தமிழகத்தில் இருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் தாவரங்களையும், சித்த மருத்துவர்கள் தாவரங்களுடன் பாதரசம் கந்தகம் போன்ற இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தி வந்தனர்.
காலனிய ஆட்சியர்களின் கடற்படையில் பணியாற்றிய அய்ரோப்பிய பொதுமருத்துவர்களும், அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும் அய்ரோப்பிய வாணிப நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களும், கிறித்தவ மறைத்தளப் பணியாளர்களும், தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த தமிழ் மருத்துவ முறைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
நோய் குணப்படுத்தும் சிகிச்சை முறையைவிட உண்ணும் உணவின் வாயிலாக நோயைத் தடுக்கும் தமிழ் மருத்துவர்களின் செயல்பாட்டை அவதானிப்பதிலும் அவற்றைப் பதிவு செய்வதிலும் அவர்கள் ஆர்வம் காட்டினர். தமிழகத்தில் நிலவிவந்த இரண்டு வகையான சிகிச்சை முறைகளை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
முதலாவது மருந்துகளின் துணையுடன் நிகழும் சிகிச்சை. இரண்டாவது மனித ஆற்றலைக் கடந்து நிற்கும் தெய்வங்கள், மந்திரங்களின் வாயிலாக மேற் கொள்ளும் சிகிச்சை. இவ்விரு சிகிச்சை முறைகளும் மதவேறுபாடின்றி அனைத்துத் தமிழர்களிடமும் வழக்கில் இருந்தன.
பேய், பிசாசு என ஆவிகள் பற்றிக் கொண்டதால் சிலவகையான நோய்கள் ஏற்படுவதாக நம்பினர். இந் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இத்தகைய நோய்களைப் போக்கவென்றே மந்திர வைத்தியர்கள் இருந்தனர்.
மந்திர சிகிச்சையளிக்க, ‘பணம்’ என்ற பெயரில் புழக்கத்தில் இருந்த நாணயத்தை வாங்குவார்கள். நோயாளி வளம்படைத்தவர் என்றால் ‘பக்கோடா’ என்ற பெயரிலான தங்க நாணயத்தைப் பெற்றுக் கொள் வார்கள்.
மந்திர வைத்தியத்தால் குணமாகவில்லை என்றால், நோயாளியைப் புண்ணியத் தலங்களுக்கு அழைத்துச் சென்று, கோவில்களில் காணிக்கை செலுத்துவார்கள். பிராமணர்கள் கூறும் ஸமஸ்கிருத மந்திரங்கள், நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்ற நம்பிக்கை நிலவியது. மந்திரம் பொறிக்கப்பட்ட தாயத்துக்களைத் தோள்பட்டையிலும், கழுத்திலும் கட்டினால் நோய் நீங்கும் என்றும் நம்பினார்கள். காலரா, அம்மை ஆகிய கொடிய தொற்றுநோய்கள் மாரியம்மன் வருகையால் தோன்றுகின்றன என்ற நம்பிக்கை பரவலாக நிலவியது.
ஜான்ஃபிரையர் என்ற ஆங்கில மருத்துவர் சென்னையின் மயிலாப்பூர் பகுதிக்குச் சென்ற போது யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட பலரைக் கண்டார். இந்துக்களால் கொலை செய்யப்பட்ட, புனித தாமஸின் சாபத்தினாலேயே இந்நோய் வந்த தாகவும், அவரது கல்லறையை வணங்கினால் இந்நோய் குணமாகும் என்றும் இவர்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதனின் பாவத்திற்குத் தரப்பட்ட தண்டனையே தொழுநோய் என்ற கருத்து அய்ரோப்பி யாவில் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய்கள் அதனால் விளையும், துன்பங்கள் வெவ்வேறானவை என்றாலும், இது தொடர்பான நம்பிக்கைகள் என்னவோ, அய்ரோப்பியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஒன்றாகவே உள்ளதாக ஹான்சன் என்பார் குறிப்பிட்டுள்ளார். அய்ரோப்பியர்கள் விவிலிய மரபையும், தமிழர்கள் இந்து மரபையும் பின்பற்றுவது ஒன்றுதான் வேறுபாடு என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
நோய் தீர்க்க வேண்டி நாகப்பட்டினம் அருகிலுள்ள வேளாங்கண்ணி ஆலயத்திற்கு மக்கள் திரளாக வருவது வழக்கம். அவ் ஆலயத்தின் குரு, மந்திர வாக்கியங்கள் எழுதப்பட்ட மட்கலயங்களில், புண்ணிய தீர்த்தத்தை நிரப்பிக் கொடுத்தனுப்புவார்.
