கருத்துப்பரிமாற்றத்தில் இந்தியாவின் தொடர்பு மொழிகளை இணைத்து, இணைப்புக் கருவியாக செயல்படுவது ஆங்கில மொழி.

ஆங்கிலேயரைப்பார்த்து அச்சப்பட்டுக்கொண்டு இருந்த நாம், அதன் தொடர்ச்சியாக ஆங்கித்தைப் பார்த்தும் அச்சப்படுவது தன்னிச்சையாக நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

ஆங்கிலத்தின் மீதான அச்சம் விலக அறிவுப்பூர்வமாக மொழியை அனுகுவோம். அதற்குப் பெரும் துணையாக அமைவது இந்தச் செயலி. ஆங்கிலம் கற்க எண்ணற்ற செயலிகள் இணையத்தில் கிடைத்தாலும் இச்செயலி பல்வேறு வடிவங்களில், பல்வேறு அணுகு முறையில் வெகுவாகவே கவருகிறது. அது மட்டுமன்று தமது ஒவ்வோர் அசைவிலும் புதுமையாக செய்கிறது.

பொதுவாக ஒரு மொழி குறித்தான திறன் மேம்பட, வாசித்தல், எழுதுதல், கேட்டல், பேசுதல் என்கிற நான்கு நிலைகளை எட்ட வேண்டும். மிகச்சரியாக இந்த நுணுக்கத்தை அறிந்து அதன் வழியே பயனர்களை இந்தச் செயலி அற்புதமாகக் கையாளுகிறது.

பயனராக பதிவு செய்து கொண்ட பின் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? உங்களுக்கு எந்த வகையிலான பாடங்கள் தேவைப்படுமெனப் பயனரை முதலில் நாடிபிடித்துப் பார்த்து நமது நிலையினைத் தெரிவு செய்கிறது. அதன் பின்னர் நாள்தோறும் பயிற்சிதான்.

இதில் பாடதிட்டத்தில் என்ன புதுமையென்றால் நாள்தோறும் வெளியாகும் நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் புதிய, புதிய சொற்களுக்கு நிகரான ஆங்கிலச்சொற்களை அறிமுகம் செய்து அது எந்த எந்த இடங்களில் சரியாகப் பொருந்துகிறது என்பதையும் விளக்கம் தரும் வழிமுறைகள் அனைத்துப் பயனரையும் கவரும்.

அதிகமாகப் பயன்படுத்தப்படும் 10,000 சொற்களைக்கொண்ட அகர முதலிகள் கொடுக்கப்பட்டுள்ளன. திறன் பேசிகளை கைகளில் எடுத்தாலே விளையாட்டு எண்ணம் வரும் பயனரையும் எளிய சொற்புதிர் விளையாட்டுகள் வழியே ஆங்கிலத்தை எளிமையாகக் கற்பிக்கிறது இந்தச் செயலி.

கற்பித்தலுக்கென பல்வேறு ஒளி, ஒலி வடிவ நகரும் படங்களும், மொழி வல்லூநர்களின் பொழிப்புரையும் இருக்கும் காரணத்தினால் செயலி சிறப்பாக இருக்கிறது. இதன் பொருட்டு 2016 ஆம் ஆண்டு கல்விக்கான மிகச்சிறந்த செயலி என்ற பரிசையும் பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு பயிற்சியில் இருந்தும் கேட்கும் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களுக்குப் பாராட்டுகளும், கைதட்டல் ஒலிகளும் நம்மை அடுத்தடுத்த பாடத்திற்கு ஆர்வத்துடன் அழைத்துச் செல்கின்றன. ஆங்கிலம் கற்க விரும்பும் நம் தோழர்களுக்கு நம்பிக்கையோடு இச்செயலியினை நாம் அறிமுகம் செய்யலாம். தொடர்ந்து இச்செயலியைப் பயன்படுத்தினால் கவனிக்கத்தக்க மாற்றமும் ஏற்றமும் பெறுவது உறுதி

இச்செயலியினைத் தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

https://play.google.com/store/apps/details?id=com.CultureAlley.japanese.english

--------------------

அழகாய் ஆவணப்படுத்தும் Office Lens

நண்பர் நாளிதழ் படிக்கும்போது ஒரு முதன்மைச் செய்தியைக் கவனித்துவிட்டார். அதை அடுத்த நொடியே என்னிடம் பகிர்ந்துவிடவும் விருப்பப்பட்டார். தம் கையில் உள்ள ஆன்ட்ராய்ட் மொபைலை கொண்டு எடுத்தார், படம் பிடித்தார். வாட்ஸ் ஆப் செயலி வழியே பகிர்ந்தும் விட்டார்.

நான் பெற்ற அந்தப்பதிவில் நண்பர் தேநீர் பருகிய வெற்றுக் கோப்பையும் மேசையின் மீது இருந்த அவர் அலுவலக கோப்பும் தெர்ந்தது. ஆனால் அவர் எனக்காக அனுப்பிய நாளிதழ் செய்தி மட்டும் எவ்வளவு படிக்க முயன்றும் தெளிவாகவே தெரியவில்லை.

