இந்த மாதம் “அன்னையர் தினமாதம்” எனச் சொல்லும் அளவிற்கு அன்னை குறித்தான புனிதப் பிதற்றல்கள் எங்கும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

‘அம்மா’ ‘அன்னை’ ‘தாய்மை’ இவை அனைத்துமே பெண்ணை நோக்கி நீளக்கூடிய சொற்றொடர்கள். இதில் கற்பிதமாகவே சில பண்புகள் தாய்மைக்காகப் புகுத்தப்பட்டுள்ளன. ‘தாயுள்ளம்’ ‘தாய்மைக் குணம்’ என வரும்போதே, அதைக் கொண்டிருப்பவர் சுயநலமற்றவராக, தியாகம் செய்யக்கூடியவராக, பொறுமை உடையவராக, கோபமற்றவராக, தன் உயிரையே கொடுக்குமளவிற்கு உன்னதமானவராக இருக்க வேண்டும். இவையே தாய்மைக்கான பண்பாகவும் தாயுள்ளத்தின் அடிப்படையாகவும் சொல்லப் படுகின்றது.

mothers day 450நாம் தந்தைமைஎன்கிற வார்த்தையைக் கேள்வியுற்றிருக்கிறோமா?

அப்படியே அந்த வார்த்தை இல்லாமல் போனாலும் தந்தை குறித்தான புரிதலில் பெற்ற பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவருதலே தந்தைக்கு உரிய செயலாகக் கருதப்படுகிறது.

இங்கே தாய்மை என்பதற்கான அர்த்தம் மிருகங்களிடமிருந்து கூட எடுத்துக்காட்டப் படுகின்றது. ஒரு கோழியும் தன் குஞ்சை எவ்வாறு பார்த்துக்கொள்கிறது என வியந்து பார்த்து தாய்மைக்கு அடிக்கோடிடுகிறார்கள்.

இயற்கை பெண்ணுக்குத் தன் குட்டியை, முட்டையைப் பேணிக்காக்கும் அடிப்படைப் பணியைக் கொடுத்துள்ளது என்பது மறுப்பதற் கல்ல. அதேசமயம் இயற்கை பெண்ணைத்தான் அனைத்துக் குலத்தின் தலைவியாய் நியமித்தது. அடுத்த தலைமுறையை உருவாக்கும் பேணிக்காக்கும்  அவளைத்தான் கடவுளைப்போல் துதிக்கச் சொன்னது.  ஆனால் அதே இயற்கையின்படி நாம் வாழவில்லை. நம் பகுத்தறிவைக் கொண்டு பல்வேறு அறிவியல் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளோம். உலகையே புரட்டிப்போட்டுள்ளோம். “சுரண்டல் களும் அடிமைத்தனமும்” எந்த விதத்திலும் இருக்கக் கூடாது என்பதற்காக சித்தாந்தங்களையும் தலைவர் களையும் புரட்சிகளையும் படைத்துள்ளோம். இந்தப் புள்ளியில் தான் இயற்கையின் அறநெறியைக் காரணம் காட்டி, பெண்ணைச் சுரண்டி அடிமைப் படுத்துவதை முற்றிலும் எதிர்க்கிறோம்.

பிள்ளை பெறுவதும் மறுப்பதும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். இன்றைய உலக மக்கள் தொகையைப் பொறுத்தமட்டில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என சொன்னால் மனித குலம் அழிந்துவிடப் போவதில்லை. அப்படி மக்கள்தொகை குன்றி மனித குலம் அழியும் காலத்தில் இதனை விவாதப் பொருளாக்கி, சட்டத்தின் துணையுடன் இதற்குத் தீர்வு காணலாம். ஆனால் அதற்கான அவசியம் இன்னும் பல ஆண்டுகளுக்குக் கிடையாது என்பதே நிதர்சன உண்மை.

ஒரு வேளை ஒரு பெண் விருப்பத்தின் பெயரிலோ சமூகக் கட்டாயத்தின் பெயரிலோ குழந்தை பெற்றுக்கொண்டாலும் அதனை வளர்ப்பது யார் பொறுப்பு?

அதற்கு நிச்சயம்  “அம்மா தான் பொறுப்பு” எனக் கூட்டுக்குரல் வரும். ஏனென்றால் நாம் வாழ்வது, “எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே....அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை  வளர்ப்பினிலே” எனப் பாடிக்கொண்டிருக்கும் சமூகத்தில்.