இக்குருவுக்குப் பக்கவாதநோய் வந்த போது, தரங்கம்பாடியில் இருந்த டச்சு மருத்துவரை அழைத்தார். அம்மருத்துவர் தரங்கம்பாடிக்கு அவரை அழைத்துச் சென்று குணமாக்கினார்.
தத்துவபோதகர் என்றழைக்கப்பட்ட, தி-நோபிலி புனிதர் பேசிலை வேண்டி தனக்கு வந்த நோயைக் குணப்படுத்தினாராம்.
மருத்துவச் சுவடிகள் சேகரிப்பு
தமிழகத்தில் நிலவிய மந்திர வைத்திய முறையை, கிறித்தவர்கள் என்ற முறையில் அய்ரோப்பியக் காலனியர்களும், கிறித்தவ மறைப் பணியாளர்களும் புறக்கணித்தாலும், தமிழகத்தின் பாரம்பரிய வைத்திய முறையைப் புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதன் அடிப்படையில் தமிழ் வைத்தியச் சுவடிகளைச் சேகரிப்பதிலும், படித்தறிவதிலும், மொழிபெயர்ப் பதிலும் ஈடுபட்டனர்.
ஜெர்மன் நாட்டவரான சீகன் பால்க் என்பவர் டேனிஷ் மன்னனின் அழைப்பின் பேரில் 9, ஜுலை 1706இல் தரங்கம்பாடிக்கு வந்தார். தமிழ்நாட்டில் கிறித்தவத்தைப் பரப்பியதில் அவர் உருவாக்கிய தரங்கம்பாடி மறைத்தளத்திற்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இதனாலேயே ‘கிறித்தவத்தின் நுழைவாயில்’என்று தரங்கம்பாடியை அழைப்பர். தன் சமயப் பணியின் ஒரு பகுதியாக தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக 122 தமிழ் ஓலைச்சுவடிகளுடன் கூடிய நூலகம் ஒன்றைத் தனக்கென உருவாக்கினார். அச்சுவடிகளுள் ஒன்று மருத்துவச் சுவடியாகும்.
1708 மே முதல் நாள் அன்று தமிழ் மருத்துவர் ஒருவரை முதல்முறையாகச் சந்தித்தார். அவரிடமிருந்த மருத்துவ ஓலைச்சுவடிகளைப் படிக்க, தம்மை அனுமதிக்கும்படி வேண்டினார். அம்மருத்துவரின் வழிகாட்டுதலில் சித்த மருத்துவச் சுவடிகளை, அவர் பயின்றார். அவரது தமிழ்ப்பயிற்சி வளர்ச்சி பெற்றதும், தமிழ் மருத்துவம் குறித்து மேலும் அறிந்து கொள்ள முயன்றார்.
இம்முயற்சியில் ‘வாகடச்சுவடி’ என்ற சுவடியைப் படிக்கத் தொடங்கினார். மத்தியகாலத் தமிழகத்தில் எழுதப்பட்ட அம்மருத்துவச்சுவடி செய்யுள் வடிவில் அமைந்திருந்தது. இது அவருக்கு மிகுந்த இடர்ப் பாட்டை அளித்தது. இதனால் உள்ளூர்வாசி ஒருவரின் துணையுடன் அதைப் படித்தறிந்து அதன் உள்ளடக்கத்தை அறிந்து கொண்டார். இச்சுவடி குறித்துப் பின்வரும் செய்திகளை சீகன்பால்க் எழுதியுள்ளார்.
•வாகடச்சுவடி, எண்பது பிரிவுகளையும் 120 அத்தியாயங்களையும் ஆறு தொகுதிகளையும் கொண்டது. முதல் தொகுதியான ‘சுத்த ஸ்தானம்’ முப்பது அத்தியாயங்களைக் கொண்டது. நோய் இயல் குறித்துக் கூறுவது.
•இரண்டாவது தொகுதியான ‘சரீரஸ்தானம்’ பதினாறு அத்தியாயங்களைக் கொண்டது. உடல் நூல், உடற்கூறு இயல் குறித்தது.
•மூன்றாவது தொகுதியான ‘காரணசாதனம்’ ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. நோய்க் கூறியல் தொடர்பான செய்திகளைக் கொண்டது.
