பிரபஞ்சம் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றிய விவரங்களை ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) அண்டவெளிக்கு அனுப்பியுள்ள யூக்லிட் (Euclid) தொலைநோக்கி அளிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதுவரை புதிராக இருக்கும் அண்டவெளியின் இருண்ட பொருட்கள் (dark matter) மற்றும் இருண்ட ஆற்றல் (dark energy) பற்றி இத்தொலைநோக்கி ஆராயும். இது 1 பில்லியன் யூரோக்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் ஆய்வு

1930ல் ஃப்ரிட்ஸ் ஸ்விக்கி, “கோமா கேலக்ஸி கிளஸ்டர்” என்று அழைக்கப்படும் ஒரு நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். நிறை, ஒளிர்வு, தூரம் பற்றி கணக்கிட்டார். ஆனால் இது போன்ற ஓர் இயக்கம் இருக்க, நிறை கணக்கிடப்பட்டதை விட 400 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

இந்தப் பொருத்தமின்மை ஏன் ஏற்படுகிறது என்று ஆராய்ந்தார். நாம் பார்க்க முடியாத இந்த நட்சத்திரக் கூட்டங்களை ஏதோ ஒன்று இயக்குகிறது என்று அவர் நம்பினார். அந்த அறியப்படாத விஷயத்தை இருண்ட பொருட்கள் (டார்க் மேட்டர்) என்று கூறினார். மனிதர்களின் கண்களுக்குத் தெரியாத ஒன்று இருப்பதால் அவர் இவ்வாறு பெயரிட்டார்.euclidஇருண்ட பொருட்களும் இருண்ட ஆற்றலும்

இருண்ட ஆற்றலே பிரபஞ்சத்தின் விரிவாக்கத்திற்குக் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆற்றல் இருப்பது முதல்முறையாக 1998ல் கண்டுபிடிக்கப்பட்டது. இருண்ட பொருட்களே பிரபஞ்சத்தின் 80% நிறையாக உள்ளது என்று கருதப்படுகிறது. இவை நட்சத்திரக் கூட்டங்களை (galaxies) இணைக்க உதவும் அண்டவெளிப் பசையாக (cosmic glue) செயல்படுகிறது.

இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பொருட்கள் கண்களுக்குப் புலப்படாதவை. காணமுடியாதவை. இவை இருப்பதை நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களின் மீது இவை செலுத்தும் தாக்கத்தை அளவிடுவதன் மூலம் மட்டுமே அனுமானித்து விஞ்ஞானிகள் அறிந்து கொள்கின்றனர்.

அண்டவெளியின் இருண்ட அம்சங்கள் பற்றிய அறிவு

இந்த இருண்ட அம்சங்களின் இயல்பு பற்றி புரிந்து கொள்ளாதவரை பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்து கொண்டதாக நம்மால் கூற முடியாது. இதனால் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது என்று எடின்பரோ பல்கலைக்கழக வானியல் இயற்பியலாளர் ஆண்டி டெய்லர் (Andy Taylor) கூறுகிறார். இந்த தொலைநோக்கியின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். யூக்லிடின் இரண்டு முக்கிய கருவிகளில் ஒன்றான விஸ் இமேஜர் (Vis imager) என்ற அதிநவீன படமெடுக்கும் கருவி பிரிட்டனில் உருவாக்கப்பட்டது.

மனித விண்வெளி வரலாற்றில் இது முக்கிய திட்டம் என்று கருதப்படுகிறது. இலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் (Falcon) ஏவு வாகனத்தின் மூலம் யூக்லிட் ஏவப்பட்டது. ஒரு மாதத்தில் யூக்லிட் சூரியக்குடும்பத்தைக் கடந்து பயணிக்கிறது. 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் புவியில் இருந்து இது இரண்டாம் நிலை லெக்ராஞ்சியப் புள்ளியில் (Lagrange point) நிலைநிறுத்தப்படுகிறது.

லெக்ராஞ்சியப் புள்ளிகள்

லெ-புள்ளிகள், அல்லது நிலை அலைவு புள்ளிகள் எனப்படுபவை வான்பொருட்களின் சுற்றுப்பாதை அமைப்பில் இரண்டு பெரும் வான்பொருட்களிலிருந்தும் அவற்றின் ஈர்ப்பு விசை தாக்கத்தால் ஓர் சிறிய வான்பொருள் நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும் புள்ளிகளே. இந்த லெக்ராஞ்சியப் புள்ளிகளில் இரு பெரும் வான்பொருட்களின் ஈர்ப்பு விசைகளின் கூட்டுவிசை அவற்றில் சிறியதாக இருக்கும் பொருள் அவற்றைச் சுற்றth தேவையான மையநோக்கு விசையைத் தருகின்றது. இரண்டு பெரிய வான்பொருட்களின் சுற்றுப்பாதை தளத்தில் இத்தகைய புள்ளிகள் ஐந்து உள்ளன. இவை லெ1, லெ2, லெ3, லெ4, லெ5 எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றில் யூக்லிட் இரண்டாம் நிலைப்புள்ளியில் செயல்படும்.

