‘மருதிருவர்’ என்னும் ஆவணப்படம் மீதான விமர்சனங்களை, எதிர்வினைகளைத் தொகுத்து ‘மருது பாண்டியர் யார்?’ என்னும் தொகுப்பை வெளியிட்ட குருசாமி மயில்வாகனன் தொகுப்பாக்கம் செய்து தந்துள்ள ஆவணப்படம் ‘லெனின்’. லெனின் என்னும் வரலாற்று மனிதனை, உழைக்கும் மக்களின் தலைவனை, சிவப்புப் புரட்சிக்கு வித்திட்டவனை ஆவணப்படுத்தியுள்ளார். 

உலக வரைப்படத்தைக் காட்டுவதுடன் தொடங்கும் படம் ரஷ்யாவை மையப்படுத்திக் காட்டுகிறது. சிவப்பு நிறத்தில் தனித்து அடையாளப்படுத்தி இலக்கை, இலட்சியத்தை, கொள்கையை, புரட்சியை நினைவூட்டுகிறது. லெனினின் உருவப்படத்தைக் காட்டும்போதும் கொடியைக் காட்டும்போதும் சிவப்பு நிறத்திலேயே காட்டியுள்ளார். 

1870 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி லெனின் பிறந்தததைத் தொடர்ந்து 1924ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அவர் இறந்த வரை தேதி வாரியாக ஒவ்வொரு நிகழ்வையும் தொகுத்தளித்துள்ளார். ஐம்பத்து நான்கு ஆண்டு கால லெனினின் வாழ்வை முப்பது நிமிட ஆவணப்படமாக்கித் தந்துள்ளார். முக்கிய நிகழ்வுகள் அனைத்தையுமே படத்தில் காட்டியுள்ளார். விளாடிமீர் என்னும் இயற்பெயருடன் தொடங்கி முப்பதாண்டுகளுக்குப் பின் நூல்களை வெளியிடும்போதே லெனின் என பெயர் சூட்டிக் கொண்டதாகவும் படம் குறிப்பிடுகிறது. அவர் எழுத்துக்கள் உணர்வுகளைத் தூண்டின என்றும் புரட்சிக்கு வழி வகுத்தது என்றும் கூறுகிறது. தொழிலாளர்களை ஒன்றுபடுத்தவும் ஒரு காரணமாக இருந்துள்ளது லெனினின் எழுத்து. எழுதுவதையும் வாசிப்பதையும் வாசித்ததில் குறிப்பெடுத்தலையும் வழக்கமாகக் கொண்டவர் என்றும் குறிப்பிடுகிறது. தொழிலாளர்களுக்கான அறிவுரையாக விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தைத் தன் கையாலே பல பிரதிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியுள்ளார். அதை மக்களிடையே கொண்டு செல்வதிலும் முனைப்பாக இருந்துள்ளார். இவருக்கு உறுதுணையாக அவர் மனைவியான குரூவிஸ் கயா இருந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. லெனினின் போராட்ட வாழ்விற்கு ஒத்துழைத்தவராக ஸ்டாலினும் உள்ளார் எனவும் கூறுகிறது. ‘தாய்’ நாவல் எழுதிய மார்க்சிம் கார்க்கியின் தொடர்பையும் அறியச் செய்கிறது. 

லெனினின் வாழ்வு போராட்டங்களால் நிறைந்தது என்கிறது படம். சூழல் காரணமாக பல்வேறு ஊர்களுக்குச் சென்றதாகவும் சர்வதிகார ஆட்சியால் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லெனினைக் கொல்ல முயன்றதும் சுட்டப்பட்டுள்ளது. லெனினின் வாழ்வைச் சொல்வதற்காக குருசாமி மயில்வாகனன் லெனின் குறித்த படங்களையும் ஓவியங்களையும் செய்திகளையும் சேகரித்து அருமையாக தொகுத்தளித்துள்ளார். காட்சியாக லெனினின் வரலாற்றைக் காட்டியதுடன் பின்னணியில் மு.கலைவாணன் குரலும் வாழ்வை அழகாகச் சொலலிச் செல்கிறது. காட்சியும் குரலும் வெகு பொருத்தமாக ஆவணப்படத்தை நகர்த்திச் செல்வதுடன் லெனினின் வரலாற்றை மனத்தில் நிற்கச் செய்கிறது. 

உழைப்பாளி வர்க்கம் நாட்டை ஆள முடியும், அதற்கு லெனினின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு என படம் உணர்த்துகிறது. லெனினின் வாழ்க்கை ஒரு வரலாறு என்று காட்டுவதுடன் ‘லெனினின் வாழ்க்கை - எதிர்காலத்தின் வரலாறு’ எனவும் அறிவுரைக்கிறது. இருப்பவர்களுக்கும் எதிர்காலத்தவர்களுக்கும் லெனின் வாழ்வைச் சொல்லும் முயற்சியில் தன்னை விடவும் பிறரால் காட்ட முடியும் என தன்னடக்கத்துடன் கூறியுள்ளது கவனிப்பிற்குரியது. 

லெனினின் வழியில் கம்யூனிசத்தைக் கடைபிடிப்பவர்களை பாராட்டுகிறது. அவர் வழியில் செல்ல அறிவுரைக்கிறது. அமெரிக்க ஏகாபத்தியத்தை ஏற்றுக்கொண்ட போலி கம்யூனிஸ்ட்டுகளைக் கண்டிக்கவும் தவறவில்லை. கம்யூனிஸம் சிறந்தது என்கிறது. லெனினின் வாழ்வைக் கூறியிருந்தாலும் லெனினின் வாழ்வு தொழிலாளர்களுக்காக, தொழிலாளர் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்பதே ஆவணப்படம் சொல்வதாக உள்ளது. தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட லெனின் குழந்தைகள் மேல் பிரியமுள்ளவர் என்ற செய்தியும் உள்ளது. பூனைக்குட்டியும் நேசிப்பவர் என்கிறது. 

புரட்சிச் செங்கொடியை உயர்த்திப் பிடித்ததால் உயிரிழந்த அனைத்துத் தியாகத் தோழர்களுக்கு ‘லெனின்’ ஆவணப்படம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். 

வெளியீடு - பறையோசையின் திரைத்தானம். 1.171 கடைவீதி, பி.அழகாபுரி, கீழ்ச்சிவல்பட்டி, சிவகங்கை - 630205.                                 

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

9865809969, 9965382979

Pin It