• ‘இந்திரசாதனம்’ என்ற தலைப்பிலான நான்காவது இயல் பதினொன்று இயல்களைக் கொண்டது. அறிகுறிகளின் வாயிலாக நோயின் தன்மையைக் கண்டறிவதை இவ்வியல் வெளிப்படுத்துகிறது.
• ‘கல்பசாதனம்’ என்ற அய்ந்தாவது இயல் நச்சுத்தன்மை - நச்சுமுறிவு ஆகிய செய்தி களைக் கூறுவதாகும். இது பதினோரு இயல்களைக் கொண்டது.
•இறுதி இயலான ஆறாவது இயல் ‘சிகிச்சை சாதனம்’ என்ற பெயரிலானது. நாற்பத்தியோரு அத்தியாயங்களைக் கொண்ட இவ்வியல், நோய்போக்கும் செய்திகளைக் கூறுவதாகும்.
இவை தவிர, பின் இணைப்பாக நான்கு இயல்கள் இடம் பெற்றிருந்தன. இம்மருத்துவச் சுவடியை 1709இல் விலைக்கு வாங்கிய சீகன்பால்க், அதை ஜெர்மனி நாட்டின் ஹாலே நகரில் உள்ள லூத்தரன் மறைபரப்பு அமைப்பின் தலைமை நிலையத்துக்கு 1710ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் இருந்து கப்பலில் அனுப்பி வைத்தார். சிறந்த மருத்துவச் சுவடிகள் என்ற வரிசையில் இச்சுவடி இன்றும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இச்சுவடியை அடுத்து ‘திரிதோஷ சித்தாந்தம்’ என்ற சுவடியையும் சீகன்பால்க் ஹாலே நகருக்கு அனுப்பி வைத்தார். இச்சுவடி ‘நாடி’ குறித்த செய்திகளைக் கூறுவதாகும். இச்சுவடியின் வாயிலாக, தமிழ் மருத்துவ முறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடிபார்த்தல் குறித்த செய்திகளை அறியமுடிகிறது. ‘வாதம்’, ‘பித்தம்’, ‘கபம்’ என்ற மூன்று நாடிகளின் துடிப்பை, பின்வரும் உயிரினங்களின் ஓசையுடன் இச்சுவடி ஒப்பிடுவது வருமாறு:
வாதம் - தவளை
பித்தம் - பெட்டைக்கோழி
கபம் - மயில்
மனித உடலில் நாடித் துடிப்பைக் கண்டறியும் இடங்களாக, மணிக்கட்டு, கழுத்து, கால்கணு மூட்டு ஆகியனவற்றை இச்சுவடி குறிப்பிடுகிறது. ஆண்களுக்கு வலதுபுறமும், பெண்களுக்கு இடதுபுறமும் நாடித்துடிப்பைப் பார்க்க வேண்டும் என்றும் இச்சுவடி குறிப் பிடுகிறது. நோய் கண்டறிய தமிழர்கள் பயன்படுத்திய மருத்துவ சோதனை முறைகளையும், இந்நூலின் வாயிலாக அறியமுடிகிறது.
சிறுநீர் சோதனை வாயிலாக நோயாளியின் நிலையைக் கண்டறிவது குறித்து இச்சுவடி குறிப்பிட்டு உள்ளது. இதன்படி ஒரு பாத்திரத்தில் சிறுநீர் பெய்யும்படி நோயாளியிடம் கூறுவர். சிறிய அளவிலான உறிஞ்சுக்குழல் ஒன்றில் சிறிது நல்லெண்ணையை எடுத்து அச்சிறுநீரின்மீது சொட்டுச் சொட்டாக விடுவர். அவ்வாறு விடப்பட்ட எண்ணெய் மிதக்கத் தொடங்கினால் நோயாளியை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று நம்பிக்கை கொள்வர். எண்ணெய் மிதக்காது, பாத்திரத்தின் அடியில் படிந்துவிட்டால் நோயாளி பிழைப்பது கடினம் என்ற முடிவுக்கு வருவர்.
சீகன்பால்க்கைக் கவர்ந்த மற்றொரு தமிழ் வைத்தியச் சுவடி ‘உடல் கூறுவண்ணம்’ என்ற தலைப்பிலான சுவடியாகும். மனித உடலின் இயக்கம் குறித்தும், மனித வாழ்க்கையின் இயல்பு குறித்தும் அய்ம்புலன்களின் ஆற்றல் குறித்தும் கூறும் இச்சுவடியை அவர் விலைக்கு வாங்கி, ஜெர்மனியின் ஹாலே நகருக்கு அனுப்பி வைத்தார்.
