ஜெர்மனி நாட்டு வணிகக் குடும்பத்தில் 1845 ஆம் ஆண்டு பிறந்தார் ராண்ட்ஜென். பள்ளியில் படிக்கும் போதே இயற்கையின் மீது பற்று கொண்டு , ஒய்வு நேரத்தை தனிமையான கிராமங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த காடுகளிலும் சுற்றித் திரிந்தார்.

                Roentgenஇயற்பியலில் பட்டம் பெற வேண்டுமென விருப்பம் கொண்டு பல்கலைக்கழகத்தில் 1865 ஆம் ஆண்டு சேர்ந்தார். ஆனால், பட்டம் பெறுவதற்குத் தேவையான மதிப்பெண்களை பெற முடியாமல் போனது, எனவே, அங்குள்ள பாலிடெக்னிக்கில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவரை இயந்திரவியல் பிரிவில் சேர்த்துக் கொண்டனர். முயன்று பயின்று பட்டம் பெற்றார்.

பாலிடெக்னிக்கில் பயிலும்போது இவருக்கு ஆசிரியர்களாகவிருந்த ‘க்ளவ்ஸியஸ்’ மற்றும் ‘குண்ட்’ ஆகிய இருவரும் ராண்ட்ஜென்னுக்கு வழிகாட்டியாக விளங்கினர். அவர்கள் வழங்கிய பல ஆய்வுக் கட்டுரைகளும், விளக்க விரிவுரைகளும் இயற்பியல் பாடத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது

                ஸுரிச் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1969-ஆம் ஆண்டு ‘டாக்டர்’ (முனைவர்) பட்டம் பெற்றார் ராண்ட்ஜென்!. இவரது ஆய்வு, ‘வாயுக்களின் வெப்ப குணாதிசயம்’ பற்றியது ஆகும். பின்னர் ‘படிகங்களின் வெப்பக் கடத்தி பண்பு’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.

                திட மற்றும் திரவப் பொருட்கள் மீதான ஆய்வுகளின் விளைவாக, படிகங்கள் மற்றும் பளிங்குப் பொருட்களின் மீது ராண்ட்ஜென் மேற்கொண்ட ஆய்வுகள், இயற்பியல் ஆய்வு வரலாற்றில் இன்றளவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. படிகங்கள் மற்றும் பளிங்குகள் முதலிய பொருட்களின் மின் கடத்தும் பண்பு, வெப்பம் கடத்தும் பண்பு ஆகியன குறித்துத் தீவிர ஆய்வில் ஈடுபட்டார். மேலும், வேறு வேறு அடர்த்தி கொண்ட இரு திரவங்களின் அல்லது வாயுக்களின் சந்திப்பில் வெவ்வேறு அழுத்தங்களை வரிசையாய் கொடுத்து, அச்சந்திப்பில் உருவாகும் ஒளி விலகலின் அளவுகளை அட்டவணைப்படுத்தினார்.

                மின்காந்த அலைகளுக்கு உட்படுத்தப்படுவதால் எதிரெதிர் குணம் கொண்ட இருவேறு ஒளிக்கதிர்களின் இயக்கத் தளத்தில் தற்காலிகமாக ஓர் ஒற்றுமையை ஏற்படுத்துவது குறித்த அவரது ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பு வாய்ந்தவைகளாகும்.

                நீர்த்துளிகளில் விழும் எண்ணெய்த் துளிகள் அந்தப் பரப்பில் எவ்விதம் பரவுகிறது. அந்த இயக்கம் என்ன என்பது குறித்தும் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், உலக இயற்பியல் துறையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவைகளாகும். இவ்வாறாக, வாயுக்கள் மற்றும் திரவங்கள், அவற்றின் மீது கொடுக்கப்படும் அழுத்தங்கள், இதனால் அவற்றின் மின்காந்த வெப்ப குணங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த அவரது ஆய்வுகளில், 1895-ஆம் ஆண்டு வியத்தகு முன்னேற்றம் நிகழ்ந்தது.

                அக்காலத்தில், மிக உயர்ந்த மின் அழுத்தத்தை உருவாக்கவல்ல ஒருவகை மின் சுருளின் எல்லைக்குள், சில அபூர்வான வாயுக்களை நிரப்பினால் அவை மின்சாரத்தை உருவாக்கும் அதுதான் ‘காத்தோட் கதிர்’ என அறியப்பட்டிருந்தது. “மின் சுருளுக்கு அளிக்கப்படும் உயர் மின் அழுத்தமானது முழுக்க அடைக்கப்பட்ட காற்றுப் புகாத ஒரு குழாய்க்குள் நிகழும்”எனப் பல அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? என்ற வினா ராண்ட்ஜென் மனதில் ஏற்பட்டது.

                எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு நாளைக்குள் நடைபெற்றுவிடுவது இல்லை. கண்டுபிடிப்புகள் நிகழ பல ஆண்டுகள் உழைத்திட வேண்டும் என்பது ராண்ட்ஜென்னின் புதிய கண்டுபிடிப்பிலும் உறுதி செய்யப்பட்டது.