அவன் பொறுக்கித்தனம் போக்கிரித்தனம் செய்தாலும் இந்த சமூகம் “அவன் அம்மா வளர்த்த லட்சணம் அப்படி” என்று கூறி ‘வேசி மகன்’ என்னும் கெட்ட வார்த்தையை வேறு நியாயப் படுத்தும்.

அம்மா தான் வளர்க்க வேண்டுமா? குழந்தை வளர்ப்பில் அப்பாவிற்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பங்கில்லையா?

“அப்பா வேலைக்கு போறாரு, அம்மா தானே வீட்ல இருக்காங்க, அவங்க தான வளர்க்கனும்”னு பதில் சொல்பவர்கள் தான்  “குழந்தையைப் பாத்து வளர்க்க வேண்டியது அம்மாவோட கடமை, அவங்க அதத்தவிர வேறு வேலை எப்படி செய்ய முடியும்?” என்கிறார்கள்.  வேலைக்குச்  செல்லக் கூடாது என்பதற்குக் குழந்தையைக் காரணம் காட்டி, குழந்தை வளர்ப்பிற்கு அம்மா வீட்டில் சும்மா தானே இருக்கிறார் என்று வெட்கமே இல்லாமல் இதனைக் காரணம் காட்டுகிறார்கள். இவர்கள் செய்யும் கலாச்சார நாடகங்களால் தான் அம்மாக்கள் வேலைக்கு அனுப்பப்படுவதில்லை என்பதை அவர்கள் உணரப்போவதில்லை.

இங்கே கொடுமை என்னவென்றால் வேலைக்குச் செல்லும் அம்மாக்களும் குழந்தைகளை அவர்களே தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

“குழந்தைக்கு அம்மா தானே பால் கொடுக்க வேண்டும்” என்ற மழுப்பல் பதில்கள் மேலும் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றது. பால் என்பது ஒரு குழந்தைக்கான உணவுரிமை. அது குறிப்பிட்ட மாதங்களுத்தான் அதன் தேவையும் கூட. ஆனால் அதைக் காரணம் காட்டி குழந்தை வளர்ப்பை பெண் மீது திணிப்பது எப்படி நியாயமாகும்?

“பெற்ற குழந்தை அம்மாக்கு பாரமா? அதை வளர்ப்பதில் பங்கு கேட்பதா?” இந்தக் கேள்விகள் ஏன் அந்த குழந்தையின் மேல் சரிபாதி உரிமை கொண்டாடும் ஆணை நோக்கி எழுவதில்லை.

பிள்ளைப்பேறுக்குப் பிறகு பெண்ணின் உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள், சிக்கல்கள் நிகழ்கின்றது. இந்த நிலையில் குழந்தையின் முழுப்பொறுப்பும் அவள் மீதே சுமத்தப்படுகின்றது. இதே நிலையில் குழந்தை வளர்ப்பைச் சரிபாதியாகப் பகிர்ந்துகொள்ளாமல் அவளிடம் திணிப்பதும் ஒரு வன்முறையே...

என்னைக்கேட்டால் பெண்களுக்கு “பேறுகால விடுப்பு” அளிப்பது போல் ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் விடுப்பு அளித்து “குழந்தை வளர்ப்பை” சரிபாதி பிரித்துக்கொள்ள உறுதி செய்ய வேண்டும் என்பேன். ஒரு குழந்தை என்பதே நாளைய சமூகம் ஆகும். அப்பா அம்மாவைத் தாண்டி குழந்தை வளர்ப்பென்பது ஒரு சமூகக் கடமையாகும்.

அதை விடுத்து அன்னையர் தினத்தில்

“ஐ லவ் மை மாம்.. என் அம்மா இல்லனா நான் இல்ல.. என் அம்மா சமைக்கலனா, பாத்திரம் கழுவலனா, துணிதுவைக்கலனா வீட்ட சுத்தமா வச்சுக்கலனா என்னால வாழவே முடியாது. எனக்காக  வாழ்க்கையையே தியாகம் பண்ணவங்க என் அம்மா.. இதுக்காக அவங்களுக்கு நான் அன்னையர் தினத்துல நன்றி செலுத்துறேன்”..

இப்படி பதிவுகள் இட்டு அன்னையர் தினம் கொண்டாடுறவங்க உண்மையில் வெட்கப்படனும். ஒரு பெண்ணைக் கலாச்சார வளையம் போட்டுச் சுரண்டி அடிமையாக்கி அவங்களோட ஆசைகள கனவுகளப் பொசுக்கிட்டு உனக்காகவே வாழுற ஒரு உயிரினமா நீங்க மாத்தி வச்சுருக்கீங்கன்னா... நீங்க அதற்காக அசிங்கம் தான் படணும்.