‘தத்துவ விளக்கம்’ என்ற சுவடி கூறும் கருத்துக்களைத் தமிழ் மருத்துவர்கள் சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றும் சீகன்பால்க் குறிப்பிட்டுள்ளார். மனித உடலைக் கூறுபோடுவதில் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சியின் காரணமாக உடற்கூறியல் குறித்த அறிவு பிராமணர்களுக்குக் கிடையாது என்றும் குறிப்பிட்டு உள்ளார். உடற்கூறுவண்ணம், தத்துவவிளக்கம் என்ற இரு ஓலைச் சுவடிகளும், ஜெர்மனியில் உள்ள ஹாலே நகர் ஆவணக் காப்பகம் ஒன்றில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.
•••
சீகன்பால்குடன் இணைந்து பணிபுரிய குருண்டலர் என்ற கிறித்தவக்குரு 20 ஜுலை 1709இல் தரங்கம் பாடிக்கு வந்தார். தமிழ் வைத்தியம் கற்பதற்காக என்றே அதன் அருகில் உள்ள பொறையாறு என்ற ஊருக்கு 20 பிப்ரவரி 1710இல் இடம் பெயர்ந்தார். தம் உணவு உடைப்பழக்கத்தில் தமிழர்களைப் பின்பற்றினார்.
‘அகஸ்தியர் இரண்டாயிரம்’ என்ற தமிழ் வைத்தியச் சுவடியைக் கற்றறிந்து அதை ஜெர்மனியில் மொழி பெயர்த்தார். இந்நூலுக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு The Tamil Physician - 1711 என்பதாகும். இந்நூலின் இறுதியில் தமிழ் மருத்துவக் கலைச் சொல் அகராதி ஒன்றும் அக்காலத்தில் வழக்கில் இருந்த எடை அளவும், நோய் தீர்க்கப் பயன்படுத்திய மருத்துவச் சரக்குகளின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதன் முன்னுரையில் பிராமணர் ஒருவரின் துணையுடன் அறிந்துகொண்ட தமிழ் மருத்துவக் கல்வி குறித்த செய்தி களையும் குறிப்பிட்டுள்ளார்.
இக்கையெழுத்துப்படியின் முதல் பகுதியில் மருத்துவரின் வருகை, நோயாளியைக் கவனிக்க மேற்கொள்ளும் ஏற்பாடுகள், நாடித்துடிப்பு அதன் வகைகள், நோய் என்ன? என்பதை எப்படி அறிந்து கொள்வது, வாதம் - பித்தம் - கபம் என்பனவற்றால் ஏற்படும் நோய்கள், இவை தோன்றும் காரணம். இந்நோயாளிகள் உண்ணவேண்டிய உணவுவகை, காய்ச்சல், சுய நினை வின்மை - மயக்கம், நோயாளி பிழைப்பாரா, இறப்பாரா என்பது குறித்த அறிகுறிகள் ஆகிய செய்திகள் இடம் பெற்றிருந்தன.
இதன் இரண்டாவது பகுதியில் மருத்துவ குணமுடைய தாவரங்களைச் சுத்தப்படுத்தல், காய்ச்சலைக் குணப்படுத்தும் முறை, நஞ்சினால் ஏற்படும் நோய்களையும், குடற்புண்களையும் குணப்படுத்தும் முறை, கண், காது, மூக்கு, வாய், நெஞ்சு, வயிறு தொடர்பான நோய்கள், பால்வினை, சிறுநீர்ப்பாதை நோய்கள், பெண்கள், குழந்தைகள் நோய்கள் என்பன இடம் பெற்றிருந்தன.
பல்வேறு நோய்களுக்கான தமிழ் மருந்துகளை குருண்டலர் தம் கையெழுத்துப்படியில் குறிப்பிட்டு உள்ளார். எள், வசம்பு, எருக்கை, நொச்சி, அகத்தி, காட்டுநெல்லி, இஞ்சி, முருங்கை, சாரணை, இந்துப்பு, மடலிப்பு என்பன அவரது மருந்துகளில் இடம் பெற்றுள்ளன.