                பரிசோதனைக் குழாயைச் சுற்றிலும் கனமான கறுப்பு தடுப்பு கொண்டு மூடி, துளிகூட ஒளிபுகாவண்ணம் செய்து, மின்சுருள் பரிசோதனையை முழு இருட்டான ஓர் அறைக்குள் வைத்து நடத்தினார். அப்பரிசேதனையின் விளைவால் கதிர்களின் பாதையில் நீட்டப்படும் ‘பேரியம் ப்ளேட்டினோஸைனைட்’ பூசப்பட்ட ஒரு சிறுதட்டு தகதகவென மினுமினுப்பதைக் கண்டறிந்தார். பரிசோதனைக் குழாயிலிருந்து சில மீட்டர் துhரம் தள்ளி வைக்கப்பட்டாலும் கூட, அதில் மினுமினுப்பு ஏற்படுவதைக் கண்டார் ராண்ட்ஜென்.

                ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பலவிதமான தடிமன்கள் கொண்ட பொருட்களைக் கதிர்வீச்சின் குறுக்கே வைக்கும்போது அவற்றில் விதவிதமான மாறுபட்ட மினுமினுப்புகள் உண்டாவதைக் கவனமாகப் பதிவு செய்தார். இந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக நடந்து வந்த தமது மனைவியை அழைத்து, மனைவியின் கையைக் கதிர்வீச்சுப் பாதையில் புகுத்தி சிறிது நேரம் அப்படியே அசையாமல் நிறுத்தி வைக்கச் செய்தார். அப்போது உருவான பிம்பத்தைப் புகைப்படச் சுருளில் பதிவு செய்து கொண்டார். பின்னர், புகைப்படச் சுருளை படமாக்கிப் பார்த்தார், அதில் அவரது மனைவியின் கை எலும்புகளும், அவர் அணிந்திருந்த மோதிரமும் மட்டும் தெளிவாகப் பதிந்திருந்தன. கைப்பகுதியின் சதைகளனைத்தும் கிரகணம் போலத் தெளிவில்லாமல் தெரிந்தன. இதுதான், முதன்முதலாகப் பதிவாகி அறிவிக்கப்பட்ட ‘ராண்ட்ஜென் பதிவு’ ஆகும்.

                ‘காத்தோட் கதிர்களின் பாதையில் ஏதேனும் பொருளை வைத்தால், அப்போது ஏற்படும் மோதலின் காரணமாக மேலும் புதுக் கதிர்கள் உருவாகின்றன’ – எனத் தமது கண்டுபிடிப்புக்கான விளக்கத்தை அளித்தார் ராண்ட்ஜென்.

                அது என்ன கதிர்? ராண்ட்ஜென் மட்டுமல்ல, அப்போதிருந்த அறிவியலாளர்களும் கூட விளக்கம் தர இயலவில்லை. ‘ஒளியைப் போன்ற குணாதிசயங்களை பெற்றிருக்கும் மின்காந்தக் கதிர்கள் இவை’ என மட்டுமே அறிவித்தனர். எனவே, ஒன்றும் புரியாத காரணத்தினால், இப்புதுக் கதிகள் ‘எக்ஸ் கதிர்கள்’ என்று பெயர் சூட்டப்பெற்றன .

                ‘எக்ஸ் கதிர்கள்’ கண்டுபிடிப்பின் மூலம் ராண்ட்ஜென்க்கு உலக அரங்கில் சிறப்பு ஏற்பட்டது. பல விருதுகள், பரிசுகள், கேடயங்கள், அரசுப் பதவிகள், வெகுமதிகள், அங்கீகாரங்கள் அவரைத் தேடி வந்தன. ராண்ட்ஜென் பெயர் தெருக்களுக்கும், நகரத்திற்கும் சூட்டப்பட்டது. உலகெங்கும் அவரது புகழ் பரவியது. எக்ஸ் கதிர்களுக்கு ‘ராண்ட்ஜென் கதிர்கள்’ என்ற பெயர் சில காலம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை ராண்ட்ஜென்னே மறுத்தார். எதேச்சையாக நடந்துவிட்ட ஒரு கண்டுபிடிப்புக்கு நான் உரிமை கொண்டாட முடியாது என அறிவித்தார். மேலும், அக்கதிர்களின் பெயர் ‘எக்ஸ்’ ஆகவே இருந்துவிட்டுப் போகட்டும் என அறிவித்தார்.

                இயற்பியல் துறைக்கு ஆற்றியுள்ள ஈடு இணையற்ற பங்ளிப்புக்காககவும், பல ஆய்வுகளுக்கு களமமைத்துத் தரும் வகையில் ஒரு புதுக் கதிரினைக் கண்டுபிடித்து அளித்தமைக்காகவும் 1901-ஆம் ஆண்டு நோபல் பரிசினைப் பெற்றார் ராண்ட்ஜென்.

                அவரது கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் மகுடமாக இன்றும் விளங்குகிறது.

- பி.தயாளன்

Pin It