இந்த இடத்தில் இருந்து யூக்லிட் அண்டவெளியின் ஆழ்பரப்பில் சூரியன், பூமி மற்றும் நிலவின் பின்னணியில் இருந்து செயல்படும். இந்த இரண்டு டன் தொலைநோக்கி நாம் அறியாத அண்டவெளியின் சொர்க்கங்களை ஆராயும். ஹப்பிள் தொலைநோக்கியை விட அதிக செயல்திறன் பெற்ற யுக்லிட், இரவு வானத்தின் மூன்றின் ஒரு பகுதியையும் ஆராயும். அதனால் இது அண்டவெளி ஆழ்பரப்பின் விரிவான வரைபடத்தை அனுப்பும்.

அதி நூதனத் துல்லியத்தன்மை

இது பிரபஞ்சம் பற்றி இதுவரை மனிதன் அறியாத பல தகவல்களைப் பெற உதவும் என்று சசெக்ஸ் பல்கலைக்கழக விண்வெளியியலாளர் ஸ்டீபன் வில்கின்ஸ் (Stephen Wilkins) கூறுகிறார். இருண்ட பொருட்களைக் கண்ணால் பார்க்க முடியாது. இப்பொருட்கள் ஒளியை உமிழ்வதில்லை, பிரதிபலிப்பதில்லை என்பதால் இவை பற்றி விரிவாக ஆராய்ந்தறிய அதி நவீனத் துல்லியத் தன்மையுடன் யூக்லிட் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன வசதிகளில் நட்சத்திரக் கூட்டங்களின் மில்லியன் கணக்கான படங்களை எடுக்கும் திறனைக் குறிக்கும் gravitational lensing என்பதும் ஒன்று. சில சமயங்களில் தொலைதூரப் பொருட்களில் இருந்து ஒளி இருண்ட பொருட்கள் வழியாகப் பயணம் செய்து பூமியை அடையும். இவ்வாறு நிகழும்போது அதன் ஈர்ப்புப் புலங்கள் ஒளியின் பாதையை நீட்டித்து சிதறடிக்கும்.

இருண்ட பொருட்கள் வழியாக வரும் இந்த சிதறடிக்கப்பட்ட ஒளியின் படங்கள் அப்பொருட்களின் இயல்பைப் பற்றி அறிய உதவும் என்று டரம் (Durham) பல்கலைக்கழகப் பேராசிரியர் மேத்தில்டா ஜூஸாக் (Prof Mathilde Jouzac) கூறுகிறார்.

இருண்ட பொருட்களின் வகைகள்

இருண்ட பொருட்கள் எடை குறைவான துகள்களால் ஆக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறென்றால் லென்சிங் மூலம் ஏதேனும் ஒரு விதத்தில் அத்துகள்கள் ஒளியைச் சிதறடிக்கும். மாறாக இத்துகள்கள் மிகப்பெரிய துகள்களால் ஆக்கப்பட்டிருந்தால் வேறு விதமான லென்சிங் விளைவு ஏற்படும். இத்தகவல் பூமியில் உள்ள இருண்ட பொருட்களைப் பற்றி ஆராய நமக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

இருண்ட ஆற்றலை யூக்லிட் வேறு முறையில் கணக்கிடவுள்ளது. இதன் மூலம் பல்வேறு காலகட்டங்களில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்தது, அதன் அளவு அடைந்துள்ள மாற்றங்களைப் பற்றி அறிய முடியும். அதன் விரிவாக்கம் எப்போது நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கடந்த பத்து பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் விரிவடைந்துள்ள வரலாற்றை இதன் மூலம் உருவாக்கலாம். இது இருண்ட ஆற்றலின் இரகசியங்களுக்கு விடை காண நமக்கு உதவும்.

புராதன கிரேக்க ஜியோமெட்ரியின் தந்தை என்று போற்றப்படும் கணிதமேதையின் நினைவாக யூக்லிட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இரகசியங்களை மனித குலம் அறிய உதவும் என்ற நம்பிக்கையுடன் விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.

மேற்கோள்கள்: https://www.theguardian.com/science/2023/jun/30/euclid-telescope-3d-map-cosmos-space-probe-european-space-agency-dark-universe?

&

https://www.theguardian.com/science/2023/jul/01/euclid-telescope-lifts-off-in-search-of-the-secrets-of-dark-universe?

&

https://tamilastronomy.in/what-is-dark-matter-and-energy/

&

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It