ஜெர்மனியில் கேபன்ஹென் நகர் மருத்துவர்கள், இதைப் படித்ததுடன், தமிழ் மருத்துவமுறையைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். செர்மன் நாட்டில் இருந்த தன் நண்பர்களுக்கு குருண்டலர் எழுதிய கடிதங்கள் தமிழ் மருத்துவத்தின்பால் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை உணர்த்துகின்றன.
தரங்கம்பாடியில் இருந்த இராணுவ மருத்துவ மனையில், தியோடர் லூட்விக், ஃபிரடரிக், போலி என்ற டேனிஷ் நாட்டு அறுவை மருத்துவர் பணியாற்றி வந்தார். சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட இவர், உள்ளூர்வாசி ஒருவரின் உதவியுடன் தமிழ் மருத்துவச் சுவடிகளைப் பயின்றார். அகத்தியரின் வைத்தியச் சுவடிகளின் மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அகத்தியர் வைத்தியமுறை குறித்து 1795 தொடங்கி 1801 முடிய டேனிஷ் மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவற்றுள் சில டென்மார்க் நாட்டு ஆவணக் காப்பகங்களில் இடம் பெற்றுள்ளன.
பாதரசத்தைப் புடம்போட அகத்தியர் கூறும் செய்திகள் அவரது மொழிபெயர்ப்பில் இடம் பெற்று உள்ளன. ஜெர்மன், டேனிஷ் மருத்துவர்களுக்கு உதவும் என்பதாலேயே இச்சிரமமான மொழி பெயர்ப்பைத் தாம் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அகத்தியர், போகர், கருவூரார் போன்ற சித்தர்களின் வைத்தியச் சுவடிகளைச் சேகரிக்கும் முயற்சி யிலும் ஈடுபட்டார். இவரைப் போன்றே பெஞ்சமின் நைன் என்ற அய்ரோப்பிய மறைப்பணியாளரும் (பின்னர் மருத்துவர்) ஒயிட்லர் என்சிலி என்ற ஆங்கில மருத்துவரும் இத்தகைய முயற்சியில் 18ஆம் நூற்றாண்டில் ஈடுபட்டுள்ளனர்.
1844 இல் லிப்சிக் மறைத்தளத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்ற கார்ல் கிரவுல் என்பவர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ‘சித்தர் ஆருட நொண்டிச் சிந்து’ என்ற பெயரிலான ஓலைச் சுவடியைப் பெறுவதில் இவர் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். நச்சுத் தன்மை கொண்ட உயிர் இனங்கள், அவற்றின் கடிகளுக்கான மருத்துவம் தொடர்பான செய்திகள் இச்சுவடியில் இருந்ததாம்.
இவ்வாறு சுவடிகளைச் சேகரித்தும், மொழி பெயர்த்தும் செயல்பட்ட அய்ரோப்பியர்களுக் கிடையில், செய்யுள் வடிவில் மருத்துவநூலைத் தமிழில் எழுதும் பணியும் நடந்துள்ளது.
இதைத் தொடங்கிவைத்தவர் வீரமாமுனிவர் ஆவார்.
வீரமாமுனிவரின் பணி
தமிழ் மருத்துவம் தொடர்பான தொகுப்புகளைச் செய்தவர்களில் வீரமாமுனிவர் குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். 1711 இல் தமிழகம் வந்த இவர் தமிழ் மொழியை நன்கு கற்றறிந்தார். அத்துடன் தமிழ் மருத்துவமுறையையும் கற்றறிந்தார். தமிழ் மருத்துவ நூல்கள் பெரும்பாலும் செய்யுள் வடிவிலேயே இருந்தமையால் இவரும் செய்யுள் வடிவிலேயே தம் மருத்துவச் சுவடிகளை எழுதினார்.
இவர் எழுதிய ‘ரசகாண்டம்’ என்ற மருத்துவச் சுவடி நூறு வெண்பாக்களைக் கொண்டது. அதில், முப்பது மருந்துகளைத் தயாரிக்கும் முறையை அவர் எழுதியுள்ளார். அத்துடன் இம்மருந்துகள் போக்கும் நோய்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மற்றொரு நூலான ‘ரணவாகடம்’இரண்டு தொகுதிகளாக அமைந்தது. ‘வாகடத் திரட்டு’என்ற பெயரும் இதற்குண்டு. இதுவும் நூறு செய்யுட்களைக் கொண்டது.
