அன்று செப்டம்பர் 24, 2023. ஞாயிற்றுக்கிழமை. அமெரிக்கா யூட்டா பாலைவனப் பகுதியில் சால்ட் லேக் என்ற இடத்திற்கு அருகில் விண்ணில் இருந்து வரும் ஒரு பொக்கிஷத்திற்காக விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு பாராசூட் திறந்து அதில் இருந்த கலன் சுமார் 250 கிராம் கல் மற்றும் துகள்களுடன் தரையில் இறங்கியது. அப்போது நான்கு ஹெலிகாப்டர்களில் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் ராணுவப் பாதுகாப்பு அதிகாரிகள் மிக உயர்ந்த மதிப்புடைய அந்த சரக்குப் பேழையை சேகரித்தனர்.

இவை வெறும் பழைய கல் மண் இல்லை. அவை 4.6 பில்லியன் ஆண்டுப் பழமையான விண்கல் பாறைப் பகுதிகள். கோள்கள் உருவான கதை மட்டுமில்லாமல் உயிர் எவ்வாறு உருவானது என்ற கதையையும் சொல்லும் அரிய கருவூலம். இவை நம் சூரியக் குடும்பத்தில் உருவான மிகப் பழமையான பொருட்களில் ஒரு பகுதி என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் (NHM) ஆய்வாளர் ஆஷ்லி கிங் (Ashley King) கூறுகிறார்.

இது போன்ற விண்கற்களின் மாதிரிகள் பூமியைப் போல ஒரு கோள் உருவாக அடிப்படையான பகுதிப் பொருட்கள் எவை என்பதை எடுத்துச் சொல்லும் திறன் படைத்தவை. இப்பொருட்களில் எவை எவை ஒன்று சேர்ந்து கலந்து உயிர்கள் வாழும் சூழலை உருவாக்கின என்று இவற்றை ஆராய்வதன் மூலம் அறிய முடியும்.osiris rex mission capsuleதிகில் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் போல

நாசாவின் ஓசைரிஸ் ரெக்ஸ் (Osiris-Rex) என்ற இந்த தொலைதூரப் பயணத்தில் இருந்து பூமிக்கு வந்த ஆய்வுக்கலனின் இறுதிக்கட்ட தரையிறங்கும் நிகழ்வு ஒரு திகில் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் போல இருந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஏழாண்டு விண்வெளியில் பயணம் செய்து பூமிக்குத் திரும்பி வந்துள்ள இந்தக் கலன் ஒரு போக்குவரத்து வேன் அளவுள்ளது. இதில் உள்ள தானியங்கி ரோபோட்டிக் விண்கலன் விண்வெளியில் சுற்றி வரும் பெனு (Bennu) விண்கல்லை ஆராய்ந்து அங்கு இருந்து கல்லையும் மண்ணையும் சேகரித்து வர உதவும் பேடகத்துடன் அனுப்பப்பட்டது. மணிக்கு 27,650 மைல் வேகத்தில் பயணித்து ஓசைரிஸ் ரெக்ஸ் கலன் பூமியின் எல்லைக்கு வந்த பின் கல்லும் மண்ணும் உள்ள பேடகத்தை விடுவித்தது. பேடகம் நான்கு மணி நேரம் பயணம் செய்து பூமியை அடைந்தது.

பாராசூட்களின் வழிகாட்டலுடன் பேடகம் மணிக்கு பதினோரு கிலோமீட்டர் வேகத்தில் பூமியில் மென்மையாக விழுந்தது. தரையைத் தொட்டவுடன் இந்தப் பேடகம் கடின உலோகப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அருகில் இருக்கும் தற்காலிக ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. மறுநாள் இது ஹூஸ்ட்டனில் இருக்கும் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பேடகம் இறங்கும்போது அதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. உள்ளே இருக்கும் கல்லும் மண்ணும் எந்த மாசுக் கலப்பும் ஏற்படாமல் தூய நிலையிலேயே இருப்பதாக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதற்காக பேடகத்தின் வெளிப்பகுதி நைட்ரஜனைப் பயன்படுத்தி மாசு நீக்கம் செய்யப்பட்டது.