“இல்ல.. அது அவங்க விருப்பத்தின் பேருலதான் பண்றாங்க, நான் கட்டாயப்படுத்தல, அடிமைப்படுத்தல” னு நியாயம் பேசுனா ..அந்த நிலையிலிருந்து அவங்க வெளிய வர நீங்க என்ன முயற்சி செஞ்சிறுக்கீங்கனு சிந்திச்சி பாருங்க...

“தினமும் ஒரு ஆள் வந்து என் செருப்பத் துடைக்கிறாரு... ஆனா நான் அவர வந்து துடைக்கச் சொல்லல, அதனால எம்மேல தப்பில்லனு சொல்ல முடியுமா? அவரே வந்து துடைத்தாலும் அவரைச் சமமா மதிச்சி ஒரு மனிதத்தின் அடிப்படையில் அவர் யாருக்கும் அடிமையில்ல, இந்த வேலையை அவரு செய்ய வேண்டாம்னு தடுத்து, புரிதல ஏற்படுத்துறதுதான என்னோட நியாயமான மனிதத் தன்மையா இருக்க முடியும்? அதை விடுத்து அவரின் அறியாமையை பயன்படுத்தி அவர் விரும்புறாரு செய்றாரு என சொன்னால் அது மனிதத்தன்மையா?

தாய்மை என்பது ஒரு பதவியல்ல.  அது ஒரு உணர்வு

“பெண்கள் தாய்மை எனும் வரம் படைத்தவர்கள் புனிதமானவர்கள்” என்ற கற்பிதம் சூழ்ந்துள்ளது. பத்து மாதம் சுமந்து பெற்றல் மற்றும் ஒரு குழந்தையின் தாய் என்பது தாய்மை அல்ல. தந்தையிடமும் தாய்மை உண்டு. அதற்கான பெயர் வைத்தலில் தான் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்.  எல்லாத் தாயும் தாய்மை கொண்டவரல்ல. வற்புறுத்தலின் பேரில் விருப்பமின்றி பிள்ளையை பெற்றல் குழந்தைகளை பெற்றுவிட்டோமே என்று குழந்தைகள் காப்பகத்தில் வளர்ப்பவர்களும் உள்ளனர். அவர்களிடம் உங்கள் கற்பிதத் தாய்மையைத் திணிக்க முடியாது.

தாய்மை என்பது ஒரு உன்னத உணர்வு அது யாரிடமிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும் என்பீர்களானால் தாய்மை பெண்ணுக்கானது மட்டுமல்ல...

தந்தையுடையது. காதலனுடையது. பாட்டியுடையது. அண்ணனுடையது. நண்பனுடையது. அக்காவுடையது... அல்லது தாய்மை எனப்படுவது குழந்தையை ஈன்ற பாலூட்டும் ஒரு பெண்ணிடமே புதைந்துள்ளது என்பீர்களானால் உங்கள் தாய்மை எனும் கற்பிதத்தைத் தூக்கி எறியுங்கள். அடிமைப் படுத்தி வைத்திருக்கும் அன்னையர்களை விடு விக்காமல், அவர்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தாமல், அவர்களைப் புகழ்வதும் பரிசுப்பொருட்கள் வாங்கித் தந்து அன்னையர்தின வாழ்த்துச் சொல்வதும் அயோக்கியத்தனம் என உணருங்கள்.

உழைப்பாளர்களைச் சுரண்டிக்கொண்டு ‘சிறந்த உழைப்பாளர்’ பட்டங்களையும் போனஸ் களையும் காட்டி ஏமாற்றும் முதலாளிகள்போல், மனித மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமையை ஒழிக்காமல் அவர்களைப் புனிப்படுத்தி, அவர்களைத் தெய்வமாக வணங்க வேண்டும் என்கிற ஆதிக்க சாதிக் கட்டமைப்பின் மூலாம் பூசப்பட்ட வார்த்தைகள் போல் தான் இருக்கிறது உங்கள் அறிவுக்கெட்ட அரைவேக்காட்டுத்தன அன்னையர் தினமும்.

அன்னையர் தினத்தில் அவர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள உறுதியேற்று, அவர்களுக்கான சுயவெளியை - சுதந்திரத்தை அடைய உதவி செய்து அவர்களின் வாழ்க்கையை அவர்களை வாழ விடுவதே சிறந்த வாழ்த்தாக பரிசாக இருக்க முடியும்.

Pin It