அவரது மூன்றாவது நூலான ‘அனுபோக வைத்திய சிந்தாமணி’ 130 விருத்தப்பாக்களைக் கொண்டது. மிக விரிவான முறையில் 53 கூட்டு மருந்துகள் தயாரிப்பைக் கூறுகிறது. காய்ச்சல், வயிற்றளைச்சல், சீரணக் கோளாறு, நுரையீரல் கோளாறு, சிறுநீரக நோய்கள், இரத்த சோகை, வாதம், அம்மை, பாம்புக் கடி, குழந்தைகளின் நோய்கள் என்பவற்றிற்கான மருந்துகள் இதில் இடம் பெற்றுள்ளன. இம்மருந்துகளில் பெரும்பாலானவை மாத்திரை வடிவிலானவை. சில சிந்தூரம், குழம்பு மெழுகு வடிவிலானவை.
இம்மூன்று தமிழ்ச் சுவடிகளில் உள்ள செய்திகள் அனைத்தும் 18 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் வழக்கத்தில் இருந்தவையாகும். 1743 இல் அவர் தொகுத்த தமிழ் இலத்தீன் அகராதியில் தமிழர்கள் சுட்டும் பதினைந்து வகையான காய்ச்சல்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையைக் கற்றறிந்து சுயமாக மூன்று வைத்திய நூல்களை எழுதிய வீரமாமுனிவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவரது காலத்திற்குப் பின் இச்சுவடிகள் சென்னையில் உள்ள அரசு கீழ்த்திசை - சுவடி நூலகத்தில் பாதுகாக்கப் பட்டதுடன் பின்னர் தனியார்கள் சிலரின் முயற்சியால் நூல் வடிவமும் பெற்றுள்ளன.
நவீன மருத்துவமனைகள்
தமிழ் மருத்துவ அறிவு குறித்த தேடலில் அய்ரோப்பியர்கள் ஆர்வம் காட்டி வந்தாலும், தம் நாட்டு மருத்துவமுறை சார்ந்த மருத்துவமனைகளை தமிழ்நாட்டில் நிறுவுவதிலும் முன் நின்றனர். இவர்களுள் போர்ச்சுக் கீசியர் முன்னோடிகளாக அமைந்தனர்.
போர்ச்சுக்கீசியரான அண்ட்ரிக் அடிகளார் என்ற சேசுசபைத் துறவியால் இது முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னைக் காயல் என்ற கடற்கரைச் சிற்றூரில் மருத்துவமனை ஒன்றை கி.பி.1550 இல் அண்ட்ரிக் அடிகளார் நிறுவினார். இதற்காகும் செலவுத்தொகை நன்கொடைகள் வாயி லாகவும் முத்துக்குளித்துறையில் பணிபுரியும் போர்ச்சுக் கீசிய அதிகாரிகள் மீது விதிக்கப்படும் தண்டத்தொகை வாயிலாகவும் பெறப்பட்டது. இப்பகுதியில் இருந்த போர்ச்சுக்கீசிய படைத் தளபதி, இத்தண்டத் தொகையை திரட்டி இம்மருத்துவமனை நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்தான்.
உள்ளூர்க் கிறித்தவர்களும் இம்மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கி வந்தனர். வாரம் ஒருமுறை இது வாங்கப்பட்டது. மருத்துவமனையின் தூய்மையை சேசு சபையினர் பராமரித்து வந்தனர்.
அடுத்து 1571 இல் மணப்பாடு, வீரப்பாண்டியன் பட்டினம், தூத்துக்குடி வைப்பாறு ஆகிய நான்கு கடற்கரை ஊர்களிலும் சேசு சபையினர் மருத்துவ மனைகளைத் தொடங்கி நடத்தலாயினர்.
முத்துக்குளித்தல் நிகழும் காலங்களில், அதில் ஈடுபடும் ஒவ்வொரு படகில் இருந்தும் நன்கொடை பெறப்பட்டது. இப்பணமானது, நம்பிக்கைக்குரியவர்களிடம் சேசு சபையினரால் ஒப்படைக்கப்பட்டது.
சேசு சபையினர் வழிகாட்டுதலுக்கேற்ப இப்பணம் மருத்துவமனைகளின் தேவைக்கு வழங்கப்பட்டது. இயற்கைக் காரணங்களினால் முத்துக்குளித்தல் நடைபெறாத போது கடன் வாங்கி மேற்கூறிய ஊர்களில் செயல்பட்ட மருத்துவமனைகளைப் பராமரித்தனர்.
