வழுவாய்ச் சென்ற மெய்யறிவு தனக்குச்
செழுமை சேர்த்தும் முழுமை யாக்கியும்
உருவாக்கித் தந்த காரல் மார்க்சின்
பொருள்முதல் வாத இயக்கவியல் கருத்தே
சுரண்டலை முழுமையாய் ஒழித்துக் கட்டும்
அறமிகு வர்க்கப் போரில் வினைஞர்
பொருளா தார அரசியல் முனையென
இருவழி களிலும் வெற்றியை ஈட்ட
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபகை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றல் போலாகுமே
(தத்துவ ஞானம் என்பது வரலாறு முழுவதும் (கருத்து முதல் வாதம் மற்றும் இயக்க மறுப்பு வாதங்களில் சிக்கிக் கொண்டு) தவறான வழியிலேயே சென்று கொண்டு இருந்தது. அதற்குச் செழுமை சேர்த்தும் முழுமையாக்கியும் இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்ற வடிவத்தில் தத்துவ ஞானத்தை முழுமையாக்கித் தந்தார் கார்ல் மார்க்ஸ். (முற்காலத்தில்) போர் முனையில் எதிரிகளின் படை வீரர்களுக்கு எதிராகப் போரிட்டுப் பெற்ற வெற்றி, (எவ்வாறு) கொழுமுனை கிழித்த வயலின் சாலிடத்தே விளைந்த நெல்லின் பயனால் வாய்ப்பதயிற்றோ, அது போல இந்த இயக்கவியல் பொருள் முதல்வாத மெய்ஞ்ஞானமே, சுரண்டலை முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்காக உழைக்கும் மக்கள் தொடுக்கும் அறவழியிலான வர்க்கப் போராட்டத்தில் பொருளாதாரம் அரசியல் ஆகிய இரண்டிலும் வெற்றி பெறுவதற்கு, அடிப்படையாகும்)
இராமியா
தொடர்புடைய படைப்புகள்
புது நானூறு 35. மெய்யறிவே வெற்றிக்கு அடிப்படை
More articles by இராமியா
- வாக்குப் பதிவு எந்திரம் பற்றி சங்கிகளும் நண்பர்களும் (23 மே 2022)
- சீன மக்கள் தொகையும் அப்போல்லோ மருத்துவமனை வாகன நிறுத்தமும் (06 அக் 2021)
- பாற்கடலும் கொரோனா தடுப்பு ஊசியும் (01 ஏப் 2021)
- பகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா (27 ஜன 2021)
- வில் வித்தை (15 டிச 2020)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.