பூமியில் மோதும் ஆபத்துள்ள விண்கற்களை அறிய

பூமிக்கு ஆபத்தாக உள்ள விண்கற்களின் வருகையை முன்கூட்டியே கணித்து அவற்றில் இருந்து எவ்வாறு பூமியைப் பாதுகாப்பது என்பது இத்திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கம். மாதிரியின் அடர்த்தி மற்றும் கடினத் தன்மை போன்ற இயற்பியல் பண்புகள் ஆராயப்படுகிறது. பெனு விண்கல் 2100ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து தொடங்கி 2300ம் ஆண்டு வரை உள்ள காலத்தில் 1750 வாய்ப்புகளில் பூமியின் மீது மோத ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று நாசா விண்கல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெனுவின் கார்பன் செழுமை நிறைந்த தரைப்பரப்பு, அங்ககப் பொருட்கள் மற்றும் நீர் போன்ற பொருட்கள் பூமியில் உயிர் உருவாக உதவியனவா என்பது பற்றி ஆராயப்படும். வரும் நாட்களில் இம்மாதிரிகளில் உள்ள தாதுக்கள் மற்றும் அவை கலந்து உருவான பொருட்கள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதில் நீர் கலந்துள்ள தாதுக்கள் பற்றி முக்கியமாக ஆராயப்படும்.

மாதிரியின் ஒரு பகுதி கனடா மற்றும் ஜப்பான் விண்வெளி முகமை ஆய்வாளர்கள் ஆராய அனுப்பப்படும். மாதிரியின் மீதியிருக்கும் பகுதி வருங்கால ஆய்வுகளுக்காகப் பாதுகாக்கப்படும். லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் ஆய்வாளர் மற்றும் ஓசைரிஸ் திட்டத்தின் தாதுப்பொருட்கள் மற்றும் பாறைகள் பற்றிய அறிவியல் பிரிவின் (Petrology) துணைத்தலைவர் பேராசிரியர் சாரா ரஸெல் (Prof Sara Russell) ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாதிரிகளை ஆராய்வார்.

கோள்கள் உருவான கதை

இந்த மாதிரிகளில் சூரியக் குடும்பம் உருவானபோது உண்டான சிறு துகள்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோள்கள் உருவாகும் முன்பு இத்துகள்கள் விண்வெளியில் சுதந்திரமாக மிதந்து கொண்டிருந்த தூசுப்பொருட்கள் என்பதால் அப்போது இருந்த சூழல், கோள்கள் உருவாக எவ்வளவு காலம் பிடித்தது, விண்கல்லின் வரலாற்றில் அங்கு உள்ள தாதுப்பொருட்கள் அடைந்த மாற்றங்கள், அப்போது இவற்றில் இருந்த நீரின் அளவு, விண்கல்லில் நிலவிய வெப்பநிலை, அதில் ஏற்பட்ட மாறுதல்கள் போன்றவற்றை ஆராய்வதால் அறிய முடியும்.

பல விண்கற்களில் இருந்தும் முந்தைய ஜப்பானின் ஆய்வுக்கலன்கள் சிறிய அளவில் மாதிரிகளை எடுத்து வந்தன. என்றாலும் இதுவரை அனுப்பப்பட்டதில் ஓசைரிஸ் ரெக்ஸ் கலனே விண்கல்லில் இருந்து மிக அதிக அளவில் கல்லையும் துகள்களையும் சேகரித்துள்ளது. எப்போது உருவாயின என்று தெரியாத, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது பல்வேறு மாசுகளால் பாதிக்கப்படும் எரிகற்களைக் காட்டிலும் பெனு போன்ற விண்கல்லில் இருந்து எடுத்து வரப்படும் மாதிரிகள் விஞ்ஞானிகளுக்கு பல அரிய தகவல்களைத் தரும் என்று கருதப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வுகள்

பெனுவின் துகள்களை வெப்பப்படுத்தி அவை உமிழும் அகச்சிவப்புக் கதிர்களை ஆராயும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பேராசிரியர் நீல் ஃபோல்ஸ் (Prof Neil Bowles) ஆய்வக ஆய்வு முடிவுகள் ஓசைரிஸ் ரெக்ஸ் ஆய்வுக்கலன் அனுப்பிய தகவல்களுடன் ஒப்பிட்டு ஆராயப்படும் என்று கூறுகிறார்.

பூமிக்கு எடுத்து வந்து ஆராய்வதால் தொலைநோக்கிகள் அல்லது விண்கலன்கள் மூலமே ஆராயப்படும் சூரியக் குடும்பத்தின் மற்ற விண்கற்களைப் பற்றி கூடுதலாக அறிய உதவும் என்று ஆக்ஸ்போர்டு ஆய்வுக்குழுவுடன் இணைந்து பணிபுரியும் மத்திய ப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் கோள் புவியியல் நிபுணர் கெர்ரி டொனால்ட்ஸன் ஹேனா (Kerri Donaldson Hanna) கூறுகிறார்.

பெனுவின் கற்களும் துகள்களும் நாம் வாழும் இந்த பூமியின் கதையைப் நாம் இதுவரை அறியாத புதிய தகவல்களைத் தரும் என்று விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/sep/22/nasas-osiris-rex-mission-asteroid-sample-plummets-towards-earth?

&

https://www.theguardian.com/science/2023/sep/24/nasa-osiris-rex-mission-bennu-asteroid-sample-earth

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It