முத்துக் குளித்தல் தொடங்கியதும் இக்கடனை அடைத்துவிடுவதாக பரதவ கிறித்தவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அண்ட்ரிக் அடிகளார் நிறுவிய ஒப்புரவு சபையின் உறுப்பினர்கள் மேற்கூறிய அய்ந்து மருத்துவமனை களிலும் ஊதியம் வாங்காது பணியாற்றினர்.
இவ் அய்ந்து மருத்துவமனைகளுள் புன்னைக் காயல், தூத்துக்குடி மருத்துவமனைகள் பெரிய மருத்துவ மனைகளாக வளர்ச்சியுற்றன. இவ்விரு மருத்துவமனை களுக்கும் பரதவர்கள் தாராளமாக நிதி வழங்கினர்.
இவற்றின் தொடர்ச்சியாக கன்னியாகுமரியிலும் சாந்தோமிலும் (மயிலாப்பூர்) 1594 இல் மருத்துவ மனைகள் நிறுவப்பட்டன. 1595 இல் மதுரையில் மருந்தகம் ஒன்றை நிறுவினர். ஏழை நோயாளிகளுக்குக் கட்டணமின்றி இதில் மருந்துகள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினத்திலும் போர்ச்சுக்கீசியரால் மருத்துவ மனை தொடங்கப்பட்டது. இங்கு இறந்தவர்களை இதன் நிர்வாகிகளே புதைத்தனர்.
இம்மருத்துவமனைகளின் பங்களிப்பை, இவை தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நிலவிய, நோயாளி - மருத்துவர் உறவை அறிவதன் வாயிலாகவே உணரமுடியும்.
சிகிச்சை தொடங்கும் முன்னரே சிகிச்சைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று நாட்டு வைத்தியர்கள் கூறினார்கள். இதனால் ஏழை நோயாளிகள் சிகிச்சை பெறமுடியவில்லை. நோயாளிகள் குணமடையாமலோ, இறந்துபோனாலோ சிகிச்சைக்கான கட்டணத்தைப் பெறமுடியாது என்பதால் இந்நிலை உருவாகியிருக்கலாம்.
•••
போர்ச்சுக்கீசியர்களை அடுத்து ஆங்கிலக் கிழக் கிந்தியக் கம்பெனியும், பிரெஞ்சுக் காலனியவாதிகளும் மருத்துவமனைகளை நிறுவினர். தம் நாட்டவருக்கும் அய்ரோப்பிய மறைப்பணியாளர்களுக்கும் இது பயன் படும் என்ற நோக்கம் இருந்தாலும் ‘புல்லுக்குமாங்கே பொசியுமாம்’ என்பது போல் நம் நாட்டவருக்கும் இவை பயன்பட்டன.
1798-இல் சென்னையில் கருப்பர் நகரம் என்றழைக்கப்பட்ட பகுதியில் தொழுநோய் மருத்துவனை ஒன்றை ஆங்கிலேயர்கள் நிறுவினர். 1830-இல் பேறுகால மருத்துவமனை ஒன்றும் சென்னையில் நிறுவப்பட்டது.
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி தமிழ்நாட்டின் கடற்கரை ஊர்களில் செயல்பட்டபோது, பழவேற்காடு, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் அய்ரோப்பிய முறை யிலான மருத்துவமனைகளை நிறுவியது. இம்மருத்துவ மனைகளில் நெதர்லாந்தில் மருத்துவக் கல்வி பயின்ற மருத்துவர்கள் பணியில் இருந்தார்கள்.
மாலுமிகள் டச்சு வாணிபக் கழகத்தின் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் இம்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இங்கு அனுமதிக்கப்பட்ட உள் நோயாளிகளுக்கு முரட்டுத் துணியினால் ஆன சட்டை, தஞ்சை, புதுக்கோட்டை மன்னர்கள் தம் அரண்மனை வைத்தியர்களாக அய்ரோப்பிய மருத்துவர்களை நியமித்தனர். ஆற்காடு நவாப்பும் அய்ரோப்பிய மருத்துவர்களை நியமித்திருந்தார்.
நீண்ட கால்சட்டை, ஜாக்கெட் ஆகியன வழங்கப்பட்டன. மருத்துவமனைப் பயன்பாட்டுக்கான துணிகள் தூத்துக்குடிப் பகுதியில் இருந்து வந்தன.
