பதில்லை.

மாறாக உழைப்பு செயல்முறையின் செயல் முனைப்பான பாத்திரம் வகிக்கும் தொழிலாளரின் உயிருள்ள உழைப்பானது மூன்று வேலைகளை செய்கிறது. i) உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் மூலப்பொருட்களின் மதிப்பைத் தக்கவைத்து, மதிப்பிழப்பு ஏற்படாத வகையில் அதைப் பாதுகாக்கிறது. (ii) உற்பத்தி எந்திரத்தின் மதிப்பின் ஒரு பகுதியைச் சரக்கிற்கு மாற்றுகிறது. iii) தன் நேரடி உழைப்பால்  பொருளுக்கு புதிய மதிப்பைச் சேர்க்கிறது.

சரக்குற்பத்தியில் உபரி-மதிப்பு உருவாக்கப்படுவதற்கு குறிப்பிட்ட வரலாற்று முன் நிபந்தனைகள் தேவைப்படுகின்றன. வரலாற்றின் வெவ்வேறு காலகட்டத்தில் அமைந்த பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட அளவில் சரக்குற்பத்தி செய்வது அவற்றில் பொதுவாக காணப்படும் பண்பாக உள்ளது.

பணச் சுற்றோட்டத்தின் வளர்ச்சியும், சரக்குற்பத்தியும் மட்டுமே முதலாளித்துவ உற்பத்தி முறை உருவாவதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கவில்லை. சமூக அளவில் பணத்திலிருந்து தன்னைத் தானே பெருக்கி அபிவிருத்தி செய்து கொள்ளும் மூலதனம் உருவாக வேண்டுமானால் உழைப்புச் சக்தி உழைப்பாளியால் விற்கக் கூடியதாகவும், முதலாளியால் வாங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

தொழிலாளர் உருவாவது இரண்டு முன் நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. தொழிலாளி தனது உழைப்புச் சக்தியைத் தன் விருப்பம் போல் தானே விற்கக் கூடியவராக இருந்து அதைத் தன் தனியுடைமையாகக் கொண்டிருக்க வேண்டும். அவர் அடிமையாகவோ, நிலத்துடன் கட்டுண்டவராகவோ இருக்கக் கூடாது, இன்னொன்று அவர் உற்பத்தி சாதனங்களை உடைமையாளராக இருந்து தன்னிச்சையான முறையில் சரக்குற்பத்தியில் ஈடுபடுபவராக இருக்கக் கூடாது. உழைப்புச் சக்தியை விற்பதன் மூலமே அவரால் பிழைக்க முடியும் என்ற நிலையில் இருக்க வேண்டும்.

பணத்தின் உடைமையாளர் தன் பணத்தை மூலதனமாக மாற்றுவதற்காக, சந்தையில் விடுமை பெற்ற தொழிலாளியைச் சந்திக்க வேண்டும். இங்கே விடுமை என்பது இரட்டைத் தன்மை கொண்டது, ஒன்று தொழிலாளி தன் உழைப்புச்சக்தியைத் தானே விற்கக் கூடிய சுதந்திரம் பெற்றவர், அதே நேரத்தில் அவர் உடைமையிலிருந்தும் சுதந்திரம் பெற்றவர், தன் உழைப்புச்சக்தியைத் தவிர விற்பதற்கு அவரிடம் ஒன்றுமில்லை.

ஆகவே முதலாளித்துவ உற்பத்தி முறை உருவாவதற்கு ஒரு புலத்தில் பணமுடையவரும், உற்பத்தி சாதனங்களும், மறு புலத்தில் உழைப்புச் சக்தியைத் தவிர வேறு உடைமையற்ற தொழிலாளர்களும் பிரிந்திருக்க வேண்டும். செல்வத்தை ஒரு முனையிலும், வறுமையை மறு முனையிலும் குவிப்பது முதலாளித்துவத்தின் பொதுவிதியாக உள்ளது.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வான சமூக உறவானது இயற்கையில் உருவாக்கப்பட்டதல்ல, வரலாற்றின் வெவ்வேறு காலகட்டத்தில் இருந்த சமூக அமைப்புகளுக்குப் பொதுவானதும் அல்ல. முதலாளித்துவ உற்பத்தி முறையானது அதற்கு முன்னிருந்த உற்பத்தி முறைகளைப் போலவே தற்காலிகமானதும், அதை விட மேம்பட்ட உற்பத்தி முறையால் பதிலீடு செய்யப்படக் கூடியதும் ஆகும்.

உற்பத்திச் செயல்முறையில் நிலத்தை உண்ணாமல் இருப்பது மட்டுமே நிலக்கிழாரின் பங்களிப்பு. உற்பத்திச் செயல்முறையில் முதலாளியின் பங்களிப்பு அவர் மூலதனத்தை உண்ணாமல் தாமதப்படுத்துகிறார் அல்லவா, அதுவே. குறைந்தபட்சம் மூலதனம் அவரது சொந்தப் பணமாக இருக்குமானால் கூட இப்படிச் சொல்வதில் ஏதேனும் நியாயமிருக்கும். முதலாளி வர்க்கம் இருப்பதற்கு இன்று எந்தத் தேவையும் இல்லை. நவீனப் பொருளாதாரம் முதலாளி வர்க்கம் இல்லாமலே சிறப்பாக இயங்க முடியும்.

உங்களை விட அதிக ஊதியம் அல்லது வருவாய் பெறுபவரோ, அல்லது உங்கள் பகுதியில் இருக்கும் சிறு வணிகரோ உங்கள் வர்க்க எதிரி அல்ல. சிறு உற்பத்தியாளர்களையும் சிறு விவசாயிகளையும் ஒருபோதும் கைவிடக் கூடாது. வரலாற்று ரீதியாக அனைத்தும் போராட்டத்தின் மூலமே வெல்லப்பட்டது.

(தொடரும்)

- சமந்தா

Pin It