நகைப்புக்காகச் சொல்லவில்லை. பல பேர் வாட்ஸ்அப் வழியே நிழற்படமெடுத்து பகிரவேண்டிய செய்தி, யாருக்குமே பயனில்லாமல் போகிறது. காரணம் நாம் நிழற்படமெடுக்கும்போது சரியாக நிழற்படக்கருவியினை வைத்து எடுக்கத் தவறுவதும் தேவையற்ற பொருட்களையும் சேர்த்து படமெடுப்பதுவாகத் தவறுகள் நேர்கின்றன.

அது போலவே கைகளில் உள்ள பட்டியல் மற்றும் ஆவணங்களைப் பிறருக்கு வழங்கும் போது ஒரு படி எடுத்துக்கொண்டு வழங்க வேண்டும் என நினைப்போம். ஆனால், மறந்து விடுவோம். நினைத்த நேரத்திற்கெல்லாம் நமக்கு ஜெராக்ஸ் இயந்திரம் பக்கத்தில் வந்துவிடுமா என்ன என நினைப்போருக்கு நான் சொல்லும் செய்தி பயனளிக்கும். இது போன்ற நேரத்தில் நமது திறன் பேசியினை நாம் துணைவனாகப் பயன்படுத்தலாம்.

வழக்கம் போல உங்கள் கருவியில் உள்ள PlayStore செல்லுங்கள். அதில் OFFICE LENSE எனத் தட்டச்சு செய்யுங்கள். மைக்ரோ சாப்டின் குறுஞ்செயலி உங்கள் திறன்பேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு மைக்ரோ சாப்ட் இணையதளத்தில் மின்னஞ்சல் இருக்குமானால் இன்னும் இன்னும் கூட கூடுதல் வசதி கிடைக்கக் கூடும்.

பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஆவணங்கள் என நினைப்பதையோ அல்லது பகிரவேண்டிய ஆவணங்களையோ இச்செயலி வழியே படம் பிடியுங்கள். ஒரு நாளிதழினைப் படம் பிடிப்பத்தாக இருந்தால், கேமாரா வழியே படம் பிடிக்கும் போதே கட்டம், கட்டமாக பிரித்து காண்பிக்கும். உங்களுக்கு எந்த பத்தி வேண்டுமோ அதை தனியே பிடித்துக் கொள்ளலாம். அது மட்டுமடுமல்ல அழகாக சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ நாம் அனுப்ப வேண்டிய பகுதியினை வடிவமைக்கலாம். எப்போது நேரம் கிடைக்கிறதோ அதனை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது பென்ட்டிரைவ் வழியாகவோ அச்சு எடுத்துக்கொள்ளுங்கள்.

படம் பிடித்தவுடன் மேலே White Board என்பதைச் சொடுக்குங்கள். இப்போது நீங்கள் படம் பிடித்த பகுதி நிழலோ, கருப்போ அல்லது வண்ண இடையூறோ இன்றி அழகாகப் படிக்கும் வகையில் அமையும். எடுத்த படத்தை எப்படிச் சேமிக்க வேண்டும் என்பதற்குக் காணொலி உங்களுக்கு உதவும்.

இதன் வழியே நீங்கள் அனுப்பும் ஆவணம் எளிதாகப் படிக்கும் வகையில் இருக்கும். நீங்கள் அனுப்பும் செய்தியினை அவர் பெரிதாக்கிப் பெரிதாக்கி வெகு சிரமப்பட்டுப் படிக்கவேண்டியதில்லை. எந்த ஒரு ஆவணமாக இருந்தாலும் எளிதில் ஸ்கேன் செய்யலாம். ஆங்கிலத்தை ஸ்கேன் செய்தால் அதனை Ms word க்கு மாற்றும்போது அப்படியே Text ஆக மாறுகிறது. எனவே எழுத்தினைத் தட்டச்சு செய்யும் நேரம் குறைகிறது. பல்வேறு மேம்பாடுகள் இச்செயலி அடையவுள்ளதால் விரைவில் தமிழுக்கும் இது வரும் என நம்பலாம்.

நீங்கள் படம் பிடித்த பகுதியினை MS Word, PDF, One Note, Power Point என எளிதில் மாற்றலாம். அது மட்டுமல்ல அந்த பகுதியினை ட்விட்டர், வாட்ஸ்ஆப், முகநூல் என அனைத்துச் சமூக ஊடகத்திற்கும் எளிதில் பகிரலாம்.

2015ம் ஆண்டு சிறந்த குறுஞ்செயலிக்கான விருதினை மைக்ரோ சாப்ட் நிறுவனம் பெற்றுள்ளது. செய்தியாளர், ஊடகத்துறையினை சார்ந்தோர், எழுத்தாளர், கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு கருத்துகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ளவும் ஆவணங்களை இருந்த இடத்திலிருந்து பாதுகாக்கவும் இந்தச் செயலி நமக்குத் துணைபுரியும்.

https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officelens

Pin It