இலங்கையிலும் டச்சுக்காரர்கள் தம் வாணிபக் கழகத்தை அரசியல் பலத்துடன் நடத்தி வந்தனர்.
17-ஆம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் இலங்கையில் தொழுநோய் பரவியது. இதைத் தடுக்கும் வழிமுறையாக பொதுச்சாலையில் தொழுநோயாளிகள் நடமாடு வதையும், கடைத்தெருக்களில் அமர்ந்து, பிட்டு, அப்பம் விற்பதையும் டச்சு நிர்வாகம் தடை செய்தது.
இக்கட்டளையை மீறியோரைக் கைது செய்து தூத்துக்குடி நகருக்கு நாடு கடத்தினர். அவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப அனுமதிக்கவில்லை. இதற்கு விதிவிலக்காக கொழும்பு நகரில் இருந்த டச்சு மருத்துவ மனையில் சிறப்பாகப் பணியாற்றிய டச்ராட் என்ற அறுவை மருத்துவரும் அவரது அய்ந்து அடிமைகளும் அங்கு தங்க அனுமதி வழங்கினர். தம் மருத்துவ மனையின் மீதும் அதில் பணியாற்றும் மருத்துவர் மீதும் டச்சு வாணிபக் கழகம் காட்டிய ஈடுபாட்டிற்குச் சான்றாக இச்செய்தி அமைகிறது.
1625-1799 காலகட்டத்தில் இராணுவ மருத்துவ மனை ஒன்றை டச்சுக்காரர்கள் நிறுவி நடத்தி வந்தனர்.
டேனிஷ் ராணுவத்தில் டேனிசியப் படைவீரர்களும் தமிழர்களும் இருந்தனர். தமிழ் வீரர்களுக்கு நாட்டு வைத்தியர்களும், மருத்துவர் சமூகம் சார்ந்தோரும் சிகிச்சை அளித்தனர். தரங்கம்பாடிப் பகுதியில் அம்மை நோய் பரவியபோது சுவார்ட்ஸ் பாதிரியார் அம்மைத் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டார்.
ஆங்கிலேயர்களும் இராணுவத்தினருக்கான மருத்துவமனையை 1664-ஆம் ஆண்டில் சென்னையில் நிறுவினர். பிரெஞ்சுக்காரர்களும் பிரெஞ்சு ராணுவ மருத்துவ மனையன்றை புதுச்சேரியில் நிறுவினர். இம்மருத்துவ மனைக்கான மருந்துகள் பிரான்சில் இருந்து வந்தன.
கொடிய தொற்று நோய்களான அம்மை, பிளேக், காலரா ஆகியன பரவியபோது, அவற்றிற்கான தடுப்பூசி போடுவதில் அய்ரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஈடுபட்டனர். இதன் வளர்ச்சி நிலையாக அய்ரோப்பிய மருத்துவக் கல்வியைத் தமிழர் களுக்கு வழங்கும் பணியை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மேற்கொண்டது.
தஞ்சை, புதுக்கோட்டை மன்னர்கள் தம் அரண்மனை வைத்தியர்களாக அய்ரோப்பிய மருத்துவர் களை நியமித்தனர். ஆற்காடு நவாப்பும் அய்ரோப்பிய மருத்துவர்களை நியமித்திருந்தார். அய்ரோப்பிய மருத்துவம் மீதான ஈர்ப்பை இது வெளிப்படுத்துகிறது.
நூல்கூறும் செய்தி
மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அறிவுத்துறை களில் தமிழர்களுக்கும், அய்ரோப்பியக் காலனியர் களுக்கும் இடையில் நிகழ்ந்த அறிவுப்பரிமாற்றத்தை பல அரிய ஆவணங்களின் துணையுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது. நூலாசிரியரின் கடும் உழைப்பு நூல் முழுவதிலும் விரவிக் கிடக்கிறது. அவரது அறிவுத் தோட்டம் நம்மை வியப்படையச் செய்கிறது.
அய்ரோப்பியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான அறிவுசார் கருத்துரையாடல், ஒற்றைத் தன்மை கொண்டதாகத் தொடக்கத்தில் அமையவில்லை. ஆனால் அவர்கள் ஆளுவோராக நிலை கொண்டபின் அவர்கள் கூறுவதைக் கேட்பவர்களாக மட்டுமே நாம் மாற்றப்பட்டுவிட்டோம். இதுவே இந்நூலின் செய்தி.